ஏப்ரல் 21 இல் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவங்களையடுத்து முஸ்லிம் சமூகம் பல சவால்களையும் அசௌகரியங்களையும் எதிர்கொண்டது. அவற்றில் முஸ்லிம் பெண்கள் அணியும் நிகாப் மற்றும் புர்காவுக்கு விதிக்கப்பட்ட தடை இன்று தெளிவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
நாட்டில் கடந்த நான்கு மாதங்களாக அமுல்படுத்தப்பட்டிருந்த அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டுள்ள நிலையில் அச்சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்ட முகத்தை முழுமையாக மறைக்கும் புர்கா மற்றும் நிகாப் ஆடைகளுக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கிறதா? இல்லையா? என்பது தொடர்பில் தெளிவற்ற நிலை உருவாகியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவத்தையடுத்து மறுதினம் 22 ஆம் திகதி முதல் நாட்டில் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டது. ஜனாதிபதியினால் அமுல்படுத்தப்பட்ட அவசரகால சட்டத்திற்கு பாராளுமன்றம் ஏப்ரல் 24 ஆம் திகதி அனுமதி வழங்கியது. அன்று முதல் ஒவ்வொரு மாதமும் 22 ஆம் திகதி அவசரகால சட்டத்தை ஜனாதிபதி நீடித்து வந்தார்.
அவசரகால சட்ட விதிகளின் கீழ் தேசிய பாதுகாப்பினை கருத்திற்கொண்டு முகத்தை முழுமையாக மூடி ஆடை அணிய தடை விதித்து ஜனாதிபதியினால் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றும் வெளியிடப்பட்டது. தற்போது அவசரகால சட்டம் நீக்கப்பட்டுள்ள நிலையில் முகத்தை மூடி ஆடை அணிய விதிக்கப்பட்ட தடையும் நீங்கியுள்ளதா? இல்லையா? என்பதில் தொடர்ந்தும் குழப்பம் நீடித்து வருகிறது. முஸ்லிம் பெண்கள் பொது இடங்களில் முகத்தை மறைத்து ஆடை அணிவது தண்டனைக்குரிய குற்றமா? இல்லையா? என்பது இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை.
தடை நீங்கிவிட்டது. முஸ்லிம் பெண்கள் நிகாப் அணியலாம் எனும் பிரசாரத்தை ஒருசாரார் முன்னெடுத்து வருகின்றனர். எனினும் இவ்வாறு அணிய முடியுமா என்பது இதுவரை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
இந் நிலையில்தான் நிகாப் மற்றும் புர்காவுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளதா? இல்லையா? என்பது தொடர்பில் மக்களுக்கு தெளிவுகளை வழங்குமாறு அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் பதில் பொலிஸ் மா அதிபரையும் பாதுகாப்புச் செயலாளரையும் கோரியுள்ளார். பாதுகாப்புத் தரப்பினரால் அல்லது அரசாங்கத்தினால் புர்கா மற்றும் நிகாப் தடை தொடர்பில தெளிவுகளை வழங்கும்வரை முஸ்லிம் பெண்கள் முகத்திரையணிந்து பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் பாதுகாப்புத் தரப்பினருக்கு பூரண ஒத்துழைப்புகளை வழங்குமாறும் முஸ்லிம் சமூகத்தை அமைச்சர் ஹலீம் வேண்டியுள்ளார். ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸிலும் இதே கோரிக்கையை மக்களிடம் முன்வைத்துள்ளது.
இதேவேளை, முஸ்லிம் பெண்கள் அணியும் நிகாப் மற்றும் புர்காவுக்கு நிரந்தர தடை விதிப்பதற்கான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் இந்த இடத்தில் கவனிக்கத்தக்கதாகும். கடந்த ஜூலை மாதம் 30 ஆம் திகதி நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள நிகாப் மற்றும் புர்காவை நிரந்தரமாகத் தடை செய்வதற்கு அமைச்சரவைப் பத்திரமொன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அமைச்சரவை அமைச்சர்கள் இதற்கு ஆதரவும் வழங்கினர். எனினும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அமைச்சரவைப் பத்திரத்தில் உள்ளங்கியுள்ள விடயங்கள் குறித்து ஆராயப்பட வேண்டும் என்றும் அதற்கு கால அவகாசம் வழங்குமாறு வேண்டிக் கொண்டதற்கமைய அமைச்சரவை அங்கீகாரம் வழங்குவதை பிற்போட்டது.
இந்நிலையில் அமைச்சரவைப் பத்திரம் எந்தச் சந்தர்ப்பத்திலும் மீண்டும் கலந்துரையாடப்பட்டு முகத்திரை தடைக்கு அங்கீகாரம் வழங்கப்படலாம் என்பதற்கான சாத்தியங்களும் உள்ளன. இதற்கிடையில் முகத்திரை தடைக்கு துணைபோக வேண்டாம் என்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்து 6000 இற்கும் மேற்பட்டோர் தெஹிவளை பள்ளிவாசலில் ஒன்றுகூடியமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும். இம் மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர்களான ரவூப் ஹக்கீமும், ரிசாத் பதியுதீனும் முகத்திரை தடைக்கான சட்டமூலம் கொண்டுவரப்படுவதை அனுமதிக்க முடியாது எனக் குறிப்பிட்டிருந்தனர்.
இப் பின்னணியிலேயே தற்போது அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டுள்ள போதிலும் முகத்திரை அணியலாமா இல்லையா என்ற சர்ச்சை தோன்றியுள்ளது. இது தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் நேரடியாக கருத்துக் கூற மறுத்துள்ளார். எனினும் முகத்திரை அணிந்து செல்வோருக்கு எதிராக தேவையற்ற சங்கடங்கள் பாதுகாப்புத் தரப்பினராலும் ஏனையோராலும் ஏற்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. அந்த வகையில் முஸ்லிம் சமூகம் நாட்டின் நிலைமைகளைக் கருத்திற் கொண்டு சமயோசிதமாக நடந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இது விடயத்தில் அரசியல் மற்றும் மார்க்க தலைமைகள் நாட்டின் தேசிய பாதுகாப்பையும் இன நல்லிணக்கத்தையும் முற்படுத்தி வழிகாட்டல்களையும் தீர்மானங்களையும் மேற்கொள்ள முன்வர வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.
vidivelli