தனது நீண்டநாள் ஆசையான ஹஜ் செய்யும் கனவினை இன்னும் ஒரு சில நாட்களில் இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் உள்ள படுலவாங் கிராமத்தைச் சேர்ந்த 95 வயதான யுகி நிறைவேற்றவுள்ளார். அவருடைய 3 மகன்களுடனும் 2 பேரப்பிள்ளைகளுடனும் இவ்வருடம் அவர் ஹஜ் கடமைகளை நிறைவேற்றவுள்ளார்.
அவர்கள் புறப்படுவதற்கு முன்னரே சுகாதாரப் பரிசோதனைகளை சரியாக மேற்கொண்டுவிட்டார்கள். அவர்களுடைய புதிய கடவுச்சீட்டுகள் ஜகார்தாவில் உள்ள சவூதி தூதரகத்தில் கையளிக்கப்பட்டது. அதே நேரம் இந்தேனேஷியாவுக்கான சவூதி தூதுவர் அஸ்ஸாம் பின் அபெத் அல் தக்காபியையும் இதன் போது சந்தித்தார்கள்.
யுகி என்பது தற்போது பல இந்தோனேஷியர்களின் பாவனையில் உள்ள ஒரு பெயராகும். அவரும் அவருடைய குடும்பத்தாரும் சவூதி மன்னர் சல்மானினால் ஹஜ் விருந்தாளிகளாக அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை இன்னமும் அவர்களால் நம்ப முடியவில்லை.
“நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். இப்படியொரு விடயம் நடக்கும் என்று நான் கற்பனை செய்துகூட பார்க்கவில்லை. மக்காவில் வந்து இறங்கியவுடனே முதலில் தொழ வேண்டும் என்றே நினைத்தேன். என்னை ஹஜ் கடமைக்காக அழைத்தமைக்கு மிக்க நன்றிகள்” என அரப் நியூஸ் செய்தித் தளத்துக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.
யுகி தனது இரு மகள்களுடனும் இணைந்து ஹஜ் செய்ய வேண்டும் என்ற தனது ஆசையையும் அதற்கு வாய்ப்பில்லாத தனது குடுமபத்தின் வறுமை நிலைமையையும் கூறி ஒரு காணொலியைத் தயார் செய்து இணையத்தில் வெளியிட்டார். யூடியூபில் இந்த காணொலி வைரலானது மாத்திரமின்றி பட்டத்துக்குக்குரிய இளவரசர் பின் சல்மானின் பார்வையையும் சென்றடைந்தது. அதன் பின்னரே இவர்களுக்கான ஹஜ் அழைப்பிதழ் கிடைத்தது.
யுகியுடைய மகள் நனா ரொஹானா தெரிவித்ததன்படி குறித்த காணொலி ரமழானுக்கு முன்னர் தனது வீட்டில் வைத்து பதிவு செய்யப்பட்ட ஒன்றாகும். அந்த வீடு தலைநகரில் இருந்து 95 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள மிகவும் பிரசித்திபெற்ற சுற்றுலாத்தளமான சிபனஸ் என அழைக்கப்படும் மலைப்பாங்கான பிரதேசத்தில் அமைந்துள்ளது.
யுகிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஒரு வழமையான அரேபிய நண்பர் இருந்தார். அவருடைய பெயர் அலி. அவர்தான் இந்த காணொலியை தயாரிக்குமாறு ஒரு யோசனையை வழங்கினார். அவர்தான் அந்த காணொலியில் இருந்த பட்டத்து இளவரசர் சல்மானின் புகைப்படத்தையும் அவர்களுக்கு வழங்கினார்.
“நான் எனது வீட்டில் அலியுடன் சாதாரணமாக பேசிக்கொண்டிருந்தேன். ‘உங்களுக்கு ஹஜ்ஜுக்கு போக வேண்டுமா’ என்று அவர் கேட்டார். எனக்கு போக வேண்டும்தான், ஆனால் அதற்கான பணம் என்னிடம் இல்லை என்று நான் கூறினேன். அதைக் கேட்ட அவர் ‘அப்படியென்றால் மன்னரிடம் கூறுவோம்’ என்று விளையாட்டாக கூறினார். (விளையாட்டாக கூறுகிறார் என்றுதான் நினைத்தேன்)” என யுகி தெரிவித்தார்.
நோன்புப் பெருநாளுக்குப் பிறகு அந்த காணொலியை இணையத்தில் தான் பதிவிடுவதாக அலி கூறியதாக நனா தெரிவித்தார். இனந்தெரியாத ஒருவரிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பில் யுகி ஹஜ் செய்வதற்காக அழைக்கப்பட்டிருக்கிறார் என்று கூறும் வரை அந்த காணொலிக்கு என்ன நடந்தது என்று யுகிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் தெரியவே தெரியாது.
முதலில் அவர்கள் யாரும் அதை நம்பவில்லை. அத்துடன் அது உண்மையாக இருந்தாலும் யுகியை அவரது வயோதிபம் கருதி தனியாக தாம் அனுப்புவதில்லை என்ற முடிவோடுதான் இருந்தார்கள். ஆனால் அடுத்தநாள் தூதரகத்தில் இருந்து வந்த தொலைபேசி அழைப்பையும் தூதுவருடனான சந்திப்பையும் தொடர்ந்து அந்த அழைப்பு உண்மை என நிரூபணமானது.
“எனக்கு உண்மையிலேயே மகிழ்ச்சி. இது உண்மையாகவே இருந்து விட்டால் நான் இன்னும் சந்தோஷமடைவேன். எனக்கு மெய்சிலிர்க்கின்றது. கைகள் குளிரடைகின்றன. நான் அல்லாஹ்வுக்கு மிக்க நன்றியுடையவனாக இருக்கின்றேன். எனது வாழ்நாளில் ஒரு தூதரகத்திற்கு கால் வைத்தது இதுவே முதல் தடவை. நான் தூதவருக்கு நன்றி செலுத்துகிறேன். அல்ஹம்துலில்லாஹ். ஒரு காணொலி வைரலானதால் கிடைத்த இந்த வாய்ப்பு அல்லாஹ் தந்த பரிசு” என யுகி தெரிவிக்கிறார்.
இந்த அழைப்பை அல்லாஹ்விடம் இருந்து கிடைத்த ஒரு பெரிய பரிசாக நனா நோக்குகிறார். எவ்வளவு பெரியதொரு பணத்தொகையையும் இந்த சந்தேஷத்துடன் ஒப்பிட முடியாது என நனா தனது மகிழ்ச்சியை வர்ணிக்கிறார்.
“ஹஜ்ஜுக்கு செல்ல வேண்டும் என்பது எனது தந்தையின் நீண்ட நாள் கனவாகும். அது இப்போது நனவாகிறது. அல்ஹம்துலில்லாஹ். இந்த கனவை நனவாக்கிய மன்னர் சல்மானுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என நனா தெரிவித்தார்.
தற்போது யுகியும் அவரது குடும்பத்தினரும் புனித மக்கா நகரை வந்தடைந்துள்ளனர். அவர்களுக்கு விமான நிலையத்தில் விசேட வரவேற்பளிக்கப்பட்டது. யுகி தனது 95 ஆவது வயதில் தற்போது புனித யாத்திரையில் பங்கெடுத்துள்ளார். இறைவன் நாடினால், நீங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் சரி தனது இல்லத்துக்கு அழைப்பான் என்பதற்கு யுகியின் கதை நல்லதொரு உதாரணம்.
எம்.ஏ.எம். அஹ்ஸன்
vidivelli