ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்கள் அவசரப்பட்டு முடிவு எடுக்கக் கூடாது
ஜனாதிபதி சட்டத்தரணி ஸுஹைர் வேண்டுகோள்
தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள ஜனாதிபதித் தேர்தல் மிக முக்கியமானதொன்றாக விளங்குகின்றது. இத்தேர்தலில் நான்கு பிரதான கட்சிகளும், மூன்று அபேட்சகர்களும் போட்டியிடக்கூடிய சாத்தியங்கள் நிலவுகின்றன. ஆனாலும் இத்தேர்தல் தொடர்பில் முஸ்லிம்கள் தேர்தல் விஞ்ஞாபனங்களையும் கட்சிகளது அபேட்சகர்கள் குறித்தும் கவனம் செலுத்தாமல் அவசரப்பட்டு முடிவுகளை எடுத்துவிடக்கூடாது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.எம். ஸுஹைர் வேண்டுகோள் விடுத்துள்ளார் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது, இன்றைய காலகட்டத்தில் இந்நாட்டு முஸ்லிம்கள் பலவிதமான பிரச்சினைகளுக்கும் நெருக்கடிகளுக்கும் முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்நாட்டில் ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக வாழும் முஸ்லிம்கள் இதர சமூகங்களுடன் ஒற்றுமையாகவும் சகவாழ்வுடனும் புரிந்துணர்வுடனும் வாழ்ந்து வருகின்ற போதிலும், அண்மைக்காலமாக இச்சமூகம் முன்னொரு போதும் இல்லாத வகையில் வேதனைகளுக்கும் கவலைகளுக்கும் உள்ளாகியுள்ளது.
குறிப்பாக ஏப்ரல் 21 சம்பவத்திற்கு பின்னர் இந்நாட்டு முஸ்லிம் சமூகம் பல்வேறுவிதமான பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவது யாவரும் அறிந்த விடயமே. முஸ்லிம்களின் பாதுகாப்பு தொடர்பிலான அச்சுறுத்தல், பயங்கரவாதம் தொடர்பான விசாரணைகளில் முஸ்லிம் விரோத வெளிநாட்டு உளவுப் பிரிவுகளின் சட்டவிரோத ஆதிக்கம், ஓரிருவரின் செயல்களுக்காக முழு முஸ்லிம் சமூகத்தையும் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என முத்திரை குத்தும் முயற்சிகள், பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு உடை தொடர்பில் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையால் முஸ்லிம் பெண்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள், பரீட்சைகள் திணைக்களம் நடாத்தும் பரீட்சைகளுக்கு தோற்றும் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், பள்ளிவாசல்கள் கட்டுவது தொடர்பிலான பிரச்சினைகள், மத்ரஸாக்களை நடாத்தி செல்வது தொடர்பிலான பிரச்சினைகள், முஸ்லிம்களை ஆன்மிக ரீதியில் நல்வழிப்படுத்தும் பணியில் ஈடுபடும் அமைப்புக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் உள்ளிட்ட பலவித பிரச்சினைகளை இந்நாட்டு முஸ்லிம் சமூகம் தற்போது எதிர்கொண்டுள்ளது.
இவ்வாறான சூழலில்தான் நாடு ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொண்டுள்ளது. இத்தேர்தலில் அபேட்சகர்களாக நிற்கும் வேட்பாளர்களுடனும் அவர்கள் சார்ந்த கட்சிகளுடனும் சுதந்திரமாக இருந்து பேசி முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதும், முஸ்லிம்களின் அபிலாஷைகள், எதிர்பார்ப்புக்களை அவர்களது தேர்தல் விஞ்ஞாபனங்களில் உள்ளடக்கிக் கொள்வதும் அவசியமானது. இவை தொடர்பில் பெரும்பான்மையினர் ஏற்படுத்தித் தந்த பேரம் பேசக்கூடிய அரிய வாய்ப்பு முஸ்லிம் எம்.பிக்கள் மீண்டும் அமைச்சு பதவிகளை ஏற்றதன் ஊடாக இழக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் முஸ்லிம்கள் பொறுப்புணர்வுடனும் தூர நோக்குடனும் சிந்தித்து செயற்பட வேண்டிய காலம் இது. அதனால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அபேட்சகர் யார்? அவரது பின்னணி என்ன? அவரது கொள்கை, கோட்பாடு யாது? அந்த அபேட்சகர் இந்நாட்டு முஸ்லிம்கள் முகம் கொடுத்துள்ள நெருக்கடிகளுக்கும் பிரச்சினைகளுக்கும் வழங்கும் தீர்வுகள் யாவை? என்பன தொடர்பில் மாத்திரமல்லாமல் எந்த அபேட்சகர் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் முஸ்லிம்களின் எதிர்பார்ப்புக்கும் அபிலாஷைகளுக்கும் இடமளித்துள்ளார் என்பது குறித்தும் கவனம் செலுத்தி முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். இவ்விடயத்தில் ஊர் மற்றும் பிரதேச மட்டத்தில் கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டு தூர நோக்கோடு தீர்மானங்கள் எடுக்கப்படுவது காலத்தின் தேவையாகும். இவ்விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தாது அற்ப நலன்களை அடைந்து கொள்வதற்காக கட்சிகளையோ அபேட்சகர்களையோ ஆதரிப்பதைத் தவிர்த்து சமூகத்திற்குரிய பாதுகாப்பு உள்ளிட்ட ஏனைய விடயங்கள் குறித்தும் கவனத்தில் எடுத்து ஊர் மட்டத்திலுள்ள சகல கட்சிகளதும் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசிப்பது இன்றியமையாததாகும்.
கடந்த 2015 ஜனாதிபதி தேர்தலில் இந்நாட்டு முஸ்லிம் சமூகம் எடுத்த முடிவைப் பார்த்து தான் முஸ்லிம் கட்சிகள்கூட முடிவுகளை எடுத்தன என்பதையும் மறந்துவிடக் கூடாது. அதனால் பல்வேறுவிதமான நெருக்கடிகள், பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்திருக்கும் இன்றைய சூழலில் எம்மை எதிர்நோக்கியுள்ள ஜனாதிபதி தேர்தலின் மூலம் நியாயமான தீர்வுகளை பெற்றுக்கொள்வதில் முஸ்லிம்கள் பொறுப்புணர்வோடு செயற்படுவது காலத்தின் அவசியத் தேவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
vidivelli