பிரிவினைவாத கோஷமெழுப்பி அன்று சிங்கள, தமிழ் மக்களை பிரிக்க முற்பட்டவர்களின் முயற்சி தோல்வியுற்றதால் தற்போது வஹாப்வாத கோஷத்தை எழுப்பி சிங்கள, முஸ்லிம் ஒற்றுமையை பிரிக்கும் திட்டத்தை மேற்கொண்டுள்ளனர். அத்துடன் வைத்தியர் ஷாபியின் கைதும் அரசியல் சதித்திட்டமாகும் என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை அவசரகால சட்டத்தை மேலும் ஒருமாத காலத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
அடிப்படைவாதம் சகல தரப்பிலும் இருக்கின்றது. முஸ்லிம்களில் இருந்த சிறிய குழுவே ஏப்ரல் தாக்குதலை மேற்கொண்டிருக்கின்றது. என்றாலும் அந்த தாக்குதலை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். மனிதாபிமானம் இல்லாதவர்களே இந்த தாக்குதலை மேற்கொண்டிருக்கின்றனர். என்றாலும் பயங்கரவாத தாக்குதலை பயன்டுத்திக்கொண்டு எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் அரசியல் லாபம் தேட முயற்சித்து வருகின்றனர்.
குறிப்பாக வைத்தியர் ஷாபி கைது செய்யப்படுவது வருமானத்துக்கு அதிக சொத்து சேகரித்தார் என்ற குற்றத்துக்காகும். ஆனால் விசாரணை மேற்கொள்ளப்பட்டது சிங்கள பத்திரிகையொன்றில் வைத்தியர் ஷாபி சிங்கள தாய்மார்கள் 4ஆயிரம் பேருக்கு கருச்சிதைவு செய்ததாக தெரிவிக்கப்பட்டிருந்த செய்தியின் அடிப்படையிலாகும். ஆனால் வைத்தியர் ஷாபி கைதுசெய்யப்பட்ட பின்னரே அவருக்கு எதிராக முறைப்பாடுகள் பொலிஸாரினால் சேகரிக்கப்பட்டன.
அத்துடன் கடந்த மே மாதம் 24ஆம் திகதி வைத்தியர் ஷாபி பொலிஸாரினால் கைதுசெய்யப்படுகின்றார். ஆனால் அவருக்கு எதிரான முறைப்பாடுகளை பொலிஸார் மே மாதம் 25, 26ஆம் திகதிகளில் 3வைத்தியர்களிடம் அவர்களின் வீட்டுக்கு சென்று வாக்குமூலம் பெறுகின்றனர். ஆனால் அந்த முறைப்பாடுகள் அனைத்தும் 24ஆம் திகதி பொலிஸுக்கு வந்து தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டு புத்தகத்தில் பதிவாகியிருக்கின்றது. இது எவ்வாறு இடம்பெற்றது என்பதை தேடிப்பார்க்கவேண்டும். குருநாகல் பிரதி பொலிஸ்மா அதிபரின் வேண்டுகோளுக்கிணங்கவே இவை இடம்பெற்றிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றன.
அத்துடன் எந்த முறைப்பாடும் இல்லாமலே வைத்தியர் ஷாபி கைதுசெய்யப்பட்டிருந்தார். அவர் கைதுசெய்யப்பட ஒரு நாளைக்கு முன்னர் அவரது வைத்திய சிகிச்சை நிலையம் குருநாகல் பிரதி பொலிஸ்மா அதிபரின் கட்டளையின் பிரகாரம் சோதிக்கப்படுகின்றது. சிகிச்சை நிலையத்தில் சட்டவிரோத கர்ப்பத்தடை செய்வதாக உளவுத்தகவல் கிடைத்ததன் பிரகாரம் இதனை மேற்கொள்வதாகவே தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்படியாயின் முன்கூட்டியே இவ்வாறானதொரு சதித்திட்டம் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருக்கின்றது.
அத்துடன் பாதிக்கப்பட்ட தாய்மாருக்கு நஷ்டஈடு வழங்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்திருந்தார். அதன் பின்னரே அதிகமான தாய்மார்கள் முறைப்பாடுசெய்ய வந்தனர். ஆனால் குறிப்பிட்ட தாய்மாரை பரிசோதனைக்கு உட்படுத்துமாறு நீதிமன்றம் தெரிவிக்கும்போது அதற்கு குருநாகல் வைத்தியசாலையின் பணிப்பாளர் தடை ஏற்படுத்துகின்றார்.
மேலும் மக்கள் வங்கி ஊடாக வைத்தியர் ஷாபியின் வங்கி கணக்குகளை எதிர்க்கட்சி உறுப்பினர் சிசிர ஜயகொடி பகிரங்கமாக வெளியிடுகின்றார். நீதிமன்ற உத்தரவில்லாமல் தனிநபர் ஒருவரின் வங்கி கணக்குகளை வெளியிடமுடியாது. அப்படியாயின் ஷாபி வைத்தியரின் வங்கி கணக்கு எப்படி வெளியில் சென்றது தொடர்பில் மக்கள் வங்கி தலைவர் விசாரணை நடத்தவேண்டும்.
மேலும் சஹ்ரான் குர்ஆனை பின்பற்றியே குண்டு தாக்குதலை மேற்கொண்டதாக விமல் வீரவன்ச தெரிவிக்கிறார். ஆனால் 89 காலப்பகுதியில் விமல் வீரவன்ச இதுபோன்ற பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டது தம்ம போதனையை பின்பற்றியா என்று கேட்கின்றேன்.
உலகில் 24 வீதமானவர்கள் குர்ஆனை வாசிக்கின்றனர். 1.8 பில்லியன் மக்கள் குர்ஆனை நம்புகின்றவர்கள். அவர்கள் அனைவரும் சஹ்ரானும் அல்ல. பின்லேடனும் அல்ல என்தை புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.
ஆர். யசி, எம்.ஆர்.எம்.வஸீம்
vidivelli