நியூசிலாந்தில் அமைந்துள்ள இரண்டு பள்ளிவாசல்களில் கடந்த மார்ச் மாதம் 15 ஆந் திகதி இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் பலர் இஸ்லாத்தை தழுவியுள்ளனர்.
இஸ்லாத்தை தழுவுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
இஸ்லாத்தை தழுவும் நியூசிலாந்து நாட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக நியூசிலாந்து சர்வதேச இஸ்லாமிய சங்கத்தைச் சேர்ந்த இமாம் நிஸாமுல் ஹக் தான்வி தெரிவித்தார்.
அனைவரும் பள்ளிவாசலுக்கு வருகின்றனர். நியூசிலாந்து பழங்குடியினர், முன்னாள் கிறிஸ்தவர்கள் மற்றும் ஓர் இந்துகூட வந்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.
தாக்குதல் நடைபெற்று சில வாரங்களின் பின்னர் நாளொன்றிற்கு மூன்று தொடக்கம் ஐந்து பேர் வெலிங்டன் பள்ளிவாசலுக்கு வந்து இஸ்லாத்தை தழுவினர் எனவும் தான்வி தெரிவித்தார். தாக்குதலின் பின்னரான அடுத்த மாதம் நாளொன்றிற்கு ஒருவர் அல்லது இருவர் பள்ளிவாசலுக்கு வந்து இஸ்லாத்தில் இணைந்து கொண்டனர்.
உள்ளூர் இஸ்லாமிய சங்கமான ‘மனாவது’ அமைப்பின் தவிசாளரான ஸுல்பிகார் பூடொன் இஸ்லாத்தைத் தழுவிய ஆறுபேரை சந்தித்ததாகவும் மேலும் பலர் தொடர்பில் கேள்வியுற்றதாகவும் தெரிவித்தார்.
ஒடாகோவில் அண்மையில் நடைபெற்ற திறந்த பள்ளிவாசல் நிகழ்வின்போது கையேடுகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும் மேலுமொரு திறந்த பள்ளிவாசல் நிகழ்வினை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படும் அதேவேளை, ஒக்லேண்ட் பள்ளிவாசலுக்கும் ஏராளமானோர் வருகை தருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதல் நடைபெற்று ஒரு சில தினங்களே கடந்திருந்த நிலையில் இறுதி மரியாதையைச் செலுத்துவதற்காக நொட்டிங்ஹாம் ஷயாரிலிருந்து பீஸ்டன் நகரில் அமைந்துள்ள இப்ராஹீம் பள்ளிவாசலுக்கு வருகைதந்த பிரித்தானியப் பெண்மணியொருவர் முஸ்லிமாகவே அங்கிருந்து வெளியேறினார்.
கிரைஸ்ட்சேர்ச் பள்ளிவாசலில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறுவதற்காக ஆல் பிளக்ஸ் ரக்பி விளையாட்டு வீரர் ஒபா துங்காபாஸி தனது அணியில் விளையாடும் முஸ்லிம் வீரருடன் வந்திருந்த நிலையில் இஸ்லாத்தைத் தழுவினார்.
நியூசிலாந்து நாட்டவர்களான முஸ்லிம்களின் எண்ணிக்கை சுமார் 60,000 ஆக அதிகரித்துள்ளதாக நியூசிலாந்து சர்வதேச இஸ்லாமிய சங்கத்தின் தலைவர் தாஹிர் நவாஸ் தெரிவித்தார்.
மெகான் லவ்லேடி
அமெரிக்காவில் பிறந்த இவர் தனது ஏழாவது வயதில் தனது குடும்பத்தினருடன் அமெரிக்காவிலிருந்து நியூசிலாந்திற்கு வந்து குடியேறினார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் மெகான் லவ்லேடியின் ஆண் நண்பர் அவரது கண்ணெதிரிலேயே புகையிரதத்தில் மோதுண்டு உயிரிழந்தார்.
அதன் பின்னர் கண்ணீரொடு வாழ்ந்த மெகான் லவ்லேடி ‘எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது ?’ என தனக்குத்தானே கேட்டுக்கொண்டார். கடவுள் சர்வ வல்லமை படைத்த ஒருவன் என்றால், இவ்வாறான நெருக்கடியிலிருந்து பாதுகாக்க அவனால் ஏன் முடியாமல் போய்விட்டது? இவ்வாறான சிந்தனைகள் மத நம்பிக்கையிலிருந்து அவரைத் தூரமாக்கின.
கிரைஸ்ட்சேர்ச் தாக்குதலின் பின்னர் ஹெக்லி பூங்காவில் இடம்பெற்ற வெள்ளிக்கிழமைத் தொழுகைக்கு தாக்குதலின் அதிர்ச்சியிலிருந்து இதுவரை மீளாதிருக்கும் ஆயிரக்கணக்கானோரோடு மெகானும் சென்றார்.
அங்கு இமாம் தொழுகை நடத்தியவிதம் அவரது உள்ளத்தைக் கவர்ந்தது.
அதில் ஒரு ரிதம் இருந்தது, எனக்குள் உணர்வுகளை ஏற்படுத்தியது எனத் தெரிவித்த மெகான், அவர்களைப்போன்ற உடல் அசைவுகளை நானும் செய்ய வேண்டுமென விரும்பினேன். ஆனால், எனக்கு எப்படி அவற்றைச் செய்வதென்பது தெரியாது.
நான் வெறுமனே அழுதுகொண்டு நின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நான் எனது வீட்டில் இருப்பதுபோலவே உணர்கின்றேன். ஒருபோதும் இல்லாதவாறு ஒரு சமூகத்தின் அங்கத்தவராக இருப்பதையும் உணர்கின்றேன்.
அல்லாஹ் தனது வீட்டிற்கு என்னையும் அழைத்துள்ளான் எனவும் அவர் தெரிவித்தார்.
மிக அண்மையில் இஸ்லாத்தில் இணைந்துகொண்ட நியூசிலாந்துப் பெண்மணி மெகான் லவ்லேடி ஆவார். ஆன்மீக ரீதியாகவும் உணர்வுபூர்வமாகவும் தேடல்களில் ஈடுபட்டிருந்த மெகான் லவ்லேடியின் தேடல் மார்ச் 15 பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் முடிவுக்கு வந்தது என ரேடியோ நியூசிலாந்து அறிவித்தது.
எம்.ஐ.அப்துல் நஸார்
vidivelli