கத்திகள், கோடரிகளை பள்ளிவாசலுக்கு மீளவும் கையளிக்க முற்பட்ட விவகாரம்
பதில் பொறுப்பதிகாரி இடைநிறுத்தம்
பள்ளிவாசல் ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட கத்தி மற்றும் கைக் கோடரிகளை அனுமதியின்றி மீண்டும் பள்ளிவாசலுக்கு வழங்க முற்பட்ட வெலம்பொட பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியை பணியிலிருந்து இடை நிறுத்தியுள்ளதாக தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர, சம்பவம் தொடர்பில் கண்டி பிரதி பொலிஸ் மா அதிபரின் கீழ் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.
வெலம்பொடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிறிதொரு விசேட பணியில் ஈடுபட்டிருந்ததனால், குறித்த பொலிஸ் நிலையத்திற்கு பதில் பொறுப்பதிகாரியாக பொலிஸ் பரிசோதகர் பந்துல பண்டார பணியில் அமர்த்தப்பட்டிருந்தார்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் 21 சம்பவத்திற்குப் பின்னர் கண்டி – வெலம்பொடை பகுதியின் பள்ளிவாசலிருந்து 76 கத்திகளும் , 13 கைக் கோடரிகளும் மீட்கப்பட்டு வெலம்பொடை பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தன. இவ்வாறு வைக்கப்பட்டிருந்த வழக்கு பொருட்களை நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியாக கடமையிலிருந்த பொலிஸ் பரிசோதகர், எந்த உயரதிகாரிகளினதும் அனுமதியின்றி மீண்டும் பள்ளிவாசலுக்கு கைளளிக்க முயற்சிப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து விரைந்து செயற்பட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இவ்வாறு வழக்கு பொருட்களை கையளிப்பதை தடுத்துள்ளார்.
மேற்படி விடயம் தொடர்பில் கவனம் செலுத்திய பொலிஸ் தலைமையகம் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கண்டி பிரதி பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளது. .
இதற்கமைய கண்டி பிரதி பொலிஸ் மா அதிபர் வெலம்பொடை பொலிஸ் நிலையத்திற்கு சென்று சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார். அத்துடன் வெலம்பொட பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி தற்காலிகமாக பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார்.
அதேவேளை இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பிரதி பொலிஸ்மாதிபரின் தலைமையில் விஷேட பொலிஸ் குழு முன்னெடுத்து வருகின்றது.
vidivelli