என்னுடைய தந்தையின் கொலைக்காக கோத்தாபய
ராஜபக் ஷ ஒருபோதும் மன்னிப்பு கோரமாட்டார். அதேவேளை பாரிய கொலைக்குற்றவாளி என்று இன்று நீங்கள் குறிப்பிடுகின்ற நபரைப் பாதுகாப்பதற்கும், அவருடன் தொடர்பினைப் பேணுவதற்கும் கடந்த நான்கரை வருடகாலத்தை செலவிட்டமைக்காக நீங்கள் மன்னிப்புக் கோருவீர்களா? என்று கொல்லப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் வினவியிருக்கிறார்.
அத்தோடு என்னுடைய தந்தையின் கொலையுடன் தொடர்புடையவர் தற்போது உத்தியோகபூர்வ ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொறுப்புக்கூறலுடனான ஆட்சி, சட்டத்தின் கீழ் அனைவருக்கும் சமனான பாதுகாப்பு மற்றும் நீதி என்பவற்றை உறுதிப்படுத்தும் ஆற்றலும் நேர்மையும் உள்ள ஒருவரே அவருக்கு எதிரான வேட்பாளராகக் களமிறங்க வேண்டும் என்று பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று முன்தினம் நிகழ்வொன்றில் ஆற்றிய உரையினை மேற்கோள்காட்டி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு நேற்று செவ்வாய்க்கிழமை அஹிம்சா விக்ரமதுங்க எழுதியுள்ள விரிவாக கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
நேற்றைய தினம் (நேற்று முன்தினம்) ஒரு அரசியல் உரையின் போது கடந்த 2009 ஜனவரி 8 ஆம் திகதி கொல்லப்பட்ட என்னுடைய தந்தையும், உங்களுடைய நெருங்கிய நண்பருமான லசந்த விக்ரமதுங்கவைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள். தான் ஜனாதிபதியாகத் தெரிவானால் அச்சமற்ற சூழலொன்றை உருவாக்குவேன் என்று கோத்தாபய ராஜபக் ஷ கூறியிருந்தார். அதற்குப் பிரதிபலிப்பைக் காட்டும் வகையில் அவர் எனது தந்தையின் கொலைக்கும், மேலும் பல பயங்கரமான குற்றச்செயல்களுக்கும் மன்னிப்புக் கோருவாரா என்று உங்களுடைய உரையில் கேள்வி எழுப்பியிருந்தீர்கள். ஒன்றைக்கூற விரும்புகின்றேன். இல்லை. என்னுடைய தந்தையின் கொலைக்காக கோத்தாபய ராஜபக் ஷ ஒருபோதும் மன்னிப்புக்கேட்க மாட்டார். இதுகுறித்து அவர் பெருமையடைகிறார் என்பதை கடந்த 10 வருடகாலமாக அவர் வழங்கிய அனைத்துத் தொலைக்காட்சி நேர்காணல்களின் போது மறைத்ததில்லை. மன்னிப்புக்கோரத் தேவையில்லை என்பதே அவருடைய எண்ணம். ஆனால் நீங்கள் மன்னிப்புக் கோரினீர்களா பிரதமர் அவர்களே? பாரிய கொலைக்குற்றவாளி என்று இன்று நீங்கள் குறிப்பிடுகின்ற நபரைப் பாதுகாப்பதற்கும், அவருடன் தொடர்பினைப் பேணுவதற்கும் கடந்த நான்கரை வருடகாலத்தை செலவிட்டமைக்காக நீங்கள் மன்னிப்புக் கோருவீர்களா?
என்னுடைய தந்தை மரணித்தது முதல் வாக்குகளை வென்றெடுப்பதற்காக நீங்கள் அவருடைய பெயரைப் பயன்படுத்தினீர்கள். நீங்கள் பிரதமராகுவதற்குக் காரணமான 2015 ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல் பிரசாரங்களில் என்னுடைய தந்தையின் கொலை உங்களுக்கு சாதகமான விடயமாக அமைந்திருந்தது. என்னுடைய தந்தையின் கொலைக்கு நியாயத்தைப் பெற்றுத்தருவதாகக் கூறியே மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கியதுடன், பாராளுமன்றத்தின் அதிகாரத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் வசமாக்கிக் கொண்டீர்கள்.
எனினும் அதிகாரத்திற்கு வந்தவுடனேயே உங்களது முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டியவை தொடர்பான அடிப்படைகள் மாற்றமடைந்தன. என்னுடைய தந்தையின் கொலை தொடர்பில் நீதியைப் பெற்றுக்கொள்வதற்கு உங்களுடைய ஆதரவு அவசியம் என்பதை வலியுறுத்துவதற்காக 2015 பெப்ரவரியில் உங்களை அலரிமாளிகையில் சந்தித்தேன். அப்போது இன்னமும் பல்வேறு முக்கியமான விடயங்கள் இருப்பதாகவும், நீதியானது லசந்த விக்ரமதுங்க தொடர்பானது மாத்திரமல்ல என்றும் நீங்கள் கூறினீர்கள். உங்களுடைய அலுவலகப் பிரதானியின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் பொலிஸ் திணைக்களம் காணப்பட்ட போதுகூட, அவர்கள் கோத்தாபயவை சட்டத்தின் முன் கொண்டுவரவில்லை.
இது தேர்தல்காலம் என்பதால் நீங்கள் கோத்தாபயவை கொலைகாரன் என்று பகிரங்கமாகத் தாக்கிப் பேசுகிறீர்கள். குறைந்தபட்சம் நீங்கள் இவ்வாறு கூறினாலும், உங்களுடைய அலுவலகப் பிரதானி சாகல ரத்நாயகவும் ஏனைய அமைச்சர்களும் அவரைச் சென்று சந்திப்பதுடன், அவருடைய இல்லத்தில் பல மணித்தியாலங்களைச் செலவிடுகிறார்கள். உங்களுடைய அரசாங்கம் அவருக்கு சட்டமுரணான அடையாள அட்டை, கடவுச்சீட்டை வழங்குகின்றது.
என்னுடைய தந்தையின் வழக்கு விசாரணை தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு உதவி தேவைப்படும் போதெல்லாம் உங்களைக் காணமுடியவில்லை. விசாரணை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது என்று இராணுவமும், புலனாய்வுப் பிரிவும் கூறியபோது நீங்கள் எங்கிருந்தீர்கள் பிரதமர் அவர்களே? அவ்வழக்கின் பிரதான விசாரணை அதிகாரி நிஷாந்த சில்வாவை அதிலிருந்து ஜனாதிபதி நீக்கிய போது அதற்கு எதிரான நிலைப்பாட்டை நீங்கள் ஏன் எடுக்கவில்லை? நீதியை நிலைநாட்டுவதற்காக அர்த்தமுள்ள நடவடிக்கைகள் எவற்றையேனும் மேற்கொண்டிருக்கிறீர்களா?
இல்லை. உங்களுடைய குடும்பத்தினரும், உயர்மட்ட அலுவலர்களும் கோத்தாபய ராஜபக் ஷவுடன் நெருங்கிய பிணைப்பைப் பேணும் அதேவேளை, அவரைக் கொலைகாரன் என்று நீங்கள் பகிரங்கமாகக் குறிப்பிடுகின்றீர்கள். என்னுடைய தந்தையின் கொலையுடன் தொடர்புடையவர் தற்போது உத்தியோகபூர்வ ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொறுப்புக்கூறலுடனான ஆட்சி, சட்டத்தின் கீழ் அனைவருக்கும் சமனான பாதுகாப்பு மற்றும் நீதி என்பவற்றை உறுதிப்படுத்தும் ஆற்றலும் நேர்மையும் உள்ள ஒரு அரசியல்வாதி அவருக்கு எதிரான வேட்பாளராகக் களமிறங்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன். கோத்தாபயவை எதிர்க்கும் வேட்பாளர் தனது அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக
ராஜபக் ஷவுடன் திரைமறைவில் ஒப்பந்தமிடுகின்ற ஒருவராக இருக்கக்கூடாது என்று பிரார்த்திக்கிறேன்.
ஆட்சியதிகாரத்தில் இருக்கும் போது நீதியைப் பெற்றுத்தரத்தக்க ஒருவரையே கோத்தாபய ராஜபக் ஷவிற்குச் சவாலாகக் களமிறங்கி, அவரைத் தோற்கடிக்க வேண்டும். மாறாக பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களைத் தேர்தலில் வெற்றியடைவதற்காக மாத்திரம் பயன்படுத்துபவர்களால் அல்ல. இறுதியாக இந்நாடு உங்களின் கருணையின் கீழோ அல்லது உங்களது புதிய நண்பன் கோத்தாபய ராஜபக் ஷவின் கருணையின் கீழோ இருக்குமென்றால் உங்களுடைய பழைய நண்பனும், என்னுடைய தந்தையுமான லசந்த விக்ரமதுங்கவிற்கு நீதி கிடைக்கும் என்பதற்கான உத்தரவாதம் எதுவுமில்லை.
vidivelli