முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்களை மீளாய்வு செய்து உறுதிப்படுத்துவதற்கான கலந்துரையாடல் நேற்று பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌஸியின் தலைமையில் நடைபெற்ற போதிலும் இறுதித் தீர்மானம் எட்டப்படாத நிலையில் முடிவுற்றது. மீண்டும் இன்று மீளாய்வு குழு ஒன்றுகூடி திருத்தங்கள் தொடர்பில் ஆராயவுள்ளது. நேற்று மூன்று மணித்தியாலங்கள் கலந்துரையாடல் இடம்பெற்ற போதும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கியிருந்த 14 திருத்தங்களில் 4 திருத்தங்கள் தொடர்பாகவே ஆராயப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌஸியின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ரிஷாத் பதியுதீன், ரவூப் ஹக்கீம் மற்றும் பைஸர் முஸ்தபா என்போர் கலந்துகொண்டிருந்தனர்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் சார்பில் பத்வா குழு உறுப்பினர்கள் மௌலவி எம்.ஏ.எம்.ஹரீஸ், மௌலவி சல்மான் மௌலவி முர்சித் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பான அறிக்கைக்கு உடனடியாக அங்கீகாரம் வழங்கப்பட்டு நீதியமைச்சர் தலதா அத்துகோரளவிடம் கையளிக்கப்பட வேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஏ.ஆர்.ஏ.பரீல்
vidivelli