முஸ்லிம் எம்.பி.க்கள் மீண்டும் பதவிகளை ஏற்றமை முஸ்லிம்களை நட்டாற்றில் விட்டமைக்கு ஒப்பானது
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஸுஹைர்
இந்நாட்டு முஸ்லிம்களின் நலன்களை முன்னிறுத்தி தம் அமைச்சு, இராஜாங்க அமைச்சு பிரதியமைச்சு பதவிகளை இராஜிநாமா செய்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் பதவிகளை ஏற்றமை இந்நாட்டு முஸ்லிம் சமுதாயத்தை நட்டாற்றில் விட்டமைக்கு ஒப்பான செயல் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். ஸுஹைர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலொன்றை எதிர்நோக்கியுள்ள சூழலில் முஸ்லிம் சமூகத்தின் மீது ஏற்படுத்தப்பட்ட அழுத்தங்கள், நெருக்கடிகள் குறித்தும் முஸ்லிம்களின் எதிர்காலம் குறித்தும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சிகளுடனும், அவற்றின் அபேட்சகர்களுடனும் சுதந்திரமாகப் பேச்சுவார்த்தைகளை நடாத்தி நியாயமான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளக் கிடைத்திருந்த சந்தர்ப்பத்தை முஸ்லிம் எம்.பிக்கள் மீண்டும் அமைச்சு பதவிகளை ஏற்றதன் ஊடாக இச்சமூகம் இழந்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
தற்போதைய அரசியல் சூழல் மற்றும் இலங்கை முஸ்லிம் சமூகம் முகம் கொடுத்துள்ள நிலைமைகள் தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது, அண்மையில் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த சிலர் இந்நாட்டு முஸ்லிம் சமூகத்தின் மீது மேற்கொண்ட அழுத்தத்தை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தம் அமைச்சு, இராஜாங்க அமைச்சு, பிரதியமைச்சு பதவிகளை இராஜிநாமா செய்தனர். அந் நடவடிக்கையை முஸ்லிம்கள் சரிகண்டு வரவேற்றனர். ஆனால் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த சிலர் ”நாம் எல்லோரையும் இராஜிநாமா செய்யச் சொல்லவில்லையே. மீண்டும் அமைச்சு பதவியை ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று கோரும் அளவுக்கு நிலைமை ஏற்பட்டது.
இந்நாட்டு முஸ்லிம்களுக்கு பெரும்பான்மையினர் ஏற்படுத்திக் கொடுத்த அருமையான சந்தர்ப்பம் இதுவாகும். இந்த சந்தர்ப்பத்தை உச்சளவில் பயன்படுத்தி பெரும்பான்மையினர் மத்தியில் பரப்பப்படும் பொய் பிரசாரங்களை முறியடித்து சகவாழ்வையும் நல்லிணக்கத்தையும் உறுதியான முறையில் கட்டியெழுப்பி இருக்கலாம்.
அதேநேரம் முஸ்லிம் சமூகத்தின் மீதான இந்த அழுத்தம் இந்நாடு ஜனாதிபதித் தேர்தலொன்றை எதிர்நோக்கி இருக்கும் நிலையில் தான் தோற்றுவிக்கப்பட்டது. அதனால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான அரசியல் கட்சிகளது தலைவர்களோடும். வேட்பாளர்களோடும் முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகள், பிரச்சினைகள் குறித்த பேச்சுவார்த்தைகளையும் பேரம்பேசுதல்களையும் சுயாதீனமாக நடாத்தி இருக்க முடியும். அவற்றின் ஊடாக முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்ளையும், பிரச்சினைகளையும் கூட குறைக்கவும் தணித்திருக்கவும் முடியும்.
இருந்த போதிலும் இவை எதையும் கருத்தில் எடுத்து தூரநோக்கோடு சிந்தித்து செயற்படாது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்டுள்ளனர். தற்போதைய சூழலில் அவர்கள் அமைச்சுப் பதவிகளை மீண்டும் ஏற்றிருக்கக்கூடாது. அது தான் பெரும்பாலான முஸ்லிம்களின் கருத்தாகவும் உள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய நான்கு கட்சிகளும் போட்டியிடும் நிலைமை காணப்படுகின்றது. அக்கட்சிகள் தம் அபேட்சகர்களை தேர்தலில் நிறுத்துவதற்கான சாத்தியங்கள் தான் பெரும்பாலும் நிலவிக் கொண்டிருக்கின்றன.
இவ்வாறான சூழலில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சு பதவிகளை மீண்டும் ஏற்காது இருந்திருந்தால் முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகள், பிரச்சினைகள் குறித்து ஒவ்வொரு கட்சியோடும் அதன் அபேட்சகரோடும் சுதந்திரமாக இருந்து பேசி இருக்கலாம். அதன் ஊடாக முஸ்லிம் சமூகத்தின் நெருக்கடிகளுக்கு நியாயமான தீர்வுகளைப் பெற்றிருக்கலாம். அவற்றிற்கான உத்தரவாதங்களை தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கக்கூட வழி செய்திருக்க முடியும்.
ஆனால் அமைச்சுப் பதவிகளை மீண்டும் ஏற்றதன் ஊடாக அந்த பொன்னான சந்தர்ப்பத்தை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தவறவிட்டுள்ளனர். இதேபோன்றதொரு தவறைத்தான் 2015 இலும் முஸ்லிம் கட்சிகள் விட்டன. முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து எவ்வித பேரம்பேசுதல்களையும் மேற்கொள்ளாது ஜனாதிபதி அபேட்சகருக்கு ஆதரவு நல்கினர்.
இப்போது அமைச்சுப் பதவிகளை மீண்டும் ஏற்றதால் இவர்கள் தம்மை ஒரு முகாமுக்குள் மட்டுப்படுத்திக் கொண்டுள்ளனர். இதன் விளைவாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் நான்கு பிரதான கட்சிகளோடும் அவற்றின் அபேட்சகர்களோடும் முஸ்லிம்கள் முகம் கொடுத்திருக்கும் நெருக்கடிகள் குறித்து சுதந்திரமாகப் பேச முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளனர். ஒரு அணிக்குள் இருந்து கொண்டு சுதந்திரமான பேச்சுவார்த்தைகளையோ பேரம் பேசுதல்களையோ நடாத்தவும் முடியாது. முஸ்லிம்கள் தொடர்பான விடயங்களை தேர்தல் விஞ்ஞாபனங்களில் உள்ளடக்கவும் கிடைக்காது.
இன்றைய காலகட்டத்தில் இந்நாட்டு முஸ்லிம்கள் பல்வேறு விதமான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் உருவாகியுள்ள நிலைமை, உள்நாட்டு யுத்தம் முடிவுற்று பத்து வருடங்கள் கடந்தும் இற்றைவரையும் வடக்கு முஸ்லிம்கள் மீண்டும் சொந்த இடங்களுக்கு செல்ல முடியாத நிலை நீடிக்கின்றமை உள்ளிட்ட பல விடயங்கள் உள்ளன.
ஆனால் அரசாங்கத்தில் அங்கம் வகிக்காது எதிரணியில் இருந்தபடி எத்தனையோ விடயங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு சாதித்துள்ளது. அவற்றில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த பல மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதேநேரம் பேராயர் கர்தினால் மல்கம் ரன்ஜித், ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னணி, அதில் சம்பந்தப்பட்டவர்கள் உள்ளிட்ட விடயங்களைப் பகிரங்கப்படுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் பெற்றுக்கொடுக்காமல் எந்தவொரு ஜனாதிபதி அபேட்சகரும் தம்மை சந்திக்க வரவேண்டாம் என்று குறிப்பிட்டிருக்கின்றார்.
இருப்பினும் முஸ்லிம் கட்சிகள் ஜனாதிபதி அபேட்சகரை அறிவித்த பின்னர் தமது முடிவுகளை அறிவிப்போம் எனக் கூறியுள்ளன. ஆனால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சிகள் தேர்தல் விஞ்ஞானத்தைத் தயாரிப்பதற்கான கலந்துரையாடல்களைக் கூட ஆரம்பித்து விட்டதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறான சூழலில் முஸ்லிம் கட்சிகள் முஸ்லிம் சமூகம் முகம் கொடுத்துள்ள நிலைமை குறித்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளோடும் அபேட்சகர்களோடும் பேரம்பேசுதல்களை நடாத்தி அவற்றுக்கு பெற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுகளை தேர்தல் விஞ்ஞாபனங்களில் உள்ளடக்குவது குறித்து கவனம் செலுத்தி செயற்பட வேண்டிய காலம் இது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
vidivelli