சர்வதேச பயங்கரவாத அச்சுறுத்தல்கள் இல்லை
சி.ஐ.டி. இன்டர்போல் பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் தகவல்
தற்போதைய சூழலில் இலங்கைக்கு வெளிநாட்டு பயங்கரவாத அச்சுறுத்தல்கள் எவையும் இல்லை என குற்றப் புலனாய்வுப் பிரிவின் இன்டர்போல் பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சர் ரஞ்சித் வெதசிங்க தெரிவித்தார்.
4/21 தாக்குதல்களின் பின்னர் இலங்கைக்கு சர்வதேச பயங்கரவாத அச்சுறுத்தல்கள் தொடர்ந்தும் நிலவுகின்றதா என நேற்று இன்டர்போல் செயலாளரிடம் ஊடகவியலாளர்கள் வினவிய கேள்விக்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அதேபோன்று பிரதமரின் தொடர் ஒத்துழைப்புக்கள் சர்வதேச ரீதியில் முன்னெடுக்கப்படுகின்ற பாதுகாப்புத் திட்டங்களுக்குப் பேருதவியாக அமைந்துள்ளதாக இன்டர்போல் நிறுவனத்தின் செயலாளர் நாயகம் ஜேர்ஜன் ஸ்டொக் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச பொலிஸ் இண்டர்போல் நிறுவனத்தின் தூதுக்குழு நேற்று செவ்வாய்க்கிழமை அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தது. இதன்போதே மேற்கண்டவாறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
இண்டர்போல் நிறுவனம் சர்வதேச பொலிஸ் அமைப்பாகக் கருதப்பட்டாலும் பல சந்தர்ப்பங்களில் செயற்றிறன் மிக்க சேவைகளை வழங்க அரசியல் துறைசார் ஒத்துழைப்புக்கள் தேவைப்படுவதாக ஜேர்ஜன் ஸ்டொக் தெரிவித்தார்.
இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின்போது பிரதமரால் வழங்கப்பட்ட அரசியல் ஒத்துழைப்புக்கள் மற்றும் வழிகாட்டல்கள், அதேபோன்று உள்நாட்டு பொலிஸ் மற்றும் பாதுகாப்புத் துறைகள் ஆர்வத்துடன் செயற்பட்டமையால் குறுகிய காலத்திற்குள் அனைத்து சந்தேகநபர்களையும் கைது செய்ய முடிந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பூகோள ரீதியில் எதிர்காலத்தில் எதிர்கொள்ளக்கூடிய பாதுகாப்பு சவால்களை வெற்றிகொள்ள வேண்டுமாயின் அனைத்து உலக நாடுகளும் ஓரணியில் செயற்பட வேண்டும். அத்துடன் பாதுகாப்பு மற்றும் புலனாய்வுத் தகவல் பரிமாற்றம் மிக அவசியமானதொன்றென இதன்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
மேலும் தகவல் பரிமாற்றத்துக்கு நவீன தொழிநுட்பம் பயன்படுத்தப்பட வேண்டும். இதனூடாகவே நீர், எரிசக்தி மற்றும் நிதி மற்றும் பொருளாதார நிலைகள் போன்றவற்றுக்கு ஏற்படக்கூடிய பயங்கரவாத சவால்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் இதன் போது பிரதமர் தெரிவித்துள்ளார்.
vidivelli