விடுபட்டுப் போகக் கூடாத விஷயங்களும் விட்டுக் கொடுக்கவே கூடாத விவகாரங்களும் – 05
இஸ்லாமிய கல்விச் சட்டமூலம் : 4/21 இன் இன்னொரு விளைபொருள்
பாரம்பரிய மத்ரஸா கல்வி முறை தீவிரவாதத்திற்கு வகைசெய்கிறது என்ற ஒரு பிழையான எடுகோளின் பின்னணியில் மத்ரஸா கல்வியை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் (Madrasa Education Regulatory Bill) எனும் பெயரில் விவாதிக்கப்பட்ட மசோதா தற்போது இலங்கை இஸ்லாமிய கல்விச் சட்டம் (Sri Lanka Islamic Education Act) எனப் பெயர் மாற்றம் பெற்றுள்ளது. 13 பக்கங்களைக் கொண்ட இச்சட்ட மூலம் 7 பிரதான பகுதிகளையும் 36 உபபிரிவுகளையும் உள்ளடக்கியுள்ளது.
இஸ்லாமிய கல்வி நிறுவனங்களைப் பதிவு செய்தல், மேற்பார்வை செய்தல், மீளமைத்தல், ஒழுங்குபடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துவதற்கான சட்டமூலம் என இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளதோடு இஸ்லாமிய கல்விச் சட்டம் என இது அழைக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. II, III என்பன இலங்கையில் இஸ்லாமிய கல்விச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகார பூர்வமான இஸ்லாமிய கல்விச் சபை (Islamic Education Board) இன் தன்மை, இயல்பு, நியமனம், அதிகாரங்கள், அதிகாரபூர்வமான அதன் செயற்பாடுகள் குறித்து விரிவாகப் பேசுகின்றன. பகுதி IV இஸ்லாமியக் கல்வி நிதி குறித்துப் பேசுகின்றது.
ஐந்தாம் பகுதி நிதி மற்றும் கணக்கு மேற்பார்வை தொடர்பிலும் ஆறாம் பகுதி நிறுவனம் குறித்தும் ஏழாம் பகுதி பொதுவான சில விடயங்கள் சம்பந்தமாகவும் பேசுகின்றது.
இலங்கை கல்வி அமைச்சும்– முஸ்லிம் சமய விவகார அமைச்சும் இணைந்து உருவாக்கவுள்ள இஸ்லாமிய கல்விச்சபை குறித்து பகுதி II உம் பகுதி III உம் முன்வைத்துள்ள சட்டப் பிரமாணங்கள் மிகுந்த கவனிப்புக்குரியது. இஸ்லாமிய கல்விச் சபையே இனிமேல் இலங்கையிலுள்ள அனைத்து இஸ்லாமிய கல்வி நிறுவனங்களையும் கண்காணித்துக் கட்டுப்படுத்தி மேற்பார்வை செய்யவுள்ளது. இச்சபையில் 11 அங்கத்தவர்கள் இடம்பெறவுள்ளனர். அவர்களே இதற்குமேல் மத்ரஸாக்கள் மற்றும் இன்ன பிற இஸ்லாமியக் கல்வி நிறுவனங்கள் குறித்து கல்வி அமைச்சுக்கு ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் முன்வைக்கும் அதிகாரபூர்வமான சபையாக இயங்குவர். இச்சபை குறித்து இச்சட்டமூலத்தில் பின்வரும் பிரமாணங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
* இஸ்லாமிய கல்வி நிலையங்களை ஸ்தாபித்தல், மீளமைத்தல், ஒழுங்குபடுத்தல், மேற்பார்வை செய்தல், மறுசீரமைப்பு செய்து இஸ்லாமியக் கல்வித்துறையை மேம்படுத்தல் போன்ற பணிகளை இலங்கை இஸ்லாமிய கல்விச் சபையே (SLIEB) முன்னெடுக்கும்.
* இச்சபையின் முதல் வேலை அரபு மத்ரஸாக்களைப் பதிவு செய்வதாக இருக்கும். இஸ்லாமியக் கற்கைகளை வழங்கும் அனைத்து நிறுவனங்களும் கட்டாயம் பதிவு செய்யப்படவேண்டும். பதிவு செய்யப்படாத நிறுவனங்கள் இயங்குவதற்கு அனுமதிக்கப்படமாட்டா.
*இலங்கைப் பிரஜைகள் 11 பேரைக் கொண்ட இலங்கை இஸ்லாமிய கல்விச் சபையில் பின்வருமாறு அங்கத்தவர்கள் நியமிக்கப்படுவர்.
1. இஸ்லாமியக் கல்வித்துறையில் ஆழமான அறிவு கொண்ட முஸ்லிம் சிவில் சமூகத்தின் பொது அங்கீகாரம் பெற்ற ஒருவர் இச்சபையின் தலைவராக கல்வி அமைச்சினால் நியமிக்கப்படுவார்.
2. நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களில் ஒருவராக கல்வி அமைச்சின் செயலாளர் அல்லது கல்வி அமைச்சைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஒருவர் நியமிக்கப்படுவார்.
3. உயர்கல்வி அமைச்சின் செயலாளர் அல்லது உயர்கல்வி அமைச்சைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஒருவர் நிறைவேற்றுக்குழு உறுப்பினராக நியமிக்கப்படுவார்.
4. தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளரும் நிறைவேற்றுக்குழு உறுப்பினராக நியமிக்கப்படுவார்.
5. முஸ்லிம் சமய, கலாசார விவகார அமைச்சின் செயலாளரும் நிறைவேற்றுக்குழு உறுப்பினராக நியமிக்கப்படுவார்.
6.முஸ்லிம் சமய, கலாசார விவகாரத் திணைக்களப்பணிப்பாளர் நிறைவேற்றுக்குழுவில் இடம்பெறுவார்.
7.இஸ்லாமியக் கல்வித் துறைக்குப் பொறுப்பான பணிப்பாளர் தனியாக நியமிக்கப்படுவார். (நிறைவேற்றுக்குழு உறுப்பினர்)
8.பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்த இரு இஸ்லாமியக் கல்விமான்கள் கல்வி அமைச்சினால் நியமனம் பெறுவர்.
9. இஸ்லாமியப் பின்னணியுடன் கூடிய அனுபவம் கொண்ட இரண்டு முஸ்லிம் முக்கியஸ்தர்களும் இச்சபையில் இடம்பெறுவர்.
இவ்வாறு நியமிக்கப்படுகின்ற அல்லது தெரிவு செய்யப்படுகின்ற ஒவ்வொரு உறுப்பினரது பெயரும் வர்த்தமானியில் வெளியிடப்படும். நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகளாக இருக்கும். மூன்றாண்டு முடிவில் அவர்களை மீள நியமிப்பது குறித்த அதிகாரம் கல்வி அமைச்சுக்குரியதாகும். இதேவேளை ஒழுக்காற்றுப் பிரச்சினைகள், ஊழல், மோசடி போன்ற காரணங்களை முன்னிறுத்தி பதவிக்காலத்தின்போது ஓர் உறுப்பினரைப் பதவி நீக்கும் அதிகாரமும் கல்வி அமைச்சுக்குள்ளது. அதிக பட்சம் 7 பேரைக் கொண்ட ஒரு கூட்டத்தில் முடிவுகளை எடுக்க முடியும். குறைந்தது மாதம் ஒரு முறை இச்சபை கூடும்.
உத்தேச இஸ்லாமிய கல்விச் சட்டமூலத்தின் பிரகாரம் உருவாக்கப்படவுள்ள இலங்கை இஸ்லாமிய கல்விச் சபையின் செயற்பாடுகள், அதிகாரங்கள், கடப்பாடுகள் குறித்து பகுதி III இல் விலாவாரியாக விளக்கப்பட்டுள்ளது. அவற்றைப் பின்வருமாறு சுருக்கிக் கூறலாம்.
1.இஸ்லாமிய கல்வித் துறை குறித்து கல்வி அமைச்சுக்கும் முஸ்லிம் சமய விவகார அமைச்சுக்கும் தேவையான ஆலோசனைகளை வழங்கல்.
2. இஸ்லாமிய கல்விப் புலத்தை விருத்தி செய்து மேம்படுத்துவதோடு அது தொடர்பான ஆய்வுகளை முன்னெடுத்தல்.
3. இஸ்லாமிய கல்வி நிறுவனங்களை மீளமைத்தல், ஒழுங்குபடுத்தல், மேற்பார்வை செய்தல், கட்டுப்படுத்தல், பதிவு செய்தல் போன்ற பணிகளை முன்னெடுப்பதற்கு பின்வரும் அதிகாரங்களையும் அச்சபை கொண்டிருக்கும்.
4. கல்வி நிறுவனங்களுக்கான பதிவுகளை வழங்கல், பதிவை நிறுத்தி வைத்தல் பதிவைப் பின்வாங்கல் (தர உறுதி அட்டவணைக்கேற்ப)
5. மதங்களின் பொதுத்தன்மைகள் மற்றும் அடிப்படை எண்ணக்கருக்களைப் புரிந்து கொள்ளும் நோக்கில் இஸ்லாம் அல்லாத மதங்கள், கலாசாரங்கள் தொடர்பான ஆய்வுகளை ஊக்குவித்தல்.
6.பாடத்திட்டத்திலும் கற்பித்தல் கையேடுகளிலுமுள்ள பொருத்தமற்ற பகுதிகளை நீக்குதல், திருத்துதல்.
7. ஒப்படைகள், பரீட்சைகளை நடாத்தும் பொறுப்பை பரீட்சைத் திணைக்களத்திற்கு வழங்கல்.
8. தேசிய கல்வி நிறுவகத்தின் ஊடாக இஸ்லாமிய கல்வி நிறுவன ஆசிரியர்களைப் பயிற்றுவித்தல், வெளிநாடுகளில் பட்டம்பெற்று வரும் இஸ்லாமிய பட்டதாரிகளுக்கான சான்றிதழ்களை தேசிய கல்வி நிறுவகத்தின் மூலம் வழங்கல்.
8. தனிநபர்களாலும் நிறுவனங்களாலும் கற்பிக்கப்படுகின்ற இஸ்லாமியக் கற்கைகள், அரபு மொழி தொடர்பான நிகழ்ச்சித்திட்டத்திற்கு அங்கீகாரம் அளித்தல்.
9. அரபுமொழி மற்றும் இஸ்லாமியக் கல்வியை விருத்தி செய்வதோடு தேசிய கல்விக் கொள்கைக்கு அமைவான ஏனைய துறைகளையும் இஸ்லாமிய கல்வி நிலையங்களில் விருத்தி செய்தல்.
10. ஒரு தர உறுதிப்பாட்டு அட்டவணையை (Quality Assurance Manual) தயாரித்தல், மத்ரஸாக்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள், மாணவர் அனுமதி, தொடர்ச்சியான கண்காணிப்பு, கற்பிக்கும் ஆசிரியர்களின் தகுதி, கற்கை நெறிகள், அடிப்படைக் கீழ் கட்டுமானம் என்பவற்றைத் தீர்மானிப்பதற்கு இத்தகைய தர உறுதிப்பாட்டு அட்டவணையே பிரயோகிக்கப்படும்.
11. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் வழிகாட்டல்கள் மற்றும் பரிந்துரைகளுக்கேற்ப டிப்ளோமா சான்றிதழ், உயர் டிப்ளோமா சான்றிதழ் கற்கை நெறிகளை வழங்கல்.
12. பதவிகளை உருவாக்கல், அனைத்து நிருவாக விவகாரங்களையும் ஒழுங்குபடுத்தும் அதிகாரம் இச்சபைக்கு இருக்கும்.
13. பொதுச் சொத்துக்களை முகாமை செய்தல், புலமைப்பரிசில்களை வழங்கல்.
14. உத்தேச இஸ்லாமிய கல்விச் சட்டத்தின் பிரகாரம் இஸ்லாமிய கல்வித்துறை தொடர்பான ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகளில் ஈடுபடும் அதிகாரம் இஸ்லாமிய கல்விச் சபைக்கு உண்டு.
15. இச்சபை தனது பணிகளை முன்னெடுப்பதற்குத் தேவையான கட்டடங்கள், வளாகங்கள், தளபாடங்கள், கருவிகள், சாதனங்கள் குறித்து பிரேரணைகளை முன்வைக்கும்.
16.இஸ்லாமிய கல்வித்துறையை இந்நாட்டில் மேம்படுத்துவதற்கு அவசியமான ஆலோசனைகளை கல்வி அமைச்சுக்கு அவ்வப்போது வழங்கும்.
17.இஸ்லாமிய கல்வி நிலையங்களின் வருடாந்த பாதீடு (Budget) மற்றும் செயற்றிட்ட அறிக்கையை கல்வி அமைச்சின் செயலாளருக்கு முன்வைத்தல்.
18. தேவையேற்படும்போது மாகாண கல்வி அமைச்சுடன் இணைந்து ஆலோசனை பெற்றுச் செயற்படும் அதிகாரம் இஸ்லாமிய கல்விச் சபைக்கு உள்ளது.
19. இச்சபை ஒழுங்குபடுத்தும் குழு (Regulatory Committee), கல்விக்குழு (Academic Committee), பாடத்திட்டக்குழு (Syllabus Committee), ஒழுக்காற்றுக்குழு (Discipline Committee) போன்ற குழுக்களை நியமிக்கும்.
உத்தேச இஸ்லாமிய கல்விச் சட்டத்தின் நான்காம் பகுதி கல்வி நிலையங்களுக்கான நிதியம் ஒன்று குறித்து பரிந்துரை செய்கிறது. அதன்படி இஸ்லாமிய கல்வி நிதியம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்நிதி அன்பளிப்புக்கள், நன்கொடைகள், பரிசுகள் மக்களின் உதவித்தொகைகள் என்பவற்றை உள்ளடக்கியதாக இருக்கும். அதேவேளை ஏதேனும் திட்டங்களினூடே திரட்டப்பட்ட நிதியும் இதில் சேர்க்கப்படும்.
ஈடு, முதலீடு என்பவற்றின் மூலம் சம்பாதிக்கப்படும் நிதியும், இதில் உள்ளடக்கலாம். இந்த அனைத்து நிதியும் 2006 ஆம் ஆண்டில் 26 ஆவது இலக்க சட்டத்தின் படியும் 2017 இன் 12 ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரமும் மேற்பார்வை செய்யப்படும். சபையின் தலைவர் உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு மற்றும் உபகுழுக்களுக்கான கொடுப்பனவு, சபையின் ஊழியர்களுக்கான சம்பளம் இதிலிருந்து வழங்கப்படும்.
ஒரு அரச வங்கியின் ஊடாகவே இத்தகைய நிதிக்கொடுக்கல்– வாங்கல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இஸ்லாமியக் கல்வி நிதியொன்றை உருவாக்குவதற்கான ஏற்பாட்டை உத்தேச சட்டமூலம் உள்ளடக்கியிருப்பது மத்ரஸாக்களின் நிதி சார்ந்த வெளிப்படைத் தன்மையைப் (Transperancy) பாதுகாப்பதற்கு உதவும் என்று கூறப்படுகின்றது. அரபுக் கல்லூரிகளுக்குக் கிடைக்கும் மானியங்கள், நன்கொடைகள், அன்பளிப்புகள், உதவித்தொகைகள் என்பவற்றைக் கண்காணித்து மேற்பார்வை செய்யும் அதிகாரங்கள் இனிமேல் இஸ்லாமிய கல்விச் சபைக்கே இருக்கப்போகின்றது.
இஸ்லாமிய கல்விச் சட்டமூலத்தைப் படித்துப் பார்க்கும்போது அதில் மென்மேலும் திருத்தங்கள் முன்வைக்கப்படலாம் என்பதை ஊகிக்க முடிகின்றது. தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சட்டமூலத்தின் பெயர் புதிதாக மாற்றம் பெற்றுள்ளதோடு சில உறுப்புரைகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. சில மங்கலான மொழியில் உள்ளன. சில நடவடிக்கைகளுக்கான பூரணமான பொறிமுறை பரிந்துரைக்கப்படவில்லை. சற்று அவசர அவசரமாக வரையப்பட்டது போலவே தோன்றுகிறது.
இத்தகைய ஒரு சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டு அமுலுக்கு வரும்போது கல்வி அமைச்சின் பொறுப்புகளும் கடப்பாடுகளும் மேலும் விரிவடையப் போகின்றது. அதேவேளை நாட்டிலுள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், நிருவாகம், நிதிக்கட்டமைப்பு, பாடத்திட்டம் என எல்லாவற்றையும் தலையில் கட்டிக் கொள்வதற்கு மேலதிக ஒதுக்கீடும் அவசியமாகவுள்ளது.
பாடத்திட்டங்களை ஒருமுகப்படுத்தல் என்பது மிகக்கடினமான ஒரு பணி. சர்வதேச பாடசாலைகளை ஒழுங்குபடுத்துவது குறித்து முன்னாள் கல்வி அமைச்சின் செயலாளர் கலாநிதி தாரா டி.மெல் அவர்களின் காலத்திலிருந்தே பல பரிந்துரைகள் ஆலோசனைகள், எண்ணக்கருக்கள், கல்வி அமைச்சுக்கு முன்வைக்கப்பட்ட போதும் அவை எதுவும் நடைமுறைக்கு வரவில்லை. அது போன்றே தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை எமது பாடசாலைக் கல்விமுறையில் இருந்து நீக்கவேண்டும் என்ற கோஷம் கடந்த பத்தாண்டுகளாக எழுப்பப்பட்டு வருகின்றது. எதுவும் நடந்தபாடில்லை. “பிரிவென” எனப்படும் பௌத்த கல்வி நிறுவனங்களும் ஏலவே கல்வி அமைச்சின் கீழ் இயங்குகின்றன. எனினும் அதனை முழுமையாகப் பராமரிப்பது பௌத்த கலாசார அமைச்சு என்பதால் கல்வி அமைச்சின் பாரம் குறைந்துள்ளது.
இவ்வாறான ஒரு சூழலில் உத்தேச இஸ்லாமிய கல்விச் சட்டமூலம் எந்தளவுக்கு நடைமுறைக்கு வரும் என்பது ஒரு சிக்கலான கேள்வியே. தற்போது நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை முகாமை செய்வதன் ஒரு பகுதியாகவும் சிங்கள சமூகத்தைச் சேர்ந்த ஒரு சில அரசியல்வாதிகளின் கோரிக்கைக்கு செவிசாய்த்தும் அரசாங்கம் இச்சட்டமூலத்தைத் தயாரித்துள்ளது. ஆனால் அமுலாக்கல் என்பதில் பல்வேறு சவால்கள் உள்ளன. 11 பேர் கொண்ட ஒரு சபையினால் மட்டும் இதனை வழிநடத்திச் செல்லலாமா என்பது ஒரு முக்கிய கேள்வியாகும்.
மத்ரஸாக்களை அரச கண்காணிப்பின் கீழ் கொண்டு வருவதற்கும் மொத்தமாக அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கும் இடையில் பெரிய வேறுபாடு உள்ளது. கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவருவதால் பல நன்மைகள் நேரும் என்ற வாதம் ஒரு புறம் முன்வைக்கப்படும் அதேவேளை அரச தலையீடுகள் எதிர்கால இஸ்லாமியக் கல்வித்துறையின் சுயாதீனத்தையும் சுமுகமான இயக்கத்தையும் பாதிக்கலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டு வருகின்றது.
குறிப்பாக உத்தேச இஸ்லாமிய கல்விச் சபைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள், இஸ்லாமிய கல்வி நிறுவனங்களின் வேகமான வளர்ச்சிக்கு இடையூறாக அமையலாம். ஏனெனில் தீர்மானம் எடுக்கும் செயன்முறை தாமதமடையலாம் என்று அபிப்பிராயங்கள் தெரிவிக்கப்படுகின்றன. மிக முக்கியமான முடிவுகளை கல்வி அமைச்சின் ஊடாகவே பெறவேண்டிய நிலை ஏற்படும் பட்சத்தில் இந்த வாதம் நியாயமானதாகவே தோன்றுகிறது.
இதேபோன்று கலைத்திட்டத்தை வரைவதில் என்ன வகையான சிந்தனைப்பள்ளிகள் (School of Thoughts) செல்வாக்குச் செலுத்தப்போகின்றன என்பதும் கேள்விக் குறியாகும். பாரம்பரிய பழைமைவாத சிந்தனையின் தாக்கம் கலைத்திட்ட வரைபில் ஏற்படுமானால் அது ஒட்டுமொத்த மத்ரஸாக் கல்வியின் நோக்கத்தையே பாழ்படுத்தி விடும்.
ஏலவே சமூகத்தில் இயங்கும் மத்ரஸாக்கள் ஒரே வகையின் கீழ் கொண்டுவர முடியாத பல்வேறு முகாம்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் முரண்களாகவே உள்ளன.
இந்நிலையில் நிருவாகம், நிதிமேற்பார்வை, சீருடை, விடுமுறை மதிப்பீட்டு முறைகளில் ஒருமைத் தன்மையை (Uniformity) கொண்டு வருவது சிரம சாத்தியமாயினும், கலைத்திட்டத்தில் மத்ரஸாக்களை ஒருங்கிணைப்பது மிகக் கடினமான பணியாகும்.
நூற்றாண்டுகாலப் பழைமை வாய்ந்த மத்ரஸாக்கள் உள்ளிட்ட அமைப்பு, இயக்க கருத்தியல்களால் கட்டுண்டு போயுள்ள மத்ரஸாக்களே பெரும்பாலும் சமீபத்திய வரவுகளாகும்.
இவற்றை ஒழுங்கமைப்பது என்பது இஸ்லாமிய கல்விச் சட்ட மூலத்தின் வசனங்களை அமைப்பது போல இலகுவானதல்ல. ஒரு தேர்தல் நெருங்கி வருகின்றது. அரசாங்கம் மாறும் வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகளின் கோட்பாடுகள் மாறப்போகின்றது. இந்நிலையில் இஸ்லாமிய கல்விச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டு அமுல்படுத்தப்பட வேண்டியுள்ளது. இது நடக்கப்போகும் ஒன்றா இல்லையா என்பதை இனிவரும் காலமே தீர்மானிக்கப்போகின்றது.
vidivelli