இலங்கையின் அரசியல் களம் நாளுக்கு நாள் சூடாகிக் கொண்டிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தல், போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த கதைகளும், விமர்சனங்களும்தான் இலங்கையின் அரசியலில் பேசு பொருளாகியுள்ளது. இதே வேளை டிசம்பர் 07ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்குரிய ஏற்பாடுகளை தேர்தல் திணைக்களம் மேற்கொண்டுள்ளதென்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஆயினும், ஜனாதிபதித் தேர்தல்தான் முதலில் நடைபெறும் என்று சொல்லுவதற்கில்லை என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஆதலால், ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கும் வாய்ப்புக்கள் உள்ளன. ஆயினும், அரசியல் கட்சிகள் ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்வதிலேயே கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றன. ஜனாதிபதித் தேர்தலை எந்தவொரு தேசியக் கட்சியினாலும் தனித்து நின்று வெல்ல முடியாதென்பதனை தேசிய கட்சிகள் உணர்ந்துள்ளன. இதனால்தான், சிறுபான்மையினரின் வாக்குகளின்றி ஜனாதிபதித் தேர்தலை வெற்றிகொள்ள முடியுமென்று வாய்க்கும், மூளைக்கும் தொடர்பின்றி கருத்துக்களை வெளியிட்டவர்கள் கூட சிறுபான்மையினரின் ஆதரவை வேண்டியுள்ளார்கள். தாங்கள் அவ்வாறு தெரிவிக்கவில்லை என்றும் கூறிக் கொண்டிருக்கின்றார்கள். ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரை சிறுபான்மையினர்தான் ஜனாதிபதியை தீர்மானிக்கப் போகின்றார்கள். அதனால், சிறுபான்மையினரும், அவர்கள் சார்ந்த கட்சிகளும் எடுக்கும் தீர்மானம் முக்கியமாகும்.
ஜனாதிபதியின் கடமை
ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுகின்றவருக்கு பல கடமைகள் உள்ளன. அவற்றுள் நாட்டு மக்களை சமமாக நடத்த வேண்டும் என்பது முக்கியமாகும். நாட்டின் தலைவர்கள் எல்லோரும் இந்நாட்டின் பிரஜைகள் என்று நடந்து கொள்ளாது, பௌத்த சிங்கள மக்களின் தலைவராகவும், அவர்களின் நலன்களை பேணுகின்ற ஒருவராகவுமே நடந்து வந்துள்ளார்கள். இதனால்தான் இலங்கையில் இனப் பிரச்சினையும், முரண்பாடுகளும் ஏற்பட்டன. பொதுவாக இலங்கையை ஆட்சி செய்த எல்லா ஜனாதிபதிகளும் இவ்வாறுதான் செயற்பட்டுள்ளார்கள்.
மஹிந்தராஜபக் ஷவின் ஆட்சியிலும், மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஆட்சியிலும் பௌத்த இனவாதிகளினால் முஸ்லிம்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மையினரின் வாக்குகளினால் வெற்றியை தீர்மானித்துக் கொண்ட மைத்திரிபால சிறிசேன ஒரு வித்தியாசமான ஜனாதிபதியாக இருப்பார். சிறுபான்மையினரின் பிரச்சினைகளை தீர்ப்பார் பாதுகாப்பார் என்றெல்லாம் நம்பி வாக்களித்தார்கள். அவர் வெற்றி பெற்றதும் பாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்கக் கூடிய 19ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டு வருவதற்கும் ஆதரவு வழங்கினார். இதன் மூலமாக மைத்திரிபால சிறிசேன வித்தியாசமானவர். எல்லா இனங்களையும் சமமாக நடத்துவார் என்ற நம்பிக்கை மேலும் அதிகரித்தது. என்றாலும், பின்நாட்களில் அவரின் நடவடிக்கைகள் சிறுபான்மையினரின் நம்பிக்கைக்கு மாற்றமாகவே இருந்தன. தானும் இதற்கு முன்னர் இருந்த ஜனாதிபதிகளைப் போன்றவர் என்று காட்டினார். இவரது ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள் அதிகமாகும். இதனால் நாட்டின் பொருளாதாரம் கீழ் நிலையை அடைந்தது.
ஆதலால், நாட்டை சிறப்பாக வழிநடத்தக் கூடியவராகவும், சிறுபான்மையினர் என்ற பாகுபாடு காட்டாது எல்லோரும் இந்நாட்டின் பிரஜைகள். நான் அவர்களின் தலைவன் என்று பொறுப்புடன் நடந்து, தனது நடத்தைகள் மூலமாக நாட்டில் அமைதியையும், அரசியல் உறுதிப்பாட்டையும், சர்வதேசத்தின் ஆதரவையும் பெற்றுக் கொள்ளக் கூடிய ஒருவரையே ஜனாதிபதியாகத் தெரிவு செய்ய வேண்டும்.
கோத்தாபய ராஜபக் ஷ
எந்த அரசியல் கட்சியில் யார் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவார் என்ற கேள்விகள் இருந்தாலும், பொதுஜன முன்னணியின் (மொட்டு) வேட்பாளராக கோத்தாபய ராஜபக் ஷவின் பெயர்தான் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டதனைப் போன்று நடந்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், பொதுஜன முன்னணிக்கும் இடையே உடன்படிக்கைகள் ஏற்பட்டு மைத்திரிபால சிறிசேனவின் பெயர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டன. மைத்திரிபால சிறிசேனவும் மிகுந்த நம்பிக்கையில் இருந்தார். ஆனால், அவரின் எண்ணம் கைகூடவில்லை. அவர் ஏமாந்துள்ளார்.
மஹிந்த ராஜபக் ஷ தனது சகோதரர் கோத்தாபய ராஜபக் ஷவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தவுடன், கோத்தாபய குறித்து பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். குறிப்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துக் கொண்டிருக்கின்றார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ், ஊடகவியலாளர்களான சிவராம், லசந்த விக்கிரமதுங்க மற்றும் விளையாட்டு வீரர் தாஜுதீன் படுகொலை, எக்னலிகொடவை கடத்தி காணாமலாக்கியமை, ஊடகவியலாளர் கீத் நொயர் மற்றும் பத்திரிகை ஆசிரியர் உப்பாலி தென்னகோனை தாக்கியமை, சிரச மற்றும் உதயன் ஆகிய ஊடக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தியமை, குடிப்பதற்குத் தூயநீர் கோரிய ரத்துபஸ்வெல மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியமை, வெலிக்கடை சிறைக் கைதிகளை கொலை செய்தமை, வெள்ளை வேன் கொண்டு ஆட்களை கடத்தியமை, முன்னாள் பிரதம நீதியரசரை பதவி விலக்கியமை என்பன ராஜபக் ஷவின் ஆட்சிக் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட மிகக் கொடூரமானதும் பாரதூரமானதுமான குற்றச் செயல்களாகும். இதற்காக பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான கோத்தாபய ராஜபக் ஷ நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டுமென்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
மேலும் பிரதேச சபை தலைவரொருவரால் பெண் ஒருவர் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டமை, வெளிநாட்டு சுற்றுலாப் பயணியொருவர் பிரதேச சபைத் தலைவர் ஒருவரால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டமை, பரம்பரை பரம்பரையாக ஒரே இடத்தில் வாழும் சேரிக் குடியிருப்பாளர்களைப் பலவந்தமாக அவர்களின் வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றியமை போன்ற சம்பவங்கள் தொடர்பில் பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மன்னிப்பு கோருவாரா? என்றும் பிரதமர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ரணால ஜல்தர பிரதேசத்தில் ‘கிறீன் வெலி ரெசிடென்சி’ எனும் நடுத்தர வர்க்கத்தினருக்குரிய வீடமைப்புத் திட்டத்தை திறந்து வைத்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றுகையிலேயே மேற்படி கேள்வியை எழுப்பியுள்ளார். வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார விவகார அமைச்சர் சஜித் பிரேமதாசவின் அழைப்பின் பேரிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தாலும் 2015ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமைகளில் உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாக மேற்படி குற்றச்சாட்டுக்களை முன்வைத்தது. அவற்றிக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்போம் என்று தெரிவித்தார்கள். ஒரு சில ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணைகளும் நடைபெற்றன. அத்தகைய குற்றச்சாட்டுக்களை புரிந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படுகின்றவர்களை பாதுகாத்துக் கொள்ளும் நடவடிக்கைகளை நல்லாட்சி அரசாங்கம் மேற்கொண்டது. குறிப்பாக ரணில் விக்கிரமசிங்க மஹிந்த ராஜபக் ஷ சகோதரர்கள் தொடர்பாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக நீதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கு பதிலாக அவர்கள் மூலமாக எவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உடைக்கலாமென்றே தந்திரங்களைப் பண்ணினார். ஆதில் வெற்றியும் கண்டார். ஆனால், அவர் நினைத்தது போன்று ஐக்கிய தேசிய கட்சிக்கு சிங்கள மக்களிடம் அதிக செல்வாக்கு ஏற்படவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பிரிந்தவர்களினால் உருவாக்கப்பட பொதுஜன முன்னணிதான் சிங்களவர்களின் அதிக செல்வாக்கைப் பெற்றுள்ளது.
மேற்படி குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஆட்சியை கைப்பற்றிக் கொண்டவர்கள், அக்குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக தகுந்த நடவடிக்கைகளை எடுக்காது இருந்துவிட்டு, இப்போது அக்குற்றச்சாட்டுக்களுக்கு கோத்தாபய ராஜபக் ஷ மன்னிப்புக் கேட்பாரா என்று கேள்வி எழுப்புவது நாட்டு மக்களை ஏமாற்றும் ஒரு நடவடிக்கையாகும்.
இதேவேளை, மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சியில் கோத்தாபய ராஜபக் ஷ பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்தார். ஆயினும், அவர் பாதுகாப்பு அமைச்சர் போன்றே செயற்பட்டார். சிறுபான்மையினருக்கு எதிராக, குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராக முஸ்லிம்களின் மீது பௌத்த இனவாதிகள் தாக்கிய போது அதற்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கவில்லை. புலிகளுடன் நடைபெற்ற யுத்தத்தில் இராணுவம் வெற்றி பெறுவதற்கு கோத்தாபய ராஜபக் ஷவும் ஒரு காரணமென்று இன்று வரைக்கும் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். இத்தகைய வலிமை கொண்ட அவரால் முஸ்லிம்களையும், பள்ளிவாசல்களையும் தாக்கிய பௌத்த இனவாதிகளைக் கண்டு பிடிக்க முடியவில்லை என்று சொல்வதனை விடவும், அவர்களை கைது செய்யாது இருந்தார்கள் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.
அதற்கு முன்னதாக நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்களினால் தமிழர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டார்கள். இது விடயத்திலும் கோத்தாபய ராஜபக் ஷவுக்கு தொடர்புள்ளதாக தமிழ் அரசியல்வாதிகள் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். இதனால், தமிழ், முஸ்லிம் மக்களிடையே கோத்தாபய ராஜபக் ஷ குறித்து அச்சம் இருக்கின்றது. இந்த அச்சம் இல்லாமல் செய்யப்படுவதற்கு பொது ஜன முன்னணி என்ன உபாயத்தைக் கையாளப் போகின்றது என்பதிலேயே சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் வீதம் அமையவுள்ளது.
இன்றைய ஆட்சி
மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சியில் மாத்திரம்தான் சிறுபான்மையினர் பாதிக்கப்பட்டார்கள் என்று சொல்லுவதற்கில்லை. மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக் காலத்தை விடவும் இன்றைய அரசாங்கத்தின் காலத்தில்தான் குறிப்பாக முஸ்லிம்கள் அதிகம் பாதிக்கப்பட்டார்கள்.
மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சியில் பௌத்த இனவாதிகளினால் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டதனைப் போன்று இன்றைய ஆட்சியிலும் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன. தாக்கியவர்கள் இனங் கண்டு கைது செய்யப்படவில்லை. மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சியில் ஹலால் விவகாரப் பிரச்சினை ஏற்பட்டதனைப் போன்று, முஸ்லிம் பெண்கள் தமது மதவிழுமியங்களுக்கு அமைவாக முகத்தை மறைப்பதற்கு இன்றைய ஆட்சியில் தடை ஏற்பட்டது. முஸ்லிம்களின் ஷரீஆ சட்டத்தில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்பது தீவிரப்படுத்தப்பட்டது. மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் களுத்துறை மாவட்டத்தில் பேருவளை, தர்கநகர், அளுத்கம பிரதேசங்களில் முஸ்லிம்களின் மீது பௌத்த இனவாதிகள் குழுக்கள், குழுக்களாக வந்து தாக்கினார்கள். சொத்துக்கள் அழிக்கப்பட்டன. உயிரிழப்புக்கள் ஏற்பட்டன.
இதேபோன்று இன்றைய ஆட்சியில் கிந்தோட்டை, அம்பாறை, திகன, கண்டி, குருநாகல், மினுவாங்கொடை, குளியாப்பிட்டி, கினியம உட்பட்ட பல இடங்களில் முஸ்லிம்களை பௌத்த இனவாதிகள் தாக்கினார்கள். முஸ்லிம்களின் சொத்துக்களுக்கு அழிவுகளை ஏற்படுத்தினார்கள். உயிரிழப்பும் ஏற்பட்டது. பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன. இத்தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் என்று ஒரு சிலர் கைது செய்யப்பட்டாலும், அவர்களை விரைவாக விடுதலையும் செய்தார்கள்.
ஆதலால், மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சி மோசமானது, இன்றைய ஆட்சி நல்லது என்று சொல்லுவதற்கில்லை. யார் ஆட்சி செய்தாலும், அவர் ஒரு பௌத்த சிங்களவராகவே இருப்பார். அவர் பௌத்த சிங்கள மக்களை சட்டத்திற்கு மாற்றமாகவேனும் திருப்திப்படுத்துவார். சிறுபான்மையினரை சட்ட ரீதியாகக் கூட திருப்திப்படுத்துவதற்கு நாட்டம் கொள்ளமாட்டார்கள். தேர்தல் காலங்களில் மாத்திரமே சிறுபான்மையினரைப் பற்றி பேசுவார்கள். அருள்பாலிக்க வந்த தேவர்கள் போல் காட்டிக் கொள்வார்கள். ஆட்சியை பிடித்ததும் அசுரர்களாக மாறிவிடுவார்கள். ஆகவே, அவர் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு தீங்குகள் ஏற்படும், இவர் ஆட்சிக்கு வந்தால் தீங்குகள் ஏற்படாதென்று சத்தியம் செய்ய முடியாது. ஆனால், யார் ஆட்சிக்கு வந்தால் தமிழ், முஸ்லிம்களுக்கு குறைந்த அநியாயம் நடைபெறும் என்றே பார்க்க வேண்டியதொரு துர்ப்பாக்கியத்தில் சிறுபான்மையினர் உள்ளனர்.
4/21இற்கு பின்னர்
4/21இற்கு பின்னர் முஸ்லிம்களின் மீது பல நெருக்கடிகள் ஏற்பட்டன. அதில் ஒன்றுதான் முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைக்க முடியாதென்ற தடையாகும். பயங்கரவாதத்திற்கும், உடைக்கும் சம்பந்தமுண்டு என்ற புதிய கண்டு பிடிப்பு இலங்கையில் நடைபெற்றுள்ளது. பயங்கரவாதிகள் பல உடைகளில் உலாவிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், அந்த உடையை அணிகின்றவர்கள் எல்லோரும் பயங்கரவாதிகளல்லர். ஒரு குற்றவாளி தப்பித்துக் கொண்டாலும், சுத்தவாளி ஒருவர் தண்டிக்கப்படக் கூடாதென்ற சட்டத்துடன் தொடர்புடைய வார்த்தை இலங்கைக்கு பொருத்தமற்றதாகவே இருக்கின்றது. 4/21 தாக்குதலுக்குப் பின்னர் அப்பாவிகளே அதிகம் பாதிக்கப்பட்டார்கள்.
அரசாங்கத்தின் பாதுகாப்பு ஏற்பாட்டில் ஏற்பட்ட ஓட்டைதான் 4/21 தாக்குதலுக்கு காரணமாகும். ஆயினும், இந்தத் தாக்குதலுக்கு பின்னர் ஆயுதங்களை தேடிக் கண்டு பிடிக்கும் நடவடிக்கைகள் இராணுவத்தினரால் எடுக்கப்பட்டன. கத்தி, வாள் போன்றவைகள் கைப்பற்றப்பட்டு பெரும் பயங்கரவாத ஆயுதங்கள் போன்று காட்டினார்கள். ஆனால், இத்தகைய தேடுதல் வேட்டை சிங்கள மக்களின் வீடுகளில் மேற்கொள்ளப்படவில்லை என்பது மிகப் பெரிய பாரபட்ச நடவடிக்கையாகும். குளியாப்பிட்டி, கினியம போன்ற இடங்களில் கத்தி, வாள், இரும்புக் கம்பிகளைப் பயன்படுத்தியே முஸ்லிம்களை தாக்கினார்கள். சிங்களவர்களின் வீடுகளும் இராணுவத்தினரால் சோதனை செய்யப்பட்டிருந்தால் கத்தி, வாள், இரும்புக் கம்பிகளைப் பயன்படுத்தி தாக்கியிருக்க மாட்டார்கள்.
பெரும்பாலும் எதிரணியிலுள்ள சிங்கள அரசியல்வாதிகளும், பௌத்த இனவாத தேரர்களும் நாட்டில் இஸ்லாமிய பயங்கரவாதம் ஏற்பட்டுள்ளது என்றும், ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் இருக்கின்றார்கள் என்றும், பயங்கரவாதத்தை மத்ரஸாக்கள் வளர்க்கின்றன. அவற்றை தடை செய்ய வேண்டும். அரபு மொழி தடை செய்யப்பட வேண்டும் என்றெல்லாம் அரசியல்வாதிகளும், பௌத்த இனவாத பிக்குகளும் பேசத் தொடங்கினார்கள். முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கும், இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கும் தொடர்புள்ளதென்று தெரிவித்தார்கள். பாராளுமன்றத்தில் அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வந்தார்கள். அத்துரலிய ரதன தேரர் அமைச்சர் றிசாட் பதியுதீன், கிழக்கு மாகாண ஆளுநராக இருந்த ஹிஸ்புல்லாஹ், மேல்மாகாண ஆளுநராக இருந்த அஸாத்சாலி ஆகியோர்கள் தங்களின் பதவிகளை இராஜினாமாச் செய்ய வேண்டுமென்று சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார். முஸ்லிம்களை மீண்டும் பௌத்த இனவாதிகள் தாக்கிவிடுவார்களோ என்று அஞ்சி முஸ்லிம் ஆளுநர்களும், அமைச்சர்களும் பதவிகளை இராஜினாமாச் செய்தார்கள்.
இவை இன்றைய ஆட்சியில்தான் நடைபெற்றது. என்றாலும், 4/21 தாக்குதல் மூலமாக எதிர் அணியினரே இலாபம் அடைந்து கொள்வதற்கு முற்படுகின்றார்கள். இதனால், இத்தகைய குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றவர்கள் மீது முஸ்லிம்கள் சந்தேகம் கொள்கின்றார்கள். இவர்கள் கூட்டு எதிரணியில் உள்ளார்கள். இவர்களின் ஆட்சி வந்தால் யாது செய்வார்களோ என்று முஸ்லிம்கள் கருதுவதும், அச்சம் கொள்வதும் நியாயமானதாகும்.
இதேவேளை, நாட்டின் ஜனாதிபதியாக நான் தெரிவு செய்யப்பட்டால் நாட்டிலிருந்து இஸ்லாமிய பயங்கரவாதத்தை இல்லாமல் செய்வேன் என்று கோத்தாபய ராஜபக் ஷ தெரிவித்துள்ளார். 4/21 தாக்குதலுடன் சம்பந்தபட்டவர்களை முழுமையாக கைது செய்து விட்டோம் என்று பாதுகாப்பு தரப்பினர் அடிக்கடி தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்நிலையில் இஸ்லாமிய பயங்கரவாத்தை முற்றாக ஒழிப்பேன் என்று கோத்தாபய ராஜபக் ஷ தெரிவித்துள்ளமை பௌத்த இனவாதிகளை திருப்திப்படுத்தவும், பயங்கரவாதத்தை என்னால்தான் அழிக்க முடியும் என்று சொல்லி அரசியல் இலாபம் ஈட்டிக் கொள்வதற்கு விளைகின்றார் எனலாம். ஆனால், இவரது இந்த கதைக்குப் பின்னால் மிகப் பெரிய ஆபத்திருக்கின்றது.
ஐ.தே.கவுக்குள் இழுபறி
இதே வேளை, ஐக்கிய தேசிய கட்சி இன்னும் தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கவில்லை. இதனால், யார் வேட்பாளர் என்பதில் அக்கட்சிக்குள் முரண்பாடுகளும், இழுபறிகளும் ஏற்பட்டுள்ளன. கோத்தாபய ராஜபக் ஷவை தோற்கடிப்பதற்கு சஜித் பிரேமதாஸவே பொருத்தமென்று அக்கட்சிக்குள் குரல் கொடுக்கின்றவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. இதேவேளை, சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக ஏற்றுக் கொள்ளும் நிலைப்பாட்டை ரணில் விக்கிரமசிங்க இன்னும் கொண்டிருக்கவில்லை. இவரது விடாப்பிடியை தளர்த்தாது போனால், ஐக்கிய தேசிய கட்சிக்குள் முரண்பாடுகளும், பிளவுகளும் ஏற்படலாம். இந்நிலை ஐக்கிய தேசிய கட்சியை மிக மோசமான பின்னடைவுக்கு அழைத்துச் செல்லும் என்பதில் ஐயமில்லை. ஆதலால், ரணில் விக்கிரமசிங்க தீர்க்கமான முடிவினை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இவ்வாறு ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அரசியல் கட்சிகளின் நிலைமைகள் இருக்கின்றன. இந்நிலையில் முஸ்லிம் கட்சிகள் தமது சமூகத்திற்கு குறைந்த தீங்கை செய்கின்றவரை அடையாளப்படுத்த வேண்டிய துர்ப்பாக்கியத்தில் இருக்கின்றன.
எஸ்.றிபான்
vidivelli