ஏப்ரல் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் பின்னர் நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத அலை உச்சகட்டத்தை எட்டியிருந்தது. இந்நிலையில் மே 13 ஆம் திகதி முதல் முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்கள் குருநாகல் மாவட்டத்தை மையப்படுத்தி கட்டவிழ்த்து விடப்பட்டன. இந்த வன்செயல்களின்போது முஸ்லிம்களின் பெரும் எண்ணிக்கையிலான பள்ளிவாசல்கள் இலக்கு வைக்கப்பட்டன.
மே மாதம் 13 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்களினால் குருநாகல் மாவட்டத்தில் 23 பள்ளிவாசல்களும் புத்தளம் மாவட்டத்தில் 3 பள்ளிவாசல்களும் கம்பஹா மாவட்டத்தில் ஒரு பள்ளிவாசலும் சேதங்களுக்குள்ளாகின. பல பள்ளிவாசல்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன.
என்றாலும் முஸ்லிம் சமூகம் தனது சமயக் கடமைகளை நிறுத்திக்கொள்ளவில்லை. சில தினங்களிலேயே பள்ளிவாசல்களில் சிறிய திருத்த வேலைகளை முன்னெடுத்து தனது சமயக் கடமைகளை மீண்டும் ஆரம்பித்தனர். ஜமாஅத்தார்கள் தங்களது பள்ளிவாசல்களை மீளப் புனரமைப்பதில் அதிக அக்கறை காட்டினர்.
பள்ளிவாசல்களின் புனர்நிர்மாணப் பணிகளுக்கு முதற்கட்டமாக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் ஒருதொகை நிதியுதவியும் வழங்கப்பட்டது.
இந்நிலையில்தான் இந்த வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பள்ளிவாசல் ஒன்று கடந்த ஒரு மாத காலமாக மூடப்பட்டுள்ள விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் உத்தரவின்பேரிலேயே இப் பள்ளிவாசல் மூடப்பட்டுள்ளது. குருநாகல் மாவட்டத்தின் கொட்டாம்பிட்டியில் அமைந்துள்ள லுஃலு அம்மார் பள்ளிவாசலே இவ்வாறு மூடப்பட்டுள்ளது.
லுஃலு அம்மார் பள்ளிவாசல்
ஹெட்டிபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டாம்பிட்டியிலே இந்த லுஃலு பள்ளிவாசல் அமைந்திருக்கிறது. இதேவேளை கொட்டாம்பிட்டியில் மஸ்ஜிதுல் ஹுதா என்ற பெயரில் பெரிய ஜும்ஆ பள்ளிவாசலொன்றும் இயங்கி வருகிறது. கொட்டாம்பிட்டி லுஃலு பள்ளிவாசல் நிர்வாக சபையின் செயலாளர் முஹம்மத் ஷாபி வழங்கிய தகவல்களின்படி லுஃலு பள்ளிவாசலை மையப்படுத்தி சுமார் 50 குடும்பங்கள் வாழ்கின்றன. சுமார் 200 பேர் 50 குடும்பங்களை உள்ளடக்கியுள்ளனர். இதுவொரு தௌஹீத் பள்ளிவாசலாகும்.
கடந்த 2000 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட இப்பள்ளிவாசலில் தொடர்ந்து தொழுகைகள் நடத்தப்பட்டு வந்தன. என்றாலும் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் பின்னர் மே மாதம் 13 ஆம் திகதி முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்செயல்களின்போது லுஃலு பள்ளிவாசல் இனவாதிகளால் தீயிட்டு எரிக்கப்பட்டது. இப்பள்ளிவாசலுக்கு ஏற்பட்ட சேதம் 13 இலட்சம் ரூபாவென முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மேற்கொண்ட சேத விபர ஆய்வுகளின்போது கணிப்பிடப்பட்டுள்ளது. பின்பு இப்பள்ளிவாசல் ஊராரின் முயற்சியினால் துப்புரவு செய்யப்பட்டு நிறப்பூச்சு பூசப்பட்டு தொழுகைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.
தொழுகைகள் நடத்தத் தடை
இந்நிலையிலேயே குளியாப்பிட்டி, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அபேரத்னவின் உத்தரவுக்கமைய கடந்த ஜூலை மாதம் 18 ஆம் திகதி முதல் பள்ளிவாசலில் தொழுகைகளுக்குத் தடை விதிக்கப்பட்டதுடன் பள்ளிவாசலும் மூடப்பட்டது.
இந்தப் பள்ளிவாசலில் தொழுகைகளை நடத்தி வந்தவர் பக்கத்து ஊரான அனுக்கனையைச் சேர்ந்தவராவார். மௌலவி எம்.ஐ.எம். நசீர் எனும் பெயருடைய இவர் மூன்று மாதங்களுக்கு முன்பு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு கொண்டிருந்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் லுஃலு பள்ளிவாசலின் நிர்வாக சபைச் செயலாளர் முஹம்மத் ஷாபி தெரிவிக்கையில், கடந்த மாதம் ஹெட்டிபொல பொலிஸ் நிலையத்துக்கு எம்மை அழைத்து பள்ளிவாசல் தொடர்பில் விசாரித்தார்கள். மறுதினம் அதாவது ஜூலை 18 ஆம் திகதி குளியாப்பிட்டி உதவி பொலிஸ் அத்தியட்சகர் திடீரென லுஃலு பள்ளிவாசலில் தொழுகை நடத்த வேண்டாமெனவும் மூடிவிடுமாறும் உத்தரவிட்டார். எமக்கு வேறுவழி தெரியாது மூடி விட்டோம் என்றார்.
பள்ளிவாசல் நிர்வாகத்தை ஹெட்டிபொல பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளிவாசலை மூடும்படி உத்தரவிடப்படுகின்றமைக்கான காரணத்தை பள்ளிவாசல் நிர்வாகம் கோரியிருந்தபோதும் அதற்கான சரியான விளக்கம் அளிக்கப்படவில்லை. சிங்களவர்களின் பாதுகாப்புக்காக பள்ளிவாசலின் தொழுகைகளை தடைசெய்ய வேண்டிய நிலை உருவானதாக இதன்போது காரணம் கூறப்பட்டுள்ளது.
எமது நாட்டில் மத உரிமைகள் அரசியல் யாப்பினால் வழங்கப்பட்டுள்ளன. இது ஒவ்வொருவரின் சிவில் உரிமையுமாகும். பள்ளிவாசல் என்பது பொதுவான இடமாகும். தௌஹீத் பள்ளிவாசல் என்றாலும் அங்கு மக்களால் தொழுகைகளே மேற்கொள்ளப்படுகின்றன. அத்தோடு இந்தப் பள்ளிவாசல் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் சட்ட ரீதியாகப் பதிவு செய்யப்பட்டதுமாகும்.
அரசியல் யாப்பினால் வழங்கப்பட்ட மத உரிமையை பொலிஸாரினால் மாத்திரமல்ல எவராலும் மறுக்கமுடியாது. தடை செய்யமுடியாது. தொழுகைகள் தடை செய்யப்படுவதாயின் அதற்கான காரணத்தை பொலிஸார் முன்கூட்டியே நிர்வாகத்தினருக்கு அறிவிக்கவேண்டும். ஏதும் காரணங்களினால் தொழுகை தடை செய்யப்படுவதென்றால் அந்தக் காரணங்கள் விசாரணையின் பின்பு நிரூபிக்கப்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டாலே அவ்வாறான தீர்மானமொன்றை பொலிஸாரினால் மேற்கொள்ள முடியும்.
பள்ளிவாசலில் தொழுகைகளை நடத்தி வந்த மௌலவி 3 மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள போதிலும் அவரது கைதுக்கும் பள்ளிவாசலில் தொழுகைளைத் தடை செய்வதற்கும் தொடர்பு இருக்கிறது என்று கூறமுடியாது.
பிரதேசத்திலுள்ள சிலரால் குளியாப்பிட்டி உதவி பொலிஸ் அத்தியட்சகருக்கு கடிதம் அனுப்பப்பட்டே இப்பள்ளிவாசலில் தொழுகைக்கான தடை விதிக்கப்பட்டுள்ளது என இறுதியாக தமக்கு நம்பத் தகுந்த தகவல்கள் கிடைத்திருக்கின்றன என இப் பள்ளிவாசலின் செயலாளர் முஹம்மத் ஷாபி தெரிவிக்கிறார்.
லுஃலு பள்ளிவாசலில் எவரேனும் தொழுதால் கைது செய்யப்படுவார்கள் என குளியாப்பிட்டி உதவி பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்திருப்பதால் அந்தப் பள்ளிவாசலைப் பிரதிநிதித்துவப்படுத்திய மக்கள் அச்சத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சு அதிகாரிகளுடன் கலந்துரையாடல்
பள்ளிவாசலில் தொழுகைக்கு தடை விதித்துள்ளமை தொடர்பில் நேற்று முன்தினம் புதன்கிழமை லுஃலு பள்ளிவாசல் நிர்வாகம் அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சில், அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடியது. பள்ளிவாசல் விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் ஹலீமின் இணைச் செயலாளர் மலிக், குருநாகல் பிரதி பொலிஸ் மா அதிபருடன் அன்றே தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு சம்பவத்தை விளக்கினார். பள்ளிவாசலில் தொழுகை தடை செய்யப்பட்டுள்ளமை தொடர்பான அனைத்து விபரங்களும் பிரதி பொலிஸ் மா அதிபரினால் கோரப்பட்டுள்ளன. இவ்விவகாரம் தொடர்பில் பள்ளிவாசல் நிர்வாகம் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு முறைப்பாடுகளைக் கையளிக்கத் தீர்மானித்துள்ளது.
கொட்டாம்பிட்டி மஸ்ஜிதுல் ஹுதா பள்ளிவாசல் தலைவர்
கொட்டாம்பிட்டி மஸ்ஜிதுல் ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல் லுஃலு பள்ளிவாசலிலிருந்து சுமார் 100 மீட்டர் தூரத்திலே அமைந்துள்ளது. மஸ்ஜிதுல் ஹுதா ஜும்ஆ பள்ளிவாசலில் தலைவர் எம்.ஆர்.எம். ஜெலீலைத் தொடர்பு கொண்டு இவ்விவகாரம் தொடர்பில் வினவினோம்.
கொட்டாம்பிட்டியில் ஒரு ஜமாஅத்தே இருந்தது. அதில் ஒரு பிரிவினர் 2000 ஆம் ஆண்டு சண்டையிட்டு பிரிந்து சென்றே லுஃலு பள்ளிவாசலை நிர்மாணித்துக் கொண்டு தொழுகைகளை நடத்தினார்கள். எவரும் அந்தப் பள்ளிவாசலை பொலிஸாரிடம் காட்டிக்கொடுக்கவில்லை. அப்பள்ளியில் ஜும்ஆ நடத்த வேண்டாம் என்று கூறியும் ஜும்ஆ நடத்தினார்கள். அப்பள்ளியின் புனர்நிர்மாணப் பணிகளுக்கு மஸ்ஜிதுல் ஹுதாவுக்கு கிடைத்த நிதியிலிருந்து 5 இலட்சம் ரூபா வழங்கியுமுள்ளோம். நோன்புப் பெருநாள் தொழுகையை அவர்கள் அப்பள்ளிவாசலிலே நடத்தினார்கள். எங்களுக்குள் எந்தப் பிரிவினையும் இல்லை. அந்தப் பள்ளிவாசலின் உப தலைவர் தற்போது மஸ்ஜிதுல் ஹுதாவிலே தொழுகிறார் என்றும் அவர் கூறினார்.
தவறான தகவல்கள் வழங்கப்பட்டதா?
எவ்வித தகவல்களும் பெற்றுக் கொள்ளாமல் பொலிஸார் தொழுகைகளுக்கான தடையை ஏற்படுத்தியிருக்கமாட்டார்கள். அவ்வாறான தகவல்கள் வழங்கப்பட்டிருந்தால் பொலிஸார் அத்தகவல்களின் உண்மைத் தன்மையைக் கண்டறிந்திருக்க வேண்டும்.
அப்பகுதியில் வாழும் பெரும்பான்மை இன மக்களை அமைதிப்படுத்துவதற்காகவே பள்ளிவாசலில் தொழுகைத் தடை செய்யப்பட்டுள்ளதாக பிரதேச அரசியல்வாதி ஒருவர் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு இனத்தின் வேண்டுதலின் பேரில் இன்னொரு இனத்தின் மத நிலையங்களை மூடிவிடுவது ஒரு போதும் நன்மையாகாது. அது வன்செயல்களை அதிகரிப்பதாகவே அமையும். இனங்களுக்கிடையில் விரிசல்களை அதிகரிக்கும். இவ்வாறு இலங்கையின் எந்தப் பகுதியிலும் எந்தவொரு மத்தலமும் இதுவரை மூடப்படவில்லை.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை பண்டுவஸ்நுவர கிளையின் செயலாளர் மௌலவி ஐ.எல்.எம்.ருவைஸ் மௌலவியும் லுஃலு அம்மார் பள்ளிவாசல் தொடர்பாக எவரும் தவறான தகவல்களை வழங்கவில்லை என தெரிவித்துள்ளார். எவரும் அந்தப் பள்ளிவாசலைக் காட்டிக்கொடுக்கவில்லை. அது தௌஹீத் பள்ளிவாசல் என்பதனாலேயே பொலிஸார் அங்கு தொழுகைக்குத் தடை விதித்துள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார்.
இந்தப் பள்ளிவாசலை மூடிவிடவேண்டிய தேவை இங்குள்ள எவருக்கும் இல்லை. தற்போது அங்கு தொழுகை தடை செய்யப்பட்டிருப்பதால் அப்பள்ளிவாசல் ஜமாஅத்தைச் சேர்ந்த 10 பேர் மஸ்ஜிதுல் ஹுதாவுக்கே வந்து தொழுகிறார்கள். இப்பகுதியில் நாம் முரண்பாடுகளின்றி ஒற்றுமையாக வாழவேண்டும். மார்க்கக் கடமைகளை நிறைவேற்ற வேண்டும். என்றே நாம் கருதுகிறோம். மஸ்ஜிதுல் ஹுதாவுக்கு வந்து தொழ வேண்டாம் என நாம் எவரிடமும் கூறவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
50 குடும்பங்களுக்கு அசௌகரியம்
கொட்டாம்பிட்டி லுஃலு பள்ளிவாசலில் தொழுகைகளுக்கு தடைசெய்யப்பட்டு பள்ளிவாசல் மூடப்பட்டுள்ளதால் அப்பள்ளிவாசலின் நிர்வாகத்தின் கீழுள்ள சுமார் 50 குடும்பங்கள் அசௌகரியங்களுக்குள்ளாகியுள்ளன.
அப்பள்ளிவாசலில் இயங்கி வந்த குர்ஆன் மத்ரஸா மற்றும் தொழுகைகள் முடங்கிப் போயுள்ளன. அங்கு வாழும் மாணவர்கள் வேறு குர்ஆன் மத்ரஸாவில் தங்கள் கல்வியைத் தொடர்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. அப்பகுதி மக்கள் ஐவேளைத் தொழுகை மற்றும் ஜும்ஆ தொழுகைக்கு அருகிலிருக்கும் பள்ளிவாசல்களை நாட வேண்டியேற்பட்டுள்ளது. எனவே பள்ளிவாசல் நிர்வாகங்கள் பள்ளிவாசலை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும்.
பள்ளிவாசல் தொடர்பில் தவறான தகவல்கள் வழங்கப்பட்டிருந்தால் அவை தவறானவை என்பதை நிரூபிப்பதற்கு நிர்வாகம் முன்வர வேண்டும்.
கொட்டாம்பிட்டியின் பெரிய பள்ளிவாசலான மஸ்ஜிதுல் ஹுதா கொட்டாம்பிட்டி லுஃலு பள்ளிவாசலை மீண்டும் திறப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
லுஃலு பள்ளிவாசல் நிர்வாக சபைச் செயலாளர் முஹம்மத் ஷாபி, கொட்டாம்பிட்டி ஹுதா பள்ளிவாசல் நிர்வாகம் உதவி பொலிஸ் அத்தியட்சகரிடம் சிபாரிசு செய்தால் பள்ளிவாசலை மீண்டும் திறக்கலாம் என்று ‘விடிவெள்ளி’ யிடம் தெரிவித்தார். நாம் மஸ்ஜிதுல் ஹுதா பள்ளிவாசல் நிர்வாகச் சபைத் தலைவர் எம்.ஆர். ஜெலீலிடம் இது தொடர்பில் வினவினோம். ‘அவ்வாறு பொலிஸாருக்குச் சிபாரிசு செய்வதென்றால் என்னால் தனித்துத் தீர்மானம் மேற்கொள்ள முடியாது பொதுக் கூட்டத்தைக் கூட்டியே தீர்மானிக்கவேண்டும்’ என அவர் கூறினார்.
ஒன்றுபட்டுத் தீர்க்க வேண்டும்
லுஃலு பள்ளிவாசல் புனரமைப்புக்காக வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சும் 5 இலட்சம் ரூபா நஷ்டஈடு வழங்கியுள்ளது. பள்ளிவாசல் புனரமைப்பு பணிகள் இடம்பெற்றுள்ள நிலையில் அங்கு தொழுகைகள் தடை செய்யப்பட்டிருப்பது எந்த வகையிலும் நியாயமாகாது. தௌஹீத் கொள்கைகளைக் கொண்ட பள்ளிவாசல் என்று முத்திரை குத்தி பொலிஸார் தொழுகையை தடை செய்வது மத உரிமை மீறலாகும். முஸ்லிம் சமய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் இவ்விவகாரத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும்.
ஏப்ரல் 21 ஆம் திகதி தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களையடுத்து முஸ்லிம் சமூகம் பாரிய சவால்களை எதிர் கொண்டுள்ளது. சமூகத்துக்கு எதிரான சவால்களை முறியடிக்க நாம் ஒன்றுபட வேண்டும். பிரிந்து நிற்பது இனவாத சக்திகளுக்கு உரமூட்டுவதாக அமையும். எமக்கிடையில் விட்டுக் கொடுப்புகள் அவசியம். தௌஹீத் பள்ளியா? தப்லீக் பள்ளியா? என்று பார்த்து சண்டை பிடிக்கின்ற தருணம் இதுவல்ல. லுஃலு அம்மார் பள்ளிவாசல் மீண்டும் திறக்கப்பட வேண்டும். அங்கு மீண்டும் தொழுகைகள் இடம்பெற வேண்டும். பிரிந்து நிற்கும் இரு தரப்பும் மசூராக்கள் மூலம் ஒன்றுபட வேண்டும். ஏனென்றால் சமூகத்துக்கு எதிரான எத்தனையோ சவால்களை நாம் முறியடிக்க வேண்டியுள்ளது.
vidivelli