லண்டனில் இருந்து துவிச்சசக்கர வண்டியில் மக்கா சென்றோர் வெற்றிகரமாக ஹஜ்ஜை நிறைவேற்றினர்
ஹஜ்ஜின் சிரமங்களை எழுத்தில் வடிக்க முடியாது என்பது போல், லண்டனைச் சேர்ந்த நெஞ்சுறுதிமிக்க துவிச்சக்கர வண்டி செலுத்துவோர் குழுவொன்று ஹஜ் யாத்திரையை மேற்கொள்வதற்காக மக்கமா நகருக்கு துவிச்சக்கர வண்டியில் செல்வதற்கு தீர்மானித்தது. இந்தப் பயணத்தை மேற்கொள்வதற்கு தங்களுக்குள் வரையறைகளை வகுத்துக்கொண்டனர்.
தாஹிர் அக்தர் தலைமையிலான ‘டுவர் டீ ஹஜ்’ என்ற பெயர் கொண்ட துவிச்சக்கர வண்டி ஹஜ் குழு உரிய காலத்தில் மக்காவைச் சென்றடைந்தது மட்டுமல்லாது மதீனாவுக்கும் சென்று மஸ்ஜிதுன் நபவியிலும் தொழுகை நிறைவேற்றினர்.
அக் குழுவின் இந்தப் பயணத்தின் இலக்கு பாகிஸ்தான், தென்னாபிரிக்கா மற்றும் உகண்டா போன்ற நாடுகளில் கிணறுகள், பாடசாலைகள் மற்றும் பள்ளிவாசல்களை நிர்மாணிப்பதற்கான தர்மஸ்தாபனத்திற்கு நிதிநேகரிப்பினை மேற்கொள்வதாகும். அவர்கள் மக்காவினைச் சென்றடைந்தபோது 55,378 ஸ்ரேலிங் புவுண்களை (66,927 அமெரிக்க டொலர்கள்) சேகரித்திருந்தனர்.
எட்டு துவிச்சக்கரவண்டி யாத்திரிகர்கள் மற்றும் அவர்களுக்கான சாரதி உதவியாளர் ஒருவரையும் உள்ளடக்கிய இக்குழு கிழக்கு லண்டன் பள்ளிவாசலில் கடந்த ஜூன் மாதம் 07 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையினை நிறைவேற்றிவிட்டு லண்டனிலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்து தமது 58 நாட்களில் 17 நாடுகளைக் கடந்தது.
இக் குழுவினருக்கு உதவியாளராக வந்திருந்த வாகனச் சாரதி இஸ்ரார் ஹுஸைன் இக் குழுவின் அங்கத்தவர் என்பதோடு அவர் ஏலவே ஹஜ் கடமையினை நிறைவேற்றியவராவார். ஒரு புறமாக குழுவினருக்கு உதவி புரிந்த அதேவேளை மறுபுறமாக அவர்கள் ஹஜ் அனுஷ்டானங்களை மேற்கொள்ள உதவியாளராகவும் இருந்தார்.
நான் எனது பகல் நேரத் தொழிலில் பொருட்களை கொண்டு சென்று விநியோகிக்கும் சாதாரண சாரதி. நான்கு வெவ்வேறு நாடுகளில் ஐந்து மாதிரிக் கிராமங்களை உருவாக்குதல் மற்றும் ஏழைகளுக்கு உதவுதல் என்ற ஜுனைட்டின் தூர நோக்கினால் கவரப்பட்டேன். அந்தக் கிராமங்கள் ஒரு பள்ளிவாசல், ஒரு பாடசாலை ஆகியவற்றைக் கொண்டிருக்கும். அத்துடன் உள்ளூர் மக்களுக்கு சூரிய சக்தி மின் உற்பத்தி சாதனமும் தண்ணீர் படுக்கைகளும் வழங்கப்படும் எனவும் அவர் கூறியதையடுத்து நான் உடனடியாக அவர்களுடன் இணைந்து கொண்டேன் என அவர் தெரிவித்தார்.
ஹஜ் யாத்திரை என்பது அற்புதமானது. நான் ஏற்கனவே 2014 ஆம் ஆண்டு ஹஜ் யாத்திரையினை நிறைவேற்றினேன். இம்முறை காலம் சென்ற எனது பாட்டனாருக்காக ஹஜ் கடமையினை நிறைவேற்றினேன் எனவும் அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே 2017 ஆம் ஆண்டு துவிச்சக்கர வண்டியில் புனித நகருக்கான பயணத்தில் பங்கேற்று அதன் மூலம் கவரப்பட்டு இம்முறையும் துவிச்சக்கர வண்டி மூலம் யாத்திரை மேற்கொண்ட ஜுனைட் அப்ஸால், நான் தொடர்ச்சியாக இரண்டு அல்லது மூன்று மாதங்களாக தொடந்து இது தொடர்பாகவே சிந்தித்துக்கொண்டிருந்தேன். நான் தூக்கத்திலிருந்து எழும் போதெல்லொம் என்னுடைய முதல் சிந்தனை இதுவாகவே இருந்ததால் அதனை நிறைவேற்றுவதற்கு என்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்தேன். இன்று நாம் எமது ஹஜ் கடமையினை நிறைவேற்றி இருக்கின்றோம்.
தன்னால் முடிந்தவரை முன்னாயத்தங்கள் அனைத்தையும் செய்திருந்ததாகத் தெரிவிக்கும் ஜுனைட் அப்ஸால், எப்போதும் வீதிகளில் எதிர்பாராத பின்னடைவுகளும் ஆபத்துக்களும் காத்திருக்கும். இது பரீட்சையினைப் போன்றது, அளவுக்கதிகமாக தயார் நிலையில் இருக்க முடியாது. என்ன நடக்கும் என்று எம்மால் எதிர்பார்க்க முடியாது. நாம் இந்தப் பயணத்திற்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, பயிற்சிக் காலத்தின் நடுப்பகுதியில் ரமழான் நோன்பு காலம் வந்தது. அது எங்களுக்கு சிரமமாக இருந்தது. அந்தக் காலப் பகுதியில் வாரத்தில் நூறு மைல் அளவிலேயே துவிச்சக்கர வண்டியில் பயணித்து பயிற்சி எடுத்தோம். உண்மையில் எமது இலக்கு ஒரு வாரத்தில் 400 அல்லது 500 மைல் அளவில் பயணித்து பயற்சி பெறுவதாகும். அந்தளவு தூரம் பயணித்து பயிற்சி பெற முடியாது.
இறைவனின் அற்புதத்தை கண்களால் பார்த்ததே தனது பயணத்தின் முக்கிய நிகழ்வாக அப்ஸல் குறிப்பிட்டார். தனக்கு மிகவும் கடினமாக இருந்த விடயம் லண்டனிலுள்ள தனது குடும்பத்தை விட்டுப் பிரிந்து வந்தமையாகும் எனவும் குறிப்பிட்டார். நான் எனது துவிச்சக்கரவண்டியில் புறப்படும்போது எனது குடும்பத்தினரைக் கவனித்தேன். கண்ணீர் விட்டு அழுது விடுவார்களோ என எண்ணுமளவிற்கு அவர்களின் நிலை இருந்தது. நான் முன்னே பார்த்துக்கொண்டு அவர்களை பார்ப்பதை முற்றாகத் தவிர்த்துக்கொண்டு எனது பயணத்தை ஆரம்பித்தேன். அது எனக்கு மிகவும் கஷ்டமான சந்தர்ப்பமாக அமைந்தது. அவ்வாறான ஒரு காரியத்தை எனது வாழ்நாளில் செய்ததே கிடையாது.
ஏற்கனவே அதிக தூரப் பயணம் மற்றும் பயிற்சி காரணமாக மிகவும் களைப்படைந்த நிலையில் மக்காவை வந்தடைந்த அந்தக் குழுவினருக்கு ஹஜ் கடமை கஷ்டமானதாகவே அமைந்திருந்தது. எமது பயணத்தின் முடிவில் ஹஜ் எமக்கு கஷ்டமாக இருக்காது என நினைத்திருந்தோம் ஆனால் நடப்பதும் துவிச்சகர வண்டி ஓடுவதும் வேறு வேறான இரு விடயங்களாகும். அது உண்மையிலேயே சிரமமாக இருந்தது.
அப்ஸல் இறுதியாக அறிவுரையொன்றைத் தெரிவித்தார் ‘நான் வழங்கக்கூடிய சிறந்த ஆலோசனை என்னவென்றால் மக்கள் வெறுமனே வாழ்க்கையினை அமைத்துக்கொள்வதில் மாத்திரம் ஆர்வம் காட்டக் கூடாது. வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதிலும் ஆர்வம் காட்ட வேண்டும். காலத்தை வீணாக்காதீர்கள், சிறந்த காரியங்களைச் செய்யுங்கள். நீங்கள் வாழ்ந்ததற்கான தடயங்களை உருவாக்குங்கள். உலகத்தில் எவரும் மிகப் பெரும் பணக்காரனை ஞாபகத்தில் வைத்திருப்பதில்லை ஆனால் உலகத்தை மாற்றிய மனிதனை உலகம் ஒருபோதும் மறப்பதில்லை’ என்றார்.
(எம்.ஐ.அப்துல் நஸார்)
vidivelli