நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களான பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை பல்கலைக்கழகங்களின் நிர்வாகங்களுக்கும், உயர்கல்வி அமைச்சுக்கும் பாரிய சவாலாக மாறியுள்ளது.
பல்கலைக்கழகங்களில் பகிடிவதை முதன்முதல் புதிய மாணவர்களுடன் அறிமுகமாக்கிக் கொள்ளும் நோக்குடன் சிநேகபூர்வமாகவே ஆரம்பிக்கப்பட்டது. இவ்வாறாக ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்பட்ட பகிடிவதை ஒரு புதிய சந்திப்பிற்கான அஸ்திவாரமாகவே அமைந்திருந்தது. என்றாலும் கடந்த காலங்களில் அது புதிய மாணவர்களை துன்புறுத்துவதாக மாற்றம் கண்டுவிட்டது.
பல்கலைக்கழகங்களில் பகிடிவதை என்பது புதிய மாணவர்களை துன்புறுத்துவதாக மட்டுமல்லாது அண்மைக்காலமாக பாலியல் துன்புறுத்தல்களாகவும் மாறிவிட்டது. புதிதாக பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெறும் மாணவர்கள் மனித இயல்பற்ற வகையில் கொடுமைகளுக்கும் உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள்.
இவ்வாறு பகிடிவதை என்ற பெயரில் மிகவும் மோசமாக பாலியல் துன்புறுத்தல்களை புதிய மாணவர்கள் மீது மேற்கொண்ட றுகுணு பல்கலைக்கழகத்தின் மாணவர் இயக்கத் தலைவர் உட்பட சிரேஷ்ட மாணவர்கள் 19 பேர் நீதியின் முன் நிறுத்தப்பட்டார்கள். முதலாம் வருட பல்கலைக்கழக மாணவரொருவர் மீது மேற்கொண்ட மிகவும் மோசமான பகிடிவதை காரணமாக அவர்கள் 19 பேரையும் மாத்தறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.
பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெற்று புதிதாக வருகை தரும் மாணவர்களை இவ்வாறு மனிதப் பண்பற்ற முறையில் வரவேற்பதற்கு எவருக்கும் உரிமையில்லை.
றுகுணு பல்கலைக்கழக முதலாம் வருட மாணவன் தர்ச உதயங்க சிரேஷ்ட மாணவர்கள் தன்னை பாலியல் துன்புறுத்தல்களுக்குள்ளாக்கி தாக்கி வதை செய்தமை தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு முறைப்பாடு செய்தார். பொலிஸ் நிலையத்திலும் புகார் செய்தார். அத்தோடு ஊடக மாநாடொன்றினை ஏற்பாடு செய்து முழு நாட்டுக்கும் இதனை வெளிப்படுத்தினார். இதன் மூலமே இதனுடன் தொடர்புபட்ட 19 சிரேஷ்ட மாணவர்களை சட்டத்தின் முன் நிறுத்த முடியுமாக இருந்தது.
பல்வேறு தியாகங்களுக்கு மத்தியில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு கல்வியை வழங்கி வருகிறார்கள். அவர்கள் தங்கள் பிள்ளைகள் உயர்கல்வி கற்று நற்பிரஜைகளாக வாழ வேண்டுமென்றே கனவு காண்கிறார்கள். அக்கனவுகள் நிறைவேறி பல்கலைக்கழகங்களுக்கு பிரவேசிக்கும் போது பாலியல் துன்புறுத்தல்கள், தாக்குதல்கள் மற்றும் வதைகளுக்கு உட்படுத்தப்படுவதை எவராலும் அனுமதிக்க முடியாது.
பல்கலைக்கழக சிரேஷ்ட மாணவர்கள் புதிய மாணவர்களை பகிடிவதை என்ற பெயரில் உடல் ரீதியான பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தியமையினால் கடந்த 2 வருடங்களில் 1989 மாணவர்கள் பல்கலைக்கல்வியைக் கைவிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
அத்தோடு பகிடிவதை காரணமாக தற்கொலை உட்பட 16 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப கல்வி கற்றுக் கொண்டிருந்த மாணவர் ஒருவர் 2015 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். அதே வருடம் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவியொருவரும் தற்கொலை செய்து கொண்டார். இவர்கள் இருவரும் தாங்கள் ஏன் தற்கொலை செய்து கொள்கிறோம் என கடிதம் எழுதி வைத்திருந்தார்கள். பகிடிவதையின் கொடூரம் அந்தக் கடிதங்களில் விபரிக்கப்பட்டிருந்தது.
பகிடிவதை என்பது பல்கலைக்கழகங்களிலிருந்து மாத்திரமல்ல இந்த முழுச் சமூகத்திலிருந்தும் ஒழிக்கப்பட வேண்டும். நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வருடாந்தம் மாணவர்கள் பல்கலைக்கழகம் பிரவேசிக்கிறார்கள். அவர்கள் பெற்றோரின் அரவணைப்பிலிருந்தும் வெளியேறி பல்கலைக்கழகங்களின் விடுதிகளை வந்தடைகிறார்கள். அவர்களின் இன்ப துன்பங்களில் பங்கு கொள்ள வேண்டியவர்கள் பல்கலைக்கழகங்களில் இருக்கும் சகோதர, சகோதரிகளே. அவர்களுக்கு இடையில் அறிமுகங்கள் ஏற்படுவது அவசியமே என்றாலும் பகிடிவதை என்ற பெயரில் மிகவும் கொடூரமான சம்பவங்கள் இடம்பெறுவதை எவராலும் அனுமதிக்க முடியாது.
பல்கலைக்கழகங்களில் சிரேஷ்ட மாணவர்கள் தங்கள் அரசியல் ரீதியான கொள்கைகளை மாணவர்கள் மீது திணிப்பதற்காகவே பகிடிவதைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
உயர்கல்வி நிறுவனங்களான பல்கலைக்கழகங்களிலேயே நாட்டின் எதிர்காலத் தலைவர்கள் உருவாக்கப்படுகிறார்கள்.
எனவே அப்பாவி மாணவர்கள் மீது அங்கு கொடூரமாக பகிடிவதை மேற்கொள்ளப்படுவது தடை செய்யப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை உயர்கல்வி அமைச்சும் பல்கலைக்கழக நிர்வாகங்களும் முன்னெடுக்க வேண்டும் என்பதை நாம் வலியுறுத்துகிறோம்.
vidivelli