காத்தான்குடியின் இரண்டு பள்ளிவாசல்களில் 03.08.1990 அன்று தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் மீது தமிழீழ விடுதலைப்புலிகள் நடாத்திய தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 103 முஸ்லிம்களை நினைவு கூர்ந்து 29 ஆவது ஷுஹதாக்கள் தினம் நாளை அனுஷ்டிக்கப்படவுள்ளது.
இதனையொட்டி காத்தான்குடியில் நாளை காலை கவனயீர்ப்பு பேரணியொன்று இடம் பெறவுள்ளதுடன் படுகொலை இடம்பெற்ற காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் ஹுஸைனிய்யா பள்ளிவாசல்களில் குர்ஆன் பாராயணமும் விஷேட துஆப்பிராத்தனையும் இடம் பெறவுள்ளன.
முஸ்லிம் தேச ஷுஹதாக்கள் ஞாபகார்த்த நிறுவனம், காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆபள்ளிவாசல் என்பன இணைந்து இந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளன.
காலையில் இடம் பெறவுள்ள பேரணியின் போது பிரகடனும் வெளியிடப்படவுள்ளதாக முஸ்லிம் தேச ஷுஹதாக்கள் ஞாபகார்த்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, சுஹதாக்கள் தினத்தினை முன்னிட்டு காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் “சுதந்திர இலங்கையில் முஸ்லிம்கள் இழந்ததும், பெற்றுக் கொண்டதும்” எனும் தலைப்பில் நினைவுக் கருத்தரங்கு ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது.
காத்தான்குடி பீச் வே ஹோட்டலில் மாலை 6 மணிக்கு இடம்பெறும் இந்நிகழ்வில் “சுஹதாக்களை ஞாபகப்படுத்துவதன் அவசியம்” எனும் தலைப்பில் சம்மேளன தலைவர் எம்.சீ.எம்.ஏ.சத்தார், “கிழக்கில் காணாமலாக்கப்பட்ட முஸ்லிம் கிராமங்கள்” எனும் தலைப்பில் அஷ்ஷெய்க் ஏ.எல்.ஜுனைதீன் நளீமி, “முஸ்லிம் இன அரசியல் – ஓர் மீளாய்வு” எனும் தலைப்பில் தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.எம்.பாஸில் “நெருக்கடிகக்குள்ளாகுமா இலங்கை முஸ்லிம் தனியார் சட்டம்” எனும் தலைப்பில் சட்டத்தரணி எம்.எம்.பஹீஜ், “சுதந்திரத்திற்கு பின்னரான இலங்கை முஸ்லிம்களின் சமூக மறுமலர்ச்சியும் கல்வி அபிவிருத்தியும்” எனும் தலைப்பில் வைத்தியர் ஐ.எல்.எம்.றிபாஸ் ஆகியோரும் உரையாற்றவுள்ளனர்.
(எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ் )
vidivelli