ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் கால எல்லையை மேலும் ஒருமாத காலம் நீடிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன் அது குறித்த பாராளுமன்ற அனுமதியை அடுத்தவாரம் பெற்றுக்கொள்ளவுள்ளனர். மேலும் எதிர்வரும் 20ஆம் திகதியில் இருந்து 23 ஆம் திகதிக்குள் ஒரு தினத்தில் தெரிவுக்குழுவிற்கு வர ஜனாதிபதிக்கு தெரிவுக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் கால எல்லையானது இந்த மாதம் 23 ஆம் திகதியுடன் முடிவுக்கு வருகின்றது. இந்நிலையில் சாட்சியங்களில் இறுதிக்கட்ட விசாரணையாக ஜனாதிபதியிடம் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளதுடன் அறிக்கையை முழுமைப்படுத்த வேண்டியுள்ள நிலையில் விசேட தெரிவுக்குழுவின் கால எல்லையை மேலும் ஒருமாத காலம் நீடிக்க, அதாவது அடுத்த மாதம் 23 ஆம் திகதி வரையில் நீடிக்க தெரிவுக்குழு தீர்மானம் எடுத்துள்ள நிலையில் அதற்கான பாராளுமன்ற அனுமதியை கேட்கவுள்ளனர்.
எதிர்வும் 20ஆம் திகதி அடுத்த பாராளுமன்ற அமர்வுகள் கூடவுள்ள நிலையில் அந்தவார அமர்வு நாட்களில் தெரிவுக்குழு கால எல்லையை நீடிக்கும் அனுமதியை கேட்கவுள்ளதாகவும், அதேபோல் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினை சாட்சியம் வழங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 20 ஆம் திகதியில் இருந்து 23 ஆம் திகதி வரையில் நான்கு நாட்களுக்குள் ஏதேனும் ஒரு நாளில் சாட்சியமளிக்க வருமாறும் குறித்த தினம் என்னவென தெரிவுக்குழுவிற்கு அறிவிக்குமாறும் கூறியுள்ளதாக தெரிவுக்குழு தலைவர் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்தார்.
vidivelli