ஏப்ரல் 21 தாக்குதலுக்கு அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும்
பாராளுமன்ற தெரிவுக்குழு முன் ஆஜராகி பிரதமர் தெரிவிப்பு ; ஸஹ்ரான் குழுவினர் கொல்லப்பட்ட போதிலும் கூட வேறு நபர்கள் உருவாகலாம் என்கிறார்
ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்ற நிலையில் அதில் இருந்து அரசாங்கம் தப்பிக்க முடியாது. அரசாங்கம் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. இந்த தாக்குதலில் சஹ்ரான் குழுவினர் கொல்லப்பட்ட போதிலும் கூட வேறு நபர்கள் உருவாகலாம். இது புற்றுநோய் போன்றது. ஆகவே இதனை கண்காணிக்க வேண்டிய அவசியம் உள்ளது. அத்துடன் சஹ்ரான் தமிழில் பயங்கரவாத பிரசாரங்கள் செய்ததால் அவரால் இலங்கைக்கு மட்டுமல்ல தென்னிந்தியாவிற்கும் பாரிய அச்சுறுத்தல் உள்ளது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவுக்குழு முன்னிலையில் தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை சாட்சியமளிக்க அழைக்கப்பட்ட போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சாட்சியமளிக்கையில் இவற்றை கூறினார்.
கேள்வி :- சாட்சியளித்த சிலர் பல காரணிகளை கூறியுள்ளனர். இதில் உங்களையும் சிலர் அறிவுறுத்தியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்து உங்களின் கருத்தை கூறுங்கள்?
பதில்:- அவ்வப்போது இந்த காரணிகள் கிடைத்தன. அதேபோல் புலனாய்வு அதிகாரிகளும் காரணிகளை தெரிவித்துள்ளனர். அனைத்தையும் எனக்கு கூற வேண்டிய அவசியம் இல்லை.பிரதான காரணிகளை மட்டும் கூறுங்கள் என வலியுறுத்தினேன். ஐ.எஸ் அமைப்பு குறித்து கூறப்பட்டது. அதில் இலங்கையில் ஒருவர் மரணமடைந்த காரணி குறித்து கூறப்பட்டது. அப்போது நாம் தேர்தல் காலத்தில் இருந்தோம். பின்னர் இன்னும் ஒருவர் அங்கு சென்றதாக கூறினார்கள். ஆனால் இலங்கைக்குள் இவ்வாறு பயங்கரவாத செயற்பாடு ஒன்று உருவாவதாக கூறவில்லை. நான் அமைச்சராக இருந்த காலத்தில் அவ்வளவுதான் தெரியும்.
கேள்வி :- பிரதமராக உங்களுக்கு எந்த வகையில் இந்த தகவல்கள் வருகின்றது?
பதில் :- பாதுகாப்பு துறையை விட சட்டம் ஒழுங்கு அமைச்சின் மூலமாகவே காரணிகளை அறிந்துகொள்ள முடிந்தது.
கேள்வி :- பாராளுமன்றத்தில் மற்றும் நாட்டின் அனுபவமுள்ள அரசியல் தலைவர் என்ற வகையில் இந்த பயங்கரவாதம் மெதுவாக உள்நுழைந்துள்ளது என்ற காரணியை அறிந்துகொள்ள முடியவில்லையா ?
பதில்:- சட்டம் ஒழுங்கு அமைச்சின் மூலமாக அறிந்துகொள்ள முடிந்தது. பாதுகாப்பு கூட்டங்களில் சில காரணிகள் அறிந்துகொள்ள முடிந்தது. காத்தான்குடி தான் அடிப்படைவாத கேந்திரமாக இருந்தது.
கேள்வி :- இதன்போது என்ன நடவடிக்கைகள் நீங்கள் எடுத்துள்ளீர்கள்?
பதில்:- அரசியல் தலைவர்களுடன் நான் பேசியுள்ளேன். சஹ்ரானை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
கேள்வி:- சில முஸ்லிம் மத தலைவர்கள் அவ்வப்போது சஹ்ரான் குறித்து தெரிவித்துள்ளனர். சஹ்லான் என்ற மௌலவி உங்களுக்கும் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கும் அறிவித்துள்ளார்?
பதில்:- இதில் சூபி பள்ளிவாசல் ஒன்று தாக்கப்பட்ட சம்பவம் குறித்து அப்போது பேசப்பட்டது. எனக்கு தெரிந்த வகையில் பொலிசாருக்கு விசாரணை நடத்தவும் வலியுறுத்தப்பட்டது. சஹ்ரான் கைதுசெய்யப்பட வேண்டும் என்ற கட்டளையும் விடுக்கப்பட்டது. இதில் சட்டவிரோதமாக வெளிநாடு சென்றுள்ளார் என்றே நம்பப்பட்டது. அப்போதிலிருந்து சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கேள்வி :- நீங்கள் பொலிஸ் பொறுப்பு அமைச்சராக இருந்த காலத்தில் அம்பாறை திகனை சம்பவங்கள் இடம்பெற்றது. அப்போது நடவடிக்கை ஏதும் எடுத்தீர்களா ?
பதில் :- திகன சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் சிரியா சென்ற நபர்கள் இதில் தொடர்பில் இருந்தார்களா என்று புலனாய்வுக்கு அறிவுறுத்தினேன். ஆனால் உறுதியாக தெரியவில்லை.
கேள்வி :-தவ்ஹித் ஜமாஅத் அமைப்பை ஏன் அப்போதே தடுக்க முடியவில்லை?
பதில் :- அவர்கள் மட்டும் அல்ல பெளத்த அடிப்படிவாத அமைப்புகளும் இருந்தன. ஆகவே பெரிதாக அவற்றை கருத்தில் கொள்ளவில்லை. அடிப்படைவாத அமைப்புகளை தடுக்க முதலில் வழக்கு தொடர வழிமுறை என்ன என்பதை தேடிப்பார்க்க வலியுறுத்தினேன். அப்போதுதான் சஹ்ரான் குறித்து அறிய முடிந்தது.
கேள்வி :-வெளிநாடுகளில் இருந்து மத தலைவர்கள் மதரசா கற்கைகள் என இங்கு வருகின்றனர். இது குறித்து ஆராயவில்லையா?
பதில் :- இது குறித்து முஸ்லிம் விவகார அமைச்சிடம் பொறுப்புக்கொடுக்கப்பட்டது. வேறு புலனாய்வு தகவல்கள் இருக்கவில்லை. வெளியில் இருந்து வந்த நபர்கள் குறித்தும் தாக்குதலின் பின்னர் தான் அறிந்துகொள்ள முடிந்தது. உள்ளக விவகார அமைச்சர் மூலமாக தெரிந்துகொள்ள முடிந்தது.
கேள்வி :- அரச மொழிகளுக்கு அப்பால் அரபி மொழியை பயன்படுத்துவது குறித்து சில காரணிகளை முன்னரே கூறப்பட்டது. அக்கறை செலுத்தப்படவில்லையா?
பதில் :- கிழக்கை விடவும் வேறு பகுதிகளில் தான் அவ்வாறு இருந்ததாக அறிந்துகொள்ள முடிந்தது.அவர்கள் குறித்து தேடி ஆராய வலியுறுத்தப்பட்டது. அரபி மொழி பயன்படுத்துவதாக கூறப்பட்ட போது தனி நிறுவனங்கள், மத இடங்களில் இருந்ததாவும் அரச செயற்படுகளில் இருக்கவில்லை என அப்போது எனக்கு பதில் கிடைத்தது.
கேள்வி :- பாதுகாப்பு குழு முறையாக கூடவில்லை என தகவல் கிடைத்துள்ளது. அதில் பேசப்பட்ட விடயங்கள் குறித்தும் அறிந்துகொள்ள முடிந்தது. இந்த குழு அடிப்படைவாதத்திற்கும் அப்பால் சென்றுள்ளனர் என்பது இறுதி ஆண்டுகளில் அறிந்துகொள்ள முடிந்ததது. இவற்றை பார்க்கையில் இது குறித்து அமைச்சரவையில் பேசவில்லையா?
பதில் :- பேசினோம். கபீர் ஹசீமின் ஆதரவாளர் மீதான தாக்குதல் குறித்தும் ஏனைய சில சம்பவங்கள் குறித்தும் மானவனல்லை சம்பவம் குறித்தும் பேசப்பட்டது.
கேள்வி :- மானவல்லை சம்பவத்தை ஆராய்ந்து சென்ற போதே வணாத்தவில்லுவில் வெடிபொருள் கிடைத்தது. பொறுப்புள்ள அனுபவமுள்ள ஒருவராக அமைச்சரவையில் நடவடிக்கை எடுத்திருக்க முடியம் தானே?
பதில் :- இது குறித்து அவ்வப்போது உரிய நபர்களிடம் வினவியுள்ளேன். விசாரணைகள் இடம்பெற்றது. ஆனால் ஆதாரபூர்வமான தகவல்கள் இருக்கவில்லை. பொலிஸ் அதிகாரிகளின் கொலையுடன் இவற்றுக்கு தொடர்பில்லை என கூறப்பட்டது.
கேள்வி :- புலனாய்வு கடிதம் தாக்குதலுக்கு முன்னர் கிடைத்ததா?
பதில்:- இல்லை, பாதுகாப்பு அதிகாரிகளுக்கு வழங்கியதாக கூறிய கடிதம் கூட கிடைக்கவில்லை. எனக்கு பிரதமர் பாதுகாப்பு பிரிவு உள்ளது . அவர்களுக்கும் கிடைக்கவில்லை.
கேள்வி :- இந்த தாக்குதல் குறித்து முன்கூயடியே தகவல்கள் கிடைதத்தாக அறிந்துகொள்ள முடிந்தது. உங்களின் பாதுகாப்பு அதிகாரிகள் கூட அவற்றை கூறவில்லையா?
பதில்:- எமது அதிகாரிகளுக்கு எந்த கடிதமும் கிடைக்கவில்லை.
கேள்வி :- சிலர் அறிந்திருந்ததாக கூறினர்?
பதில்:- நான் கொழும்பு வந்தபின்னரே அறிந்துகொண்டேன்.
கேள்வி :- ஹரின் பெர்னாண்டோ தனது தந்தை கூறினார் என கூறினார்?
பதில்:- பொலிசார் கூறவில்லை என்றே அவரும் கூறினார்
கேள்வி :- இவ்வளவு முக்கியமான விடயம் உங்களுக்கு அறிவிக்கப்படாதது பலவீனமாக நினைகிறீர்களா?
பதில்:- ஆம் குறைபாடு தான். 9 ஆம் திகதி பேசப்பட்ட விடயம். அப்போதும் நான் கொழும்பில் தான் இருந்தேன்.
கேள்வி:- தாக்குதலின் பின்னர் நீங்கள் பாதுகாப்பு கூட்டத்தை கூட்ட முயற்சிகள் எடுத்தீர்கள் அல்லவா?
பதில்:- ஆம், அலரி மாளிகையில் அழைத்தேன் . பின்னர் பாதுகாப்பு அமைச்சிற்கு சென்றேன். காலத்தை கடத்தாது நான் அங்கு சென்றேன். நிலைமைகளை உணர்ந்தவனாக எனக்கு முன்னர் இருந்த அனுபவம் மூலம் நன் அதனை செய்தேன்.
கேள்வி :- தாக்குதலின் பின்னர் நாட்டின் சட்டம் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. முஸ்லிம் சட்டங்கள் குறித்து இப்போதுள்ள நிலைமை என்ன?
பதில் :- இது குறித்து ஆராயப்பட்டு வருகின்றது. முஸ்லிம் அமைச்சர்களின் ஆலோசனைகளை பெற்று சில காரணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நீதி அமைச்சரும் நடவடிக்கை எடுத்து வருகின்றார். இங்கிலாந்தில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு தடவை சட்டம் மாற்றப்பட்டு வருகின்றது. நாமும் மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என்ற ஆலோசனையை வழங்கியுள்ளேன்.
கேள்வி :- இஸ்லாமிய அடிப்படைவாதம் பயங்கரவாதத்தின் முதல்படி. இதனை தெரிந்துகொள்ள வேண்டும் தானே?
பதில் :- அடிப்படைவாதத்தில் இருந்துதான் பயங்கரவாதம் உருவாகின்றது. நாம் விடுதலைப்புலிகள் குறித்த நகர்வுகளில் இருந்தோம். சர்வதேச பயங்கரவாதம் குறித்து ஆராய வேண்டும். தகவல்கள் பரிமாற்றலில் சில குறைபாடுகள் இருந்துள்ளது. ஏன் அது இடம்பெற்றது என்பதை தான் ஆராயவேண்டும். சஹ்ரான் சட்ட விரோதமாக நாட்டை விட்டு போய்விட்டார் என்று கூறப்பட்ட பின்னர் அப்போது தேடிப்பார்த்திருக்க வேண்டும். அப்போது நாம் ஆட்சியில் இருக்கவில்லை.
கேள்வி :- அவர் இங்கு சுதந்திரமாக நடமாடியுள்ளார். நாம் தான் கவனம் செலுத்தாது இருந்துள்ளோம் என நான் நினைகின்றேன்?
பதில் :- புலனாய்வுத்துறையினருக்கு எவ்வாறு தகவல் கிடைக்காது போனது என்பதில் தான் சிக்கல் உள்ளது. சரியான தகவல்கள் இருந்திருந்தால் நடவடிக்கை எடுத்திருக்க முடியும்.
கேள்வி :- வெளிநாட்டில் இருந்துதான் இறுதி புலனாய்வு வந்துள்ளது. எமது புலனாய்வு பலவீனம் என நினைகிறீர்களா?
பதில் :- இது பலவீனமான விடயம் என்றே நினைக்கிறேன்.
கேள்வி :- சஹ்ரான் குழு குறித்து தொடர்ச்சியாக கைதுகள் இடம்பெற்று வருகின்றது. இன்று நிலைமைகள் மோசமாக உள்ள நிலையில் பாதுகாப்பு நிலைமை ஆரோக்கியமானது என நீங்களும் ஜனாதிபதியும் கூறுகின்றீர்கள். எவ்வாறு?
பதில்:- இந்த சூழ்ச்சியில் தொடர்புபட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேரடி தொடர்பில் மட்டும் அல்ல என்ன வகையிலேனும் தொடர்புபட்ட நபர்கள் என்றால் அவர்களை கைதுசெய்து விசாரிக்க வேண்டும் என கோரியுள்ளோம். ஒரு குழு அழிக்கப்பட்ட காரணத்தினால் பிரச்சினை முடிந்ததாக கூற முடியாது. இது புற்றுநோய் போன்றது. ஒரு குழு முடிந்துவிட்டது என திருப்தி கொள்ள முடியாது. வேறு யார் உள்ளனர் என்பதை கண்டறிய வேண்டும். யாரின் கொள்கை உருவாகின்றது. ஆயுதம் என்பது துப்பாக்கி மட்டும் அல்ல. வேறு எதனையும் பயன்படுத்த முடியும். புதிய பயங்கரவாத யுகத்தில் உள்ளதால் அதற்கான சட்டங்களை உருவாக்க வேண்டும். சஹ்ரான் தமிழில் பிரசாரம் செய்ததால் இலங்கைக்கு மட்டும் அல்ல தென்னிந்தியாவிற்கும் பாரிய அச்சுறுத்தல். ஆகவே தான் அவர்கள் அக்கறை செலுத்துகின்றனர்.
ஆர்.யசி
vidivelli