மத்ரஸா கல்வியை தனியான ஒரு சட்டத்தின் கீழ் நிர்வகிப்பதற்கான நடவடிக்கைகள் கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. முஸ்லிம் சமய விவகார அமைச்சினால் நியமிக்கப்பட்டிருந்த நிபுணத்துவ குழு தயாரித்த மத்ரஸா கல்வி சட்ட வரைபு தற்போது கல்வி அமைச்சின் நிபுணத்துவக் குழுவினால் ஆராயப்பட்டு வருகின்றது என முஸ்லிம் சமய விவகார அமைச்சின் உதவிச் செயலாளர் எம்.கே.முஹைஸ் தெரிவித்தார்.
நாட்டில் இயங்கிவரும் மத்ரஸாக்களை தனியான சட்டத்தின் கீழ் நிர்வகிப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானம் தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், மத்ரஸா கல்விக்கு தனியான சட்டமொன்றினை இயற்றிக்கொள்வதற்கு அமைச்சரவை ஏற்கனவே அங்கீகாரம் வழங்கியுள்ளது. முஸ்லிம் சமய விவகார அமைச்சும், கல்வியமைச்சும் இணைந்து இதற்கான சட்டவரைபினைத் தயாரிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டது. அதற்கிணங்க முஸ்லிம் சமய விவகார அமைச்சினால் நியமிக்கப்பட்ட நிபுணத்துவக் குழு தயாரித்த சட்டவரைபு கல்வியமைச்சுக்குக் கையளிக்கப்பட்டுள்ளது.
கல்வியமைச்சின் நிபுணத்துவக் குழு அச்சட்டவரைபினை ஆராய்ந்து வருகிறது. அக்குழு தற்போது இரு அமர்வுகளை நடாத்தியுள்ளது.
குழுவின் ஆலோசனைக்கமைய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதன் பின்பு சட்டவரைபு கல்வி அமைச்சரிடம் கையளிக்கப்படும். பின்பு மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
1983 ஆம் ஆண்டுக்கு முன்பு மத்ரஸா கல்வி கல்வியமைச்சின் கீழேயே நிர்வகிக்கப்பட்டு வந்தது. அதன் பின்பே முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டது என்றார்.
நாட்டில் இயங்கிவரும் மத்ரஸாக்கள் அடிப்படை வாதத்தைப் போதித்து வருவதாகவும், மத்ரஸாக்களிலே அடிப்படை வாதிகள் உருவாக்கப்படுவதாகவும் அண்மைக்காலமாக பெரும்பான்மை இனவாதிகளால் குற்றம் சுமத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் ஏப்ரல் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களையடுத்து மத்ரஸாக்களுக்கு எதிர்ப்பு வலுப்பெற்றது.
இதனையடுத்தே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மத்ரஸா கல்விக்கென தனியான சட்டமொன்றினை இயற்றிக்கொள்ளுமாறு அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமுக்கு பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
vidivelli