ஏப்ரல் 21 இன் பின்னர் முக்கராகுளம் கிராமத்தில் கைதான இரு சகோதரர்கள்

உண்மையைத் தெளிவுபடுத்த சட்டத்தரணிகளின் உதவியைக் கோரும் சம்பந்தப்பட்ட குடும்பத்தினர்

0 1,822

தவ்ஹீத் ஜமா­அத்­துடன் தொடர்­பு­களைப் பேணி­ய­துடன், அடிப்­ப­டை­வாத மற்றும் பயங்­க­ர­வாதக் கருத்­துக்­களைப் பரப்பி அவற்­றுக்கு ஆதரவு வழங்­கி­ய­தாக கூறப்­பட்டு கடந்த மூன்று மாதங்­க­ளாக சிறையில் அடைக்­கப்­பட்­டுள்ள இரண்டு முஸ்லிம் சகோ­த­ரர்­களின் குடும்­பங்கள் தமது உண்மை நிலையை வெளிக்­கொண்­டு­வர சட்ட உத­வியை நாடும் சம்­ப­வ­மொன்று ஹொரவப் பொத்­தா­னையில் பதி­வா­கி­யுள்­ளது.

இவர்­களுள் ஒருவர் அப்துல் மஜீத் நியாஸ். மற்­ற­யவர் அவ­ரது சகோ­தரர் அப்துல் மஜீத் நிஸார். இரு­வரும் ஹொர­வப்­பொத்­தானை முக்­க­ர­குளம் பகு­தியைச் சேர்ந்­த­வர்கள். கடந்த 2019 ஏப்ரல் 28 ஆம் திகதி கைது செய்­யப்­பட்டு மே மாதம் 1 ஆம் திகதி முதல் சிறையில் அடைக்­கப்­பட்­டுள்­ளனர்.

“அவர் பிர­தே­சத்தில் எல்­லோரும் அறிந்த சமூ­க­சே­வை­யாளர். அவ­ருக்கு நலன்­புரி வேலை­களைச் செய்­வ­தற்கு பணம் வந்­தது உண்மை. கடந்த பத்து ஆண்­டு­க­ளுக்கும் மேலாக, அவர் ஏழை மக்­க­ளுக்கு வீடு வாசல் கட்­டிக்­கொ­டுத்து, தண்ணீர் வச­தி­யற்­ற­வர்­க­ளுக்கு கிணறு கட்­டிக்­கொ­டுத்து, வச­தி­யற்­ற­வர்­களின் குழந்­தை­க­ளுக்கு கல்­விச்­செ­ல­வினைப் பெற்­றுக்­கொ­டுத்து, தந்­தையை அல்­லது தாயை இழந்த சிறு­வர்­களின் கல்வித் தேவை­க­ளுக்கு உதவி வந்­துள்ளார். முஸ்­லிம்­க­ளுக்கு மாத்­தி­ர­மன்றி பிர­தே­சத்தில் வசிக்கும் முஸ்லிம் அல்­லாத மக்­க­ளுக்கும் இதே உத­வி­களைச் செய்­துள்ளார். ஹொர­வப்­பொத்­தானை மற்றும் கஹட்­ட­கஸ்­தி­கி­லிய வைத்­தி­ய­சா­லை­க­ளுக்கு கிணறு கட்­டிக்­கொ­டுத்­துள்ளார். நீர் வசதி செய்து கொடுத்­துள்ளார். பிர­தேச பள்­ளி­வா­சல்­க­ளுக்கு உத­வி­யுள்ளார். ஆனால், இன்று அவர் கைது செய்­யப்­பட்ட பின்னர் நாளாந்த வாழ்க்கைச் செல­வுக்கு ஏனை­ய­வர்­களின் தயவை நாட­வேண்டிய நிலையில் நாம் உள்ளோம்” என நியாஸ் மௌல­வியின் மனைவி குறிப்­பிட்டார்.
அவர் மேலும் கருத்துத் தெரி­வித்த போது, “சொந்தப் பிள்­ளை­க­ளுக்கு நகை நட்­டு­களைக் கூட வாங்­காமல் நான் கஷ்­டப்­பட்டு சேனைப்­பயிர் செய்து உழைத்த பணத்தைக் கூட யாரா­வது கேட்டு வந்தால் அப்­ப­டியே கொடுத்து விடுவார். நான் கேட்டால் நமக்கு அல்லாஹ் தருவான் என்பார்” என அவர் குறிப்­பிட்டார்.
அவ்­வா­றாயின் நியாஸ் மௌல­வியின் மீது சுமத்­தப்­பட்ட குற்றம் என்ன? உண்­மையில் அவ­ருக்கு பணம் கொடுத்­தது யார்? அவற்றை அவர் என்ன செய்தார்? எனப் பல்­வேறு கேள்­விகள் எழ­மு­டியும்.

“சேனைப்­பயிர் மற்றும் வேளாண்மை மாத்­தி­ரமே செய்து பிழைத்து வந்தார். சஹ்­ரா­னுடன் எமக்கு எந்தத் தொடர்பும் இல்லை. அவனை தொலை­பே­சியைப் பயன்­ப­டுத்தி இணைத்­த­ளத்தில் பார்க்­கவும் தெரி­யாது. என்­னிடம் சின்ன போன் ஒன்றே உள்­ளது. லெப்டொப் மற்றும் கொம்­பி­யூட்­டர்­க­ளையும் எமக்குப் பார்க்கத் தெரி­யாது. வீட்டில் சீடி பிளேயர் ஒன்று கடந்த ஐந்து வரு­டங்­க­ளாகப் பயன்­ப­டுத்­தப்­ப­டாமல் உள்­ளது. வீட்டை பல­முறை சோத்­தித்­தார்கள். எத­னையும் கண்டு பிடிக்­க­வில்லை. வழக்குச் செல­வுக்கும் நாளாந்த செல­வுக்கும் பல சிர­மங்­களை எதிர்­நோக்க வேண்­டி­யி­ருக்­கின்­றது” என்றார் நியாஸ் மௌல­வியின் சகோ­தரர் நிசாரின் மனைவி.

அவ்­வா­றெனில் நிசார் என்ன குற்றம் செய்தார்? ஏன் கைது செய்­யப்­பட்டார்? ஏன் இது­வரை அவர் விடு­விக்­கப்­ப­ட­வில்லை என்­பதும் கேள்­விக்­கு­றி­யாக உள்­ளது.

மாவ­னெல்லை, ஹெம்­மாத்­த­கம பிர­தே­சத்தில் வசித்­து­வந்த எம்.எஸ்.எம். ஜிப்ரி என்­ப­வ­ரிடம் இருந்து நியாஸ் மௌல­விக்கு அடிக்­கடி பணம் வந்­துள்­ளது என குற்­றப்­பத்­தி­ரி­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. குறிப்­பிட்ட எம்.எஸ்.எம். ஜிப்ரி என்­ப­வரும் நலன்­புரி வேலை­க­ளுக்­காக பணம் பயன்­ப­டுத்­திய குற்­றச்­சாட்டின் பேரில் கைது செய்­யப்­பட்டார். ஆனால் இதில் கவ­னிக்­கப்­பட வேண்­டிய விடயம் யாதெனில், சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்ட ஜிப்ரி என்­பவர் குறிப்­பிட்ட காலத்தின் பின்னர் விடு­விக்­கப்­பட்­டுள்ளார். ஆனால், அவ­ரி­ட­மி­ருந்து பணத்தைப் பெற்­றுக்­கொண்ட நியாஸ் மௌலவி இன்னும் சிறையில் இருக்­கின்றார். அதே­நேரம், குறிப்­பிட்ட பணத்தை, தனது மனைவி குறிப்­பிட்­டது போன்று கடந்த பல ஆண்­டு­க­ளாக நலன்­புரி வேலை­க­ளுக்கே அவர் பயன்­ப­டுத்­தி­யுள்ளார்.

அதிக பணத்தை வைத்­தி­ருந்தார் என்­பதோ சமூக சேவை­களின் மூலம் வரு­மானம் ஈட்­டினார் என்­பதோ அவர் மீது முன்­வைக்­கப்­பட்ட குற்­றச்­சாட்டு அல்ல. மாறாக, முக்­க­ர­வெவ கிரா­மத்தில் ஒரு தவ்ஹீத் மத்­ர­சாவை நடத்தி வந்­த­தா­கவும், கதீஜா பின் குவைலித் எனும் புதிய பள்ளி ஒன்றை நிர்­மா­ணித்­த­தா­கவும் அடிப்­ப­டை­வா­தத்தைப் போதித்து வந்­துள்­ள­தா­கவும் குற்­றப்­பத்­தி­ரிகை கூறு­கின்­றது. அதே­நேரம், ஒரு அப்பல் கைப்­பேசி மற்றும் 46 இறு­வெட்­டுக்கள் உட்­பட 36 இறப்பர் முத்­தி­ரைகள் இவ­ரி­ட­மி­ருந்து கைப்­பற்­றப்­பட்­ட­தா­கவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இது பற்றி மேற்­கொண்ட புல­னாய்வின் போது குறிப்­பிட்ட மத்­ரசா சில போது கட­னிலும் சில­வே­ளை­களில் நன்­கொ­டை­க­ளிலும் சில­நேரம் உள்ளூர் வெளி­நாட்டு தலை­வர்­களின் உத­வி­யு­டனும் இயங்கி வந்­தமை தெரிய வந்­துள்­ளது. அதே­நேரம், பணம் சம்­பா­திக்கும் இட­மா­கவோ, பயங்­க­ர­வா­தத்தை போதிக்கும் இட­மா­கவோ குறித்த மத்­ரசா அமைந்­த­மைக்­கான எந்த ஆதா­ரங்­களும் இது­வரை கிடைக்­க­வில்லை .

36 இறப்பர் முத்­தி­ரைகள் பற்றி வின­வி­ய­போது — கடந்த 10 வரு­டங்­க­ளாக மத்­ரசா, பள்­ளி­வாசல், நன்­கொடை நிறு­வனம் என்­ப­வற்றில் பயன்­ப­டுத்­தப்­பட்ட பழைய, புதிய இறப்பர் முத்­தி­ரை­க­ளையே பொலிசார் கைப்­பற்­றி­ய­தாக நியாஸ் மௌல­வியின் உற­வி­னர்கள் உறு­தி­யாகக் குறிப்­பிட்­டனர்.

கதீஜா பின் குவைலித் எனும் பள்­ளி­வாசல் பற்றிக் கேட்­ட­போது, குறித்த பள்­ளி­வா­சலை சவூதிப் பெண்­ம­ணி­யொ­ருவர் தனது உற­வி­னரின் பெயரால் கட்டிக் கொடுத்­த­தா­கவும் அவ­ரது நாட்டு தூத­ர­கத்தின் உத­வி­யுடன் தான் நிதி வழங்­கிய ஆவ­ணங்­களை வழங்க அவர் தயா­ராக இருப்­ப­தா­கவும் குறிப்­பிட்­டனர். என்­றாலும், நியாஸ் மௌலவி வெளியில் வராத வரையில் இதனை உறு­திப்­ப­டுத்­தவோ சட்­டத்தின் முன்­கொண்டு செல்­லவோ அவ­ரது குடும்­பத்­தினர் முடி­யாத நிலையில் உள்­ளனர்.

இதே­நேரம், அர­சாங்கம் இர­சா­யனப் பகுப்­பாய்வு நிறு­வ­னத்­திடம் மேல­திக பரி­சோ­த­னை­க­ளுக்­காக வழங்­கப்­பட்ட அவ­ரது கைப்­பேசி, மடிக்­க­ணினி மற்றும் ஆவ­ணங்கள் பற்­றிய எந்தத் தக­வல்­களும் இது­வரை வெளி­வ­ரல்லை. இந்த விட­யத்தில் உண்மைத் தன்­மையை வெளிக்­கொண்­டு­வர குறைந்த பட்சம் முஸ்லிம் சட்­டத்­த­ர­ணி­க­ளா­வது உத­வ­வேண்­டு­மென அவ­ரது குடும்­பத்­தினர் எதிர்­பார்க்­கின்­றனர்.

சாதா­ரண தவ்ஹீத் இயக்க சிந்­த­னை­களின் பிர­காரம் செயற்­பட்டு வந்த இவர் தேசிய தவ்ஹித் ஜமா­அத்­துடன் தொடர்­பு­பட்­ட­தாக குற்றப் பத்­தி­ரிகை சுட்­டிக்­காட்­ட­வில்லை.

இந்த நிலையில், நியாஸ் மௌலவி கடந்த மூன்று மாதங்­க­ளாக சிறையில் இருப்­பதால் அவ­ரது நலன் புரிக்கணக்கு வழக்­கு­களை ஆவ­ணப்­ப­டுத்தி சட்­டத்­த­ர­ணி­க­ளுக்கோ நீதி மன்­றத்­திற்கோ வழங்­கு­வ­தற்கு குடும்­பத்­தி­னரால் முயாத நிலை உரு­வா­கி­யுள்­ளது. இர­சா­யனப் பகுப்­பாய்வு நிறு­வ­னத்­திடம் உள்ள அவ­ரது கைப் பேசி மற்றும் கணனி பற்­றிய சோதனை அறிக்­கைக்கு என்ன நடந்­துள்­ளது என்றும் அவர்­க­ளுக்குத் தெரி­ய­வில்லை. அவ­ரிடம் உத­வி­களைப் பெற்றுக் கொண்ட முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்­லாத பலர் சாட்­சி­ய­ம­ளிக்க விரும்­பி­னாலும் இந்த நிலையில் அதுவும் நடை­முறைச் சாத்­தி­ய­மற்ற ஒன்­றா­கவே உள்­ளது.

இந்­நி­லையில் இரண்டு விட­யங்கள் மிகவும் மனதை உறுத்­து­வ­தாக அமை­கின்­றன. ஒன்று நியாஸ் மௌல­வியின் குடும்பம் சம­கா­லத்தில் எதிர் நோக்கும் சமூகப் பொரு­ளா­தார நிலை. இரண்­டா­வது அவரின் சகோ­தரன் நிசார் கைது செய்­யப்­பட்­டமை.

“இலட்சக் கணக்கில் காசு வந்­த­தாக நம்பும் பலர் இன்று நாங்கள் முகங்­கொ­டுத்­துள்ள நிலையை உண­ர­மாட்­டார்கள். வீட்டில் அன்­றாட செல­வி­னங்­க­ளுக்கு எமது சகோ­த­ரியும் மச்­சானும் உத­வு­கின்­றனர். பண வச­தி­யில்­லாத நிலையில் மகள் பாட­சா­லைக்கும் மகன் யாழ் பல்­கலைக் கழ­கத்­திற்கும் போக முடி­யாது என்­கின்­றனர். பிள்­ளை­களை சக நண்­பர்கள் குற்றக்கண் கொண்டு பார்ப்­பதால் அவர்கள் சமூ­கத்தை எதிர்­கொள்ளக் கூச்­சப்­ப­டு­கின்­றனர். சட்­டத்­த­ர­ணி­க­ளுக்கு பணம் வழங்­கவும் முடி­யாத நிலை உரு­வா­கி­யுள்­ளது. நான் சேனை செய்­தா­வது பிள்­ளை­களை காப்­பாற்­றுவேன். ஆனால், எங்­க­ளுக்கு நிதியை பெற்றுக் கொள்­ளவும் தெரி­ய­வில்லை. எமது இந்த நிலை­யி­லி­ருந்து விட யாரிடம் உதவி கோரு­வது என்றும் தெரி­ய­வில்லை. ஆனால், பண உத­வியை விட, நீதியைப் பெற்றுக் கொள்ள யாரா­வது உதவ வேண்டும்.எமக்கு பணம் வேண்டாம். எம்மை குடும்­பத்­தினர் கவ­னித்துக் கொள்­வார்கள். ஆனால், நாங்கள் எவ்­வாறு நீதியை விரை­வாகப் பெறு­வது என்­றுதான் தெரி­ய­வில்லை” என்றார், நியாஸ் மௌல­வியின் மனைவி.

நியாஸ் மௌல­வியின் நண்­பர்கள், ஊர் மக்­க­ளிடம் மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணைகள் அவர் பற்றி யாரும் அறிந்­தி­ருக்­காத தக­வல்­களை வெளிக்­காட்­டின. ஒரு ஆசி­ரிய நண்பர் “எனக்கும் அவ­ருக்கும் அர­சியல் மற்றும் சமய நம்­பிக்­கையில் சில முரண்­பா­டுகள் உள்­ளன. சில நேரம் நாங்கள் மனம் விட்டுப் பேசு­வ­தில்லை. ஆனால், எவ்­வ­ள­வுதான் பணம் வந்­தாலும் அவர் பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் கைச்­செ­ல­வுக்கு போதாத நிலையில் இருந்­துள்ளார். அவர் பணத்தை முறை­கே­டாக பயன்­ப­டுத்­தினார் என்றோ அல்­லது நன்­கொ­டை­களைப் பயன்­ப­டுத்தி பணம் சம்­பா­திக்க முற்­பட்டார் என்றோ யாரும் கூறினால் அதனை நம்­ப­மாட்டேன்” என்றார்.

எவ்­வா­றா­யினும், தனிப்­பட்ட விட­யங்­க­ளுக்கு அப்பால் அவர் மீது முன்­வைக்­கப்­பட்ட குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கும் பயங்­க­ர­வா­தத்­திற்கும் தொடர்­பில்லை என்­பதை தெளி­வு­ப­டுத்த, குடும்­பத்­தினர் சட்ட நிபு­ணர்­களின் உத­வியை எதிர்­பார்க்­கின்­றனர். சில சந்­தே­கங்­களை தெளி­வு­ப­டுத்த அவர் வெளி­வர வேண்­டிய தேவை இருப்­பதால் குறைந்த பட்சம் பிணை மனுக்­கோரும் விட­யத்தில் எவ்­வாறு செயற்­பட முடியும் என்ற வழி­காட்­டல்கள் தேவை­யான நிலையில் உள்­ளனர்.

நியாஸ் மௌலவி கைது செய்­யப்­பட்­ட­போது அவ­ரிடம் அரபு மொழியில் மத்­ரசா புத்­த­கங்கள், ஆவ­ணங்கள் மற்றும் சில இறு­வட்­டுக்கள் இருந்­துள்­ளன. ஒரு அரபு மத­்ர­சாவை நடத்தும் ஒரு­வ­ரிடம் அரபு மொழி­யி­லான ஆவ­ணங்கள் இருப்து அபூர்­வ­மான ஒன்­றல்ல. எவ்­வா­றா­யினும், என்ன ஏது என்று தெரி­யாமல் பொலிஸ் வந்து பிரச்­சி­னைப்­ப­டுத்­தக்­கூடும் என்ற பயத்தில் குடும்­பத்தில் உள்ள சிறு­வர்கள் அவற்றை சாச்­சாவின் வீட்டில் வைத்­துள்­ளனர். அரபு மொழியில் எதைக் கண்­டாலும் பொலிசார் கைது செய்யக் கூடும் என்ற அச்­சத்தால் அவ்­வாறு செய்­த­தாக நியாஸ் மௌல­வியின் மனைவி குறிப்­பிட்டார்.
துர­திர்ஷ்­ட­வ­ச­மாக, பொலிஸ் வந்து தேடி­ய­போது அந்த அர­பு­மொழி ஆவ­ணங்­களை சிறு­வர்­களும் வீட்டில் உள்­ள­வர்­களும் தாமா­கவே எடுத்துக் கொடுத்­து­விட்­டனர். இதனை பயங்­க­ர­வா­தத்­துடன் சம்­பந்­தப்­பட்ட ஆவ­ணங்கள் என சந்­தே­கித்த பொலிஸ் அவற்றை வைத்­தி­ருந்த அல்­லது கொண்­டு­வந்து சிறு­வர்­களை பொலி­சுக்கு கொண்டு சென்­றனர். அதே­நேரம், சாச்­சாவின் ஆவ­ணங்­களை ஒழித்த அல்­லது இடம்­மாற்­றிய குற்­றத்­திற்­காக சிறு­வர்­களை பொலிஸ் கைது செய்ய ஆயத்­த­மா­கினர்.

அப்­போது யாது­ம­றி­யாத சிறு­வர்­களைக் கைது செய்ய வேண்டாம் என நியாஸ் மௌலவியின் சகோதரன் நிசார் பொலிசாரிடம் கேட்டுள்ளார். பொலிஸார் குறைந்தது ஒருவரையாவது கைது செய்ய வேண்டுமெனக் குறிப்பிட்ட போது, “சேர் என்னைக் கைது செய்து கொண்டு செல்லுங்கள்… பிள்ளைகளை ஒன்றும் செய்ய வேண்டாம்” என்று கூற பொலிஸார் எந்தத் தப்பும் செய்யாத நிஸார் என்பவரை குற்றவாளியாக்கியுள்ளனர்.

தேவையில்லாத அச்சத்தின் விளைவாகவும் பொலிஸாரின் வீண் சந்தேகத்தின் காரணத்தாலும் விவசாயமும் கூலித் தொழிலும் செய்து நாளாந்த வாழ்க்கையை மிகவும் சிரமத்தின் மத்தியில் ஓட்டிவந்த நிஸார் என்பவர் இன்றுவரை சிறையில் உள்ளார். அடிப்படைவாதத்திற்கு அல்லது பயங்கரவாதத்திற்கு துணை நின்ற குற்றச்சாட்டில் உள்ளே இருக்கும் அவரது உண்மை நிலையை வெளியில் கொண்டுவர சட்டத்தரணிகளின் உதவி தேவைப்படுவதை அறிய முடிகின்றது.

இந்த அறிக்கையிடல், உண்மையாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி சரியான வேளையில் கிடைக்க வேண்டும் என்ற ஒரே சமூக நோக்கை மாத்திரமே இலக்காகக் கொண்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பாதிக்கும் எந்த நோக்கமும் கிடையாது. நீதியின் மீது குடும்பத்தினரும் அதிக நம்பிக்கையுடன் உள்ளனர்.

நிராஷா பியவதனி, சபீர் முஹமட்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.