லசந்த, வசீம் கொலை உள்ளிட்ட 6 முக்கிய சம்பவங்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குக
சட்டமா அதிபரின் கடித்ததையடுத்து புலனாய்வுப் பிரிவிற்கு பதில் பொலிஸ்மா அதிபர் உத்தரவு
லசந்த விக்ரமதுங்க படுகொலை, வசீம் தாஜுதீன் கொலை உள்ளிட்ட 6 சம்பவங்கள் தொடர்பில் முழுமையான விசாரணை அறிக்கையினை குற்றப்புலனாய்வு பிரிவிடம் பதில் பொலிஸ்மா அதிபர் கோரியுள்ளார்.
மேலும் அந்த அறிக்கைகளில் கட்டாயம் இடம்பெற வேண்டிய 11 விடயங்கள் குறித்தும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
இந்த அறிவித்தல் நேற்று ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர தெரிவித்தார். குற்றப் புலனாய்வுப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரதான ஐந்து வழக்கு விசாரணைகள் தொடர்பில் உடனடியாக விசாரணை அறிக்கை சமர்பிக்குமாறு பொலிஸ் தலைமையகம் குற்றப்புலனாய்விற்கு அறிவித்தல் விடுத்துள்ளது.
சட்டமா அதிபர் தம்புல டி லிவேராவினால் கடந்த வியாழக்கிழமை பதில் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்கிரமரத்னவிற்கு அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பில் அவதானம் செலுத்திய பதில் பொலிஸ் மா அதிபர் இந்த அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் சன்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை , றகர் வீரர் வசீம் தாஜுதீனின் கொலை, ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தல், மூதூரில் தொண்டு நிறுவன ஊழியர்கள் 17 பேர் கொலை மற்றும் 11 மாணவர்களை கடத்திச் சென்று காணாமலாக்கியமை தொடர்பான விசாரணை குறித்த அறிக்கைகளையே சட்டமாதிபர் பதில் பொலிஸ்மா அதிபரிடம் கோரியிருந்தார்.
இந்நிலையில் இந்த ஐந்து வழக்கு விசாரணைகளுடன் மேலும் ஒரு வழக்கான ஊடகவியலாளர் பிரகதீத் எக்னெலிகொட காணாமலாக்கப்பட்டமை தொடர்பிலும் குற்றப் புலனாய்வு பிரிவின் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது.
அதற்கமைய இந்த 6 சம்பவங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் குறித்து தனித்தனியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு பதில் பொலிஸ்மாதிபர் குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு அறிவித்துள்ளார். அத்துடன் விசாரணைகள் தொடர்பில் தகவல்களை தமக்கு அறிக்கைப்படுத்தும் போது 11 விடயங்கள் கட்டயாமாக உள்ளடக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
அதாவது, விசாரணைகளை ஆரம்பிக்க ஆலோசனை எப்போது கிடைக்கப் பெற்றது, விசாரணைகளை ஆரம்பித்த தினம், விசாரணைகளின் தற்போதைய நிலை, விசாரணைகளின் போது தெரியவந்த தகவல்கள் ,சந்தேக நபர்கள் மற்றும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளவர்களின் விபரம் மற்றும் அவர்களின் சொத்து என்பன அறிக்கையில் காணப்பட வேண்டும்.
மேலும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய தினம், நீதிமன்றம் மற்றும் வழக்கு இலக்கம், விசாரணைகள் தொடர்பில் நீதிவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள ஆணைகள் மற்றும் அவை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் தற்போதைய நிலை, சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து சந்தேக நபர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளார்களா? அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளார்களா அல்லது மேலும் சந்தேக நபர்கள் கைது செய்யப்படவோ அடையாளம் காணப்படவோ உள்ளனரா?
குறித்த சந்தேக நபருக்கு எதிராக வழக்கு விசாரணைகளை மேற்கொள்ள போதுமனளவு சாட்சியங்கள் இருக்கின்றதா? தொடர்ந்தும் மேற்கொள்ள வேண்டிய சாட்சியங்கள் மற்றும் அவற்றின் மீதான விசாரணைகள் இருந்தால் அவை என்ன? விசாரணைகள் தொடர்பில் சட்டமா அதிபருக்கு அறிக்கை சமர்ப்பித்து ஆலோசனை பெறப்பட்டுள்ளதா? அவ்வாறெனில் அந்த ஆலோசனைகளின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? இந்த விசாரணைகள் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றால் அது தொடர்பில் சாட்சி விபரங்கள் மற்றும், சட்டமா அதிபரினால் ஆலோசனை வழங்கப்படாதிருந்தால் அந்த விடயம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெளிவுபடுத்தப்பட்டிருக்க வேண்டும்.
விசாரணைகள் இது வரைக்கும் நிறைவு பெறாமல் இருக்குமாயின் அதற்கான காரணம் என்ன? விசாரணைகளை நிறைவு செய்வதற்காக எதிர்பார்த்திருக்கும் கால எல்லை யாது? என்பன தொடர்பிலும் முழுமையான விபரங்கள் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும் என பதில் பொலிஸ்மா அதிபர் குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிவுறுத்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
vidvelli