ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களையடுத்து முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கிய நெருக்கடி நிலைக்குத் தீர்வாகத் தங்களது அமைச்சுப் பதவிகளை கூட்டாக இராஜினாமா செய்து கொண்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் மேலும் நால்வர் மாத்திரம் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் தங்களது முன்னைய அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றுக்கொண்டனர். அமைச்சுப் பதவியேற்கும் நிகழ்வு நேற்று இரவு 7.30 மணியளவில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்றது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாத் பதியுதீன், அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான அமீர் அலி, அப்துல்லாஹ் மஹ்ரூப் ஆகியோரே நேற்று மாலை பதவிகளை மீளப் பொறுப்பேற்றவர்களாவர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் முன்னர் இராஜாங்க அமைச்சு பதவிகளை வகித்த பாராளுமன்ற உறுப்பினர்களான எச். எம். எம். ஹரீஸ், பைசால் காசிம் மற்றும் அலி சாஹிர் மௌலானா ஆகியோர் நேற்றைய தினம் பதவிகளை ஏற்கவில்லை. இம் மூவரும் பிறிதொரு தினத்தில் தமது முன்னைய அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீமும், ரிசாத் பதியுதீனும் அமைச்சரவை அந்தஸ்துள்ள முன்னைய அமைச்சுப் பதவிகளையும் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.எஸ்.அமீர்அலி இராஜாங்க அமைச்சுப் பதவியையும் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் பிரதியமைச்சர் பதவியையும் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் 9 பேர் கூட்டாகத் தங்களது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்திருந்தனர். இவர்களில் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கபீர் ஹாசிமும், எம்.எச்.ஏ.ஹலீமும் ஏற்கனவே தங்கள் அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்க தாகும்.
அமைச்சுப் பதவிகளை மீளப்பொறுப்பேற்பது தொடர்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம் பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் ஏ.எச்.எம்.பௌசி தலைமையில் ஜனாதிபதியுடனும், பிரதமருடனும் பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தினர். பல கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.
இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் மாலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனும் அதையடுத்து நேற்றுக்காலை அமைச்சர் வஜிர அபேவர்தனவுடனும் நடைபெற்றது. அமைச்சர் வஜிர அபேவர்த்தனவுடன் கல்முனை வடக்கு உப பிரதேச செயலக விவகாரம் மற்றும் தோப்பூர், வாழைச்சேனை பிரதேச செயலக விவகாரங்கள் கலந்துரையாடப்பட்டன.
பிரதமருடனான பேச்சுவார்த்தையின்போது வன்செயல்களுக்கான நஷ்டஈடுகள், அம்பாறை பள்ளிவாசலுக்கான நஷ்டஈடுகள், கல்முனை உப பிரதேச செயலக விவகாரம் என்பனவற்றுக்குரிய தீர்வுகளுக்கான உறுதிமொழிகள் வழங்கப்பட்டன. அமைச்சர் வஜிர அபேவர்தனவுடனான பேச்சுவார்த்தையின்போது சுமுக தீர்வுகளுக்கு உறுதியளிக்கப்பட்டது.
அம்பாறை ஜும்ஆ பள்ளிவாசலுக்கான நஷ்டஈடு 27 மில்லியன் ரூபா அடுத்த வாரம் வழங்குவதற்கு ்பனவற்றுக்குரிய தீர்வுகளுக்கான உறுதிமொழிகள் வழங்கப்பட்டன. அமைச்சர் வஜிர அபேவர்தனவுடனான பேச்சுவார்த்தையின்போது சுமுக தீர்வுகளுக்கு உறுதியளிக்கப்பட்டது.
அம்பாறை ஜும்ஆ பள்ளிவாசலுக்கான நஷ்டஈடு 27 மில்லியன் ரூபா அடுத்த வாரம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஏ.ஆர்.ஏ.பரீல்
vidivelli