விடுபட்டுப் போகக் கூடாத விஷயங்களும் விட்டுக் கொடுக்கவே கூடாத விவகாரங்களும் – 06
அரபு மயமாக்கல் குறித்த குற்றச்சாட்டும் பதிலடியும்
இவ்வருடம் மே மாதம் (ஏப்ரல் 21 தாக்குதலைத் தொடர்ந்து) முஸ்லிம் சமூகத்தின் மீதான இராணுவக் கெடுபிடிகளும் சோதனை நடவடிக்கைகளும் வரலாற்றில் என்றென்றும் இல்லாதவாறு தீவிரமடைந்ததை மிக இலகுவில் நாம் மறந்துவிட முடியாது. 1990 களில் கிழக்கு மாகாண முஸ்லிம் கிராமங்களில் புலிகளை வேட்டையாட வந்த இலங்கை இராணுவம் கண்ணில் பட்ட முஸ்லிம் இளைஞர்களையும் அள்ளிக்கொண்டு சென்று டயரைப் போட்டு எரித்தது. அதனால் மாலையானதும் யாரும் வீதியில் நிற்பதில்லை. அப்படி நிற்பவர்களும் ராணுவக் கவச வாகனத்தின் சப்தம் தூரத்தே கேட்கும்போது, ஆமிக்காரன் வாறான் என்று ஓலமிட்டுக்கொண்டு ஓடி ஒளிவது தான் எங்கள் வழக்கம். இராணுவத்தின் கண்ணில் பட்டு விடக்கூடாது என்பதே எமது ஒரே அக்கறை.
இவ்வருட மே மற்றும் ஜூன் மாத நடுப்பகுதி வரை “ஆமிக்காரன் வாறான்” என்ற இருபது ஆண்டுகளுக்கு முன்னைய அலறல் மீளவும் கேட்டது. அந்த நேரத்தில் நான் ஒரு உளவுத்துறை முஸ்லிம் அதிகாரியுடன் தொடர்பு கொண்டேன். நிலைமை எப்படியுள்ளது என்று விசாரித்தபோது “முஸ்லிம்களுக்கு நோன்பு ; சிங்கள இராணுவத்திற்கு பெருநாள்” என்று கவலைக் கிடமான நிலைமையை அவர் வியாக்கியானம் செய்தார். முஸ்லிம் வீடுகளைச் சோதனை செய்வதிலும் அற்பசொற்ப சந்தேகங்களுக்காக எவரையும் எந்த வேளையிலும் கைது செய்வதிலும் இராணுவத்திற்கு ஒரு குதூகலம் என்பதையே அவர் அப்படிச் சொன்னார். சிறைகள் நிரம்பி வழிகின்றன. புலனாய்வுப் பிரிவினருக்கு இரவு பகலாக தலைக்கு மேல் வேலை என்று அலுத்துக் கொண்டார் அவர். ‘பயத்தின் மூலம் உங்களைச் சோதிப்போம்’ என்ற குர்ஆன் வசனத்தின் அர்த்தத்தை நடைமுறை அனுபவங்களினூடே முஸ்லிம்கள் உணர்ந்த ஒரு தருணம் அது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் விசித்திரமான பல சம்பவங்கள் அப்போது நடந்தேறின. உடனடிக் கைது, தடுப்புக்காவல், விடுதலை என்று நூற்றுக்கணக்கான சம்பவங்கள் நடந்தேறியமைக்கு ஒரு முக்கிய காரணம்; அரபு மொழியிலான நூல்கள், சஞ்சிகைகள், ஆவணங்களை பலர் வைத்திருந்தமையே.
எரிக்கப்பட்ட அல்குர்ஆன் பிரதிகள்
வத்தளையில் சட்டத்தரணி ஒருவரது வீட்டில் இராணுவம் சோதனை நடாத்தியபோது இரண்டு குர்ஆன் பிரதிகளைக் கண்டெடுத்தனர். ஒரு வீட்டில் ஏன் இரண்டு பிரதிகள் என விசாரிக்கத் தொடங்கினர். நல்லவேளை அந்த மனிதர் ஒரு சட்டத்தரணியாக இருந்தார். சிங்களத்தில் சரளமாக உரையாற்றவும் தெரிந்தவராக இருந்தார். இரண்டு அல்ல, ஒரு மரணம் நிகழ்ந்தால் நாங்கள் சுற்றி இருந்து பாராயணம் செய்வதற்கு குறைந்தது 10 பிரதிகளேனும் தேவை. என்னிடம் இரண்டு தான் உள்ளது; இன்னும் சில பிரதிகளை வாங்கி எடுக்க வேண்டும் என்று ஒருவாறு இராணுவத்தை வாயடைக்கச் செய்துள்ளார் அவர். சாதாரண கல்வி அறிவற்ற ஒரு சராசரி ஏழை மனிதராக அவர் இருந்திருந்தால் நிச்சயம் அவர் கைது செய்யப்பட்டிருப்பார்.
கண்டி, கலுகமுவ பகுதியில் முஸ்லிம்கள் நூற்றுக்கணக்கான குர்ஆன் பிரதிகளை ஆறுகளில் வீசியெறிந்தனர். அவை வெவ்வேறு சிங்களக் கிராமங்களில் கரையொதுங்கின. சின்ன மக்கம்என அழைக்கப்படும் அக்குறணையில் பல நூற்றுக்கணக்கான அல்குர்ஆன் பிரதிகளை முஸ்லிம்கள் எரித்தனர். பெரும்பாலும் முஸ்லிம்களின் வீடுகளில் காணப்பட்ட ஒன்றுக்கு மேற்பட்ட அல்குர்ஆன் பிரதிகள் அருகிலுள்ள பள்ளிவாசல்களுக்கு கொண்டு சேர்க்கப்பட்டன.
ஸஹீஹுல் புஹாரி, ஸஹீஹுல் முஸ்லிம் உள்ளிட்ட ஹதீஸ் கிரந்தங்கள் மற்றும் அரபு நூல்கள் அனைத்தும் மத்ரஸா நூலகங்களை நிரப்பின. மௌலவிமார்கள், ஆலிம்கள், மத்ரஸாக்களிலிருந்து பாதியில் நின்றவர்களின் வீடுகளில் தேங்கிக் கிடந்த அரபு நூல்களைச் சிலர் தீ மூட்டி எரித்தனர். குறிப்பாக அரபு சஞ்சிகைகள் அனைத்தும் போல எரித்து சாம்பலாக்கப்பட்டன. சிலர் இராணுவத்தின் உளவியலை உரசிப் பார்ப்பதற்கு தமது அலுமாரித் தட்டுக்களின் தொடக்கத்தில் சில சிங்களப் புத்தகங்களையும் செருகி வைத்தனர். அரபு சஞ்சிகைகள் இலட்சக்கணக்கில் எரிக்கப்பட்டன என்பதை நான் நன்கு அறிவேன்.
எனது நூலகத்தில் முஜ்தமஃ எனப்படும் இஸ்லாமிய உலகின் முதல்தர அரபு சஞ்சிகைகள் சுமார் 800 அளவில் இருந்தன. கஹ்மிர் முஸ்லிமா, அத்தஃவா, றாபிதா, பிலஸ்தீன் முஸ்லிமா, அத்தகத்தமுல் இல்மி என அரபு உலகில் வெளிவந்த 25 க்கும் மேற்பட்ட சஞ்சிகைகள் என்னிடம் இருந்தன. இஸ்லாமிய சமூகங்களின் வரலாற்று முதுசங்களாகவே அவற்றைப் படித்து பாதுகாத்து வைத்திருந்தேன். அவற்றை எரிப்பதற்கு எனக்கு மனம் இடம் தரவில்லை. அதனால் அவற்றை ஒரு அரபுக் கலாசாலை நூலகத்திடம் கொண்டு சேர்த்தேன். ஆனால் எனது அரபு நூல்கள் இன்னும் என்னிடமே உள்ளன. எனது நூலகத்தில் அவை தனியான அலுமாரிகளில் உயிர் வாழ்கின்றன. குர்ஆன் பிரதிகள் உள்ளிட்ட இஸ்லாமிய அரபு நூல்களையும் எரித்துச் சாம்பலாக்கிய பல ஆலிம்களை நான் அறிவேன். ‘கைது செய்யப்பட்டு விடுவோமா’ என்ற உளப்பீதியே (Fear Psychosis) இத்தனை விசித்திரங்களுக்கும் பின்னால் இருந்தது. இதில் எதனையும் குறையாகவோ தவறாகவோ நாம் கருதமுடியாதளவுக்கு நிலைமை மிக மோசமானதாகவும் பதற்றம் நிறைந்ததாகவும் இருந்ததை யாரும் மறுக்க முடியாது. விமானத்தில் குர்ஆன் ஓதி வந்த ஒருவரும் இந்தக் காலப்பகுதியில்தான் பல மணி நேரம் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.
இத்தகைய கொதிப்பான தருணத்திலேயே எரியும் தீயில் எண்ணெய் வார்ப்பது போல் ஞானசாரர், கம்மன்பில, சம்பிக்க போன்ற மதவாத/ இனவாத மேலாளர்கள் இலங்கையை அரபு மயமாக்கவும், சவூதி மயமாக்கவும், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் முயல்வதாக குற்றம் சாட்டினர். பிரதமர் ரணில் கூட இலங்கையை அரபு மயமாக்க நாம் அனுமதிக்க மாட்டோம்” என்றார். இந்த வார்த்தைகள் எட்டாம் தரம் கற்ற இராணுவப் படையினருக்கு அரபு மொழியில் புத்தகங்களை வைத்திருந்த முஸ்லிமைக் கூட பயங்கரவாதியாகப் பார்க்க தூண்டுதலளித்திருக்கலாம்.
மே 23 ஆம் திகதி சுமார் 20 பஸ் வண்டிகளிலும் இராணுவ ட்ரக் வண்டிகளிலும் வந்திறங்கிய முப்படையினர் திஹாரியை சல்லடைபோட்டுத் தேடினர். இறுவட்டுகள், வாள்கள் வைத்திருந்ததாகவும் தமது கைத்தொலைபேசியில் சில போட்டோக்கள், வீடியோக்கள் இருந்ததாகவும் அப்பாவிகள் சிலர் கைதாகி அடுத்த நாள் காலையில் விடுவிக்கப்பட்டனர்.
பாராளுமன்றத் தெரிவுக்குழு முன் ஆஜரான காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவர் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் 2000 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே காத்தான்குடியில் அரபு மயமாக்கல் திட்டத்தை ஆரம்பித்து விட்டார் என்று வழங்கிய வாக்குமூலம் ‘டெய்லி மிரர்’ பத்திரிகையில் கொட்டெழுத்தில் பிரசுரமாகியிருந்ததைப் படித்தேன். எனக்கு ஒரு பக்கம் வெறுப்பும் இன்னொரு புறம் வேடிக்கையாகவும் இருந்தது. உண்மையில் அரபு மயமாக்கல் என்று சிங்களத் தேசியவாதிகளும் இனவாதிகளும் ரணில் போன்ற அரசியல்வாதிகளும் கூறுவதென்ன? சில முஸ்லிம் லிபரல்வாதிகளும் எதிர்வாதம் புரிவதற்காக அரபு மயமாக்கல் குறித்துப் பேசிக் கொண்டிருப்பதென்ன? இந்த வாதத்தை மிக நிதானமாகவும் அறிவார்ந்த வகையிலும் பார்க்க வேண்டிய ஒரு தேவை உள்ளது.
அரபு மயமாக்கம் என்பதை மொழிமயமாக்கம் அல்லது கலாசார மயமாக்கம் என்ற எந்தக் கோணத்திலிருந்து இவர்கள் பிரச்சினையாக முன்வைக்கின்றனர் என்பது தெரியவில்லை. மொழிமயமாக்கம் என்ற அர்த்தத்தில் எத்தகைய குற்றச்சாட்டையும் எவரும் முன்வைக்க முடியாது. ஒரு சமூகக் குழுமம் இந்த ஆடையைத்தான் உடுத்த வேண்டும், இந்த மொழியைத்தான் பேச வேண்டும் என்று எந்த அரசாலோ தனிமனிதனாலோ சட்டம் வகுக்க முடியாது.
அரபு, உலகிலுள்ள செம்மொழிகளில் (Classical Language) ஒன்று. சீன, மென்டரின், ஸ்பானிஷ், ஹிந்தி என்ற தரவரிசையில் உலகில் ஆகக்கூடிய மக்கள் பேசும் ஐந்தாவது மொழியாக அரபு விளங்குகின்றது. 22 அரபு நாடுகள் உள்ளன. மொத்தமாக 400 மில்லியன் அரபு முஸ்லிம்கள் உலகில் வாழ்கின்றனர். அரபைத் தாய்மொழியாகக் கொண்ட எகிப்தின் எகிப்திய கிறிஸ்தவர்கள், லெபனானின் மொனரைட் கிறிஸ்தவர்களும் உள்ளனர். அரபு உலகமொழிகளில் ஒன்று. இலங்கையில் க.பொ.த. உயர்தர கலைப்பிரிவு பாடப்பரப்பில் செம்மொழிகளில் ஒன்றாக அரபுமொழி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 40 ஆண்டுகளுக்கு மேலாக அரபு மொழி போதிக்கப்படுகின்றது. தென்கிழக்குப் பல்கலையில் அரபு இஸ்லாமிய கற்கை பீடம் தனியாக இயங்குகின்றது. 450 க்கும் மேற்பட்ட அரபு மொழிப் போதனையையும் இஸ்லாமியக் கற்கைகளையும் வழங்கும் இஸ்லாமிய கல்வி நிறுவனங்கள் நாட்டில் உள்ளன. இந்நிலையில் இஸ்லாமிய துறைசார்ந்தோரின் வீடுகளில் இஸ்லாத்தைக் கற்பதற்கும் வாசிப்பதற்குமான உசாத்துணைகளாக அரபு நூல்களும் குர்ஆன், ஹதீஸ் விளக்கவுரைகளும் இருப்பது சர்வசாதாரணம். முஸ்லிம்களில் ஒரு சிலர் தீவிரவாதிகளாக இருப்பதால் முஸ்லிம்களிள் மார்க்க மொழியான அரபு மொழியைத் தீவிரவாதத்தின் மொழியாக முத்திரை குத்துவது பத்தாம் பசலித்தனமாகும்.
காத்தான்குடியின் ஒரு சில இடங்களில் வீதிகளின் பெயர்ப்பலகை அரபு மொழியில் இருந்ததை நான் கண்ணுற்றுள்ளேன். இப்போதும் அவை அகற்றப்பட்டுவிட்டன. அதேவேளை அரபுக் கல்லூரிகளின் பெயர்ப்பலகைகள் யாவும் அரபு மொழியிலேயே உள்ளன. அவை அவ்வாறு தான் இருக்க வேண்டும். இந்நிலையில் அத்தகைய அரபு மொழியிலான பெயர்ப்பலகைகளை அகற்றுமாறு பொலிஸார் அடாவடி செய்த சம்பவங்கள் ஏறாவூரிலும், ஓட்டமாவடியிலும், காத்தான்குடியிலும் பதிவாகின.
ஏறாவூரில் பொலிஸார் குறித்த நாட்களுக்குள் இத்தகைய அரபுப் பெயர்ப்பலகை நீக்கப்பட வேண்டும் என்று கட்டளை பிறப்பித்து மிரட்டியபோது அலி ஸாஹிர் மௌலானாவின் தலையீட்டால் அது நிறுத்தப்படாது. ஓட்டமாவடியில் அமீர் அலி முன்வந்து பொலிஸாரின் வேண்டுகோளை புறக்கணித்ததாக பத்திரிகை செய்தி வெளியானது. காத்தான்குடி பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் நீதிமன்றத்தின் உத்தரவோடு வந்தால் நாம் அகற்றுவோம் என்று பொலிஸாருக்கு புத்திசாதுர்யமாய் பதிலடி வழங்கியது.
இந்தச் சம்பவங்கள் எதை உணர்த்துகின்றன? வெறும் மொழியை தீவிரவாதத்தின் குறியீடாகக் கருதும் அளவுக்கு சிங்கள தேசிய வாதத்தின் வீச்சு விரிவடைந்து வலுவடைந்து வருகின்றது. ஆனால் இது ஒரு வகை குருட்டுத் தேசியவாதம் (Blind Nationalism ) தான் என்பதை மக்களை உணர்ச்சியூட்டும் இத்தகைய கிணற்றுத் தவளைகள் உணர்வதில்லை. அறிவீனமே இதற்கு காரணம்.
இலங்கையிலிருந்து பணிப்பெண்களாக செல்லும் நான்கு பேரில் மூன்று பேர் சிங்களப் பெண்கள். அவர்களுக்கு தொடர்பாடலுக்கான அரபு பேச்சு மொழி கற்பிக்கப்படுகிறது. அல்லது அரபு நாடுகளுக்குச் சென்று வீட்டுப் பணிப்பெண்களாக கடமையாற்றும் அவர்கள் நாளடைவில் அரபைப் பேசுவதற்கேனும் கற்றேயாக வேண்டிய நிலை உள்ளது. இன்று உலகில் இடம்பெயரும் தொழிலாளர் படையணியின் (Migrant working force ) தவிர்க்க முடியாத மொழிகளில் ஒன்று அரபு. கொரிய, ஜப்பான் மொழி போன்று அரபு மொழியும் வேலைவாய்ப்புக்களின் மொழி. இலங்கையைச் சேர்ந்த 1.5 மில்லியன் மக்கள் இன்று அரபு நாடுகளில் வேலைவாய்ப்பைப் பெற்று பல்லாண்டுகளாக அங்கேயே வாழ்கின்றனர். இலங்கையின் அன்னிய செலாவணியில் முதலிடம் வகிப்பது மத்திய கிழக்கு வீட்டுப் பணிப்பெண்கள் ஊடாகக் கிடைக்கும் வருமானமே. மத்திய வங்கி ஆண்டறிக்கை சொல்லும் செய்தி அதுதான். இதற்கு மேலாக சவூதி, குவைத், கட்டார் போன்ற அரபு நாடுகள் கடந்த நான்கு தசாப்தங்களாக இலங்கை அரசுக்கு வழங்கிய நன்கொடைகள், மானியங்கள், உதவித் தொகைகள், வட்டியில்லா இலகுக்கடன்கள் பலநூறு பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பன எந்த அரசியல்வாதியாலும் மறுக்க முடியுமா. (கட்டுரையாளர் தற்போது இலங்கைக்கு அரபு– முஸ்லிம் நாடுகள் இதுவரை வழங்கிய நிதியுதவி குறித்து ஒரு தனியான ஆய்வில் ஈடுபட்டுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் நினைவூட்டுகிறார்)
இலங்கைக்கான பெற்றோலியத்தையும் இயற்கை எரிவாயுவையும் அரபு நாடுகளிலிருந்தே பெருமளவு தருவிக்கின்றோம். குக்கிராமங்கள் தோறும் கடந்த 30 ஆண்டு கால இடைவெளிகளில் முளைத்துள்ள வீடுகள் அரபு நாடுகளில் இருந்து கிடைக்கப்பெற்ற வருமானங்கள் மூலம் விளைந்தவை என்பதை யாரால் மறுக்க முடியும்? இப்படி அரபு நாடுகள் மூலம் ஏகப்பட்ட பயன்பாடுகளையும் நன்மைகளையும் அனுபவித்துக் கொண்டு அரபு மொழி நூலை வைத்திருப்பவனைத் தீவிரவாதிகளாக சித்திரிப்பதும், கைது செய்வதும் எவ்வளவு கேவலமான ஒரு செயல் என்பதை நாம் உணர்த்த வேண்டியுள்ளது.
அரபு கலாசாரமயமாக்கல் என்பதையே அரபு மயமாக்கம் கருதுகின்றது எனில், இதில் இரண்டு பார்வைகள் உள்ளன. முதலாவது அரபு நாடுகளின் ஆடை அமைப்பு, பொழுதுபோக்கு முறை, உணவு பழக்கம் போன்ற ஏதேனும் ஒன்றை அல்லது மூன்றையும் இலங்கை முஸ்லிம்கள் பின்பற்றுவது இலங்கையின் அரசியலமைப்புக்கோ சட்டங்களுக்கோ முரணானதல்ல. இலங்கையை இஸ்லாமியமயமாக்கி விடப் போகிறார்கள் என்று இஸ்லாமியப்பீதியை சந்தைப்படுத்த எத்தனிக்கும் சக்திகள், முகம் மூடும் பெண்களை விகாரமாக முன்னிறுத்துகின்றனர். உண்மையில் பெண்கள் முகத்தை மூடி நிகாப் அணியும் பழக்கம் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் சமீபத்திய தோற்றப்பாடாகும். இலங்கையின் திறந்த பொருளாதாரக் கொள்கை , மத்திய கிழக்கிற்கான இடம்பெயர்வு மற்றும் சிலரது இறுக்கமான சமய நோக்கு இதற்கான காரணமாக இருக்கலாம். இதனை பண்பாட்டு ரீதியில் தவறானதாகவோ நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானதாகவோ யாரும் கருத வேண்டியதில்லை. ஏனென்றால் ஒரு சமூகம் இதைத்தான் உடுக்க வேண்டும். இதைத்தான் உண்ண வேண்டும் என்று தீர்மானிக்கும் உரிமை எந்தவொரு அரசுக்கும் கிடையாது.
ஆனால் இனவாதிகள் மற்றும் மதத் தேசியவாதிகள் சிலர் பௌத்த நாட்டிற்கு விடுக்கப்படும் ஓர் அச்சுறுத்தலாகவே நிகாபைச் சித்திரித்து பூதாகரப்படுத்தி வருவதால் அது குறித்து மீள் சிந்திப்பு அவசியம் என்ற கருத்து முஸ்லிம் பொது வெளியில் விவாதிக்கப்பட்டு வருகின்றது. யதார்த்தத்தில் ‘நிகாப்’ இஸ்லாமிய சட்டவியலுடனோ அடிப்படை போதனைகளுடனோ தொடர்புபட்ட ஒரு சமயப் பெறுமானம் கொண்ட ஆடை அமைப்பல்ல. அது மிகத்தெட்டத் தெளிவானது. அது அரபுலகில் சில அரபுப் பெண்களால் விரும்பி அணியப்பட்ட ஒன்று. பின்னர் அது அரபு பண்பாட்டின் குறியீடாகவும் (Symbol) அடையாளமாகவும் (Identity) மாற்றம் பெற்றது அவ்வளவுதான். ஆனால் அதனை இலங்கையில் தடை செய்வதற்கான சட்டபூர்வ நியாயப்பாடுகள் எதுவும் இல்லை. ஒரு ஜனநாயக நாட்டில் வாழும் ஒரு பிரஜை தான் விரும்பும் ஆடையை அணியும் சுதந்திரமும் உரிமையும் உள்ளவன். இதை அனைத்து சர்வதேச மனித உரிமை பட்டயங்களும் அங்கீகரித்துள்ளன. கலாசாரத்தில் கை வைக்கும் அதிகாரம் எந்தவொரு அரசுக்கும் இல்லை. ஆனால் அது இலங்கை முஸ்லிம்களின் கலாசாரம் தானா என்பதை சற்று நிதானித்துப் பார்க்க வேண்டியுள்ளது.
“அரபு மயமாக்கல்” குறித்து பாராளுமன்றத் தெரிவுக்கு முன்னால் தோன்றிய நபர் ஹிஸ்புல்லாஹ் மீது குற்றம் சாட்டியதை மீண்டும் இங்கு நான் நினைவுபடுத்த வேண்டும். நகரை அலங்கரிக்கும் அதேவேளை அயன மண்டலம், சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற வகையிலும் பொருத்தமான பொருளாதாரப் பண்டமாகக் கருதப்படும் ஈச்சம் மரங்கள் காத்தான்குடியில் நடப்பட்டன. இன்று அவை காய்த்து கனிந்து கனிகளைத் தருகின்றன. ஈச்சம் மரத்திற்கும் தீவிரவாதத்திற்கும் என்ன தொடர்பு? காத்தான்குடியில் சில வீதிகளில் குறிப்பாகக் கடற்கரையில் வந்து முடியும் வீதிகளில் “லாஇலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர்” போன்ற வாசகங்கள் செதுக்கலாக நடப்பட்டுள்ளன. இவற்றை உதாரணங்காட்டி காத்தான்குடி இலங்கையிலுள்ள ஓர் இஸ்லாமிய சாம்ராஜ்யம் என்று புலம்புவது மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடும் பத்தாம் பசலித்தனமாகும்.
ரதன தேரருக்கும், ஞானசாரவுக்கும் அவல் கொடுப்பதற்கும் அல்வா கொடுப்பதற்கும் நம்மவர்கள் தனிப்பட்ட கோபதாபங்களைப் பயன்படுத்தாமல் இருக்கக்கடவது.
vidvelli