இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலை இவ்வருடம் டிசம்பர் மாதம் 07ஆம் திகதி நடத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஏற்கனவே ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதற்கு அரசியல் கட்சிகள் தீவிரமாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற சூழலில் தேர்தல் ஆணைக்குழுவின் இந்த அறிவித்தல் அரசியல் கட்சிகளை இன்னும் தீவிர செயற்பாடுகளுக்கு தூண்டியுள்ளது எனலாம். அரசியல் கட்சிகள் ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதற்குரிய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தாலும் அக்கட்சிகளிடையே வேட்பாளரைத் தெரிவு செய்வதில் இழுபறி நிலை நீடித்துக் கொண்டே இருக்கின்றது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன, சஜித் பிரேமதாஸ, கரு ஜயசூரிய, கோத்தாபய ஆகியோர்கள் போட்டியிடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டாலும், இறுதி முடிவினை எந்தவொரு அரசியல் கட்சியும் அறிவிக்கவில்லை. ஜனாதிபதி தேர்தலில் யார் போட்டியிட்டாலும் வெற்றிபெறும் வேட்பாளர் ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த ஒருவராக அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த ஒருவராகவே இருப்பார். இதுவரை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களின் முடிவாகவும் இது இருக்கின்றது. அதற்கு காரணம் ஜனாதிபதித் தேர்தல்கள் இருமுனை போட்டியாகவே இருந்துள்ளமையேயாகும். ஆனால், இம்முறை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் மும்முனைப் போட்டியாக அமைவதற்கும் அதிக வாய்ப்புக்கள் உள்ளன. ஆயினும், வழக்கம்போல் வெற்றியாளரை சிறுபான்மையினரின் வாக்குகளே தீர்மானிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதே வேளை, யார் வேட்பாளர்களாக இருந்தாலும் ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க, மஹிந்தராஜபக் ஷ ஆகியோர்களே முக்கிய பாத்திரங்களாக இருக்கப் போகின்றார்கள்.
ஜனாதிபதித் தேர்தலுக்குரிய நடவடிக்கைகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுக் கொண்டிருந்தாலும், தமது கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் யார் என்பதனை தீர்மானிப்பதில் தேசிய கட்சிகள் இன்னும் திருத்தமான முடிவினை எடுக்கவில்லை. அரசியல் கட்சிகளிடையே வேட்பாளர்களை தெரிவு செய்வதில் முரண்பாடுகளும், சிக்கல்களும் காணப்படுகின்றன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்றைய அரசியல் சூழலில் மிகவும் பலவீனப்பட்டுள்ளதென்றே சொல்லலாம். 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் பின்னர் மஹிந்தராஜபக் ஷ தனிக்கட்சி அமைத்து பிரிந்து செயற்பட்டதன் காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பலவீனப்பட்டுள்ளது. இதனால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் நிறுத்தப்படும் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் வெற்றி பெறுவது என்பது முயற்கொம்பாகவே இருக்கும். இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இம்முறையும் போட்டியிடும் எண்ணத்தில் உள்ளார். தனது வெற்றியை தனித்து நின்று பெறமுடியாதென்பதால் மஹிந்தராஜபக் ஷவை மறைமுகத் தலைவராகக் கொண்டு செயற்படுகின்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் கூட்டு வைத்து, தான் போட்டியிடுவதன் மூலம் வெற்றி பெறலாமென்று மைத்திரிபால சிறிசேன நினைக்கின்றார். இதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டாலும், வேட்பாளரை முடிவு செய்வதில் இணக்கப்பாடு ஏற்படவில்லை. ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்படுவதற்கு இணங்கிய போதிலும் வேட்பாளராக கோத்தபாய ராஜபக் ஷ அல்லது மஹிந்த ராஜபக் ஷ விரல் நீட்டும் ஒருவரே வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டுமென்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி விரும்புகின்றது. ஆயினும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்து செயற்படுவதாக இருந்தால் மைத்திரிபால சிறிசேனவே வேட்பாளராகப் போட்டியிட வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் விரும்புகின்றனர்.
இவ்விரு கட்சிகளும் இணைந்து போட்டியிட்டு ஆட்சியமைக்கும் போது நிச்சயமாக மஹிந்த ராஜபக் ஷதான் பிரதமராக நியமிக்கப்படுவார். அதனால், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டு, அவர் வெற்றியும் பெற்றால் ஜனாதிபதியும், பிரதமரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியைச் சேர்ந்தவராகவே இருப்பார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அதிகாரமில்லாது போய்விடும். இத்தகையதொரு நிலை ஏற்படுமாக இருந்தால் அது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இன்னும் பலவீனப்படுவதாகவே அமையும். ஆதலால், ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன இருக்க வேண்டுமென்பதனை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி நிராகரிக்குமாயின் மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக போட்டியிடுவார். இதன் மூலமாக ஜனாதிபதித் தேர்தல் மும்முனை போட்டியாக மாறிவிடும். இந்நிலை சிறுபான்மையினரின் வாக்குகளுக்கு இன்னும் பெறுமதியை ஏற்படுத்திவிடும். ஜனாதிபதி தேர்தல் மும்முனையாக மாறும்போது தமிழ், முஸ்லிம்களின் அதிகபட்ச ஆதரவைப் பெறும் வேட்பாளர் வெற்றிபெறுவார். இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் மும்முனையாக மாறும்போது அளிக்கப்படும் வாக்குகளில் 51 சதவீத வாக்குகளை ஒருவர் பெறுவதென்பது கடினமாக இருக்கும். ஜனாதிபதி தேர்தலில் ஒருவர் வெற்றி பெற்றிருந்தாலும் அவர் அளிக்கப்பட்ட வாக்குகளில் 51 வீதத்தைப் பெறல் வேண்டும். அது தவறும் பட்சத்தில் இரண்டாம் தெரிவு வாக்குகள் எண்ணப்படும். அதன் பின்னரே வெற்றி பெற்றவர் அறிவிக்கப்படுவார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தனித்துப் போட்டியிடுமாயின் அதன் வேட்பாளராக கோத்தாபய நியமிக்கப்படுவதற்கே அதிக வாய்ப்புக்கள் உள்ளன. ஆனால், கோத்தாபயவுக்கு சிறுபான்மையினரின் வாக்குகள் அளிக்கப்படும் வீதம் குறைவாகவே இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால், சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்குரிய தந்திரங்களை அக்கட்சி மேற்கொண்டுள்ளது. பாராளுமன்றத்தில் இல்லாத அரசியல் கட்சிகளுடன் உடன்படிக்கை செய்துள்ளது. என்ற போதிலும், சிறுபான்மையினரின் அதிக செல்வாக்கைப் பெற்றுள்ள அரசியல் கட்சிகள் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்து கொள்வதற்கு மறுதலிக்கும் நிலைப்பாட்டையே கொண்டுள்ளன. மஹிந்த ராஜபக் ஷவுடன் பேரினவாதம் பேசி, சிறுபான்மையினரையும், அவர்கள் சார்ந்த கட்சிகளையும் கொச்சைப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். இவர்களின் செயற்பாடுகளை மஹிந்த ராஜபக் ஷ அங்கீகரித்த ஒருவராகவே இருக்கின்றார். இதனால், அக்கட்சிக்கு சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வது முயற்கொம்பாகவே இருக்கும்.
ஐக்கிய தேசியக் கட்சியை எடுத்துக் கொண்டால் அங்கு வேட்பாளரை தெரிவு செய்வதில் பலத்த முரண்பாடுகள் உள்ளன. ரணில் விக்கிரமசிங்க, சஜித், கருஜயசூரிய ஆகியோர்களின் பெயர்கள் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் விடயத்தில் அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்துக் கொண்டாலும், இவர்தான் வேட்பாளர் என்று தெரிவிப்பதில் பிரச்சினை உள்ளது.
ரணில் விக்கிரமசிங்க போட்டியிடும் மனநிலையைக் கொண்டிருந்தாலும் அவர் போட்டியிடக் கூடாதென்பதுதான் ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரினதும் நிலைப்பாடாகும். இதனால் சஜித்தை அல்லது கரு ஜயசூரியவை நியமிக்க வேண்டுமென்ற கருத்துக்கள் வலுத்துக் கொண்டு வருகின்றன. ஆயினும், இவர்களில் சஜித்தை வேட்பாளராக நிறுத்த வேண்டுமென்பதற்கு ஆதரவு அதிகமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனிடையே ரணில் விக்கிரமசிங்கவும், சஜித்தும் மூடிய அறைக்குள் பேச்சுக்களில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றன. இதில் எதனைப் பேசினார்கள் என்று தெரியவில்லை.
ஐக்கிய தேசியக் கட்சியில் மேற்படி இரண்டு பேரில் யார் வேட்பாளராகப் போட்டியிட்டாலும் தமிழ், முஸ்லிம்களின் வாக்குகள் முக்கியமாகும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியுடன்தான் இணைந்து செயற்படும் என்று உறுதிசெய்து கொண்டாலும் அக்கட்சிகளின் தலைவர்கள் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்பட வேண்டும். அதன் பின்னர்தான் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவது பற்றிய முடிவை எடுக்க முடியுமென்று தெரிவித்துள்ளனர். இதனாலும், வேறு சில காரணங்களினாலும் இம்மாதம் 05ஆம் திகதி ஐக்கிய தேசிய கட்சி சிறுபான்மைக் கட்சிகள் உட்பட ஏனைய சில சிறுகட்சிகளுடன் செய்து கொள்ளவிருந்த உடன்படிக்கை பிற்போடப்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கை இம்மாதத்தின் இறுதில் நடைபெறலாமென்று தெரியவருகின்றது. அதற்கிடையில் ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரை அறிவிக்கும் எனலாம்.
இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மையினரின் வாக்குகள்தான் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கப் போகின்றதென்பதில் ஐயமில்லை. ஆனால், சிறுபான்மையினரும், அவர்கள் சார்ந்த கட்சிகளும் எந்த இலக்கை அடைந்து கொள்வதற்காக ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை ஆதரிக்கப் போகின்றார்கள் என்பது முக்கியமாகும்.
2015ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சிறுபான்மையினரில் மிகக் கூடுதலானவர்கள் மைத்திரிபால சிறிசேனவையே ஆதரித்தார்கள். யுத்த வெற்றி வீரனாக சிங்கள மக்களினால் பார்க்கப்படுகின்ற மஹிந்தராஜபக் ஷ யுத்த வெற்றியை மூலதனமாகக் கொண்டு செயற்பட்டார். சிங்கள மக்களிடையே தமக்கிருந்த ஆதரவையிட்டு மமதை கொண்டு செயற்பட்டார். தனது வெற்றியை யாராலும் தடுக்க முடியாதென்று நினைத்தார். ஆயினும், அவரால் சிறுபான்மையினரின் மனங்களை வெல்ல முடியவில்லை. சிறுபான்மையினருக்கு பௌத்த இனவாதிகளினால் மேற்கொண்ட எதிர் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்குரிய எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. அவற்றை கண்டு கொள்ளவில்லை. குறிப்பாக முஸ்லிம்களுக்கே அதிக அநீதிகளை பௌத்த இனவாதிகள் மேற்கொண்டார்கள். அளுத்கம, பேருவளை, தர்காநகர் பிரதேச முஸ்லிம்களை பௌத்த இனவாதிகளின் தூண்டுதல்களினால் வன்முறையை பிரயோகித்து தாக்கினார்கள். இதனைக்கூட தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இதனால், யுத்த வெற்றி வீரரினால் 2015 ஜனாதிபதி தேர்தலில் வெற்றி கொள்ள முடியவில்லை.
மஹிந்த ராஜபக் ஷவின் மீது சிறுபான்மையிருக்கு இருந்த வெறுப்புத்தான் அவரை தோல்வியடையச் செய்தது. சிறுபான்மையினரின் வாக்குகளினால் ஜனாதிபதி சிம்மாசனத்தில் அமர்ந்துகொண்ட மைத்திரிபால சிறிசேன சிறுபான்மையினரின் மனங்களை வெல்லக் கூடியவாறு நடந்து கொள்ளவில்லை. நன்றி கெட்டதனமாக பௌத்த இனவாதிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தாதிருந்தார். சிறையில் அடைக்கப்பட்டிருந்த முஸ்லிம் விரோத போக்கையுடைய ஞானசார தேரரை பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார். மேலும், மஹிந்தராஜபக் ஷ ஜனாதிபதியாக இருந்த போது அவரோடு இணைந்து செயற்பட்ட இனவாத தேரர்கள் பலரையும் தம்மோடு இணைத்துக் கொண்டார். சிலரை ஆலோசகராகவும் வைத்துக் கொண்டார். இதனால், மஹிந்த ராஜபக் ஷவுக்கும், மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையே முஸ்லிம்களினால் வேறுபாட்டைக் காண முடியவில்லை. இதேவேளை, நல்லாட்சியின் ஓர் அங்கமாக செயற்பட்ட ரணில் விக்கிரமசிங்கவினால் கூட முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியவில்லை.
ஆதலால், முஸ்லிம்கள் ஜனாதிபதி தேர்தலில் தங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை முன் வைக்கக் கூடிய ஒருவருக்கே ஆதரவு வழங்க வேண்டும். மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகவும், ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவும் வருவதற்கும், நல்லாட்சி அரசாங்கம் அமைவதற்கும் முஸ்லிம்களும், முஸ்லிம் கட்சிகளும் அளப்பரிய பங்களிப்பை செய்துள்ளன. ஆனால், அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்களாவார்கள். தமிழர்களின் காணிகளில் அதிகமானவை விடுவிக்கப்பட்ட போதிலும், முஸ்லிம்களின் காணிகள் விடுவிக்கப்படவில்லை. மஹிந்த ராஜபக் ஷவின் அரசாங்கத்தின் காலத்தை விடவும் நல்லாட்சி அரசாங்கத்தில் பௌத்த இனவாதிகளினால் அதிக அடிகளை முஸ்லிம்கள் வாங்கிக் கொண்டார்கள். இந்தக் கசப்பான சம்பவங்களை மறந்து முடிவுகளை எடுத்து ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிக்க முடியாது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தேர்தல் விஞ்ஞாபனத்தின் மூலமாக யார் தீர்வுகளை முன் வைக்கின்றார்களோ அவரையே ஆதரிப்பது பற்றி சிந்திக்க வேண்டியேற்படும் என்று தமிழ்த் தேசிய கூட்மைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இத்தகையதொரு நிலைப்பாட்டை முஸ்லிம் அரசியல் தலைவர்களும் எடுக்க வேண்டும். ஆகவே, ஜனாதிபதி தேர்தல் முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாக அமைய வேண்டும். முஸ்லிம்களின் அச்சம் நீங்க வேண்டும். முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளை மேற்கொள்கின்றவர்கள் கைது செய்யப்பட வேண்டும். அதற்குரிய திட்டங்களும், துணிச்சலுமுள்ள வேட்பாளரையே முஸ்லிம்கள் ஆதரிக்க வேண்டும். இவற்றிற்கு உத்தரவாதமளிக்காத வேட்பாளரை ஆதரிக்கமுடியாது. எந்த வேட்பாளரையும் கண்களை மூடிக் கொண்டு வெறுமனே ஆதரிக்க முடியாது.
எஸ்.றிபான்
vidivelli