வரலாறு நெடுகிலும் இலங்கை முஸ்லிம்கள் மீது அவ்வப்போது சிற்சில இன, மத ரீதியான தாக்குதல்கள் நடந்துவந்திருந்த போதிலும், 30 வருடப் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர் அத்தாக்குதல்கள் சற்றுத் தீவிரமடையத் தொடங்கியுள்ளன. தாக்குதல் உத்திகளும் பல்வேறு வகையாக அமைந்துள்ளன. ஆனால் இவற்றையெல்லாம் புரிந்துகொள்வதிலோ இவற்றுக்கு முகம்கொடுப்பதிலோ முஸ்லிம் சமூகம் எப்போதுமே ஒரே பார்வையை, வழிமுறையையே கொண்டுள்ளது. கால, சந்தர்ப்ப, அரசியல், சமூக, பொருளாதார, கலாசார நிலைமைகளுக்கு ஏற்பத் தன்னைப் புனரமைத்துக் கொள்வதிலும் முஸ்லிம் சமூகம் பின்தங்கியே உள்ளது. இந்நிலையில் நிகழ்காலத்துக்கு முகம்கொடுப்பதிலும் எதிர்காலத்தை எதிர் கொள்வதிலும் முஸ்லிம் சமூகம் பாரிய சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது.
ஏப்ரல் 21 தாக்குல்களின் பின்னர் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் பாரிய அச்சுறுத்தல்களுக்கும் தாக்குதல்களுக்கும் உள்ளாகியுள்ளது. பெளதீக ரீதியான தாக்குதல்களை விடவும் சிந்தனா ரீதியான தாக்குதல்கள் உக்கிரமடைந்துள்ளன. குறிப்பாக ஊடகங்களின் செயற்பாடுகள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளன. பிக்குகளின் நடவடிக்கைகளும் அதிதீவிரமாக அமைந்துள்ளன. இவையனைத்தும் ஒன்றுசேர்ந்து ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் மீதும் வஹாபிஸ – தீவிரவாத – இஸ்லாமியப் பயங்கரவாத முத்திரைகளைப் பலமாகக் குத்திவிட்டுள்ளன.
முஸ்லிம்கள் தம்மீதான குற்றச்சாட்டுகள் குறித்து நாம் நிதானமாக, கூட்டாக உட்கார்ந்து சிந்தித்திருக்கிறார்களா..? சுயபரிசீலனை செய்திருக்கிறார்களா..?
கால, இட, அரசியல், பொருளாதார, கலாசார மாறுதல்களுக்கேற்ப முஸ்லிம் சமூகமும் தன்னைத் தகுதிப்படுத்திக் கொண்டுள்ளதா? சஹ்ரான் என்ன கொள்கைகள் பேசியிருந்தாலும் எவ்வாறான சூழ்நிலைகளில் உருவாகியிருந்தாலும் அதற்கான பொறுப்பிலிருந்து முஸ்லிம் சமூகம் முற்றுமுழுதாகத் தப்பித்துக்கொள்ள முடியுமா ? சஹ்ரானின் செயற்பாடுகளுக்கு எதிராக முறைப்பாடுகள் செய்தோம், தகவல்கள் கொடுத்தோம் என்று சொல்வதோடு கைகழுவிக் கொள்ள முடியுமா? அவர்களின் நடவடிக்கைகள் குறித்துப் பகிரங்கமாகப் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தினோமா? இந்த ஜம்இய்யதுல் உலமாவின் நடவடிக்கைகள் இந்த விடயத்தில் போதுமானவையாக இருந்துள்ளனவா?
முப்பது வருடங்களுக்கும் மேலாக முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்கள் வேண்டுமெனப் பேசப்பட்டு வந்துள்ளபோதிலும் அதற்காக நாம் மேற்கொண்டுள்ள ஆக்கபூர்வமான முயற்சிகள்தான் என்ன? நமது உடைக் கலாசாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை நாம் பரிசீலனை செய்ய வேண்டியதில்லையா?
பல்வேறு வகையான குற்றச்சாட்டுகள் நாளாந்தம் எழுகின்றன. நாமும் எங்காவது எதையாவது யாராவது சொல்லிச் சமாளித்துக் கொண்டிருக்கிறோம். விளக்கம் சொல்லப்போகும் போது வேறு பிரச்சினைகளையும் உருவாக்கி விடுகிறோம். பள்ளிவாசல்களில் வாள்கள் எப்படி, எதற்காக வந்தன எனும் கேள்விக்கு நம்மவர்கள் கொடுத்த பதில்களும் அதனால் விளைந்த கேலிக்கிடமான கருத்தாடல்களும் உங்களுக்கு மறந்திருக்க முடியாது.
பிரச்சினைகளை அடையாளம் காண்பதற்கும் அவற்றை வகைப்படுத்திக் கொள்வதற்கும் முன்னுரிமை அடிப்படையில் அவற்றைப் பிரித்துப்பார்த்து அதன் அடிப்படையில் அவற்றை எதிர்கொள்வதற்குமான ஒரு செயற்திட்டம் எம்மிடமில்லை. எல்லாப் பிரச்சினைகளையும் எல்லோரும் அணுக முடியாது, அணுகவும் கூடாது. ஒவ்வொரு பிரச்சினைக்கும் அத்துறை சார்ந்த விஷேட அறிவும் ஆற்றலும் அனுபவமும் உள்ளவர்களே பதிலளிக்கும் ஒரு திட்டத்தை நாம் உருவாக்க வேண்டும்.
அண்மையில் நடந்த தெஹிவளை மாநாடு மாற்றுச் சமூகத்தாரின் -புலனாய்வுத் துறையினரின் – அரச அதிகார பீடங்களின் தீவிர அவதானிப்பைப் பெற்றுள்ளது. இவ்வாறு பல்லாயிரக்கணக்கில் ஒன்று திரண்டு அடிக்கடி அவர்களின் கவனக்குவிவை -உள்ளார்ந்த ஐயங்களை – அச்சங்களை நாமும் வலிந்து அதிகப்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்வதே அறிவுடைமையாகும்.
ஆர்ப்பாட்டம், அல்லோலகல்லோலம் இல்லாமல் சாணக்கியமாகக் காய்களை நகர்த்து வேண்டும். நாம் இவ்வாறு நமக்குள் ஓரிடத்தில் பாரிய அளவில் பல்லாயிரக்கணக்கில் ஒன்று திரண்டு கோஷங்களை எழுப்புவதனூடாக நமக்கு எதிரான மாற்றுச் சக்திகளையும் தூண்டி விடுகிறோம். நம்மைப் போலவே அவர்களும் திரண்டெழுந்தால் நிலைமை எவ்வளவு ஆபத்தானதாக மாறக்கூடுமென்பதை ஏனோ சிந்திக்கத் தவறிவிடுகிறோம். வெறும் 10%மான நாம் 100% மொத்தமாக ஒரே அணியில் சேர்ந்து விட்டாலும் (இந்த உலகம் உள்ளவரை அப்படி நடப்பது சாத்தியமேயில்லை) 70% அவர்களில் அரைவாசிப்பேர் மாத்திரம் ஒன்று திரண்டாலும் நம்மால் அவர்களை எதிர்கொள்ளவே முடியாது.
பல்லாயிரக்கணக்கான பாமரர்கள் ஓரிடத்தில் கூடிச் சத்தமிடுவதைவிடவும் பத்துப் புத்திஜீவிகள் சத்தமில்லாமல் கலந்தாலோசித்துக் காரியங்களைச் சாதிப்பதே சிறந்தது.
அவர்கள் உண்மையாகவே உள்ளார்ந்த அச்சத்துக்கு ஆளாகி விட்டுள்ளார்கள். அதில் நன்மைகளும் தீமைகளும் கலந்தே உள்ளன. நமது வெளிப்புறக் கோலங்களாலும் படாடோபமான வாழ்க்கை அமைப்பாலும் அனல்பறக்கும் பேச்சுக்களாலும் நாம் அவர்களை வீணாக அச்சமூட்டி, பதட்டமுறச் செய்திருக்கிறோம். இது நமக்கெதிராக நாமே செய்துகொண்டுள்ள அநியாயமாகும்.
பொறுமையாக இருப்போம். எல்லாம் சரி வரும். தமிழ்ச் சகோதரர்களை அடக்கி ஒடுக்கி அழித்துக் கட்டுப்பத்தியதைப் போல எம்மையும் கையாளத்தான் அவர்கள் காய்களை நகர்த்துகிறார்கள். நாம் அவர்களது சதிகளில் சிக்கிக் கொள்ளக்கூடாது.
நாம் அவர்கள் மீது ஒரேயொரு கல்லை எறியும் வரைக்கும்தான் காத்துக் கொண்டிருக்கிறார்கள் – ஒரு கோடிக் கற்களை நம்மீது திருப்பி எறியும் திட்டத்தோடு வெறிகொண்டு அவர்கள் வேண்டுமென்றே நம்மைச் சீண்டுவதும் கோபமூட்டுவதும் நம்மை ஆத்திரப் படுத்தி நமது நிதானத்தைக் குழப்பத்தான் என்பதை எப்போதும் நினைவில் கொண்டு மிக மிக நிதானமாக நடந்து கொள்வோம் உறவுகளே !
அரசாங்கமும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த நாட்டின் எல்லா ஜனாதிபதிகளும் பெளத்த மத பீடங்கள் போடும் கட்டளைப்படியே செயற்பட வேண்டும், இந்த நாட்டில் பெளத்த ராஜ்யம் உருவாக வேண்டும், இந்நாட்டில் உள்ளோர் எல்லோரும் சிங்கள இனத்தவரே, வேறு இனத்தார் என்று தனியாக வேறெந்த இனமும் இல்லை என்று சிங்களப் பேரினவாதச் சக்திகள் கூச்சலிடுகின்றன! மறுபுறம், முஸ்லிம்களின் எல்லா விவகாரங்களையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையே தீர்மானிக்க வேண்டும் என முஸ்லிம் உணர்வாளர்கள் கூச்சலிடுகின்றனர். அவர்களுக்கு பெளத்த மதம் ! இவர்களுக்கு இஸ்லாமிய மதம் ! எப்படியோ இரு இனத்தாருக்கும் “மதம் பிடித்துள்ளது” ஒவ்வோரினமும் எல்லைமீறி அவரவர் மதங்களில் வெறிகொண்டு “மதம்பிடித்து” கூச்சலிடத் தொடங்கினால் இந்நாடு நரகமாகிப் போகும்!
பல்லினச் சமூகங்கள் வாழுமொரு தேசத்தில் இனங்களின் மதங்கள், மனிதர்களின் தனிப்பட்ட வாழ்வுக்கு வெளியே எல்லைகடந்து பொதுவாழ்விலும் தீவிரமாகச் செயற்படத் தொடங்கினால், இத்தேசத்தில் மனிதம் மாண்டுவிடும். நுகேகொடை, போகம்பறைப் பிரகடனங்களுக்கும் தெஹிவளைப் பிரகடனத்திற்கும் இடையே என்ன பெரிய வித்தியாசம் உள்ளது?!
முகம் மூடுவதைத் தடைசெய்தே ஆகுவோமென்று அரசு கடுமையாக முனைப்புக் காட்டுவது எவ்வளவு தவறானதோ அதே அளவுக்குத் தவறானதே முகத்தைக் கட்டாயம் மூடவே வேண்டுமென்று நம்மில் சிலர் அடம்பிடிப்பதுவும் !
இந்த நாட்டின் சமூக, அரசியல், கலாசார மற்றும் பெளதீகச் சூழலைப் பொறுத்தவரையிலும், முகம் மூடுதலென்பது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது, பொருத்தமும் இல்லாதது. நிகாப் தடைக்கான சட்ட மூலத்தைக் கடுமையாக எதிர்ப்போம். அதேமாதிரி முகத்தை மூடியே ஆகவேண்டுமென்ற கடும்போக்கையும் எதிர்க்க வேண்டியுள்ளது.
நமக்கு முன்னாலுள்ள அடிப்படைச் சிக்கல் நமக்கான ஒரு தேசியத் தலைமைத்துவம் இல்லாமையாகும். மார்க்கத் தலைமைகளுக்கு நாட்டின் அரசியல், சமூக, கலாசார, சட்ட விவகாரங்களில் போதிய தெளிவில்லை…
முஸ்லிம் அரசியல் தலைமைகளில் அநேகருக்கு மார்க்கம், அதன் அடிப்படைகள், மார்க்கத்திலுள்ள கொள்கைகள் மற்றும் கலாசார விவகாரங்கள் எனும் இரண்டுக்குமான வேறுபாடுகள் குறித்த போதிய தெளிவில்லை.
முஸ்லிம் புத்திஜீவிகள் என அறியப்பட்டுள்ளோருக்கும் மார்க்கம் குறித்த பரந்த விளக்கமோ ஈடுபாடோ பற்றோ போதியளவு இல்லை. அவர்களுக்குத் தேவைப்படுவதெல்லாம் அவர்களது வசதி வாய்ப்புகள், கெளரவம், செல்வாக்கு மட்டுமே. அதற்காக அவர்கள் எதையும் கைவிடத் தயாராக இருக்கிறார்கள்.
ஆக, மார்க்க அறிஞர்கள் – அரசியல் தலைவர்கள் – புத்திஜீவிகள் ஆகிய மூன்று துறையினரும் தமக்குத் தெரியாத அடுத்த துறைகள் குறித்து முழுமையான, தீர்க்கமான எந்த முடிவுகளையும் எடுப்பது ஆபத்தானது. ஆகவே, முஸ்லிம்கள் குறித்த எந்த விவகாரத்திலும் இம்மூன்று துறையினரும் தனிப்பட்ட ரீதியாகத் தீர்மானங்களை எடுக்கக்கூடாது.
முஸ்லிம்கள் தொடர்பான எல்லா விவகாரங்களிலும் இம்மூன்று துறையினரும் ஒரே இடத்தில் அமர்ந்து, மனம்விட்டுப் பேசி, சுமுகமான கூட்டுத் தீர்மானங்களையே எடுக்க வேண்டும். இத்தகைய பொது உடன்பாடுகளின் பின்னரே ஊடகங்களுக்கு முன்னால் கருத்துத் தெரிவிக்க வேண்டும் !
முஸ்லிம்களின் ஒட்டுமொத்த விவகாரங்களையும் கையாளும் அதிகாரத்தை, உரிமையை எந்தக் காரணத்தையிட்டும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கைகளில் மட்டும் விட்டு வைத்திருப்பது மிகப்பெரும் ஆபத்தைக் கொண்டுவரலாம். முஸ்லிம் சமூகத்துக்குத் தேவை, மார்க்க அறிஞர்கள் – அரசியல்வாதிகள் – புத்திஜீவிகள் அடங்கிய ஒரு தேசிய தலைமைத்துவ சபையேயாகும் !
இப்படிச் சொல்லும்போது சிலர், இப்போதும் முஸ்லிம் கவுன்சில் ஒஃப் ஸ்ரீலங்கா மற்றும் ஷூறா கவுன்சில் போன்ற அமைப்புகள் உள்ளனவே என்கிறார்கள். சரி, இருக்கலாம். ஆனால் அவர்களால் தமக்கான பணிகளைத் தேசிய மட்டத்தில் மிகச்சரியாகச் செய்ய முடிந்துள்ளதா..? இல்லையே. ஒரேயொரு பிரச்சனையைத்தானும் இவர்களால் கையாள முடியவில்லையே. அது ஏன், அதற்கான காரணமென்ன என விசாரித்துப் பார்த்தபோது பல காரணங்கள் சொல்லப்பட்டன. குறித்த மதத்தலைமைகளே தமக்கான தடைகளாக இருப்பதாகச் சொல்கிறார்கள். அப்படியாயின் அவர்கள் அதை வெளிப்படையாக மக்களிடம் சொல்ல வேண்டும்.
இவ்வாறு சமூக நிறுவனங்கள் வெளிப்படையாகப் பேசாமல் விடயங்களை மூடிமறைத்துவருவதால் எந்தப் பிரச்சனைகளும் தீரப்போவதில்லை. தேசிய ரீதியில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசியல் தலைமைகள் தமக்கான பொறுப்புகளையும் உரிமைகளையும் மறந்து ஏதோ குறிப்பிட்ட சில மார்க்க அறிஞர்களின் கட்டுப்பாட்டில் மாத்திரம் இயங்குவதை அனுமதிக்க முடியாது. பெரும்பான்மைத் தலைமைகள் மல்வத்தைப் பீடங்களின் கால்களில் வீழ்ந்து அரசியல் செய்வதற்கும் நமது எம்.பிக்கள் உலமா சபையின் கால்களில் வீழ்வதற்குமிடையில் என்ன வித்தியாசம் உள்ளது?
இன்றைய சூழலில் எழக்கூடிய முக்கிய பிரச்சனையாக உழ்ஹிய்யா உள்ளது. எனவே அது குறித்துச் சிந்திக்கவேண்டியுள்ளது. உழ்ஹிய்யாவிற்குப் பதிலாக அதன் பெறுமதியைக் கொடுத்தல்.
உழ்ஹிய்யாவைப் பொறுத்தவரை அதனது பெறுமதியைக் கொடுப்பதைப் பார்க்கிலும் அதனை அறுத்துப் பலியிடுவதே மேலானது என்பதே அநேகமான அறிஞர்களது கருத்தாகும்.
இங்கு யாரும் பெறுமதியைக் கொடுப்பது கூடாது என்று கூறவில்லை. அறுத்துப் பலியிடுவது சிறப்பானது என்ற கருத்தைத்தான் முன்வைத்துள்ளார்கள்.
ஏற்கெனவே குறிப்பட்டது போல இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறுப்புக் கடமையில்லை என்ற கருத்தைக் கொண்டதனால்தான் காசுக்கு இறைச்சியை வாங்கி உழ்ஹிய்யா கொடுத்தார்கள். எனவே பணப் பெறுமதியைக் கொடுப்பதும் ஆகுமானதே என்ற கருத்தை அதிலிருந்து எடுக்க முடியும்.
பெறுமதியைக் கொடுக்காது உழ்ஹிய்யாவைக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியவர்கள் அனைவரும் அறுத்துப் பலியிடும் சுன்னா இல்லாமல் போய்விடக் கூடாது என்ற நியாயத்தைத்தான் முன்வைத்துள்ளார்கள். கலாநிதி யூஸுப் கர்ளாவி அவர்களின் அபிப்பிராயப்படி ஒருவர் தனக்காக உழ்ஹிய்யா வணக்கத்தை நிறைவேற்ற நாடினால் அறுத்துப் பலியிடுவதே மிகவும் சிறந்தது. ஆனால் மரணித்த ஒருவருக்குப் பகரமாக உழ்ஹிய்யா கொடுக்கும்போது பெறுமதியைக் கொடுப்பது சிறந்தது என அவர் கூறுகிறார்.
நாம் சிறுபான்மையாக வாழும்போது எமது நாட்டின் சட்ட திட்டகங்களை அனுசரித்துப் போக வேண்டியுள்ளதாலும் ஜீவகாருண்யம் பற்றிக் கூடுதலாகப் பேசுகின்ற நாடுகளில் ஒன்றாக இலங்கை இருப்பதாலும் சில நிபந்தனைகளுடன் பெறுமதியைக் கொடுப்பதற்கான முடிவைத் தெரிவு செய்வது மிகப் பொருத்தமானதாக அமையலாம்.
உழ்ஹிய்யா விவகாரத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் உள்ள சட்டத்தீர்ப்புக்களை நாம் அச்சொட்டாகப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. அவ்வாறே குறித்த ஒரு மத்ஹபின் எல்லைக்குள் இருந்து மாத்திரம் சிந்திக்க வேண்டிய தேவையும் இல்லை. சிந்தனைகளுக்குச் சுவர் எழுப்புவதன் மூலம் காலத்தின் தேவையை நிவர்த்தி செய்யும் தீர்வுகளை வெளிக்கொணர முடியாது.
நாம் வாழும் காலத்தில் உழ்ஹிய்யா கடமையை நிறைவேற்ற அதன் பெறுமதியைத் தர்மமாகக் கொடுப்பது உழ்ஹிய்யாவின் இலக்குகளை அடைவதற்குப் போதுமாயின் அதனை அனுமதிக்கலாம். அதனால் அறுத்துப் பலியிடும் சுன்னா இல்லாமல் போகாது. காரணம் இது ஒரு காலத்தின் தேவை மட்டுமே. நாட்டின் அனைத்துப் பிராந்தியங்களும் இதனைப் பின்பற்ற வேண்டிய அவசியமும் கிடையாது. மிகுந்த கெடுபிடியுள்ள பிரதேசங்சளில் மாத்திரம் பெறுமதியைக் கொடுப்பதற்கான நடைமுறைய அமுல் படுத்தலாம்.
அசாதாரண ஒரு சூழ்நிலையில் உழ்ஹிய்யா தொடர்பாக எப்படிச் சிந்திப்பது என்பதற்குச் சிரியா நாட்டின் உலமா சபை ஒரு முன்னுதாரணமாகும். அவர்கள் உழ்ஹிய்யாவின் பெறுமதியை சிரியா மக்களின் துயர் துடைப்பதற்காக ஸதகா செய்வது உழ்ஹியா கடமையை நிறைவேற்றுவதை விடச் சிறந்தது எனக் குறிப்பிட்டுள்ளனர்.
ஒரு காலத்தில் ஸகாதுல் பித்ர் பணமாக வசூலிக்க முடியாது என்ற கருத்து வலுப்பெற்றிருந்தது. இன்று இலங்கையில் இருந்து கடல்கடந்த தேசத்திற்குச் சென்று அதனை வசூலித்து மக்கள் பயணடையச் செய்கின்றோம். இது காலமாற்றம் வேண்டிநிற்கும் சிறந்த தீர்வின் விளைவாக வந்த பயனாகும்.
அவ்வாறே கொஞ்ச காலத்திற்கு முன்பு ஹஜ் காலத்தில் அறுத்துப் பலியிடும் மாமிசத்தை வெளியே கொண்டு போக முடியாது என இறுக்கமான சட்டம் காணப்பட்டது. அது ஹராம் என்ற பத்வா சிந்தனைக்கு முடிச்சாகக் காணப்பட்டது. அதன் விளைவாகப் புனித மக்கா நகரமே துர்நாற்றம் எடுத்தது.
தேவைக்கதிகமான குர்பானி இறைச்சி கழிவுப் பொருளாகக் குவிந்து மலைகளாகக் காட்சி தந்தன. சுற்றுச் சூழல் மாசடைந்து ஆரோக்கியம் பாதிப்படைய ஆரம்பித்த போதுதான் பொருத்தமான தீர்ப்புக் கிடைத்தது. இன்று ஹஜ் காலத்தின் உழ்ஹிய்யா இறைச்சி உலக மக்கள் யாவரும் பயனடையும் பாரிய திட்டமாக மாறியுள்ளது.
கால மாற்றங்கள், நிர்ப்பந்தங்களைத் தரும்போது மனிதன் இன்னொரு தீர்வை நோக்கித் தள்ளப்படுகின்றான். சட்டத்தின் வரம்புகளை மீறாமல் பாரம்பரிய சிந்தனையை உடைத்துக் கொண்டு வெளியேறுவது தவறல்ல.
உழ்ஹிய்யாவின் பிரதான இலக்கை அடைந்து கொள்ளும் வகையில் பெறுமதியைக் கொடுப்பது சிறந்ததாயின் அந்த தீர்மானத்தைத் தெரிவு செய்வது நன்மைகளையே கொண்டுவரும். தேவையான நிபந்தனைகளுடன் அந்தத் தெரிவு அமுலுக்கு வந்தால் நிச்சயமாக இஸ்லாமிய சிந்தனையை முன்வைப்பதற்குப் புதிய வாயில்கள் திறக்கப்படலாம்.
ஐரோப்பிய நாடுகளில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு உழ்ஹிய்யா கடமையை நிறைவேற்றுவதற்குப் பல தடைகள் இருந்தன. குர்பான் காலம் வரும் போது கால்நடைகளுக்கான விலையேற்றம், அறுப்பதற்கு முன்பு பலியிடும் மிருகத்தைக் கட்டாயம் மயக்க வேண்டும் என்ற அரச கட்டளை, சில அமைப்புக்கள் இது மிருகவதை என கூப்பாடு போடுவதால் வரும் அசௌகரியங்கள் எனப் பல வழிகளில் உழ்ஹிய்யா வணக்கத்தை நிறைவேற்றுவதில் தடைகள் இருந்தன. எனவே நாட்டுக்கு வெளியே அதன் பெறுமதியைக் கொடுத்து அந்த சுன்னாவை அவர்கள் செய்வதற்கு இஸ்லாமிய அறிஞர்கள் தீர்ப்பு வழங்கினார்கள். அதனால் தேவையுடையவர்கள் நன்மை பெற்றார்கள். இதுவும் பாரம்பரிய பிக்ஹ் என்ற வேலியை தாண்டிச் சிந்திக்கின்றபோது மக்கள் பெறும் நலனாக அமைந்தது என்பதை நாம் மனங்கொள்ள வேண்டும்.
அதேபோல் ரோஹிங்கிய முஸ்லிம்கள் முகாம்களில் பட்டினியால் சாகும் போதும், சிரியா மக்கள் இருப்பிடமில்லாமல் ஐரோப்பிய நகரங்களில் நாதியற்றவர்களாகத் திரியும்போதும், இன்னும் பல நாடுகளில் முஸ்லிம்கள் வறுமையில் வாடும்போதும் உழ்ஹிய்யாவிற்கு முன்னுரிமை வழங்காமல் அந்தப் பணத்தை வறுமைக்கு தருமாறு பல சட்ட அறிஞர்கள் அறைகூவல் விடுத்தனர்.
இது காலத்தின் தேவையை உணர்ந்து நபிலான ஒரு வணக்கத்தை நிறைவேற்ற முன்பு கடமையைச் செய்ய வேண்டுமென்ற நபிகளாரின் வழிகாட்டல்களை மிகக் கவனமாக உள்வாங்கியதால் ஏற்பட்ட மாற்றங்களாகும். இன்று இலங்கையிலும் இப்படிச் சிந்திக்க வேண்டிய தேவை அதிகமாகவே உள்ளது.
ஏப்ரல் 21 பின்னர் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையில்தான் நாம் உழ்ஹிய்யா வணக்கத்தை நிறைவேற்றும் பருவகாலம் வருகிறது. பலர் சிறைச்சாலைகளில் வீணாக அடைக்கப்பட்டுள்ளனர். அதனால் ஏற்பட்ட பெரும் பொருளாதாரச் சுமை அந்தக் குடும்பங்களின் வழமையான வாழ்வில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த வருடம் உழ்ஹிய்யாவின் பெறுமதிகளை வழங்குவதற்கான கருத்துப் பற்றி யோசிப்பதே பொருத்தமானது. அறிஞர்கள், சிவில் சமூக நிறுவனங்கள் இதன் சாதக பாதங்களையும் நாட்டுச் சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டு ஆரோக்கியமான கருத்தாடல்களை மேற்கொண்டு ஒரு சாதகமான முடிவுக்கு வருவது பயனுள்ளதாக அமையும்.
முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத் திருத்தத்திலும் இப்போது ஓரளவு இணக்கப்பாட்டு நிலையொன்று ஏற்பட்டுள்ளது. பெண் காதிகள் நியமனம் ஏற்கப்படவில்லை. திருமண வயது பதினெட்டாக உடன்பாடு காணப்பட்டுள்ளது. இதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. தேவைப்படும் போது காதியின் முன்னனுமதியோடு பன்னிரண்டு வயதுக்கு மேற்பட்ட பெண்களும் திருமணம் செய்து கொள்ளலாம் எனும் விதிவிலக்கு வாசகத்தையும் சேர்த்துத் திருத்தம் செய்துவிட்டால் அந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும்.
மத்ரஸாக்கள் குறித்த வாத விவாதங்கள் சாதகமான முடிவுகளுக்கே இட்டுச்செல்லும். எல்லாவற்றையும் அவநம்பிக்கை, சந்தேகம், அச்சத்தோடே பார்க்க வேண்டியதில்லை. ஆக்கபூர்வமாக விடயங்களை ஆலோசிப்போம், ஒத்துழைப்போம். எல்லா விடயங்களையும் எங்களுக்குத் தேவையான முறைகளில் மட்டுமே நூற்றுக்கு நூறுவீதம் செய்துகொள்ள வேண்டும் என நினைப்பதும் பொருத்தமானதல்ல. நாட்டின் தேசிய நலன், தேசிய ஒருமைப்பாடு குறித்தும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
இன்னும் சில மாதங்களில் முக்கியமான தேர்தல்கள் வருகின்றன. அதுவரைக்கும் இந்தக் கலவர – குளப்ப நிலையைத் தொடர்ந்தும் வைத்துக்கொள்ளவே எல்லா அரசியல் சக்திகளும் விரும்பும். எல்லா அரசியல் சக்திகளும் எந்தவிதமான அரசியல் நிகழ்ச்சித் திட்டங்களும் இல்லாமலேயே இருக்கின்றன. எல்லோருக்கும் வாக்குக்கொள்ளைக்கு இருக்கும் ஒரே துரும்புச் சீட்டு ஏப்ரல் 21, இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமிய பயங்கரவாதம், வஹாபிஸம், அரபுமயமயமாக்கம், சனத்தொகைப் பெருக்கம் போன்ற சொற்றொடர்கள் மட்டும்தான். தேர்தல்கள் முடிந்தவுடன் இக்கோஷங்களும் ஓய்வுக்குப் போகும். மீண்டும் இன்னொரு தேர்தல் வரும்போது மீண்டும் இக்கோஷங்கள் வீதிக்கு வரும். இந்த யதார்த்தத்தை நாம்தான் புரிந்து கொண்டு புத்திசாலித்தனமாகக் காய்களை நகர்த்த வேண்டும்.
முதலில் நமது அரசியல் தலைமைகள் எல்லாவற்றுக்கும் உலமா சபையின் பின்னால் கண்களை மூடிக்கொண்டு போவதை உடனே நிறுத்தியாக வேண்டும் அண்மைக்காலமாக முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்டுவரும் முக்கால்வாசிப் பிரச்சினைகளுக்கும் மூலகாரணம் உலமா சபைதானா என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
தமக்குள் ஒரு கருத்து, ஊடகங்களுக்கு முன்னால் இன்னொரு கருத்து, ஆபத்து நிலையில் ஒரு கருத்து, ஆபத்து நீங்கியதும் வேறொரு கருத்து என்று ஒட்டுமொத்தச் சமூகத்தையும் குழப்பிக்கொண்டிருக்கிறது ஜம்இய்யத்துல் உலமா சபை. அண்மைய தெஹிவளை மாநாடு, கால – சூழலுக்குப் பொருத்தமற்ற ஒரு முயற்சி என்பதைச் சொல்லி வைக்க விரும்புகிறோம்.
முஸ்லிம் சமூகத்தின் ஒட்டுமொத்த விவகாரங்களையும் முழுக்க முழுக்க உலமா சபையோ வியாபார அரசியல் தலைமைகளோ கையாள்வது மிகவும் ஆபத்தானது. நமக்குத் தேவை நிதானமும் அறிவும் சிந்தனைத் தெளிவும் கொண்ட ஒரு ”புத்திஜீவிகள் தலைமைத்துவ சபை” யே. அதன் கீழ் தான் உலமா சபையும் அரசியல் தலைமைகளும் இயங்க வேண்டும்
அஜாஸ் முஹம்மத்
vidivelli