ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜெரூசலத்திலுள்ள அல்-அக்ஸா பள்ளிவாசலில் சுமார் ஒரு இலட்சம்பேர் கலந்துகொண்டிருந்த வேளையில் இறப்பர் துப்பாக்கி ரவைகள் மற்றும் ஒலியெழுப்பும் கைக்குண்டுகளையும் பயன்படுத்தி இஸ்ரேல் பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலில் 14 பலஸ்தீனர்கள் காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
பள்ளிவாசல் வளாகத்தினுள் யூத கடும்போக்காளர்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தபோதிலும் பின்னர் அனுமதி வழங்கப்பட்டதையடுத்தே மோதல்கள் இடம்பெற்றுள்ளன. உயர்மட்ட அரசியல் அதிகாரிகளின் ஆலோசனையின் போரில் கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டதாக ஜெரூசல பொலிஸ் கட்டளைத் தளபதி டோரோன் யேடிட் தெரிவித்தார்.
இஸ்ரேலுக்கும் முஸ்லிம் அதிகாரிகளுக்கும் இடையேயான நீண்டகால ஒழுங்கமைப்புக்கு அமைவாக அல்-அக்ஸா வளாகத்தினுள் யூதர்கள் வழிபாடுகளில் ஈடுபடுவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும், அந்த ஒழுங்கமைப்பிற்கு சவால் விடுக்கும் வகையில் அண்மைய ஆண்டுகளில் வலதுசாரி தேசியவாதிகள் குறித்த வளாகத்தினுள் நுழைவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். யூத கடும்போக்காளர்கள் அல்-அக்ஸா பள்ளிவாசல் உடைக்கப்பட வேண்டும் எனவும் அதே இடத்தில் விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேவாலயம் அமைக்கப்பட வேண்டும் எனவும் கோரி வருகின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை நேரத்தில் தொழ வேண்டி பொருநாள் தொழுகையினை இஸ்லாமிய வக்ப் அதிகாரிகள் ஒரு மணிநேரம் தாமதித்ததோடு கடும்போக்காளர்களின் அத்துமீறி நுழையும் செயலைத் தடுப்பதற்கு அனைத்து முஸ்லிம்களையும் தரையில் அமருமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
1967 தொடக்கம் இருந்து வரும் புரிந்துணைர்வை தெளிவாக மீறும் செயல் இதுவாகும். அல்-அக்ஸா முஸ்லிம்களுடையதல்ல என்பதைக் காண்பிக்க எடுக்கப்படும் முயற்சியுமாகும் என இஸ்லாமிய வக்ப் சபையின் உறுப்பினரான கலீல் அஸ்ஸாலி தெரிவித்தார்.
அல்-அக்ஸா பள்ளிவாசலைப் பரிபாலிக்கும் ஜோர்தான் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தாக்குதலுக்கு இஸ்ரேலே காரணம் என குற்றம் சுமத்தியுள்ளதோடு முறையான முறைப்பாடொன்றையும் இஸ்ரேல் அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளது. அல்-அக்ஸா பள்ளிவாசலுக்கு எதிராகவும் மேற்கொள்ளப்படும் அனைத்து மீறல்களையும் தரையில் அமர்ந்திருந்த தொழுகைக்காக வந்திருந்தவர்கள் மற்றும் வக்ப் சபையினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலையும் கண்டிக்கின்றோம். இதற்கு இஸ்ரேல் அரசாங்கமே பொறுப்பு எனவும் குற்றம்சாட்டுகின்றோம் எனவும் அம்மானிலுள்ள வெளிநாட்டமைச்சு தெரிவித்துள்ளது.
எம்.ஐ.அப்துல் நஸார்
vidivelli