ஹஜ் முகவர்களால் இறுதி நேரத்தில் கைவிடப்பட்டிருந்த 123 ஹஜ் யாத்திரிகர்களில் 115 பேர் நேற்றுக் காலை சவூதி விமான சேவையூடாக ஹஜ் கடமைக்காக சவூதி அரேபியா நோக்கிப் பயணமானார்கள்.
ஏனைய 8 ஹஜ் யாத்திரிகர்கள் ஹஜ் முகவர் ஒருவருக்கு செலுத்திய ஹஜ் கட்டணம் தொடர்பான பிரச்சினை குறிப்பிட்ட ஹஜ் முகவரினால் தீர்க்கப்படாமையினால் அவர்கள் 8 பேரும் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு தடையேற்பட்டது.
இறுதி நேரத்தில் ஹஜ் முகவர்களால் கைவிடப்பட்டிருந்த ஹஜ் யாத்திரிகர்கள் விவகாரம் நேற்று முன்தினம் இரவு 11 மணி வரை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் உதவிப்பணிப்பாளர் அன்வர் அலியின் தலைமையில் கலந்துரையாடப்பட்டது. இக்கலந்துரையாடலில் முஸ்லிம் சமய விவகார அமைச்சின் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட ஹஜ் யாத்திரிகர்களில் ஒரு தொகுதியினர் சம்பந்தப்பட்ட ஹஜ் முகவர்கள் கலந்து கொண்டனர்.
115 ஹஜ் யாத்திரிகர்களுக்கான சவூதி அரேபிய விமான சேவையின் பயணச்சீட்டுகளுக்குரிய கட்டணத்தை செலுத்துவதற்கு சம்பந்தப்பட்ட ஹஜ் முகவர் உடன்பட்டார். அதற்கிணங்க 115 ஹஜ் யாத்திரிகர்கள் நேற்றுக் காலை சவூதி நோக்கி பயணமாகினர்.
ஏனைய 8 ஹஜ் யாத்திரிகர்கள் ஹஜ் முகவரொருவருக்குச் செலுத்திய கட்டணங்கள் ஹஜ் அனுமதிப்பத்திரத்துக்கு உரித்தான ஹஜ் முகவருக்கு செலுத்துவதில் தீர்வொன்று எட்டப்படாமையினால் அவர்களது ஹஜ் பயணத்தில் தடையேற்பட்டது.
குறிப்பிட்ட 8 ஹஜ் யாத்திரிகர்களுக்கும் ஹஜ் முகவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரிகள் ஆலோசனை வழங்கினார்கள்.
இதேவேளை, இவ்விவகாரம் ஹஜ் கடமையில் தற்போது ஈடுபட்டிருக்கும் அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சருக்கு அறிவிக்கப்பட்டது. அமைச்சர் ஹலீம் சவூதியிலிருந்து தேவையான அறிவுரைகளை வழங்கியிருந்தார்.
ஏ.ஆர்.ஏ.பரீல்
vidivelli