சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றக் கோரிக்கை 1987களிலேயே முன்வைக்கப்பட்டிருந்த போதிலும் மக்கள் போராட்டமாக உருவெடுத்து அதற்காக தமது ஆதரவை நிரூபிக்கும் வகையில் கடந்த 2018.02.10ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சாய்ந்தமருது மக்கள் இக்கோரிக்கையின் அடிப்படையில் போட்டியிட்ட தோடம்பழச் சின்னத்திலான சுயேச்சைக் குழுவினரை பெருவாரியாக ஆதரித்து 13,239 வாக்குகளை சுமார் 82 சதவீதமானோர் அளித்து தமது ஆணையையும் விருப்பையும் வெளிப்படுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சாய்ந்தமருது உள்ளூராட்சி சபைக் கோரிக்கையானது வெற்றி பெறுவதிலிருந்து நழுவிச் செல்வதற்கான காரணங்களை நாம் நிறுத்துப் பார்க்க தவறியிருந்தமையும் எடுத்த முயற்சியில் இருந்த இடையூறுகளை சரியாக இனங்கண்டு சரிசெய்து கொள்வதற்கு உள்ளூராட்சி மன்ற இலக்கை நோக்கிய அண்மைய சபை செயற்பாட்டாளர்கள் சுய விமர்சனம் செய்து கொள்ளாமையும் பிரதான காரணங்களாக அமைகின்றன (இக்கட்டுரையில் கையாளப்படும் உள்ளூராட்சி மன்ற இலக்கை நோக்கிய அண்மைய செயற்பாட்டாளர்கள் என்பது சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆ பள்ளி நிருவாக சபையினரோடு இணைந்து செயற்படும் புத்திஜீவிகள் மற்றும் வெற்றிபெற்ற சுயேச்சைக்குழு உறுப்பினர்கள் உள்ளடக்கிய குழுவினரையே குறித்து நிற்கும் என்பதை வாசகர்கள் கவனத்திற் கொள்க).
இன்று நமது நாட்டின் அரசியல் பேசுபொருளாக உருவெடுத்திருக்கும் ஜனாதிபதித் தேர்தல் கெடுபிடிகளுக்கு மத்தியில் நமது சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றக் கோரிக்கையை சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்பை இத்தருணம் தருமா என்கின்ற ஒரு கேள்வி நமக்குள் இன்று எழுப்பப்பட்டு விடை கண்டறியப்பட வேண்டும். அதனை நோக்கியே இக்கட்டுரை நகர்த்தப்படுகின்றது.
இன்றைய ஜனாதிபதித் தேர்தல் களமென்பது முஸ்லிம் சமூகத்திற்கான தேவைகள் குறித்த முன்வைப்புக்களையோ, முஸ்லிம் அடையாள அரசியலை முன்னிறுத்தும் கோரிக்கைகளையோ முன்நகர்த்தக்கூடிய ஒரு சூழல் இல்லாமை இருப்பதென்பது நமது உள்ளூராட்சி மன்றக் கோரிக்கையிலும் தாக்கம் செலுத்துமா என்றால் இல்லையென்பதுதான் அதற்கு வெளிப்படையான பதிலாகும். ஏனெனில், சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றக் கோரிக்கை என்பது முஸ்லிம் அரசியலை அடையாளப்படுத்துகின்ற ஒன்றல்ல என்பதுடன் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எதிர்த்தாடலை உருவாக்கக் கூடியதுமல்ல.
உண்மையில் உள்ளூராட்சி மன்ற இலக்கை நோக்கிய அண்மைய செயற்பாட்டாளர்கள் இது தொடர்பில் எடுக்கின்ற ஒவ்வொரு முயற்சியிலும் உளத்தூய்மை இருக்க வேண்டும். அது இல்லையெனில் அம்முயற்சிகள் வெற்றியைத் தொட்டுக் கொள்வதில் எப்பொழுதும் ஒரு பின்னடைவைச் சந்திப்பதிலிருந்து விடுபடாத நிலையையே உருவாக்கும். அந்த நிலையில்தான் இந்த செயற்பாட்டாளர்களின் நகர்வு அமைந்திருக்கின்றதா என்ற ஒரு சந்தேகத்தை முன்வைக்காமல் இருக்க முடியாது.
எமது உள்ளூராட்சி மன்றக் கோரிக்கை வெற்றி பெறுவதற்கு உள்ளூராட்சி மன்ற அரசியலை மாத்திரம் செய்ய வேண்டும் என்கின்ற உணர்வு முக்கியமானது. அதற்கு மேலான மாகாண சபை அங்கத்துவம், பாராளுமன்ற உறுப்புரிமை என்பனவற்றை மையமாகக் கொண்டு செயற்படும் எண்ணம் துளியளவும் இருக்கக் கூடாது. இந்த மனோநிலை இருந்தால்தான் இப்போராட்டம் வெல்லுவதற்கான சரியான பாதையில் பயணிக்கும் சூழலை நமக்குத் தரும்.
நமது கோரிக்கை நிறைவுபெறாமைக்கு கல்முனைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் தடையாக இருக்கின்றார் என்கின்ற ஒரு காரணத்தை முன்வைத்து நாமும் பாராளுமன்ற உறுப்பினராக ஆகிவிட்டால் எம்மீது பிரயோகிக்கும் தடுப்புகள் அனைத்தையும் உடைத்தெறிந்து விடலாம் என்று எண்ணுவது ஓர் அரசியல் அனுபவமற்ற போக்காகவே பார்க்கப்படல் வேண்டும். ஏனெனில், இன்றைய நாடாளுமன்ற உறுப்புரிமை முறைமையென்பது மாவட்டத் தேர்தல் முறைமையை அடிப்படையாகக் கொண்டதாகும். உதாரணமாக, கல்முனைத் தொகுதியிலிருந்து ஒரு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் எந்தக் காரணத்தைக் கொண்டும் தெரிவாக முடியாது. ஆனால், அம்பாறை மாவட்டத்திலிருக்கும் பொத்துவில் தொகுதியிலிருந்து மாத்திரம்தான் தெரிவாக முடியும். அவர்தான் அம்பாறை மாவட்டத்தில் வாழ்கின்ற எல்லா தமிழ் மக்களின் பிரதிநிதியாக செயற்பட முடியும்.
இவ்வாறு ஒரு பாராளுமன்ற உறுப்பினராகிவிட்டார் என்பதற்காக அவரால் எல்லாவற்றையும் சாத்தியப்படுத்திக் கொள்ள முடியும் என்கின்ற நிலைப்பாடு இருக்க முடியாது. இதற்கு ஓர் உதாரணமாக, அண்மைய கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்வு விவகாரத்தை குறிப்பிட முடியும். அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் இவ்விவகாரத்தில் தலையிட்டும் முடிவுக்கு கொண்டுவரப்பட முடியாமல் போனதற்கு காரணம் அவர் சார்ந்து நின்று தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கின்ற கட்சியின் தலைமைப்பீடம் உள்ளிட்ட உயர்பீடம் கொண்டிருக்கும் ஆளுமையிலும் பிடிமானத்திலும்தான் தங்கியிருக்கின்றது என்பதை நிரூபிக்கின்றது. ஆதலால், நமது உள்ளூராட்சி மன்ற இலக்கை நோக்கிய அண்மைய செயற்பாட்டாளர்கள் இதனைக் கருத்திற் கொண்டு தமது பாராளுமன்ற உறுப்புரிமையை பெற்றுக் கொள்வதினால் மாத்திரம் நமது உள்ளூராட்சி மன்றக் கோரிக்கை வெற்றிபெற முடியாது என்பதை உணரப் போதுமானது.
கட்சி சாராது சுயேச்சைக் குழுவாக பாராளுமன்ற உறுப்புரிமையைப் பெற்றால் இந்தக் கட்டுப்பாடுகள் இல்லைதானே, சுயமாகச் செயற்பட முடியும்தானே என்ற கேள்விகள் இங்கு எழுப்பப்படலாம். ஆனால், அம்பாறை மாவட்டத்திலிருந்து ஒரு சுயேச்சைக்குழு பாராளுமன்றப் பிரதிநிதித்துவதத்தைப் பெற்றுக் கொள்வதாயின் ஆகக் குறைந்தது வெட்டுப் புள்ளியைத் தாண்டுவதற்கு குறைந்தபட்சம் 15000 வாக்குகளை அக்குழு பெற வேண்டியிருக்கும். அதற்கு அப்பால் ஆகக் குறைந்தது மொத்தமாக 35,000 வாக்குகளைப் பெற்றால்தான் எஞ்சிய வாக்குகளின் ஊடாக ஓர் உறுப்பினரைப் பெறலாம்.
இவ்வளவு வாக்குகளைப் பெறுவதற்கு நமது சாய்ந்தமருது ஊர் கொண்டிருக்கும் மொத்த வாக்குகளை அளித்தாலும்கூட இருபதாயிரத்தைத் தாண்டாது. மிகுதியாக தேவைப்படக்கூடிய சுமார் 16 ஆயிரம் வாக்குகளை அம்பாறை மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஏனைய முஸ்லிம் ஊர்களிலிருந்து திரட்டிக் கொள்வற்கு வலுவுடைய காரணமாக நமது உள்ளூராட்சி மன்றக் கோரிக்கை அமைந்திராது என்பது வெளிப்படையானது. அது மாத்திரமன்றி இந்த 16 ஆயிரம் வாக்குகளை திரட்டக்கூடிய அளவுக்கு சாய்ந்தமருதைச் சேர்ந்த மக்கள் இவ்வூருக்கு வெளியே பரந்து வாழவுமில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
நமது நாட்டைப் பொறுத்தவரை ஆட்சி அதிகாரத்திற்கு வரக்கூடிய சக்திகளாக இருக்கக்கூடிய மஹிந்த அணி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய இரண்டு அணிகளுமே காணப்படுகின்றன. இவ்வாறான பெருந்தேசியக் கட்சிகளில் அங்கத்துவத்தைப் பெற்று பாராளுமன்ற உறுப்புரிமையைப் பெற்றுக் கொள்வதிலும் உள்ளூராட்சி மன்ற இலக்கை நோக்கிய அண்மைய செயற்பாட்டாளர்களுக்கு இடறல்கள் இருக்கின்றன. ஒன்று, அக்கட்சிகளில் ஏற்கனவே முஸ்லிம் உறுப்பினர்கள் பலம் பொருந்தியவர்களாகவும் நம்மைவிட வாக்குப்பலம் உள்ளவர்களாகவும் இருக்கிறார்கள்.
அக்கட்சிகளில் இருக்கக்கூடிய சிங்கள உறுப்பினர்கள் பொதுவாக இந்த முஸ்லிம் உறுப்பினர்களை விட அதிகரித்த வாக்குப்பலத்துடன் இருப்பதும் மற்றும் குறிப்பாக அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களிடம் அதிக செல்வாக்கைச் செலுத்துகின்ற முஸ்லிம் கட்சிகளான முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் ஆகியன பெருந்தேசியக் கட்சிகளோடு ஏதோ ஒரு வகையில் தங்களை இணைத்துக் கொண்டவர்களாகவே காணப்படுகின்றனர். இவற்றினை மீறி நாம் கட்சி உறுப்புரிமையைப் பெற்று பெருந்தேசியக் கட்சிகளில் நாடாளுமன்ற உறுப்புரிமையையோ, மாகாண சபை உறுப்புரிமையையோ பெறுவது என்பது முயற்கொம்பை தடவிப் பார்ப்பதற்கு ஒப்பானது.
முஸ்லிம் மக்களிடம் அதிக செல்வாக்குடன் திகழக்கூடிய முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளில் ஏதாவது ஒன்றுடன் இணைந்து நமது நாடாளுமன்ற அல்லது மாகாணசபை உறுப்புரிமையை உறுதி செய்து கொள்ள முடியாதா என்கின்ற இதன் அடுத்த பக்கத்தை எடுத்து நோக்கினாலும் நமது உள்ளூராட்சி மன்ற இலக்கை நோக்கிய அண்மைய செயற்பாட்டாளர்களுக்கு அறவே சாத்தியமில்லை என்பதையே உறுதி செய்கின்றது. அது எவ்வாறு என்பதை இம்மூன்று கட்சிகளினதும் நமது உள்ளூராட்சி மன்றக் கோரிக்கையில் இன்றுவரை கடைப்பிடித்துக் கொண்டிருக்கின்ற செயற்பாடு கட்டியம் கூறத்தக்கது. அவற்றினை தனித்தனியாகப் பார்ப்போம்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவத்தை கடந்த இரண்டு மாதங்களுக்குள் உள்ளூராட்சி மன்ற இலக்கை நோக்கிய அண்மைய செயற்பாட்டாளர்கள் சந்திப்புகளை மேற்கொண்டபோது அமைச்சர் ரவூப் ஹக்கீம் மிகத் தெளிவாகவும் வெளிப்படையாகவும் சொன்ன விடயம் யாதெனில், கல்முனை வடக்கு உப பிரதேச செயலக தரமுயர்த்துதலுக்கான எல்லை தீர்க்கப்பட்டால் சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றக் கோரிக்கையும் நிறைவு பெறும் என்பதாகும். இதற்கு முன்னர் அமைச்சர் ரவூப் ஹக்கீமுடனான இக்குழுவினரின் சந்திப்புகளிலும் கல்முனை மாநகர சபை என்பது நான்கு உள்ளூராட்சி மன்றங்களாகப் பிரிக்கப்படும் ஒரே சந்தர்ப்பத்தில்தான் சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றமும் வழங்கப்படும் என்றே இடித்துரைத்துக் கூறப்பட்டு வந்திருக்கின்றது.
இங்கு புதிய சபைகளை உருவாக்குவதில் இருக்கின்ற பிரச்சினை என்னவெனில் கல்முனை மாநகர சபையின் வடக்கு எல்லையாக தாளவட்டான் சந்தி அல்லது நீதிமன்ற வீதியை திட்டவட்டமாக வரையறுக்க வேண்டுமென கல்முனைக்குடி – கல்முனை முஸ்லிம் சமூகம் விடாப்பிடியாகக் கோரி நிற்கின்றன. மேற்குறித்த எல்லையை தமிழ்த் தரப்பினர்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என்பதுதான் இன்றுவரை காணப்படுகின்ற ஓர் உறுதியான நிலைப்பாடாகும்.
இதனால்தான் பல சந்தர்ப்பங்களில் கல்முனை மாநகர சபை நான்கு உள்ளூராட்சி மன்றங்களாக வகுக்கப்பட வேண்டுமென்ற அபிப்பிராயம் முன்வைக்கப்பட்ட சந்தர்ப்பங்களிலெல்லாம் இது சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றம் வழங்கப்படக் கூடாது என்பதை வலியுறுத்துவதற்கான மறுபெயரிடுதல் என்று அழுத்தம் திருத்தமாக பதிவு செய்து வந்திருக்கின்றேன். இதனை உணர்ந்துகொள்ள முடியாதவர்களாக எமது உள்ளூராட்சி மன்ற இலக்கை நோக்கிய அண்மைய செயற்பாட்டாளர்கள் இருப்பது என்பது இந்த விடயத்தில் புரியாதவர்களாக இருப்பதையே எடுத்துக் காட்டும்.
எல்லை விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வருகின்ற ஆளுமையுடைய தலைமையாக அதாவது, கல்முனைக்குடி – கல்முனைச் சமூகத்தினரையும் அவர்களின் காவலனாகக் கருதப்படுகின்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸையும் மீறி அல்லது புறந்தள்ளிவிட்டு தீர்வு எடுக்கக் கூடியவர் என்பதை ஆதாரப்படுத்திவிட்டு, முஸ்லிம் காங்கிரஸின் பின்னால் இவர்கள் இழுபட்டுச் சென்றால் ஒரு சரியான செயற்பாடாக இருக்க முடியும். இந்நிலை மு.காவின் தலைமையிடம் இல்லாத நிலையில் தொடர்ந்தும் நமது உள்ளூராட்சி மன்ற இலக்கை நோக்கிய அண்மைய செயற்பாட்டாளர்கள் நம்பிக்கொண்டு செயற்படுவதானது நமது மக்களின் உணர்வுக்குச் செய்கின்ற மாபெரும் துரோகமாகவும் ஏமாற்றுச் செயற்பாடாகவுமே அமைய முடியும்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைமைத்துவமும் சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றக் கோரிக்கை விவகாரத்தில் ஆரம்பத்தில் அதற்கு சார்பாகவும் அந்த மக்களின் நியாயங்களை விளங்கிக் கொண்டவராகவும் தன்னைக் காண்பித்துக் கொண்டபோதிலும் கடந்த 2018 பெப்ரவரி 10ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிப்புகள் வெளிவந்த நிலையில், தமது முன்னைய நிலைப்பாட்டை மாற்றி கல்முனைக்குடி – கல்முனை முஸ்லிம் சமூகத்தின் கருத்தை உள்வாங்கி கல்முனை மாநகரசபை நான்காகப் பிரிக்கப்படுகின்ற போதுதான் சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றத்தை உருவாக்க முடியுமென்ற நிலைப்பாட்டுக்கு தன்னை உட்படுத்திக் கொண்டது. அதற்கு இசைவாகவே குறித்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின்போது சாய்ந்தமருது வட்டாரங்களை மையப்படுத்தி அக்கட்சி சார்பில் எந்த வேட்பாளரையும் போட்டி நிலைக்கு நிறுத்தாது தவிர்ந்தும் கொண்டது.
அது மாத்திரமன்றி அவர் இந்த விவகாரத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை மேசைகளிலும் கல்முனை வடக்கு உப பிரதேச செயலக பேச்சுவார்த்தைகளிலும் பகிரங்கமாக சாய்ந்தமருதுக்கு முதலில் உள்ளூராட்சி மன்றத்தை வழங்குங்கள் எல்லைப் பிரச்சினை உடையவற்றை பின்னர் அது தொடர்பில் ஒரு பேச்சுவார்த்தைக்கு வந்து முடிவுக்கு கொண்டு வாருங்கள் என்று வலியுறத்தாமல் இருப்பதென்பதே சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றக் கோரிக்கையை கல்முனை மாநகர சபையின் நான்கு பிரிப்புகளுடனே தொடர்புபடுத்தி இன்றுவரை அக்கருத்தில் அக்கட்சி உடும்புப்பிடியாக இருக்கின்றது என்பதையே நிரூபிக்கின்றது.
தேசிய காங்கிரஸைப் பொறுத்தவரை நான்கு பிரிப்பு ஊடாகவே சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றம் வழங்கப்படல் வேண்டுமென்ற போக்கை கடைப்பிடித்து வருகின்ற ஒரு கட்சியாகும். 2009ஆம் ஆண்டு தொடக்கம் இந்தக் கருத்தை இவர்கள் வலியுறுத்தி வந்தபோதிலும் 2010 இலிருந்து 2015 வரை தேசிய காங்கிரஸின் தலைவர் மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சராக இருந்தும் இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவரத் தவறியிருக்கின்றார் என்ற பகிரங்க குற்றச்சாட்டும் அக்கட்சி மீதும் உள்ளது.
2014ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிய காலப்பகுதியில் நான்கு பிரிப்புக்கான முயற்சிகளை எடுத்து அது தடைப்பட்டதாக ஒரு பரப்புரையைச் செய்தது. ஆனால் இந்த நான்கு பிரிப்புக்கான முயற்சிகள் உண்மையில் நடைபெற்றதற்கான ஆதாரங்கள் இதுவரை வெளிப்படைத் தன்மையாக மக்களிடத்தில் சென்றடையவில்லை என்பதே இங்கு நோக்கத்தக்கது. எனவே, தேசிய காங்கிரஸின் முயற்சிகள்கூட கல்முனை மாநகர சபை நான்கு பிரிப்புகளாகவே நடைபெற வேண்டும் என்றும் அந்த நேரத்தில்தான் சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றம் வழங்கப்படல் வேண்டுமென்ற முன்னெடுப்புகளும்தான் அவர்களிடம் இருந்து வருகின்றன.
ஆக, மொத்தத்தில் இம்மூன்று கட்சிகளும் சாய்ந்தமருதுக்கென்று முதலில் உள்ளூராட்சி மன்றத்தை வழங்குவதற்கு ஆயத்தமாக இல்லை. மாறாக நான்கு பிரிப்புக்கள் ஏக காலத்தில் நடைபெற வேண்டும் என்ற பின்புலத்தில்தான் தங்கியிருக்கின்றது என்பது சந்தேகத்திற்கு அப்பால் உறுதிப்படுத்தப்படுகின்றது. ஆயின் இக்கட்சிகளோடும் இணைந்து பாராளுமன்ற உறுப்புரிமை, மாகாண சபை உறுப்புரிமையைப் பெற்றுக் கொள்வதற்காக ஒரு இணக்கப்பாட்டிற்கு நமது உள்ளூராட்சி மன்ற இலக்கை நோக்கிய அண்மைய செயற்பாட்டாளர்கள் செல்ல முடியாத தடுப்புச் சுவர் மிகப் பலமாக கட்டியெழுப்பப்பட்டிருக்கின்றது. இதனை மீறி நாம் இணைந்தாலும் அக்கட்சியின் தலைமைத்துவங்கள் நான்கு பிரிப்பின்போது சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றம் என்ற கோரிக்கையைக் கைவிட்டு முதலில் சாய்ந்தமருதுக்கு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தக் கூடியவர்களாக மாறுவார்கள் என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதங்களுக்கான அறிகுறிகளும் தென்படவில்லை என்பது திட்டவட்டமானது.
நம்மை நோக்கி உறுதியாக வரக்கூடியதாக ஜனாதிபதி தேர்தல் காணப்படுகின்றது. இதனை நமது சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்தை சாத்தியப்படுத்திக் கொள்வதற்கான தருணமாக மாற்றிக் கொள்வதில்தான் எமது கோரிக்கையின் எதிர்காலம் தங்கியிருக்கின்றது. அந்த வகையில் ஜனாதிபதியாக ஆட்சியதிகாரத்திற்கு வரக்கூடிய வல்லமையுடைய போட்டியாளர்களாக இரண்டு பேர்களிடையேதான் பலத்த போட்டி நிலவும் என்பதுவே இதுகாலவரை நமது நாட்டின் ஜனாதிபதித் தேர்தல் வரலாறு எண்பித்திருக்கின்றது. அவ்வாறானவர்களை இனங்கண்டு நமது கோரிக்கை தொடர்பிலான பேச்சுவார்த்தைகளை நடாத்தி அவர்களுக்கான ஆதரவை வழங்கி நமது கோரிக்கையை வெல்லுகின்ற காலத்தை நாம் கடந்துவிட்டோம்.
ஏனெனில், முஸ்லிம் மக்களிடையே அதிக செல்வாக்குடைய மேற்குறிப்பிட்ட மூன்று முஸ்லிம் கட்சிகளும் ஏதோ ஒரு வகையில் பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களான இரண்டு அணியிலும் சங்கமித்துக் கொள்ளுகின்ற நிலைப்பாடே மிகப் பகிரங்கமாகத் தெரிகின்றது. இவர்களுக்கு ஏற்கனவே அவர்களிடம் அதிக செல்வாக்கு இருப்பதினால் நமது கோரிக்கையோ நமது உள்ளூராட்சி மன்ற இலக்கை நோக்கிய அண்மைய செயற்பாட்டாளர்களையோ ஒரு பொருட்டாக பார்ப்பதற்கான சூழலையும் இழந்து நிற்கின்றோம்.
நமக்கு இருக்கின்ற ஒரேயொரு வழி நமது சாய்ந்தமருது மக்களின் பெரும்பாலான ஒன்றித்த வாக்குப் பலத்தை வைத்து, ஜனாதிபதித் தேர்தலை அடுத்து வரக்கூடிய பொதுத் தேர்தலில் ஆட்சியாளர்களாக வரக்கூடிய கட்சி எமது வாக்குப் பலத்தை நோக்கித் திரும்பிப் பார்க்க வைக்க வேண்டும். இந்த நகர்வின் ஊடாகத்தான் நமது கோரிக்கையை வென்றெடுப்பதற்கு தேவையான வகையிலான பேச்சுவார்த்தையை ஏற்படுத்தி அதற்கான உத்தரவாதங்களையும் பெற்றுக் கொள்ளக் கூடியவர்களாக எம்மை மாற்ற வேண்டும். அந்த தேர்தல் உடன்படிக்கையில் எமது வாக்குப் பலத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் எமது உள்ளூராட்சி மன்ற இலக்கை நோக்கிய அண்மைய செயற்பாட்டாளர்களினால் அடையாளப்படுத்தப்படுகின்ற ஒருவரை வேட்பாளராக நிறுத்தி எமது விருப்பு வாக்கை அவருக்கு மட்டும் அளித்து நாம் சார்ந்து உடன்படிக்கை செய்கின்ற கட்சிக்கும் வாக்களிக்க உடன்பட வேண்டும்.
இதேநேரம், அந்தப் பொதுத்தேர்தலினூடாக ஆட்சியை அமைத்து ஒழுங்குபடுத்தி அதன் பிற்பாடு நமது கோரிக்கையை நிறைவு செய்வதற்கு தேவைப்படும் காலங்களைக் கவனத்திலெடுத்து அதுவரை நமக்கென்று ஒரு தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்புரிமை தரப்படல் வேண்டும். அவ்வுறுப்புரிமையானது சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற உருவாக்க வர்த்தமானி அறிவித்தல் வெளிவருகின்ற அன்றே இராஜினாமா செய்து கட்சியிடமே திருப்பியளிப்பது என்ற நிபந்தனையுடன் உருவாக்கப்படல் வேண்டும்.
இங்கு மேற்படி பாராளுமன்ற உறுப்பினராக பெயரிடப்படுபவர் ஏற்கனவே கட்சி அரசியல் சார்ந்து நின்று விமர்சனத்திற்குட்பட்டவராக இருக்கக் கூடாது என்பதுடன் கேட்கப்படும் நேரத்தில் தனது உறுப்புரிமையை இராஜினாமாச் செய்து கையளிக்கக்கூடியவரான நம்பகத் தன்மையுடையவராகவும் இருத்தல் வேண்டும் என்பதில் மிக அவதானமாக செயற்படல் வேண்டும்.
அது மாத்திரமன்றி கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தோடம்பழ சுயேச்சை அணிக்கு வேட்பாளர்களைத் தெரிவு செய்கின்றபோது தவறிழைக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டிலிருந்து தம்மை விடுவிக்கும் பாங்கினையும் இங்கு கடைப்பிடிக்க வேண்டிய கடப்பாடு எமது உள்ளூராட்சி மன்ற இலக்கை நோக்கிய அண்மைய செயற்பாட்டாளர்கள் மீது இருக்கின்றது என்பதையும் மறந்துவிடக் கூடாது.
இந்நிலையை நாம் உருவாக்கிக் கொள்வதற்கு ஜனாதிபதித் தேர்தலை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு இருக்கின்ற ஒரே வழி ஆட்சி அதிகாரத்திற்கு வரமுடியாத ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்துகின்ற ஒரு கட்சியைத் தேர்ந்தெடுத்து அவர்களின் தேர்தல் பிரசார மேடைகளை நமது இலக்கை சரியாக வெளிப்படுத்துவதற்கும் நமது மக்களை அதன்பால் அணி திரட்டுவதற்கும் ஓர் ஊடகமாகப் பயன்படுத்துவதில்தான் நமது சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றக் கோரிக்கையை அடைந்து கொள்வதற்கான நிலை இருக்கின்றதேயன்றி வேறு வழியில்லை.
எம்.எம்.எம்.நூறுல்ஹக்
vidivelli