ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பு ஒழுக்க விதிமுறைகளை மீறி செயற்பட்ட அனைவருக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கட்சியின் செயற்குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட முன்னரே சஜித் பிரேமதாச பிரசாரங்களை செய்வது கட்சியின் தலைமைத்துவ கட்டளைகளை மீறிய செயல். ஆகவே அவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் கூறியுள்ளார். எவ்வாறு இருப்பினும் கட்சி பிளவுபட அனுமதிக்கப்போவதில்லை எனவும் அவர் கூறினார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் ஒரு சிலருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசமிடம் வினவியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
ஐக்கிய தேசியக் கட்சிதான் இலங்கையில் இயங்கும் கட்சிகளில் ஜனநாயக ரீதியில் செயற்படும் கட்சியாகும். ஆனால் ஜனநாயக உரிமைகள் இருக்கின்ற காரணத்தினால் கட்சியில் என்ன வேண்டுமானாலும் செய்யலாமென அர்த்தமல்ல. இன்று கட்சியின் ஒழுக்க விதிமுறைகளை மீறி சிலர் செயற்பட்டு வருகின்றனர். அவர்கள் தனிப்பட்ட ரீதியில் என்னுடன் நட்புறவை கையாண்டாலும் கூட கட்சியின் பொதுச் செயலாளர் என்ற வகையில் நான் கட்சியின் கொள்கைகளுக்கு கட்டுப்பட்டே உள்ளேன். எனவே, இன்று கட்சியின் ஒழுக்கவிதிகளை மீறிய நபர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கட்சியின் செயற்குழு என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆகவே என்னால் அதனை மீறி எவரையும் காப்பாற்ற முடியாது. எனவே கட்சியின் யாப்பினை மீறி ஒழுக்க விதிமுறைகளை தகர்த்து செயற்படும் நபர்கள் அனைவருக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதியே.
அதேபோல் அமைச்சர் சஜித் பிரேமதாசவும் சில தேர்தல் பிரசாரங்களை செய்து வருகின்றமை கட்சியின் விதிமுறைகளுக்கு அப்பாலான செயலாகவே கருதப்படுகின்றது. ஆகவே, அவரை விசாரிக்க வேண்டுமென்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. இப்போதே கட்சியை நாசமாக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிலர் குற்றம் சுமத்தி வருகின்றனர். எனவே அது குறித்து கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
மேலும், ஜனாதிபதி வோட்பாளர் யார் என்பதை கூறவேண்டிய அவசியமில்லை. முதலில் கூட்டணி அமைப்பது குறித்தே முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்க முன்னர், வேட்புமனு தாக்கல் திகதி அறிவிக்க முன்னர் எதற்காக ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்க வேண்டும். கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினோம். இதில் பரந்த கூட்டணியொன்றை அமைக்க வேண்டுமென்ற இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. அதற்கமைய அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தலைவர், பிரதித் தலைவர் இருவரும் இணைந்தே இதில் பயணிக்கவுள்ளனர்.
அவ்வாறிருக்கையில் கட்சி பிளவுபட அவசியமில்லை. அனைவரையும் இணைந்து பயணிக்கவே எமக்கு அவசியமாக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
vidivelli