ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளர் கபீர்ஹாசிம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வதேச ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போது தெரிவித்த கருத்துக்களை தவறாகப் புரிந்து கொண்டே ஊடக அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தான் வாழ்நாள் முழுவதும் பதவியில் இருக்கப்போவதாக கருத்துப்பட எதுவும் தெரிவிக்கவில்லை என துறைமுகங்கள் அபிவிருத்தி மற்றும் கப்பற்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
நேற்று ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைமைக்காரியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது;
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வதேச ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போது தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் ஐக்கியதேசியக்கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசிமும், பாராளுமன்ற உறுப்பினர் சாகல ரத்நாயக்கவும் அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். ஜனாதிபதி கடந்த 3 ½ வருட காலத்தில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.
மத்தியவங்கி பிணைமுறி ஊழல், ஹில்டன் ஹோட்டலை தனியார் மயப்படுத்தும் கொடுக்கல், வாங்கல்கள் பற்றியும் ஜனாதிபதி ஊடக மாநாட்டில் கருத்து வெளியிட்டுள்ளார். அவரையும் கோதாபய ராஜபக் ஷவையும் கொலை செய்வதற்கான சதிமுயற்சி பற்றியதையும் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசிமின் அறிக்கையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் என்று ஜனாதிபதி கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார். ஜனாதிபதியும் இதற்குப் பொறுப்புக் கூறவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
தனது வாழ்நாளில் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகுவதை அனுமதிக்க மாட்டேன் என ஜனாதிபதி ஊடக மாநாட்டில் தெரிவித்துள்ளதாகவும், கபீர் ஹாசிமின் அறிக்கை குறிப்பிடுகிறது. ஜனாதிபதிக்கு வாழ்நாள் முழுவதும் பதவியில் இருக்க முடியாதல்லவா?
ஜனாதிபதி தனது உரையில் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் என்று குறிப்பிடவில்லை, ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலப்பகுதியில் இடம்பெற்ற ஊழல்கள் என்றே கூறியுள்ளார். அரசாங்கத்துக்குள் இடம்பெற்ற ஊழல்கள் பற்றி விசாரணை செய்வதற்கு ஆணைக்குழு நியமிக்க வேண்டும் என்றே ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அன்றி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் என்று கூறவில்லை.
மத்தியவங்கி முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமே இருந்தது. அவரே விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சராக இருந்தார். ஆணைக்குழு நியமிக்கப்படுவதை ஆதரிப்பதாக கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அவரது ஆயுள்காலத்துக்கும் நியமிக்கப்படவில்லை. கபீர் ஹாசிம் ஜனாதிபதியின் உரையை தவறாக புரிந்து கொண்டுள்ளார். நாம் ஏதாவது கருத்து வெளியிடும்போது பொதுவாக இவ்வாறு கூறுவதுண்டு.
சாகல ரத்நாயக்கவும் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார். நிஷாந்த சில்வாவின் இடமாற்றம்தொடர்பில் அவர் கருத்து வெளியிட்டுள்ளார். நிஷாந்த சில்வாவை இடம் மாற்றும் படி ஜனாதிபதி பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிடவில்லை. பொலிஸ்மா அதிபர் தான் நினைத்தபடி இடமாற்ற உத்தரவினை ஜனாதிபதியே வழங்கினார் என பாதுகாப்பு செயலாளருக்கு எழுதியுள்ளமை தவறானதாகும். பாதுகாப்பு செயலாளர் இது தொடர்பில் பொலிஸ்மா அதிபரை விசாரித்து எச்சரித்துள்ளார்.
லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பான விசாரணைகளை ஜனாதிபதி முடக்குவதற்கு முயற்சிக்கிறார் என்று தற்போது பிரசாரம் செய்யப்படுகிறது.
ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளர் ஊடகங்களின் தலைவர்களுக்கு கடிதமொன்றினை அனுப்பியுள்ளார். ஊடகங்களுக்கு அழுத்தங்களை பிரயோகிப்பதற்கு ஐக்கிய தேசியக்கட்சியினால் முடியாது.
பிரதமர் நியமனம் மற்றும் அமைச்சர்கள் நியமனம், அவர்களுக்குப் பொறுப்பான விடயங்கள் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளன. இந்த அறிவித்தலை உயர்நீதிமன்றத்திலே சவாலுக்குட்படுத்த முடியும். ஊடகங்களுக்கு கபீர் ஹாசிமினால் அச்சுறுத்தல் விடுக்க முடியாது. செய்திகளிலும், கட்டுரைகளிலும் எம்மை அமைச்சர்களாகக் குறிப்பிடவேண்டாம். சட்டரீதியான அரசாங்கம் ஒன்று பதவியில் இல்லை எனவும், கபீர் ஹாசிம் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு செய்திகள் வெளியிட்டால் ஊடக நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடர்வதாவும் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்க முடியாது.
-Vidivelli