சர்வதேச அளவில் பொதுவான பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளது. எனினும் இலங்கைக்கு 4/21 தாக்குதல்களின் பின்னர் தற்போதும் அவ்வாறான அச்சுறுத்தல் உள்ளதா என்பதை இலங்கையின் விசாரணையாளர்கள் கண்டறிந்து வெளிப்படுத்த வேண்டும்.
அவ்வாறு அச்சுறுத்தல்கள் இருப்பதாக அவர்கள் எமக்குத் தகவல் அளித்து உதவி கோரினால் எம்மால் முடியுமான அனைத்தையும் அவ்வச்சுறுத்தலை முறியடிக்க முன்னெடுப்போமென இண்டர்போல் எனப்படும் சர்வதேச பொலிஸ் அமைப்பின் செயலாளர் நாயகம் ஜேர்ஜன் ஸ்டொக் தெரிவித்தார்.
4/21 தொடர் தற்கொலை தாக்குதலைத் தொடர்ந்து இண்டர்போலின் ‘உடன் நடவடிக்கை குழு’ இலங்கையில் தங்கியிருந்து, குறித்த பயங்கரவாத தக்குதல்கள் தொடர்பில் விசாரணை உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்பில் முன்னெடுத்த நடவடிக்கை குறித்து ஆராய்ந்து பார்க்க இண்டர்போல் எனப்படும் சர்வதேச பொலிஸ் அமைப்பின் செயலாளர் நாயகம் ஜேர்ஜன் நேற்று முன்தினம் இலங்கைக்கான விஜயத்தை முன்னெடுத்திருந்தார். இங்கு வந்த அவர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பாதுகாப்பு உயர்மட்டத் தலைவர்களை சந்தித்த பின்னர் நேற்று மாலை கொழும்பு – ஹில்டன் ஹோட்டலில் ஊடகவியலாளர்களை சந்தித்தார். இதன்போது சர்வதேச பொலிஸாரின் கணிப்புப்படி இலங்கைக்கு சர்வதேச பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளதா என ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர, குற்றப் புலனாய்வுப் பிரிவின் இண்டர்போல் பிரிவுக்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்ஜித் வெதசிங்க ஆகியோரும் இண்டர் போல் செயலாளர் நாயகத்துடன் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இதன்போது இண்டர்போல் செயலாளர் நாயகம் ஜேர்ஜன் ஸ்டொக் மேலும் தெரிவித்ததாவது,
“4/21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர், 4/23 முதல் இண்டர்போல் சிறப்புக்குழு இலங்கை விசாரணையாளர்களுடன் இணைந்து செயற்பட்டது. குறித்த தாக்குதல் நடந்த மறுகணமே எம்மை அழைத்தமைக்கமைய நாம் இங்கு வந்து இலங்கை தேசிய பொலிசாருடன் இணைந்து செயற்பட்டோம்.
வெடிபொருட்கள் தொடர்பிலான நிபுணர் ஒருவர், அனர்த்தங்களின் போது கொல்லப்பட்டவர்களின் சடலங்களை அடையாளம் காண்பது தொடர்பிலான நிபுணர், பகுப்பாய்வாளர் மற்றும் பயங்கரவாத தடுப்பு நிபுணர் உள்ளிட்ட நிபுணர்களை உள்ளடக்கியதாக அந்தக் குழு இலங்கைக்கு வந்தது.
இங்கு வந்த அவர்கள் இலங்கை பொலிசார் முன்னெடுத்த விசாரணைகளுக்குத் தேவையான பகுப்பாய்வு, தொழிநுட்ப ரீதியிலான உதவிகளையும், சர்வதேச தகவல் பரிமாற்ற உதவிகளையும் வழங்கினர். இதற்கு இலங்கை பொலிஸ் தரப்பிலும், ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டவர்களிடமிருந்தும் எமக்குப் பூரண ஒத்துழைப்பு கிடைத்தது. அதற்காக நான் நன்றி தெரிவிக்கின்றேன்.
நாம் இலங்கையில் விசாரணையாளர்களுடன் இணைந்து பணியாற்றியதன் விளைவே மத்தியகிழக்கு நாடொன்றிலிருந்து மிக முக்கியமான சந்தேக நபரான ஹயாத்து முஹம்மது மில்ஹான் எனும் பயங்கரவாத சந்தேக நபரைக் கைது செய்ய முடிந்தது.
குறிப்பாக 4/21 தொடர் தற்கொலை தாக்குதல்களின் பின்னரான விசாரணைகளின் போது இணையம் மற்றும் தொலைபேசி, கணினிகளில் உள்ள தகவல்களை மீளப்பெறும் நடவடிக்கைகள், அவற்றை ஆய்வு செய்யும் நடவடிக்கைகளுக்கு நாம் விசாரணையாளர்களுக்கு மிக நெருங்கிய ஒத்துழைப்புக்களை வழ்ஙகியுள்ளோம். அத்துடன் 194 நாடுகள் அங்கம் வகிக்கும் உலகின் இரண்டாவது பெரிய அமைப்பான எம்மிடமுள்ள அனைத்து தகவல்களையும் ஆராய இதனூடாக இலங்கைக்கு முடிந்தது.
எம்மிடமுள்ள தரவுகளில், உலகிலுள்ள 50 ஆயிரம் முக்கிய பயங்கரவாதிகள் தொடர்பிலான அனைத்து தகவல்களும் உள்ளன. 17 தகவல் களஞ்சியங்களிலுள்ள எமது தகவல்களை பயன்படுத்த முடியுமானது என தெரிவித்தார்.
இதனையடுத்து, ஊடகவியலாளர்கள் இண்டர்போல் செயலாளர் நாயகத்திடம் கேள்விகளை முன்வைத்தனர். இதுவரை முன்னெடுத்த விசாரணைகள் பிரகாரம், 4/21 தாக்குதல்களில் வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்புக்களின் தொடர்புகள் உள்ளனவா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த அவர், நாம் விசாரணைகளுக்கு உதவி ஒத்தாசைகளையே வழங்கினோம். விசாரணைகளின் பொறுப்பை நாம் எற்கமுடியாது. வெளிநாட்டுப் பயங்கரவாதத் தொடர்புள்ளதா இல்லையா என்பதை இலங்கையின் விசாரணையாளர்களே வெளிப்படுத்த வேண்டும் என்றார்.
இதனையடுத்து இலங்கைக்கு வெளிநாட்டு பயங்கரவாத அச்சுறுத்தல் தற்போதும் நிலவுகிறதா என மீளவும் ஊடகவியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், சர்வதேச அளவில் பொதுவான பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளது. எனினும் இலங்கைக்கு 4/21 தாக்குதல்களின் பின்னர் தற்போதும் அவ்வாறான அச்சுறுத்தல் உள்ளதா என்பதை இலங்கையின் விசாரணையாளர்கள் கண்டறிந்து வெளிப்படுத்த வேண்டும்.
அவ்வாறு அச்சுறுத்தல்கள் இருப்பதாக அவர்கள் எமக்குத் தகவல் அளித்து உதவி கோரினால் எம்மால் முடியுமான அனைத்தையும் அவ்வச்சுறுத்தலை முறியடிக்க முன்னெடுப்போம் என்று கூறினார்.
இதனையடுத்து, இண்டர்போல் செயலாளர் நாயம் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தபோது, பயங்கரவாத தாக்குதலின் பின்னர் செயற்பட்ட விதத்துக்காக அவருக்கு பதக்கமொன்றை வழங்கியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்ட தகவல் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த செயலாளர் நாயகம், விஷேடமான பதக்கங்கள் எதனையும் வழங்கவில்லை எனவும், இருதரப்பு சந்திப்புக்களின் போது வழங்கப்படும் வழமையான பரிசில் பரிமாற்றமே இதன்போது செய்துகொள்ளப்பட்டதாக சுட்டிக்காட்டினார்.
இதனிடையே, 4/21 தாக்குதல்களின் பின்னர் மிகக் குறுகிய காலத்தில் பயங்கரவாதத்தை முறியடிக்க இலங்கை அதிகாரிகள் எடுத்துக்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பிலான அனுபவத்தை இண்டர்போலின் ஏனைய உறுப்பு நாடுகளுடன் பகிரவும் அவர் இலங்கைக்கு அழைப்பு விடுத்தமை குறிப்பிடத்தக்கது.
எம்.எப்.எம்.பஸீர்
vidivelli