ஆப்கானிஸ்தானின் தலைநகரில் திருமண நிகழ்வொன்றினை இலக்கு வைத்து நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் குறைந்தது 63 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு சுமார் 200 பேர் வரை காயமடைந்துள்ளனர். இவ்வாண்டில் காபூலில் மேற்கொள்ளப்பட்ட மோசமான தாக்குதல் இதுவாகும்.
சனிக்கிழமை மாலை மேற்கு காபூலில் அமைந்துள்ள துபாய் சிட்டி திருமண மண்டபத்தில் திருமண நிகழ்வு இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது ஆண்கள் பகுதி முழுமையாக நிறைந்திருந்த வேளையில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களுள் பெண்களும் சிறுவர்களும் அடங்குவதாக உள்துறை அமைச்சின் பேச்சாளர் நஸ்ரத் ரஹீமி தெரிவித்தார்.
அமெரிக்க ஆதரவுடனான ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துடன் பாதுகாப்பு மற்றும் சமாதானப் பேச்சுக்கள் தொடர்பில் தலிபான் அமைப்புகாட்டும் அர்ப்பணிப்புக்குப் பகரமாக அமெரிக்கப் படையினரை வாபஸ் பெற்றுக்கொள்வது தொடர்பில் தலிபான் அமைப்பும் அமெரிக்காவும் பேச்சுவார்த்தை நடத்த முயன்றுவரும் நிலையில் இத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இத் தாக்குதலுக்கும் தமக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என மறுத்துள்ள தலிபான் அமைப்பு இத் தாக்குதல் நிராகரிக்கப்பட வேண்டியதும் நியாயப்படுத்த முடியாததுமாகும் எனத் தெரிவித்துள்ளது.
இத் தாக்குதலை வன்மையாகக் கண்டித்த ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி பயங்கரவாதிகளுக்கு வழியேற்படுத்திக் கொடுத்த தலிபான்கள் குற்றச்சாட்டிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
மேடைக்கு அருகிலிருந்த இசைக் கலைஞர்களுக்கு அண்மையில் நின்றிருந்த அனைத்து இளைஞர்களும் சிறுவர்களும் அதேபோன்று அங்கு காணப்பட்ட அனைவரும் கொல்லப்பட்டதாக சம்பவத்தை நேரில் கண்ட குல் மொஹமட் தெரிவித்தார்.
தாக்குதல் நடந்ததன் பின்னர் மண்டபத்தினுள் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் இரத்தம் தோய்ந்த உடல்கள் தரையில் விழுந்திருந்ததோடு சதைத் துண்டங்கள் கிழிந்த ஆடைகள் தொப்பிகள், பாதணிகள் மற்றும் தண்ணீர் போத்தல்கள் என்பனவும் சிதறிக் காணப்பட்டன.
மத்திய காபூலில் அமைந்துள்ள அவசர வைத்தியசாலையில் காயமடைந்தோருக்கு சிகிச்சையளிக்கப்பட்டுவரும் நிலையில் டசின்கணக்கானோர் தமது உறவுகளின் நிலைமை தொடர்பில் அறிந்துகொள்ள காத்துக் கொண்டிருந்தனர். குண்டு வெடிப்பில் சிக்குண்டு உயிரிழந்தவர்களின் உடல்களும், காயமடைந்தோரும் இரவு வேளையில் இங்கு கொண்டுவந்து சேர்க்கப்பட்டனர்.
எம்.ஐ.அப்துல் நஸார்
vidivelli