தீவிரவாதத்திற்கு எதிரான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும்
ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவிப்பு
“எமது சமூகத்திலிருந்து தீவிரவாதிகளை அடையாளப்படுத்தக்கூடிய தீவிரவாதத்துக்கு எதிரான பொறிமுறை ஒன்றை உருவாக்கவேண்டியுள்ளது. அத்துடன் இந்த நாட்டில் சமாதானத்தையும் அமைதியையும் பாதுகாப்பதற்கான வகையில் சட்டத்தை அமுல்படுத்துகின்றவர்களுடன் இணைந்து செயற்பட வேண்டியது அவசியம்.’’ மேற்குறிப்பிட்டவாறு நேற்று முன்தினம் கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் ஸ்தாபகர் தின விழாவின் சிறப்பு பேச்சாளராகக் கலந்து கொண்ட ஜனாதிபதி சட்டத்தரணியும் ஸாஹிராக் கல்லூரியின் பழைய மாணவருமான அலி சப்ரி கூறினார்.
கல்லூரியின் அதிபர் ரிஸ்வி மரைக்கார் தலைமையில் கல்லூரியின் அப்துல் கபூர் மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
‘‘இந்த நாட்டிலுள்ள இலங்கை முஸ்லிம்களுக்கு நீண்டதொரு வரலாறு உண்டு. கடந்த 11 நூற்றாண்டுகளாக அவர்கள் சகல சமூகங்களுடனும் சமாதானமாகவும் சட்டத்தைப் பின்பற்றி நடக்கின்ற சமூகமாகவும் வாழ்ந்து வருகின்றனர். துரதிர்ஷ்டவசமாக முஸ்லிம் பெயரைச் சுமந்த குறிப்பிட்ட சில தீவிரவாதிகள் நடாத்திய பயங்கரவாதத் தாக்குதல் காரணமாக முஸ்லிம்கள் பற்றிய அபிப்பிராயம் சிதைவடைந்துள்ளமை யானது கவலைக்குரியதாகும். எனவே நாம் எம்மோடு வாழக்கூடிய ஏனைய சமூகங்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்கான பொறுப்பு எமது சமூகத்தின் மீதுள்ளது.
இதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக தனித்து ஒதுங்கி வாழும் நிலையிலிருந்து வெளிவந்து ஏனைய சமூகங்களுடன் இணைந்து செயற்படுவதுடன் உறவையும் சகோதரத்துவத்தையும் கட்டியெழுப்பக்கூடிய வகையில் எமது எதிர்கால செயற்பாடுகள் அமையவேண்டும்.
இலங்கையில் பல்வேறு சமூகங்களுடனான சகவாழ்வையும் சக உறவையும் மேம்படுத்தக்கூடிய கல்வியை விருத்திசெய்வதற்கு கடந்த காலங்களில் ஸாஹிரா கல்லூரி செயற்பட்டது போல் எமது கல்வியை முன்னெடுத்துச்செல்ல வேண்டும்.
ஸாஹிராவின் முன்னாள் அதிபர் ஏ.எம்.ஏ. அஸீஸ் 1948 முதல் 1961 வரை அதிபராக இருந்த பொற்காலப்பகுதியில் ஸாஹிரா படிப்படியாக கல்வித் துறையில் கீர்த்தி மிகு மத்திய நிலையமாக மாறியது.
இலங்கையிலுள்ள முஸ்லிம் –தமிழ் –சிங்கள சமூகங்களைச் சேர்ந்த சகல மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான சேவையை வழங்கக் கூடிய பாடசாலையாக வளர்ச்சியடைந்தது. அது மட்டுமன்றி மலேசியா, கென்யா, பாகிஸ்தான் போன்ற வெளிநாட்டு மாணவர்களும்கூட இங்கு வந்து கல்விகற்றுப் பயனடைந்தனர்.
சாதாரண முஸ்லிம் பாடசாலை என்ற நிலையிலிருந்து தேசியப் பாடசாலையாக மாற்றம் கண்ட ஸாஹிராக் கல்லூரியின் கல்வித்தர மேம்பாட்டையும் சமூகங்களிடையிலான பாகுபாடற்ற சேவையையும் அக்காலப்பகுதியில் பல்கலைக்கழத்துக்குத் தெரிவான பல்லின மாணவர்களின் எண்ணிக்கையிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
இக்காலப்பகுதியில் இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களின் பீடங்களுக்கு அனுமதி பெற்ற மொத்த மாணவர்களின் தொகை 138 ஆகும். அனுமதி பெற்ற இம்மாணவர்களில் 80 பேர் இஸ்லாம் மாணவர்கள், 37 பேர் சிங்கள மாணவர்கள், 21 பேர் தமிழ் மாணவர்களாவர். சதவீத அடிப்படையில் முஸ்லிம் மாணவர்கள் 57 சதவீதமும் சிங்கள மாணவர்கள் 27 சதவீதமும் தமிழ் மாணவர்கள் 15 சதவீதமாகவும் இருந்தனர். இந்த உதாரணமானது உண்மையிலேயே இலங்கையிலுள்ள சகல சமூகங்களையும் பிரதி நிதித்துவப்படுத்தும் ஒரு பிரதானமான முஸ்லிம்களுக்குரிய முஸ்லிம்களால் நடத்தப்பட்ட ஒரு கல்வி நிறுவனமாகத் திகழ்ந்தது.
எனவே, அக்காலத்தில் ஸாஹிராக் கல்லூரியானது முன்னுதாரணமாக செயற்படுத்தப்பட்டது போல் எமது கல்வி நடவடிக்கைகளிலும் ஏனைய நடவடிக்கைகளில் சகல சமூகங்களுடன் நல்லுறவை விருத்தி செய்யக்கூடியவாறு எமது செயற்பாடுகள் அமைய வேண்டும்’’ எனக் குறிப்பிட்டார். மேலும் இந்நிகழ்வில் ஸாஹிராக் கல்லூரியின் பழையமாணவர்கள், ஆளுநர் சபை அங்கத்தவர்கள் மற்றும் பல்வேறு பிரமுகர்களும் வெளிநாட்டுத் தூதுவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
vidivelli