‘முப்பாய்ச்சலில் தேசிய சாதனையை விரைவில் முறியடிப்பேன்’
தேசிய மெய்வல்லுனர் போட்டியில் முதலிடம் பெற்ற சப்ரீன் அஹ்மத்
கேள்வி:உங்களைப்பற்றி விடிவெள்ளி வாசகர்களுக்கு கூறுங்கள்?
பதில்: நான் ஸப்ரீன் அஹ்மத். வெலிகாமத்தைச் சேர்ந்தவன். எனது உம்மா பஃக்ரியா, கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர். வாப்பா நஜிமுதீன் வெலிகாமத்தைச் சேர்ந்தவர். எமது குடும்பத்தில் எனக்கு மூத்த சகோதரி ஒருவரும், சகோதரர் ஒருவரும், இளைய சகோதரர் ஒருவரும் உள்ளனர்.
தந்தை சிறிய வியாபாரமொன்றை மேற்கொள்கிறார். தாயாரும், மூத்த சகோதரியும் வீட்டுத் தலைவிகளாக உள்ளனர். நானா ஸதாம் விஞ்ஞானத்துறையில் கற்று தற்போது மருந்து உற்பத்தி நிறுவனமொன்றில் பணிபுரிகிறார். இளைய சகோதரர் சிபான் உணவியல் கலை தொடர்பான கற்கையொன்றை முடித்துவிட்டு அண்மையில் கத்தாரில் பணிபுரியத் தொடங்கியிருக்கிறார். நான் மட்டுமே விளையாட்டுத் துறையைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.
கேள்வி: படித்தது மற்றும் பாடசாலைக் காலங்களைக் குறித்துக் கூறுங்கள்?
பதில்: நாம் குடும்பத்தோடு குறிப்பிட்ட காலப்பகுதி வரைக்கும் மல்வானையில் வசித்து வந்தோம். எனக்கு சுமார் பத்து வயதாகும் வரைக்கும் அங்கே இருந்தோம். எனவே ஆரம்பக் கல்வியை ஐந்தாம் தரம் வரை மல்வானை அல்முபாரக் தேசிய பாடசாலையில் கற்றேன்.
பின்பு எமதூரான வெலிகாமத்துக்கு வந்ததன் பின் இங்கு அறபா தேசிய பாடசாலையில் உயர்தரம் வரைக்கும் கற்றேன். படிப்பில் பெரியளவு ஈர்ப்பு இருக்காவிட்டாலும் உயர்தரத்தில் கலைப்பிரிவில் படிப்பை நிறைவு செய்ய முடிந்தது.
கேள்வி: விளையாட்டுத் துறையில் நுழைந்தது எப்படி?
பதில்: விளையாட்டில் நுழைந்தது விளையாட்டாகத்தான். என்னால் விளையாட்டுக்களில் சாதிக்க முடியும் என அவ்வளவாக எனக்கு தெரிந்திருக்கவில்லை. சாதாரணமாக நான்காம் ஆண்டு படிக்கும்போதே எமது பாடசாலையில் இல்ல விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்கள் தம் திறமைகளைக் காட்டத் துவங்குவர். என்றாலும் நான் ஏழாம் வகுப்புவரைக்கும் வந்த பின்பே இல்ல விளையாட்டு நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தேன்.
அதற்கு முன்னோடி எனது நானா தான். அவர் அப்போதிலிருந்து நீளம் பாய்தல், முப்பாய்ச்சல், உயரம் பாய்தல் மற்றும் ஓட்டப்போட்டி நிகழ்ச்சிகள் எனப் பல மெய்வல்லுநர் நிகழ்ச்சிகளில் முதலிடங்களைக் குவித்துக் கொண்டிருந்தார். அப்போது நான் அவருக்குப் போட்டியாக வீட்டிலும் பாடசாலை மைதானத்திலும் பாய்ச்சல் நிகழ்ச்சிகளில் விளையாட்டாக ஈடுபடுவேன்.
அப்போதுதான் என்னாலும் விளையாட்டுக்களில் சாதிக்க முடியுமென பாடசாலைக் கால விளையாட்டு இல்லங்களின் மூத்த மாணவர்கள் என்னையும் போட்டிகளில் ஈடுபடுத்தினர். எனக்கும் எனது நானாவுக்கும் ஒரு வயது வித்தியாசமே இருந்ததனால் பெரும்பாலும் இருவரும் ஒரே பிரிவிலேயே போட்டியிடுவோம். அக்காலங்களில் நானாதான் எப்போதும் முதலிடம் பெறுவார். நான் இரண்டாவது அல்லது மூன்றாவது இடத்தைத் தான் பெற்றுக் கொள்வேன்.
கேள்வி:முப்பாய்ச்சல் என்ற துறையை எப்படி தேர்ந்தெடுத்தீர்கள்?
பதில்: உண்மையில் நான் விளையாட்டுத்துறைக்குள் சாதாரணமாகத் தான் நுழைந்தேன். எனினும் திறமைகளைக் காட்டியதன் காரணத்தினால் பாடசாலை இல்ல விளையாட்டு மட்டத்திலிருந்து வலய, மாகாண மட்டப் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்புக் கிடைத்தது. உயர்தரம் கற்கும்போது ஒரு தடவை வலய மட்ட போட்டிக்கென சென்றபோது அன்றும் இன்றும் எனது பயிற்சியாளராகத் திகழும் வை.கே. குலரத்ன தன்னிடம் நீளம் பாய்தலில் பயிற்சி பெற்று வந்த சத்துரங்க அய்யா மூலம் என்னை அணுகி எனது பாய்ச்சல் நன்றாக உள்ளதாகவும் உரியமுறைப்படி பயிற்சிபெற்றால் சாதிக்க முடியுமெனக் கூறி பயிற்சிக் குழாமில் இணைய வற்புறுத்தினார். என்றாலும் விளையாட்டுத்துறையில் சென்றால் என்ன பெரிதாக சாதிக்க முடியும் என்றெண்ணி நான் அதனைக் கணக்கில்கொள்ளாது சும்மா இருந்துவிட்டேன்.
பின்பு மீண்டுமொருதடவை மாகாண மட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்கென சென்றிருந்தபோதும் மீண்டும் எனது பயிற்சியாளர் வை.கே. குலரத்ன அப்போது எமது பிரதேசத்தில் வலைப்பந்து பயிற்சியாளராக இருந்துவந்த லஹிரு அய்யா மூலம், பயிற்சிபெற வருமாறு அழைத்திருந்தார். லஹிரு அய்யாவை ஏற்கனவே தெரிந்திருந்ததால் கொஞ்சம் நம்பிக்கையோடு வந்து வீட்டிலும் எனக்குப் பொறுப்பான ஆசிரியர்களிடமும் தெரிவித்தேன். அதன் பின்பு நடந்தவைதான் இன்று தேசிய மட்ட சாம்பியனாக உங்களது முன்னிலையில் வெளிப்பட வைத்திருக்கிறது.
கேள்வி: முப்பாய்ச்சலின் நுணுக்கம் என்ன? ஏன் அந்த நிகழ்ச்சியை மட்டும் தேர்வு செய்தீர்கள்?
பதில்: முப்பாய்ச்சலில் குறுகிய செக்கன்களுக்குள் எமது உடம்பின் முழு சக்தியையும் வெளிப்படுத்த வேண்டும். எமது முழுச்சக்தியும் 200% அளவுக்கு வெளிப்படுத்தப்படும் போதுதான் எம்மால் சிறந்த பாய்ச்சலொன்றை நிகழ்த்த முடியும்.
தற்போது என்னுடைய சிறந்த பாய்ச்சல் 16.33 மீற்றர். இலங்கையின் அதிகூடிய பாய்ச்சல் 16.71 மீற்றர். அதனைப் பாய்ந்தவரும் எமது குழுவில் தற்போது இருக்கிறார். என்றாலும் அவரது பாய்ச்சல் தூரம் குன்றியிருப்பதால் என்னால் தொடர்ந்து முதல் இடத்தைத் தக்க வைக்க முடிந்துள்ளது. எனினும் தொடர் பயிற்சிகளைப் பெறுவதன் மூலம் என்னால் இலங்கை சாதனையான 16.71 ஐ முறியடிக்கலாம் என நம்புகிறேன். குறிப்பாக இவ்வருடத்துக்குள் அதனை நிகழ்த்தத் திட்டமிட்டுள்ளேன். அவ்வாறு செய்ய முடிந்தால் சர்வதேச பதக்கமொன்றையும் இலகுவாக ஈட்ட முடியும்.
முப்பாய்ச்சலைத் தவிர என்னால் நீளம் பாய்தலிலும் குறுந்தூர ஓட்டத்திலும் தேசிய மட்டத்தில் பதக்கம் பெறும் அளவு சாதிக்க முடியும். என்றாலும் உடல் உபாதைகளைக் கருத்தில் கொண்டும் என்னால் அதிகூடுதலாக சாதிக்க முடியுமான துறையைக் கவனத்திலெடுத்தும் இத்துறையில் மட்டும் இருக்கிறேன்.
இதற்கென ஒவ்வொரு நாளும் காலையில் 7.00 –-10.30 மணி வரைக்கும், மாலையில் 3.30-–-6.00 மணி வரைக்கும் பயிற்சிகளில் ஈடுபடுவோம். ஒவ்வொரு நாளும் 15 பாய்ச்சல்களைப் பாய்வதற்கான பயிற்சி உள்ளடங்கியிருக்கும். இதற்கென நாம் அதிகமாக களைப்படைந்து பயிற்சிகளை மேற்கொள்வோம்.
கேள்வி:இந்தத் துறையில் எதிர்கொண்ட தடங்கல்கள் என்ன? சமூகத்திடமிருந்தான ஒத்துழைப்புகள் எப்படியிருந்தன?
பதில்: தடங்கல்கள் என சொல்லும்போது உடல் உபாதைகளைத் தான் கூற வேண்டும். 2015 மற்றும் 2017 இல் கெண்டைக் காலில் எனக்கு நிகழ்ந்த உபாதைகளால் எனது பயிற்சிகளை நிறுத்திவிட்டு தொடர்ந்து சிகிச்சைகளில் ஈடுபட வேண்டியிருந்தது. சில தடவைகளில் சிகிச்சைகள் உரிய பயனை முழுமையாகத் தராதபோது ஊசி, மருந்து வகைகள் மூலமாகவும் சில வலி நிவாரணிகளைப் பெற வேண்டியிருந்தது.
சமூகத்திடமிருந்து என்று சொல்லும்போது எனது சூழலிலிருந்து குறிப்பிடத்தக்க ஒத்துழைப்பு கிடைத்தது. என்றாலும் அங்கீகாரம் என்று பெரிதாக எதனையும் நான் எதிர்பார்த்துக்கொண்டு ஈடுபடவில்லை. ஏனெனில் இது எனது துறை. நான்தான் முயற்சித்து அடைந்துகொள்ள வேண்டுமென்ற எண்ணத்துடன் தான் தொடர்ந்து பயிற்சி பெறுகிறேன். “முயற்சித்தால் அல்லாஹ் தருவான்” என்ற இறைவாக்கு அதைத்தானே சொல்கிறது.
தவிர, ஆரம்பத்தில் அனுசரணைக்கென எமது பிராந்தியத்தில் விளையாட்டுத்துறைக்கு உதவும் ஒரு தனவந்தரை உதவி பெறுவதற்கென நான் சந்திக்க சென்றேன். எனினும் அவரது உதவியாளரையே சந்திக்க முடிந்தது. எல்லா விபரங்களையும் பெற்று பின்னர் தொடர்பு கொள்வதாகவும் தனவந்தருடன் பேசவருமாறு அழைப்பதாகவும் சொல்லி இறுதிவரை எந்தப் பதிலும் சொல்லவில்லை. இதனை குறையாக சொல்லவில்லை. படிப்பினையாகத் தான் சொல்கிறேன்.
கேள்வி:தேசிய மட்டத்தில் சாதித்துள்ளீர்கள். அடுத்த கட்டம் எவ்வாறு அமையும்?
பதில்: அடுத்து தேசிய மட்டத்திலான இராணுவ விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக தயாராகிறோம். அடுத்த டிசம்பரில் நேபாளம், கத்மண்டு நகரில் நடைபெறவுள்ள தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் எனது முதலாவது சர்வதேச நிகழ்ச்சி. இவற்றில் பதக்கம் வெல்வதற்கென கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கிறேன். சாதிப்பேன் என்ற முழுமையான நம்பிக்கை எனக்குள்ளது. இன்ஷா அல்லாஹ்.
கேள்வி:பாடசாலை மட்டத்திலிருந்து தேசிய மட்டத்தில் இன்று சாதிக்கும் வரைக்கும் உங்களுக்கு உந்து சக்தியாக இருந்தவர்களைப் பற்றிக் கூறுங்கள்?
பதில்: எனக்கு இந்தளவு உடல் பலத்தினையும் அருளையும் சொரிந்தவன் அல்லாஹ் தான். அடுத்ததாக எனது உம்மா, வாப்பாவை நினைவுபடுத்த வேண்டும். அவர்களே எனது நலனுக்காக அதிகம் பிரார்த்தனை செய்பவர்கள். உயர்தரம் படிக்கும் காலத்தில் மேல் மட்ட பயிற்சிகளுக்கு செல்லும் போது அவர்கள்தான் அன்றாடம் எனதூரிலிருந்து மாத்தறை வரைக்கும் செல்வதற்கு, அனைத்துவிதக் கஷ்டங்களுக்கும் மத்தியில் பயண, உணவுச் செலவுகளுக்கு ஏற்பாடு செய்து தருவார்கள். வெற்றி பெற்று வரும்போது என்னுடன் இருப்பது போலவே தோல்வியடைந்து வரும்போதும் என்னுடனேயே இருந்து ஆறுதல் சொல்வோரும் அவர்களே.
எனது நானா எனக்கு எப்போதும் ஆலோசனை வழங்குவோரில் முதன்மையானவராக இருப்பார். பயிற்சி முறைகளில் புதிய முன்னேற்றகரமான விடயங்களைக் கடைப்பிடித்து வர வழிகாட்டல் வழங்குவதும் அவர்தான். ஏதும் கஷ்டங்கள், பயிற்சிகளில் தடங்கல்களை எதிர்நோக்கும் போது சகோதரர்கள் என்னை ஆறுதல்படுத்துவர்.
மற்றது நான் பாடசாலைக்கு வெளியில் பயிற்சிகளுக்கென அழைக்கப்பட்ட போது உடனே நான் எனது பொறுப்பாசிரியரான முஸ்னி ஆசிரியரிடம் கூறினேன். அவர்தான் எனக்கென முதன் முதலில் விளையாட்டு பயிற்சிகளுக்கு ஏற்ற ஆயிரக் கணக்கில் பெறுமதியான நவீன காலணியொன்றை கொள்வனவு செய்து தந்தது என்னை ஊக்கப்படுத்தியது. அவரது ஆரம்பகால வழிகாட்டல்களும் ஊக்கமூட்டல்களும் இல்லாவிட்டால் நான் இப்போதுள்ள நிலையை அடைந்திருக்கமாட்டேன். அவ்வாறுதான் உயர்தரம் கற்கும் காலத்தில் மாத்தறையில் பயிற்சிகளுக்கென செல்வதற்கு காலைநேர பாடசாலை வரவுக்கு சலுகையினைப் பெற்றுத் தந்து எனது விளையாட்டுத் துறைக்கு அங்கீகாரம் தந்தவர் எமது அறபா தேசிய பாடசாலையின் அப்போதைய அதிபர் வாரிஸ் அலி மௌலானா சேர். மேலும் எமது ஊரிலிருந்து வந்த சர்வதேச ஓட்ட வீரரான ஸப்ரான் எனக்கு பல வழிகாட்டல்களையும், பல்லின சூழலில் நல்ல பண்பாட்டோடு நடந்துகொள்ளவும் வழிகாட்டியவர்.
மற்றது எனது நண்பர்கள் பலரும் எனக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். குறிப்பாக முதன்முதலாக தேசிய மட்ட போட்டிகளுக்கு சென்றபோது ஈட்டியெறிதல் போட்டிக்கென என்னோடு வந்த நண்பர் ரிமாஸ் இப்போது வரைக்கும் நல்ல நட்போடு எனது வெற்றிகளிலும் தோல்விகளிலும் உறுதுணையாக இருக்கிறார். எல்லா நண்பர்களினதும் வாழ்த்துக்கள் நல்ல உற்சாகத்தையும் மோட்டிவேஷனையும் தரும்.
அடுத்து, கடைசியாக குறிப்பிட்டாலும் முக்கியமாக குறிப்பிடவேண்டியது எனது பயிற்சியாளர் வை.கே. குலரத்ன ஆரம்ப காலம் முதலே எனது முன்னேற்றத்தில் என்னைவிடவும் அதிக கரிசனையுடன் இருப்பவர். அவர் இல்லாவிட்டால் இந்த இடத்துக்கு வந்திருக்க முடியாது. எனக்கு இலங்கை தேசிய குழாமில் இடம்பெறுவதற்கும், இராணுவ அணியில் இடம்பெறுவதற்கும் அதிக பங்களிப்பு செய்தவர். நான் பெரியளவு வெற்றிகளை ஆரம்பத்தில் பெறாவிட்டாலும், அவர்தான் என்னால் ஓர் உயர்ந்த இடத்தை அடைய முடியுமென இனங்கண்டு வழிகாட்டியவர். மற்றது எமது விளையாட்டுக் குழாமில் உள்ள ஏனைய தேசிய வீரர்கள் பலரும் எனக்கு இன, மத பேதங்களுக்கு அப்பால் உந்து சக்தியாக இருந்து வருகின்றனர். நான் தங்கியிருப்பதும் பல்லின சூழலில்தான். அங்கும் இன மதங்களைக் கடந்து நட்போடு செயற்படுகிறோம்.
கேள்வி:தற்போதைய சூழலில் உங்களால் இந்த சமூகத்துக்கும் நாட்டுக்கும் எத்தகைய பங்களிப்பை வழங்க முடியும்?
பதில்: நாம் ஒரு முஸ்லிமாக இருந்து நாட்டுக்கு பதக்கங்களைக் கொண்டு
வருவது பெருமைக்குரியது. எமது சமூகத்துக்கும் நற்பெயரை பெற்றுக்கொடுக்கும்.
அடுத்ததாக எமது சூழலில் விளையாட்டுத்துறையில் சாதிப்போரை இனங் கண்டு எதிர்காலத்தில் வழிகாட்டவும் பயிற்சியளிக்கவும் வேண்டுமென எண்ணியுள்ளேன்.
எமது சூழலில் பல திறமையான வீரர்கள் உள்ளனர். அவர்களுக்கும் இவ்வாறான வாய்ப்புக்கள் அமைய வேண்டுமென எண்ணுகிறேன். பெற்றோர், பாடசாலை என எல்லா சூழலிலும் அவர்களை ஊக்குவிப்பதன் மூலம் சர்வதேச தரமுள்ளவர்களை இனங்காணலாம்.
இங்கே பயிற்சியில் ஈடுபடுவோரைப் பாருங்கள். அதிகமானோர் கிராமப்புறங்களிலிருந்து வந்தவர்களே. அதேநேரம் கொழும்பு பணக்கார பெற்றோர் பலரும் விளையாட்டுத்துறையில் தம் பிள்ளைகளை வளர்த்தெடுக்கவென காலையிலும் மாலையிலும் இங்கு காத்திருப்பது வழக்கம்.
விளையாட்டுத்துறையும் நல்ல துறைதான் என்பதை நாம் முதலில் ஏற்க வேண்டும். மேலும் சரியான வழிகாட்டலால் நல்லொழுக்கமான வீரர்களை உருவாக்கலாம். விளையாட்டுப் பயிற்சிகளது அடிப்படை நோக்கங்களில் நல்லொழுக்கம் முதலிடத்தைப் பெறும்.
விளையாட்டுத் துறையில் ஈடுபடுவதனால் கல்வியில் சாதிக்க முடியாது என நினைக்க தேவையில்லை. எமது துறையிலே நிறைய மேலே செல்லலாம். உதாரணத்துக்கு என்னால் இராணுவ உயர் பதவிகளுக்கு முன்னேற முடியும். உரிய சம்பளமும் எமக்குக் கிடைக்கும். அனைத்தும் எமது முயற்சியிலும், எம் சூழலில் இருந்தும் கிடைக்கும் ஒத்துழைப்பிலுமே இருக்கிறது.
நேர்கண்டவர்: எம்.எஸ். ஸியாப் முஹம்மத்
vidivelli