ஏ.ஆர்.ஏ.பரீல்
முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது.
ஜனாதிபதியின் தலைமையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலே இவ் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம், நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள
ஆகிய இருவரும் இணைந்து அமைச்சரவைக்குச் சமர்ப்பித்திருந்தனர். முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக 2009 ஆம் ஆண்டு தற்போதைய ஓய்வு நிலை நீதியரசர் சலீம் மர்சூபின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் திருத்தங்களுக்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள திருத்தங்களின் அடிப்படையில் முஸ்லிம் ஆண் –பெண்களின் திருமண வயதெல்லை 18 ஆகும். விவாகரத்தின் போது பாதிக்கப்படும் பெண்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்படுவதும் திருத்தங்களில் உள்வாங்கப்பட்டுள்ளது.
காதிநீதிமன்றங்கள் தரமுயர்த்தப்படுவதுடன் காதிநீதிபதிகள் நிரந்தர முழுநேர நீதிபதிகளாக நியமிக்கப்படவுள்ளனர். இஸ்லாமிய சட்ட அறிவுடன் கூடிய ஆண் சட்டத்தரணிகளே காதிநீதிபதிகளாக நியமிக்கப்படவுள்ளனர்.
2009 ஆம் ஆண்டு அப்போதைய நீதியமைச்சர் மிலிந்த மொரகொடவினால் தற்போதைய ஓய்வுநிலை நீதியரசர் சலீம் மர்சூபின் தலைமையில் நியமிக்கப்பட்ட முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்களைச் சிபாரிசு செய்வதற்கான குழு தனது அறிக்கையை 2018 ஆம் ஆண்டு நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரளவிடம் கையளித்தது.
நீதியமைச்சரிடம் கையளிக்கப்பட்ட அறிக்கை இரண்டு அறிக்கைகளை உள்ளடக்கியிருந்தது. குறிப்பிட்ட குழு கருத்து முரண்பாடுகளினால் இரு வேறுபட்ட அறிக்கைகளைச் சமர்ப்பித்திருந்தது. இந்த அறிக்கைகளில் பிரதான அறிக்கை சட்டத்திருத்தக் குழுவின் தலைவர் சலீம் மர்சூபின் தலைமையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை அடிப்படையாகக் கொண்டதாக இருந்தது. அதே அறிக்கையுடன் இணைக்கப்பட்டிருந்த மற்றைய சிறிய அறிக்கை அந்த சிபாரிசுகளுக்கு முரணானதாக அமைந்திருந்தது. இந்த முரண்பட்ட சிறிய அறிக்கை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை உள்ளிட்ட தரப்பினரினதாகும்.
அறிக்கையைப் பெற்றுக்கொண்ட நீதியமைச்சர் தலதா அத்துகோரள பிளவுபட்டுள்ள குழுவினரை இணக்கப்பாட்டுக்குக் கொண்டுவர முயற்சித்து அது பலனளிக்காமல் போகவே திருத்த சிபாரிசுகளுக்கான அங்கீகாரம் வழங்கும் பொறுப்பினை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் ஒப்படைத்தார்.
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இத்திருத்தங்கள் தொடர்பில் கலந்துரையாடி இறுதியாக ஜுலை மாதம் 11 ஆம் திகதி ‘பெண் காதி நியமனம்’ தவிர்ந்த ஏனைய சிபாரிசுகளுக்கு சில திருத்தங்களுடன் அங்கீகாரம் வழங்கினார்கள். இத்திருத்தங்களே அமைச்சரவையில் நேற்று அங்கீகரிக்கப்பட்டன. திருத்தங்களில் பின்வருவன உள்ளடங்கப்பட்டுள்ளன.
*முஸ்லிம் ஆண், பெண்களின் திருமண வயதெல்லை 18.
* திருமண பதிவும், நிக்காஹ்வும் கட்டாயம்.
*தலாக், குலா மற்றும் பஸ்ஹ் விவாகரத்தின் போது மனைவிக்கு நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும்.
*பலதார திருமணம் நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்படும். காதி நீதிபதியின் அனுமதியில்லாமல் நடைபெறும் திருமணம் வலிதற்றதாகும்.
*திருமணப் பதிவு புத்தகத்தில் ‘வொலி’ கையொப்பமிடுவதுடன் மணமகளும் கையொப்பமிட வேண்டும்.
*காதி நீதிபதியின் அனுமதியில்லாமல் செய்து கொள்ளும் பலதார மணம் தண்டனைக்குரிய குற்றமாகும்.
*கைக்கூலியை திருப்பி பெற்றுக் கொள்வது போன்று அசையாத சொத்துக்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.
* முஸ்லிம் விவாக, விவாகரத்து ஆலோசனை சபை மற்றும் காதிகள் சபையில் பெண்களின் பிரதிநிதித்துவம் உள்ளடக்கப்படும்.
*பெண்கள் விவாகப் பதிவாளர்களாக நியமிக்கப்படுவர்.
*காதி நீதிமன்றங்கள் தரமுயர்த்தப்படும்.
*காதி நீதிபதிகள் நிரந்தர முழுநேர காதிநீதிபதிகளாக நியமிக்கப்படுவர்.
*இஸ்லாமிய சட்ட அறிவுடைய ஆண் சட்டத்தரணிகளே காதிநீதிபதிகளாக நியமிக்கப்படுவர்.
*முஸ்லிம் விவாகத்தில் ஒரு தரப்பு அல்லது இரு தரப்பினரும் எந்த மத்ஹபையும் சார்ந்தவர்களாக இல்லாதவிடத்து அல்லது அவர்களது திருமணம் இருவேறுபட்ட மத்ஹபுகளுக்கு உட்பட்டதாக இருந்து அவர்கள் மத்ஹப் தொடர்பில் இணக்கப் பாடொன்றினை எட்டாதவிடத்து அவர்களது திருமணம் தொடர்பான அனைத்து விடயங்களும் இஸ்லாமிய சட்டவிதிகளுக்கு அமையவே கையாளப்படுமே தவிர எந்தவொரு மத்ஹபின் அடிப்படையிலும் கையாளப்படமாட்டாது.
vidivelli