சூடானில் இடைக்கால அரசாங்கத்தை அமைக்க உடன்படிக்கை கைச்சாத்து
சூடானின் பிரதான எதிர்க்கட்சி கூட்டணியும் ஆளும் இராணுவக் குழுவும், சிவிலியன் தலைமையிலான அரசாங்கத்தை மாறுவதற்கு வழி வகுக்கின்ற, ஓர் இறுதி அதிகாரப் பகிர்வு ஒப்பந்தத்தில், கடந்த சனிக்கிழமை (17.08.2019) முறையாக கையெழுத்திட்டுள்ளன.
வெகுஜன ஆர்ப்பாட்டங்களை அடுத்து நீண்டகால தலைவர் ஜனாதிபதி உமர் அல்-பஷீர் தூக்கியெறியப்பட்டதைத் தொடர்ந்து, தலைநகர் கார்ட்டூமில் சனிக்கிழமை கையெழுத்திடப்பட்ட இம்முக்கிய ஒப்பந்தமானது, நீண்ட கால பேச்சுவார்த்தைகளுக்கு பின்னரே சாத்தியமானது.
இடைக்கால இராணுவ கவுன்சிலின் (Transitional Military Council – TMC) துணைத் தலைவர் முஹம்மத் ஹம்தான் டகலோ மற்றும் சுதந்திரம் மற்றும் மாற்றத்திற்கான கூட்டணி (Alliance for Freedom and Change) என்ற பல்தரப்பு கூட்டமைப்பு குழுவை பிரதிநிதித்துவப்படுத்திய அஹ்மத் அல்-ரபி ஆகியோருக்கு இடையே இவ்வொப்பந்தம் கைச்சாத்தானது.
இந்நிகழ்வில் எத்தியோப்பிய பிரதமர் அபி அஹ்மத், தென் சூடான் ஜனாதிபதி சால்வா கீர் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த அரச தலைவர்கள், பிரதமர்கள் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
ஆபிரிக்க ஒன்றியம் மற்றும் எத்தியோப்பியா ஆகிய தரப்புக்களின் மத்தியஸ்தத்தில் இடம்பெற்ற இந்த ஒப்பந்தத்தை சூடானின் இரு தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.
இவ்வொப்பந்தம் என்ன மாதிரியானது?
இந்த அதிகாரப் பகிர்வு ஒப்பந்தமானது, இராணுவ மற்றும் சிவில் பிரதிநிதிகளைக் கொண்ட ஒன்றிணைந்த இறையாண்மை சபையை உருவாக்குகிறது. இக்குழு தேர்தல்கள் நடைபெறும் வரை மூன்று ஆண்டுகளுக்கு சற்று அதிகமான காலம் ஆட்சி செய்யும்.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஒரு இராணுவத் தலைவர் முதல் 21 மாதங்களுக்கு 11 உறுப்பினர்களைக் கொண்ட இச்சபைக்குத் தலைமை தாங்குவார். அடுத்த 18 மாதங்களுக்கு ஒரு சிவில் தலைவர் நியமிக்கப்படுவார். அத்தோடு, செயற்பாட்டாளர்கள் மற்றும் ஒரு சட்டமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஒரு அமைச்சரவையும் நிறுவப்படும்.
சூடானின் இறையாண்மை சபையில் இடைக்கால இராணுவ கவுன்சிலின் தலைவர் அப்துல் பத்தாஹ் அல்-புர்ஹான், துணைத் தலைவர் டகலோ மற்றும் லெப்டினன்ட் ஜெனரல் யாசிர் அல்-அட்டா ஆகியோர் அடங்குவர் என்று இடைக்கால இராணுவ சபையின் பேச்சாளர் ஸ்கை நியூஸ் அரேபியாவிடம் தெரிவித்துள்ளார்.
அதிகாரப் பகிர்வு ஒப்பந்தத்தின் கீழ், இறையாண்மை சபையில் இடைக்கால இராணுவ கவுன்சில் தேர்ந்தெடுக்கும் ஐந்து உறுப்பினர்களும், பிரதான எதிர்க்கட்சி கூட்டணியால் தேர்ந்தெடுக்கப்படும் ஐந்து உறுப்பினர்களும், இரு தரப்பினரும் ஒப்புக் கொண்ட ஒரு உறுப்பினரும் உள்ளடங்குவர்.
இச்சபையில் உள்ளடக்கப்படவுள்ள இராணுவத்தின் மீதமுள்ள இரண்டு உறுப்பினர்களும் பின்னர் பெயரிடப்படுவர் என்று ஷம்ஸுத்தீன் கபாஷி தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புப் படையினரால் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட ஒடுக்குமுறை குறித்து சுயாதீன விசாரணை மேற்கொள்வதற்கான குழுவொன்றை நிறுவுவதும் இந்த ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதத்தில், கார்ட்டூமில் உள்ள இராணுவத் தலைமையகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டக்காரர்களின் பிரதான போராட்ட தளத்திலிருந்து, அவர்களை வன்முறைத்தனமாக படையினர் சிதறடித்தனர். இதனால், பல பொது மக்கள் கொல்லப்பட்டனர்.
மாறுபட்ட எதிர்வினைகள்
இந்த ஒப்பந்தம் குறித்து மாறுபட்ட எதிர்வினைகள் இருப்பதாக கார்ட்டூமில் இருந்து அறிக்கையிடும் அல்ஜசீராவின் ஹிபா மோர்கன் தெரிவித்துள்ளார்.
“ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட இடத்தில் மக்கள் உற்சாகமாக உள்ளனர், இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு முன்பே அவர்கள் கோஷமிட்டுக் கொண்டிருந்தனர். இறுதியில் ஒரு சிவில் அரசாங்கம் தமக்கு கிடைத்திருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்,” என்று ஹிபா மோர்கன் தெரிவிக்கிறார்.
“ஆனால், தெருக்களில் மக்கள் எச்சரிக்கையுடனான நம்பிக்கையுடன் இருப்பதாகக் கூறுகிறார்கள். இராணுவக் கவுன்சில் ஒப்பந்தத்தின் சில உட்பிரிவுகளை அமுல்படுத்துவதை தாமதப்படுத்தலாம் என்றும், எனவே அவர்கள் நீண்ட காலம் ஆட்சியைப் பிடிப்பார்கள், அல்லது பொதுமக்களை அதிகாரத்திலிருந்து வெளியேற்றுவதற்கான ஒரு வழியைக் கண்டுபிடிப்பார்கள் என்றும், தேர்தல்கள் நடைபெறும் வரை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை தொடர்ந்து வைத்திருப்பார்கள் என்றும் மக்கள் கவலைப்படுகிறார்கள்.” என்று அவர் மேலும் தெரிவிக்கிறார்.
இதற்கிடையில், கொண்டாட்டங்களில் பங்கேற்க சூடானின் மாகாணங்களிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் புகையிரதங்களில் வந்துள்ளனர். கார்ட்டூமின் முக்கிய பூங்காக்களில் பெரிய ஒன்றுகூடல்களும் இடம்பெற்றன.
“சூடானால் இப்போது முன்னேற முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். எம் நாட்டைப் பற்றி நாம் பெருமைப்பட விரும்புகிறோம்” என்று ஸைதா கலீஃபா கூறுகிறார். கடந்த ஆண்டு டிசம்பரில் போராட்டங்கள் தொடங்கிய நகரமான அட்பாராவிலிருந்து இரவு முழுவதும் புகையிரதத்தில் பயணம் செய்து வந்தடைந்துள்ளார் இவர்.
“துப்பாக்கிகள் இப்போது அமைதியாக இருக்க வேண்டும். அமைதியையும் சுதந்திரத்தையும் பெற, இக்குழப்பத்திலிருந்து நாட்டை நாம் விடுவிக்க வேண்டும்.” என்று அவர் கூறுகிறார்.
பட்டப் படிப்புகளுக்கான தோஹா நிறுவனத்தின் பேராசிரியர் அப்துல் வஹ்ஹாப் அல்எஃபென்தி, இந்த ஒப்பந்தத்தை “நேர்மறையான செய்தி” என்று குறிப்பிட்டுள்ளார். இது “கொண்டாடப்பட வேண்டும்”. ஆனால் சிவில் அரசாங்கம், எதிர்காலத்தில் பெரிய சவால்களை எதிர்கொள்ளும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
“மக்கள் இந்த தருணத்திற்காக நீண்ட காலமாக காத்திருக்கிறார்கள். மறுநாள் காலை, பிரதமர் பதவியில் அமரும்போது, விடயங்கள் மாற்றம் கண்டுவிடும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.” என்று அப்துல் வஹ்ஹாப் அல்எஃபென்தி தெரிவித்துள்ளார்.
பல வாரங்களாக பதற்றமான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, சூடானின் இடைக்கால இராணுவ கவுன்சில் மற்றும் எதிர்தரப்புத் தலைவர்கள் சர்வதேச அழுத்தத்தின் காரணமாகவும், மற்றும் அரசியல் நெருக்கடி உள்நாட்டுப் போரைத் தூண்டக்கூடும் என்ற கவலை காரணமாகவும், இந்த மாத தொடக்கத்தில் ஒரு பூர்வாங்க உடன்பாட்டுக்கு வந்தனர்.
ஆகஸ்ட் 4 ஆம் திகதி எட்டப்பட்ட அரசியலமைப்பு அறிவிப்பு ஒப்பந்தமானது, 30 ஆண்டுகள் ஆட்சியிலிருந்த பின்னர் இவ்வருட ஏப்ரல் மாதம் பதவியிலிருந்து நீக்கப்பட்ட, உமர் அல்பஷீருக்கு எதிரான 08 மாத கால ஆர்ப்பாட்ட எழுச்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் இதை தங்கள் “புரட்சி”யின் வெற்றியாகக் கொண்டாடுகின்றனர். அதேவேளை, உள்நாட்டுப் போரைத் தவிர்த்ததற்கான பாராட்டை இராணுவ ஜெனரல்கள் பெறுகின்றனர்.
தமிழாக்கம்: அஷ்கர் தஸ்லீம்
நன்றி: அல்ஜஸீரா
vidivelli