விடுபட்டுப் போகக் கூடாத விஷயங்களும் விட்டுக் கொடுக்கவே கூடாத விவகாரங்களும் – 02
"சம்பிரதாய முஸ்லிம்கள் - வஹாபிகள்" முஸ்லிம்களை துருவமயமாக்கும் துரோகம்
சமீபகாலமாக சிங்கள பௌத்த இனவாதிகள் மற்றும் மதகுருக்களின் ஊடக சந்திப்புகள் மற்றும் மாநாடுகளில் முழங்கும் ஒரு கோஷம் தான் பாரம்பரிய முஸ்லிம்கள்/ வஹாபிய முஸ்லிம்கள் என்ற இருமையாகும். “இலங்கை முஸ்லிம்களில் இரண்டு வகைப்பட்டவர்கள் உள்ளனர். பாரம்பரிய முஸ்லிம்கள் என்போர் பெளத்தர்களுக்கு நெருக்கமானவர்கள். காலாகாலமாக சிங்களவர்களுடன் கலந்து வாழ்பவர்கள். இணங்கியும் இணக்கப்பாட்டுடனும் வாழத்தெரிந்தவர்கள். அவர்கள் மத்தியில் தீவிரவாதமோ அடிப்படைவாதமோ கிடையாது. நாங்கள் சிலைகளை வணங்குவதுபோல் சில வேளைகளில் அவர்கள் அடக்கஸ்தலங்களை வணங்குகிறார்கள். அவர்களோடு எமக்கு எவ்விதப் பிரச்சினையும் இல்லை.” இது பாரம்பரிய முஸ்லிம்கள் குறித்த ஞானசாரரின் படிமம்.
அதே ஞானசாரர் பாரம்பரிய முஸ்லிம்களுக்கெதிராக நிலை நிறுத்தும் வஹாபிகள் அல்லது வஹாப்வாத முஸ்லிம்கள் குறித்து “இவர்கள் தீவிரவாதிகள். சிங்களவர்களிடமிருந்து முஸ்லிம்களைப் பிரிப்பவர்கள். இவர்களுக்கென தனிப்பள்ளிவாசல்களும் மத்ரஸாக்களும் இந்நாட்டில் இருக்கின்றன. அடிப்படைவாதத்தை அவர்களே போதிக்கிறார்கள். இவர்களுக்கு அரபு நாடுகளிலிருந்து பெரும்தொகைப் பணம் இங்கு வருகின்றது. குறிப்பாக சவூதி அரேபியாவே இவர்களை வளர்க்கின்றது. 4/21 தாக்குதலின் சூத்திரதாரிகள் இவர்கள் தான்” என்கிறார். இவ்விரு சாராரையும் எப்படி நடாத்த வேண்டும் என்றும் ஒரு சூத்திரத்தைச் சொல்கிறார் அவர். பாரம்பரிய முஸ்லிம்கள் தான் ஜம்இய்யத்துல் உலமாவில் இருக்க வேண்டும். அரசியல் கட்சிகளை அமைக்க வேண்டும். முஸ்லிம்களுக்கு தலைமைத்துவம் அளிக்க வேண்டும். முக்கிய தீர்மானகரமான இடங்களுக்கு வரவேண்டும். அவர்களே எங்களுக்கு வஹாபிகளை இல்லாதொழிக்க உதவவேண்டும். பாடப்புத்தகங்களில் அவர்களது பாரம்பரிய இஸ்லாமே இடம்பெற வேண்டும்.
மறுபுறம் வஹாபிகள் குறித்த அவரது அரசியல் பார்வை இப்படி உள்ளது.வஹாப்வாதிகள் இந்நாட்டிலிருந்து முற்றாக துடைத்தழிக்கப்பட வேண்டும். அவர்களது பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள் மூடப்பட வேண்டும். வஹாப்வாத இயக்கங்கள் அனைத்தும் சட்டபூர்வமாகத் தடைசெய்யப்பட வேண்டும். சவூதி அரேபியாவின் நிதி மூலம் தடை செய்யப்படவேண்டும் என்றெல்லாம் தொடர்ச்சியாகப் பிரசாரம் செய்து வருகிறார்.
பிரசாரத்தின் வீச்சும் விஷம் கக்கும் நாகங்களும்
சமீபத்தில் மினுவாங்கொடை கல்லொலுவைக்கு செல்லும் வழியில் வெயாங்கொடை நகரைத் தாண்டிச் செல்கிறேன். பெருந்திரளான இராணுவப்படையினர் வீதிச்சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வாகனங்கள் நிறுத்தப்பட்டு தீவிர சோதனை நடக்கின்றது. நூறு மீற்றர் தாண்டிச் சென்றேன். ஞானசாரரின் உருவப்படம் பொறிக்கப்பட்ட பெரும் விளம்பரப் பதாகையொன்று அரச மரத்தின் கீழ் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை அவதானித்த போது விஷயத்தை ஊகிப்பது எளிதாகி விட்டது. அங்குள்ள பன்சலையில் ஞானசாரரின் பேருரை பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்தது. காதைப் பிளக்கும் அவரது உரையின் பெரும்பகுதி வஹாபிசத்தை ஒரு பூதமாகக் காட்டுவதாகவே இருந்தது. முஸ்லிம்கள் மத்தியில் வஹாபிஸம் வேகமாகப் பரவி வருவதாகவும் தாம் அல்லாத (வஹாபியரல்லாத) ஏனையோர் அனைவரையும் கொன்று குவிப்பதே வஹாபிகளின் நோக்கம் என்றெல்லாம் அவர் சிங்களவர்களின் உதிரத்தைக் கொதிக்க வைக்கிறார்.
வஹாபிஸம் குறித்து ஞானசாரர் மேற்கொண்டுவரும் பிரசாரம் மிகவும் குரூரமானவை. ஆபத்தானவை. முஸ்லிம்களை சாதாரண அடிமட்ட சிங்களவர்கள் அனைவருமே குரோதத்துடனும் வெறியுடனும் பார்க்கத் தூண்டுபவை என்பதில் கிஞ்சித்தும் ஐயமில்லை. அப்பாவி சிங்கள மக்களை முஸ்லிம்களுக்கெதிராக திருப்புவதற்கு மிக இலகுவாகப் பயன்படுத்தக்கூடிய ஒரு ஆயுதமாகவே இன்று வஹாபிஸம் BBS இனால் கையாளப்படுகின்றது. கண்டியில் நடந்த BBS இன் மாநாடு பெருமளவு சோபிக்கவில்லை எனக் கூறப்படுகின்றபோதும் அதன் பிரதான இலக்காக இருந்தது வஹாபி எதிர்பிரசாரமே. நுகேகொடையில் நடந்த ஒன்றுகூடலில் இது குறித்து பரிமாறப்பட்ட குற்றச்சாட்டுக்கள் சிங்கள மக்களிடையே குறிப்பாக படித்த வர்க்கத்தினரிடையே நன்கு பதியவைக்கப்படுகின்றன.
கலாநிதி ரஞ்சித் தேவசிறி சொல்வது போல சிங்கள மக்களை முஸ்லிம்களுக்கெதிராக திருப்பும் சூழல் இப்போது முன்னெப்போதையும் விட மிகச் சாதகமாகவுள்ளது. 4/21 க்குப் பின்னர் சிங்களவர் மத்தியில் முஸ்லிம்கள் குறித்து உருவாகியுள்ள இத்தகைய மனோநிலையை இனவாதிகளும் மதவாதிகளும் மிக இலாவகமாகப் பயன்படுத்தி வருகின்றனர். அதில் முன்னணியில் இருப்பவர் ஞானசாரரே என்பதில் சந்தேகமில்லை.
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வஹாபிய பூதம் குறித்து பெரும்பான்மை சிங்கள பௌத்தர்களின் ஆழ்மனதில் எதிர்மறையான பதிவுகளை இட்டு வருகின்றார் ஞானசாரர். அரச அலுவலகங்கள், மருத்துவ மனைகள், பாடசாலைகள் என இந்தப் பிரசாரம் காட்டுத்தீ போல் பரவி வருகின்றது. படிப்படியாக சிங்கள மக்களின் உள்ளங்களில் உண்மைகளாகவே அவை பதிகின்றன. 2012 தம்புள்ளை ஹைரியாப்பள்ளி பிரச்சினையே இன்றைய இனவாதப் பிரசாரத்தின் துவக்கப்புள்ளி. 2014 இல் BBS நோர்வேயின் நிதியாதரவுடன் களத்திற்கு வந்தபோது ஞானசாரர் கர்ச்சித்த கருத்துக்கள் பெரும்பான்மை மக்களில் பெரும்பாலான வர்களிடையே எடுபடவில்லை என்பது உண்மையே. இன்று மறுதலையாக வஹாபிச அச்சம் திட்டமிட்டு நன்கு வளர்க்கப்படுகின்றது. மியன்மாரில் பான்தாய், பசூஸ் ரோஹிங்யா முஸ்லிம்களிடையே ரோஹிங்யர்கள் குறித்து மட்டுமே சுமார் கால் நூற்றாண்டு காலம் இவ்வாறான பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது என்பதை நாம் ஒப்பிட்டுப்பார்க்கலாம்.
களனிப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள் சிலர் அங்கு பணியாற்றும் ஒரு முஸ்லிம் விரிவுரையாளரிடம் வெளிப்படுத்தியிருந்த கருத்து பொதுபலசேனாவின் பிரசாரங்களால் பல்கலை விரிவுரையாளர்களும் காவு கொள்ளப்படுகின்றார்கள் என்பதற்கு தெளிவான உதாரணமாகும். அப்பல்கலை விரிவுரையாளர்களின் ஞானசாரர் குறித்த புதிய படிமம் இவ்வாறு உள்ளது.
“ஞானசாரரை தொடக்கத்தில் நாம் ஏற்கவில்லை. அவர் சொன்ன கருத்துக்களுக்கு நாம் செவியேற்கவுமில்லை. அவர் சொன்னதெல்லாம் இன்று உண்மையாகியுள்ளது. அவர் சொல்லும் கருத்துக்களை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைமைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்” என்பதுதான் விரிவுரையாளர்களின் இன்றைய நிலைப்பாடாகும்.
2014 இல் கணக்கில் எடுக்கப்படாதிருந்த ஞானசாரர் இன்று சிங்களவர் மத்தியில் ஒரு ஹீரோவாக பார்க்கப்படும் நிலை உருவாகியுள்ளது. அவருக்கு விளம்பரப்பதாகைகள் போடுவதற்கும் வாழ்த்துத் தெரிவிக்கும் பதாகைகளை ஏந்துவதற்கும் பன்சலைகளில் அவரது உரையை ஏற்பாடு செய்வதற்கும் பல குழுக்கள் நாடு முழுவதும் உருவாகிவிட்டன. அரசாங்கம் சிங்களவர்களின் வாக்கு வங்கியை இழந்து விடலாம் என்ற அச்சத்தினால் ஞானசாரரின் கூட்டங்களுக்கு இராணுவப் பாதுகாப்பும் மரியாதையும் வழங்கும் நிலைக்கு வந்துள்ளது. கிட்டிய எதிர்காலத்தில் ஞானசாரரின் குற்றச்சாட்டுகளும் முஸ்லிம்கள் குறித்த விமர்சனங்களும் சிங்கள சிவில் சமூகத்தின் பொது அபிப்பிராயமாக மாறும் பேராபத்தை இந்த நாடு எதிர்கொண்டுள்ளது. அச்சு இலத்திரனியல் ஊடகங்கள் இந்தப் பொது அபிப்பிராயத்தை (Mass opinion) கட்டமைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. இப்போது முஸ்லிம்கள் மத்தியில் ஞானசாரர் தீவிரமாகப் பரவி வருவதாக கூறிவரும் வஹாபிஸமும் அது பற்றிய அச்சங்களுமே சிங்களவர்களின் பொது அபிப்பிராயத்தின் அடிநாதமாக கட்டமைக்கப்படுகின்றது.
ரூபவாஹினி, ITN, இலங்கை வானொலி ஆகியவற்றில் பணியாற்றும் முஸ்லிம்கள் சமீபகாலமாக எதிர்கொள்ளும் பல கேள்விகள் வஹாபிஸம் பற்றியதாகவே உள்ளன. நிகழ்ச்சிகளில் வளவாளராகக் கலந்து கொள்ளச் சென்ற பல சந்தர்ப்பங்களில் இதை நான் தெளிவாக அவதானித்துள்ளேன். பணியாற்றும் முஸ்லிம் அறிவிப்பாளர்களுக்கு பாரம்பரிய முஸ்லிம்கள், வஹாபிகள் பற்றிய ஒரு மங்கலான புரிதலே உள்ளதனால் அவர்களுக்கு இக்கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் மிகப்பெரும் சங்கடத்தை எதிர்நோக்கியுள்ளமை கண்கூடு.
பிரசாரத்தின் போலித்தனம்
இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் சூபிஸம் (பாரம்பரிய) வஹாபிஸம் (தௌஹீத்) என்ற இந்த இரண்டு எதிரிடைகள் மட்டுமே உள்ளதென்று மேற்கொள்ளப்படும் பிரசாரம் முதலில் மிக அப்பட்டமான பொய்யாகும். முஸ்லிம்கள் இப்போலியை நிர்தாட்சண்யமாய் நிராகரிக்க வேண்டும். சமீபத்தில் தெரன தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தோன்றிய ஒருவர் இலங்கையில் 25% ஆனவர்களே பாரம்பரிய (ஸூபி) முஸ்லிம்கள் எனவும் 75% ஆனவர்கள் வஹாபிகளே என்றும் எதிரில் உட்கார்ந்திருந்த சிங்கள அறிவிப்பாளரிடம் புள்ளிவிபரமொன்றை எடுத்துரைத்தார். தொடர்ந்து பாரம்பரிய அல்லது சம்பிரதாய முஸ்லிம்கள் வஹாபிகள் இடையிலான புறத்தோற்ற வேறுபாடுகளை அடுக்கிச் சென்றார்.
முதலில் இந்தக் கணக்கு தப்பானது. இலங்கையிலுள்ள அனைத்து தரீக்காக்களிலும் அங்கத்துவம் வசிப்போரின் எண்ணிக்கையை கணக்கிட்டால் அவர்கள் முஸ்லிம் சமூகத்தின் 10 சதவீதத்தையும் பிரதிநிதிப்படுத்த மாட்டார்கள். இன்னொருபுறம் வஹாபிகள் என ஸூபிகளால் அழைக்கப்படுகின்ற தௌஹீத்வாதிகள் அதன் ஆதரவாளர்கள் என்று நோக்கினால் அது 2 மில்லியன் முஸ்லிம் சனத்தொகையில் வெறும் 5 சதவீதத்தையும் தாண்டாது. இந்நிலையில் இலங்கையில் 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவரும் ஜமாஅத்தே இஸ்லாமி, ஜமாஅத் தப்லிக், ஜமாஅதுஸ் ஸலாமா சமீபத்திய ஹிஸ்புத் தஹ்ரீர் போன்ற இஸ்லாமிய ஆன்மிக இயக்கங்களில் அங்கத்துவம் வகிப்போர் மற்றும் ஆதரவாளர்களின் தொகை கூட மிகச் சொற்பமானது என்பதில் துளியளவும் சந்தேகமில்லை.
இக்குறிப்பிட்ட அமைப்புக்களால் வெளியிடப்படும் பத்திரிகைகள், சஞ்சிகைகள் எண்ணிக்கையைக் கணக்கிட்டாலேயே அவற்றின் பரிமாணம் எவ்வளவு என்பதை எளிதாக ஊகிக்கலாம். ஒரு கணிப்பீட்டின்படி ஒட்டுமொத்த இலங்கை முஸ்லிம்களில் இயக்க அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் சிந்தனைத் தாக்கம் கொண்டோர் வெறும் 3 சதவீதமே என்பது தெளிவானது. எண்ணிக்கையில் சில பத்தாயிரங்களாக இருக்கலாம். ஆனால் முழு மொத்த முஸ்லிம் சமூகத்தில் அவர்களது விகிதாசாரம் மிக குறைவாகும். ஆக தௌஹீத் இயக்கங்கள் உள்ளிட்டு நாட்டில் இயங்கும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களையும் சேர்த்து பார்த்தால் 90 சதவீதமான முஸ்லிம்கள் இயக்க சிந்தனைக்கு வெளியில் தான் வாழ்கிறார்கள் என்பதை மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். (இதற்கு மாற்று அபிப்பிராயம் இருந்தால் இயக்கங்கள் தமது புள்ளி விபரங்களை முன்வைக்கலாம்)
இலங்கை முஸ்லிம்கள் ஒன்றில் ஸூபிகள் (பாரம்பரிய முஸ்லிம்கள்) அல்லது வஹாபிகள் என்று கூறுவது மிக அப்பட்டமான பொய்யாகும். இந்த வாதத்தை யார் முன்வைத்தாலும் அது உண்மைக்குப் புறம்பானதாகும். கள ஆய்வோ போதுமான தரவோ இல்லாமல் இவ்வாறு சிங்களவர்களிடம் பிழையான தரவுகளை யாரும் முன்வைக்கக்கூடாது. அதேவேளை இது குறித்த உண்மையான தரவுகளை சிங்கள சிவில் சமூகத்திடம் கொண்டு சேர்க்கப்பட வேண்டும். அதற்கு வகை கூற வேண்டிய பொறுப்பு எமது தலைமைகளுக்கு உள்ளது.
முஸ்லிம்களில் பெரும்பான்மையானோர் எந்த இயக்க சிந்தனைத் தாக்கமும் தீவிரமாகப் பற்றிக் கொள்ளாதவர்கள் என்பதே கள உண்மையாகும்.
ஸூபிஸம் (பாரம்பரிய முஸ்லிம்கள்) வஹாபிஸம் (தௌஹீத்) ஆகிய சிந்தனை பள்ளிகளுக்கிடையிலான வேறுபாடுகள், முரண்பாடுகள் மிக நிதானமாகவும் நேர்மையாகவும் மதிப்பீடு செய்யப்பட வேண்டியவை. அதை இந்தப்பத்தியில் தனியான ஒரு கட்டுரையாக எழுத உத்தேசித்துள்ளேன். ஏனெனில் படித்த உயர் பதவிகளை வகிக்கும் தீர்மானிக்கும் இடங்களில் இருக்கும் பல முஸ்லிம்களுக்கே இது குறித்த தெளிவு இல்லை என்பதை நான் நன்கறிவேன்.
இப்போது வஹாபிகள், ஸுபிகள் உள்ளிட்ட இலங்கையில் உள்ள ஏனைய அனைத்து ஆன்மிக இயக்கங்களும் இஸ்லாமிய சட்டகத்தினுள்ளேயே செயற்படுகின்றன என்பதை இலங்கை முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்வதற்கு முன்னர் குறிப்பிட்ட இவ்வியக்கங்கள் ஏற்கவேண்டும். அதேவேளை ஸூபி – வஹாபி முரண்பாடுகளை அவை உள்ளக கலந்துரையாடல்கள் மூலம் தீர்த்து கொள்ள வேண்டும். புறம்பாக இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கருவறுக்கத் துடிக்கும் சக்திகளுக்கு பரஸ்பரம் காட்டிக் கொடுக்கும் கைங்கரியத்தை கைவிட வேண்டும். தமது மார்க்கம், முஸ்லிம் சமூகம், அல்லாஹ், அவனுடைய தூதர், முஸ்லிம் சகோதரர்களுக்கு விசுவாசமாக இருப்பது ஒரு ஈமானியப் பண்பாகும்.
1990 களில் வஹாபிகள் ஸூபிகளை கடுமையாக எதிர்த்து நின்றமைக்கும் அவர்களது சுதந்திர செயற்பாடுகளில் தலையீடு செய்தமைக்கும் தாம் இப்போது அவர்களை பழிவாங்குவதாக ஸூபிகள் நினைத்துக் கொண்டு ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் வஹாபிகள் என காட்டிக்கொள்வது எந்த வகையிலும் ஏற்கத்தக்கதல்ல. அதேபோன்று வஹாபிஸம் என்பது பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்துடன் இணைந்த ஒரு கருத்தியல் என்று சிங்களவர்களை நம்பவைப்பதற்கு துணை செய்வதையும் இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் ஏற்க முடியாது.
எவ்வாறாயினும் இன்றைய காலகட்டத்தில் வஹாபிஸம் குறித்து வரையப்படும் படிமம் மிகவும் பயங்கரமானது. அது குறித்த சரியான விளக்கத்தையும் தெளிவையும் முன்வைப்பதற்கு வஹாபிகள் முன்வர வேண்டும். தவிர முஸ்லிம் சிவில் சமூகத்திற்கும் இது குறித்து காணப்படும் பொறுப்பை அது நிறைவேற்ற வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு நாளும் யாரோ ஒரு சிங்களவர் வஹாபிஸம் என்றால் என்ன? என்று கேட்டுக்கொண்டே இருக்கிறார். இதற்கு ஞானசாரர் அல்ல வஹாபிகள் தான் பதில் அளிக்கவேண்டும். தவறினால் அது மிக ஆபத்தான விளைவுகளையே சமூகம் மீது ஏற்படுத்தும்.
பின்னால் உள்ள அரசியல்
எமக்கு பாரம்பரிய முஸ்லிம்களுடன் எவ்வித பிரச்சினையும் இல்லை. வஹாப்வாதிகளுடன்தான் பிரச்சினை என கூறும் ஞானசாரருக்கோ வீரவன்சவுக்கோ வஹாபிஸம் என்றால் என்ன என்று சுத்தமாகவே தெரியாது. ஆனால் இந்த இருமைகளை (Dichotomy) அவர்கள் ஏன் கையாள்கிறார்கள் எனில் முஸ்லிம்களைத் துருவ மயமாக்குவதற்கே இந்த வகைப்பாட்டினை முன்னெடுக்கிறார்கள். தமது உத்தமத்தை பறைசாற்ற பாரம்பரிய முஸ்லிம்களுடன் பிரச்சினை இல்லை என்ற ஒரு போலி எதிரிடையையும் ( Paradox) ஞானசாரர் இலாவகமாக கையாள்கிறார்.
ஐரோப்பிய ஏகாதிபத்தியம் 150 ஆண்டுகள் இஸ்லாமிய உலகை காலனித்துவப்படுத்தியிருந்த காலத்தில் ஒரு நாட்டின் விடுதலைப் போரில் அனைத்து மக்களும் ஒன்றுபட்டு விடக்கூடாது என்பதற்காக பிரித்து ஆளுதல் (Divide and Rule) என்ற சமன்பாட்டைக் கையாண்டனர். இது ஒரு சமூகத்தை பலவீனப்படுத்த ஏகாதிபத்தியம் கண்டுபிடித்த அற்புதமான மூலோபாயம். இன்று இலங்கையில் முஸ்லிம் சமூகத்தை துருவ மயப்படுத்தலும் (Polarization) உள்ளக முரண்பாடுகளை ஊக்குவித்து ஒரு சாராரை தமது திட்டத்திற்கு பயன்படுத்தவும் ஞானசாரர் சம்பிரதாய முஸ்லிம், வஹாபி முஸ்லிம் என்ற எதிரிடையைப் பிரசாரம் செய்து வருகிறார். முஸ்லிம் சமூகம் ஒரே சமூகமே. இறைவன் ஒருவன் என்பதை ஏற்றுக் கொண்ட அனைவரும் ஒரே உம்மத்தே என குர்ஆன் பறைச்சாற்றி நிற்க முஸ்லிம்கள் தமக்குள் பகை முரண்பாடுகளை வளர்த்து எதிரிகளுக்குப் பின்னால் அணிதிரள்வது மிக ஆபத்தான குறிகாட்டியாகும். முஸ்லிம் சமூகத்தின் தோல்விக்கும் வீழ்ச்சிக்குமான முதல் காரணம் உள்ளகப் பிளவு தான் என்ற குர்ஆனிய எச்சரிக்கையை முஸ்லிம்கள் தொடர்ந்தும் புறக்கணித்தே வருவது ஆரோக்கியமானதல்ல. வஹாபிஸம் என்றால் என்ன என்பதற்கு தெட்டத்தெளிவான பதிலுரையை வழங்க முஸ்லிம் தலைமைகள் தயாராக வேண்டும். இது இன்றைய காலத்தின் உடனடித் தேவையாகும்.
vidivelli