ஊழல் மோசடி ஆட்சியா? தேசிய ஐக்கிய ஆட்சியா?
மக்களே தீர்மானிக்க வேண்டும் என்கிறார் 'தேசிய மக்கள் சக்தி' யின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக
ஊழல், மோசடிகள் நிறைந்த காலாவதியான ஆட்சியை மீண்டும் உருவாக்க வேண்டுமா அல்லது சகல மக்களையும் ஒன்றிணைத்து தேசிய ஐக்கியத்துடன் கூடிய புதிய ஆட்சியை உருவாக்க வேண்டுமா என்பதை தீர்மானிக்கும் முக்கியமான சூழலில் மக்கள் உள்ளனர். இப்போது மக்களே தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும் எம்மை நம்பி எம்மிடம் ஆட்சியை ஒப்படைக்கும் மக்களை ஒருபோதும் ஏமாற்றமாட்டோம் எனவும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் மக்கள் கூட்டம் நேற்று காலிமுகத்திடலில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஜே.வி.பி. யின் தலைவர் அனுரகுமார திசாநாயக உரையாற்றும் போது இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
தேசிய மக்கள் சக்தியின் சார்பில் என்னை தலைமையேற்க தெரிவு செய்தமைக்காக முதலில் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். அதுமட்டும் அல்லாது என் மீதான நம்பிக்கையை வைத்து என்னை தெரிவுசெய்தமைக்கு ஏற்றால் போல் தேசிய மக்கள் சக்திக்கும் இந்த நாட்டு மக்களுக்கும் எப்போதும் நன்றியுடையவனாகவும், நம்பிக்கையை காப்பாற்றும் நபராகவும் இருப்பேன் என உறுதிமொழி வழங்குகின்றேன்.
நாம் 30 ஆண்டுகள் அரசியல் நீரோட்டத்தில் செயற்பட்டு வருகின்றோம். சவால்கள், அழுத்தங்கள், தோல்விகள், வெற்றிகள், மகிழ்ச்சி என அனைத்தையும் நாம் பார்த்துள்ளோம். சாதாரண அடிமட்ட மக்கள் முதல்கொண்டு உயர்மட்ட சமூகம் வரையில் மக்களின் உண்மையான மனநிலை என்ன என்பதை அறிந்துகொண்டுள்ளோம். இந்த உணர்வுகளின் மூலம் வெற்றியின் எல்லைக்கே செல்வோம். இந்த ஜனாதிபதி தேர்தல் மிகவும் முக்கியமான ஒரு கட்டத்தில் உள்ளது.
இதில் இரண்டு தெரிவுகள் மக்களுக்கு உள்ளன. ஒன்று பழைய மோசமான ஊழல்வாத ஆட்சியை கொண்டு செல்லும் வழி. மற்றையது மக்கள் மகிழ்ச்சியாக, ஒற்றுமையாக வாழக்கூடிய வழியும் உள்ளது. காலாவதியான மோசமான ஆட்சி வேண்டுமா அல்லது மக்கள் நம்பிக்கையுடன் கட்டியெழுப்பக்கூடிய வழி வேண்டுமா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டிய முக்கிய சந்தியில் உள்ளீர்கள்.
இந்த நாட்டினை எவ்வாறு கட்டியெழுப்ப முடியும் என்ற கேள்வி அனைவருக்கும் உள்ளது. முதலில் மோசமான அரசியலை இல்லாது செய்ய வேண்டும். நாட்டினை கட்டியெழுப்பும் நோக்கம் கொண்ட தொழிலாளர், அதனை ஏற்றுகொள்ளும் மக்கள் கூட்டத்தை கொண்டே முன்னெடுக்க வேண்டும். இதில் முதல் கட்டம் எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும், இந்த நாட்டில் அரசியல் ஊழல், மோசடி, கப்பம், அடக்குமுறை என்பவற்றை கையாளும் நபர்களின் கைகளில் இன்று அரசியல் அதிகாரம் உள்ளது. இவற்றை மாற்றியமைக்க வேண்டும். இந்த நாசகார ஊழல் மிக்க அரசியலுக்கு அப்பால் தூய்மையான உண்மையான மக்கள் நல அரசியலை உருவாக்குவோம் என்ற வாக்குறுதியை இதில் நாம் முன்வைக்கின்றோம்.
இந்த நாட்டின் வளங்கள் அனைத்துமே கைப்பற்றப்பட்டுள்ளன. புதிய பொருளாதார பயணம் ஒன்றினை உருவாக்க வேண்டும். பொருளாதார கொள்கையில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும். அதற்கான முழுமையான பொறுப்பை நாம் கையில் எடுப்போம். வியர்வை சிந்தும் தொழிலாளர் சமூகத்துக்கு பணம் மட்டும் அல்ல. அவர்களின் வாழ்க்கையை, அவர்களுக்கான கௌரவத்தை கொடுக்க வேண்டும். ஆகவே அவர்களுக்கான சமூக சூழலை உருவாக்கிக் கொள்ளக்கூடிய சூழலை உருவாக்கிக்கொடுப்போம்.
சமூகமாக இன்று நாடு பிளவுபட்டுள்ளது. சமூகங்களை பிரித்து வைத்துள்ளனர். பிளவுபட்ட சமூகத்தை கொண்டு நாட்டினை முன்னோக்கி கொண்டுசெல்ல முடியாது. ஜாதி, மதம், இன பிளவுகளில் இருந்து விடுபட்டு ஐக்கிய நாட்டினை உருவாக்கும் சூழலை நாம் உருவாக்கிக் கொடுப்போம். இன்று மக்கள் பாதுகாப்பு குறித்த அச்சமும், சந்தேகமும் உருவாகியுள்ளன. இது ஒரு சமூகம் மீது இன்னொரு சமூகம் கோபத்துடனும், சந்தேகத்துடனும் பார்க்கும் நேரத்திலேயே உருவாகும். அவ்வாறான நிலையில் இருந்து விடுபட வேண்டும். பயங்கரவாதம் தீவிரவாதம் என்பவற்றுக்கு அப்பால் சமூகத்தின் சகல கலாசார, மொழி உரிமைகளை பாதுகாக்க சமூக ஒற்றுமையை சகலருக்கும் கொடுப்பதன் மூலம் மட்டுமே தீர்வை பெற்றுக்கொள்ள முடியும். தேசிய ஒற்றுமையை உருவாக்கும் சகல நடவடிக்கையையும் முன்னெடுப்போம். அத்துடன் தனிநபர் சுதந்திரம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். அதனை பெற்றுக் கொடுக்க வேண்டும்.
நாட்டின் சூழலை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இயற்கை அழிவுகள் ஒருபுறம் என்றால் இன்னொரு புறம் உலகத்தின் குப்பைகளை கொட்டும் குப்பைமேடாகும், விஷம் கலந்த உணவுகளும் உருவாகும் மோசமான நாடாக இலங்கையை அரசியல் வாதிகள் மாற்றியுள்ளனர். இதில் இருந்து விடுபட வேண்டும் என்றால் முதலில் தூய்மையான கொள்கை ஒன்றினை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
எமது எதிர்கால சந்ததியினருக்கான உறுதியான நாட்டினையும் எமது இளம் சமுதாயத்தினருக்கு நிருவாகத்தை கையில் கொடுக்க வேண்டும். எமது நாட்டில் அப்பாவி மக்கள் வேதனையுடன், வருத்தத்துடனும் வாழ்கின்றனர். ஆனால் இந்த வேதனைகளால் மாத்திரம் மாற்றத்தை உருவாக்கிவிட முடியாது. அதனையும் தாண்டி உறுதியான மன நிலையுடன் மக்கள் கூட்டத்தை உருவாக்க வேண்டும். அதற்கான நம்பிக்கையை இன்று காலிமுகத்திடலில் கூடியுள்ள மக்கள் கூட்டத்தின் மூலமாக எமக்கு கூறியுள்ளனர். ஆகவே இந்த நாட்டினை மாற்றியமைக்க வேண்டும் என நினைக்கும் போராடும் சகல மக்களும் எம்முடன் இணைந்து போராட வாருங்கள். எம்மை நம்பி நீங்கள் எமக்கு கொடுக்கும் ஆதரவை என்றும் நாம் மாற்றியமைக்க மாட்டோம். எம்மை நம்பும் மக்களை ஒருபோதும் ஏமாற்றமாட்டோம். நம் அனைவரதும் நோக்கம் ஒன்றாக உள்ளது. பொதுமக்களின் நோக்கமும் எமது நோக்கமும் ஒன்றாகவே உள்ளது. இந்த நாட்டினை உலகத்தில் சிறந்த நாடாக மாற்றியமைக்க வேண்டும் என்ற பிரதான நோக்கமாகவே நாம் அனைவரும் போராடி வருகின்றோம். ஆகவே அதற்காக நாம் அனைவரும் போராடுவோம்.
இதுவரை காலமாக ஏனைய கட்சிகளை ஆதரித்த மக்கள் அனைருக்கும் நாம் இப்போது அழைப்பு விடுக்கின்றோம். அனைவரும் எம்முடன் இணைந்து புதிய பயணத்தை ஆரம்பிப்போம். போராட்டத்தை இங்கிருந்து ஆரம்பிப்போம். அதற்கான இன மத பேதமின்றி அனைவரும் ஒன்றிணைவோம். இனியும் மக்கள் மௌனிகளாக இருந்தால் இந்த நாட்டின் பாதையை மாற்றியமைக்க முடியாது. ஆகவே மக்களுக்கு இருக்கும் மிகவும் முக்கியமான சந்தர்ப்பம் இது. இதில் மக்கள் சகலரும் சரியான தீர்மானத்தை எடுத்து எம்முடன் கைகோர்க்க அழைப்புவிடுவதாக அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
ஆர்.யசி, இ. ஹஷான்
vidivelli