ஹிஜ்ரி 1440 புனித ஹஜ் யாத்திரையின் முதலாவது நாள் எதிர்வரும் 9 ஆம் திகதி வெள்ளிக்கிழமை என சவூதி அரசாங்கம் அறிவித்துள்ளது. அத்துடன் மறுநாள் 10 ஆம் திகதி சனிக்கிழமை அறபா தினம் என்றும் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஈதுல் அழ்ஹா பெருநாள் தினம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்ற புதன்கிழமை வரை இவ்வருட ஹஜ் யாத்திரைக்காக 1,249,951 யாத்திரிகர்கள் சவூதியை வந்தடைந்துள்ளனர்.
புனித ஹஜ் யாத்திரையை திறம்பட நடாத்தும் வகையில் மக்கா மாநகர சபை 23 ஆயிரம் பேரை மேலதிகமாக பணிக்கமர்த்தியுள்ளதாக மாநாகர மேயர் முஹம்மத் அப்துல்லாஹ் அல் குவைஹி தெரிவித்துள்ளார். இவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் சேவையில் ஈடுபடுகின்றனர். ஹாஜிகளுக்கு வழங்கப்படும் உணவு மாதிரிகளை பரிசீலித்தல், குடிநீர் விநியோகம், மின்சார விநியோகம், கழிவறைகளை பேணுதல், நகரை உடனுக்குடன் சுத்தப்படுத்துதல் போன்ற விடயங்கள் தொடர்பில் இவர்கள் கவனம் செலுத்துகின்றனர். இம்முறை ஹஜ் யாத்திரையை நிர்வகிப்பதில் மொத்தமாக 350,000 பேர் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாத்திரிகர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் 17 ஆயிரம் சிவில் பாதுகாப்பு ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களது தேவைக்காக 3000 வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளதாக சிவில் பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் சுலைமான் அல் அம்ரோ தெரிவித்துள்ளார். சவூதி ஹஜ் ஏற்பாட்டுக்குழுவின் மேற்பார்வையில் இந்த ஊழியர்கள் தமது பணிகளை முன்னெடுத்துள்ளனர். யாத்திரிகர்கள் சன நெரிசல் உள்ளிட்ட அனர்த்தங்களில் சிக்கிக் கொள்ளாத வகையில் இவர்கள் வழிகாட்டல்களை வழங்கி வருகின்றனர். அத்துடன் அவசர தேவைகளின்போது இந்த அணியினர் உடன் விரைந்து தமது சேவையை வழங்குவர்.
உரிய ஹஜ் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் ஹஜ் யாத்திரையில் ஈடுபட முனைந்த 329000 பேர் புனித தலங்களுக்குள் நுழைய முடியாதவாறு தடுக்கப்பட்டுள்ளதாக மக்கா ஆளுநர் இளவரசர் காலித் அல் பைசல் தெரிவித்துள்ளார். அத்துடன் அனுமதியின்றி நகருக்குள் நுழைய முயன்ற 144000 வாகனங்கள் திருப்பியனுப்பப்பட்டுள்ளதுடன் யாத்திரிகர்களை சட்டவிரோதமாக ஏற்றிச் சென்ற 15 சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 181 போலி ஹஜ் அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன.
மன்னர் சல்மானின் அழைப்பின் பேரில் அவரது விருந்தினர்களாக இம்முறை 6000 பேர் உலகெங்கிலுமிருந்து ஹஜ் கடமைக்காக சவூதிக்கு வருகை தருகின்றனர். இவர்களை விமான நிலையத்திலிருந்து அழைத்துவருவது முதல் மீண்டும் அவர்களது நாட்டுக்கு வழியனுப்பி வைக்கும் வரை சிறந்த போக்குவரத்துச் சேவையை வழங்கும் நோக்கில் உயர்தர வசதிகளைக் கொண்ட பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த பஸ் வண்டிகள் யாத்திரிகர்களுக்கு பரிச்சயமான மொழிகளில் அறிவுறுத்தல்களை வழங்கும் வகையில் திரைகளைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
எஸ்.என்.எம். ஸுஹைல்
vidivelli