வெளிநாடுகளின் குப்பைத் தொட்டியா இலங்கை?

0 896

கட்­டு­நா­யக்க ஏற்­று­மதி ஒழுங்­கு­ப­டுத்தல் வலயம் இன்று கழி­வு­களால் சூழப்­பட்ட ஒரு இட­மாக மாறி­யுள்­ளது. ‘மீள் ஏற்­று­ம­திக்­கா­னது’ என்ற பெயரில் அங்கு களஞ்­சி­யப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள குப்­பைகள் அந்த இடத்தை அசிங்­கப்­ப­டுத்­தி­யுள்­ளன. இந்தக் கழி­வு­களில் ஐக்­கிய இராச்­சி­யத்தில் பயன்­ப­டுத்­தப்­பட்ட மெத்தை மற்றும் படுக்கை விரிப்பு உட்­பட மனித கழி­வு­களும் உள்­ள­டங்­கு­கின்­றன. குறித்த பகு­தியில் மழைநீர் வழிந்து செல்ல முறை­யான வடிகான் கட்­ட­மைப்பு இல்­லா­ததால் மழை நீருடன் கழி­வுகள் படிந்து துர்­நாற்றம் வீசும் நிலையும் தோன்­றி­யுள்­ளது. மேலும் சிறி­ய­ரக கழி­வுகள் காற்றில் பரவி சுற்றுச் சூழல் மாசை ஏற்­ப­டுத்தி வரு­கி­றது.

ஏற்­க­னவே பாவ­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட பொருட்­களை மீள்­சு­ழற்­சிக்கு உட்­ப­டுத்­து­வது உல­க­ளவில் சர்வ சாதா­ர­ண­மாக நடை­பெறும் ஒன்­றுதான். ஆனால் இலங்­கைக்கு நேர்ந்­துள்ள இந்த கதியைப் பார்க்கும் போது இலங்கை வெளி­நா­டு­களின் குப்பைத் தொட்­டியா? என்ற கேள்வி நம்முள் எழுந்­துள்­ளது. இந்தக் குப்பைக் கழி­வு­களின் தாக்­கத்­தினால் முத்­து­ரா­ஜ­வனம் பாதிக்­கப்­படும் அபாயம் உள்­ள­துடன் தொற்­று­நோய்கள் பரவும் அபாய நிலையும் தோன்­றி­யுள்­ளது.

களஞ்­சி­யப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள கழி­வுகள்

சுங்­கத்­தி­ணைக்­க­ளத்தின் தர­வு­க­ளின்­படி 2017 தொடக்கம் கழி­வுகள் அடங்­கிய 241கொள்­க­லன்கள் இலங்­கைக்கு பல்­வேறு கால கட்­டத்தில் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளன. அவற்றுள் 130 கொள்­க­லன்­களை ஒரு பிர­பல தனியார் நிறு­வனம் தற்­போது பொறுப்­பேற்­றுள்ள போதிலும் மீத­முள்ள 111 கொள்­க­லன்கள் கேட்பார் பார்ப்­பா­ரின்றி கொழும்பு துறை­மு­கத்தில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளன.
மீள் ஏற்­று­ம­திக்­காக கொண்டு வரப்­பட்­ட­தாக கூறப்­படும் 130 கொள்­கலன் கழி­வுகள் தற்­போது கட்­டு­நா­யக்க ஏற்­று­மதி ஒழுங்­கு­ப­டுத்தல் வல­யத்தில் 50 ஆயிரம் சதுர அடி நிலப்­ப­ரப்பில் களஞ்­சி­யப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இவற்றின் நிறை சுமார் 27 ஆயி­ரத்து 658 மெட்ரிக் தொன் ஆகும். இந்தக் கழி­வு­களில் பிரித்­தா­னி­யாவில் பாவ­னைக்கு உட்­ப­டுத்­திய மெத்­தைகள், படுக்கை விரிப்­புகள் என்­பன உள்­ள­டங்­கு­கின்­றன. மேலும் பிரேத அறை­யி­லி­ருந்து நீக்­கப்­படும் மனித கழி­வுகள், சத்­திர சிகிச்சைக் கழி­வுகள் மற்றும் மருத்­துவக் கழி­வு­களும் உள்­ள­டங்­கு­வ­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

கழி­வுகள் கொண்­டு­வ­ரப்­பட்­டதன் பின்­னணி

கழி­வு­களை இறக்­கு­மதி செய்­த­தாகக் கூறப்­படும் ஹேலீஸ் ப்ரீ ஸோன் என்ற நிறு­வனம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில், குறித்த நிறு­வனம் உல­க­ளா­விய ரீதியில் உள்ள ஏனைய வர்த்­தக வல­யங்­களில் இடம்­பெ­று­வ­தைப்­போன்று மீள் ஏற்­று­ம­திக்­காக பொருட்­களை சேக­ரிக்கும் நோக்கில் ஸ்தாபிக்­கப்­பட்­ட­தாகும் எனத் தெரி­வித்­துள்­ளது.

அதன்­படி பாவ­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட பொருட்­களை மீள் சுழற்­சிக்கு உட்­ப­டுத்தி மீண்டும் ஏற்­று­மதி செய்­வதே கழி­வுகள் களஞ்­சி­யப்­ப­டுத்­தப்­பட்­டதன் காரணம் என அந்­நி­று­வனம் தம்மை பறை­சாற்­று­கி­றது.

குறித்த நிறு­வனம் அவ்­வாறு தெரி­வித்­துள்ள போதிலும் கடந்த 2017 ஒக்­டோ­பரில் ஹேலீஸ் நிறு­வ­னத்­தினால் மீள் ஏற்­று­மதி நோக்கில் ஐக்­கிய இராச்­சி­யத்தில் இருந்து இறக்­கு­மதி செய்­யப்­பட்ட 130 கொள்­க­லன்­களில் 29 கொள்­க­லன்கள் தற்­போது வரை மீள் ஏற்­று­மதி செய்­யப்­ப­ட­வில்லை என மத்­திய சுற்­றாடல் அதி­கார சபை வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் தெரி­வித்­துள்­ளது. இவ்­வா­றா­ன­தொரு இறக்­கு­ம­திக்கு அங்­கீ­காரம் வழங்­கக்­கூ­டிய வகை­யி­லான சுற்­றாடல் அல்­லது அபா­ய­க­ர­மான கழி­வுகள் தொடர்­பான அனு­மதிப் பத்­தி­ரத்­தையும் குறித்த நிறு­வனம் பெற்­றி­ருக்­க­வில்லை எனவும் மத்­திய சுற்­றாடல் அதி­கார சபை தெரி­வித்­துள்­ளது.

2013 ஜூலை 11 ஆம் திகதி வெளி­யி­டப்­பட்ட அர­சாங்க வர்த்­த­மானி அறி­வித்­த­லுக்கு அமை­வா­கவே கட்­டு­நா­யக்க ஏற்­று­மதி செயற்­பாட்டு வல­யத்­தினுள் மீள் ஏற்­று­மதி நட­வ­டிக்­கை­களை இந்­நி­று­வனம் செயற்­ப­டுத்­தி­யுள்­ள­தாக மத்­திய சுற்­றாடல் அதி­கார சபை மூலம் தெரிய வந்­துள்­ளது.

அந்த வர்த்­த­மானி அறி­வித்­த­லுக்கு அமைய வர்த்­த­க­மொன்றை ஆரம்­பிப்­ப­தற்கு வெளி­நாட்டு மூலங்­களின் ஊடாக குறைந்­த­பட்சம் 65% முத­லீடு செய்­யப்­பட வேண்டும். அத்­துடன் புதிய வர்த்­த­கத்தின் ஊடாக 50 இலட்சம் அமெ­ரிக்க டொலர் (87. 89 கோடி இலங்கை ரூபா) குறைந்­த­பட்ச முத­லீட்­டு­ட­னான உடன்­ப­டிக்­கையில் குறித்த நிறு­வ­னமும் முத­லீட்டு சபையும் கையொப்­ப­மிட வேண்டும்.

கடந்த திங்­கட்­கி­ழமை கொழும்பில் உள்ள சுங்கத் திணைக்­க­ளத்தின் தலை­மைக்­கா­ரி­யா­ல­யத்தில் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பொன்றை சுங்கத் திணைக்­களம் ஏற்­பாடு செய்­தது. குறித்த சந்­திப்பில் சுங்­கப்­பி­ரிவின் ஊடகப் பிரிவு பேச்­சாளர் சுனில் ஜய­ரத்ன பின்­வ­ரு­மாறு விளக்­க­ம­ளித்தார்.

” சர்­வ­தேச வர்த்­தகம் தொடர்பில் வழங்­கப்­படும் வாய்ப்­புக்­களைப் பயன்­ப­டுத்தி பாவ­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட மெத்தை மற்றும் வேறு கழி­வுகள் அடங்­கிய 241 கொள்­க­லன்கள் இலங்­கைக்கு இறக்­கு­மதி செய்­யப்­பட்­டுள்­ளன.
வெளி­நா­டு­களில் இருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும் அனைத்துப் பொருட்­களும் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வ­தில்லை. அந்த வகையில் இலங்கை முத­லீட்டுச் சபை­யுடன் ஒப்­பந்தம் மேற்­கொண்டு சுதந்­திர வர்த்­தக வாய்ப்­புக்­களை பெற்­றி­ருக்கும் பிர­பல தனியார் நிறு­வனம் ஒன்­றினால் 130 கழிவுக் கொள்­க­லன்கள் பொறுப்­பேற்­கப்­பட்டு விட்­டன. இத­னுடன் மேலும் இரு பிர­பல தனியார் நிறு­வ­னங்கள் தொடர்­பு­பட்­டுள்­ளன.

கழிவு முகா­மைத்­துவம் மற்றும் அதன் ஏற்­று­மதி இறக்­கு­மதி தொடர்பில் 1989 ஆம் ஆண்டு கைச்­சாத்­தி­டப்­பட்ட ‘பாசெல்’ ஒப்­பந்­தத்தில் இலங்­கையும் அங்­கத்­துவம் வகிக்­கின்­றது. அதன்­படி கழி­வுகள் என்று இனங்­கா­ணப்­பட்­ட­வற்றை ஒரு நாட்டில் இறக்­கு­மதி செய்­யும்­போது அந்­நாட்டின் மத்­திய சுற்­றாடல் அதி­கார சபை அதன் சாதக பாதகத் தன்மை தொடர்பில் பரி­சோ­த­னை­களை மேற்­கொள்ள முடியும். அந்த வகையில் தற்­போது இறக்­கு­மதி செய்­யப்­பட்­டுள்ள கழி­வுகள் குறித்து மத்­திய சுற்­றாடல் அதி­கார சபை­யினால் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­ட­னவா என்­பது எமக்குத் தெரி­யாது. எனினும் நாம் இவ்­வி­டயம் தொடர்பில் கடந்த மே மாதம் 7 ஆம் திகதி விசா­ர­ணை­களை ஆரம்­பித்தோம்.

உல­க­ளவில் மருத்­துவக் கழி­வுகள், இலத்­தி­ர­னியல் கழி­வுகள், அணுக்­க­ழி­வுகள் உள்­ளிட்ட பெரு­ம­ள­வான கழி­வுகள் வெளி­யேற்­றப்­ப­டு­கின்­றன. இவை பல மில்­லி­யன்­க­ளுக்கு விற்­பனை செய்­யப்­ப­டு­கின்­றன. இதன் பின்­ன­ணி­யி­லுள்ள ஆபத்து இன்னும் புரிந்து கொள்­ளப்­ப­ட­வில்லை. அர­சாங்­கத்­தி­டமும் நாங்கள் இது­பற்றி எடுத்துக் கூறி வந்­தி­ருக்­கிறோம்.

இந்­நி­லையில் இது குறித்த விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வரு­கின்றோம். அதன் முடிவில் இலங்­கைக்கு இறக்­கு­மதி செய்­யப்­பட்ட கழி­வு­களை மீள் ஏற்­று­மதி செய்­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை விரைந்து மேற்­கொள்­வ­தற்கு தீர்­மா­னித்­தி­ருக்­கிறோம் என்றார்.

இதே­வேளை இலங்­கைக்கு குப்­பை­களை இறக்­கு­மதி செய்­த­தாகக் கூறும் அனைத்துக் குற்­றச்­சாட்­டு­க­ளையும் ஹேலீஸ் ப்ரீ ஸோன் நிறு­வனம் மறுப்­ப­தாக அந்­நி­று­வ­னத்தின் பணிப்­பாளர் ருவன் வைத்­தி­ய­ரத்ன தெரி­விக்­கிறார்.
கப்பல் சரக்கு போக்­கு­வ­ரத்தில் ஈடு­பட்டு வரும் ஈ.டி.எல்.கலம்போ நிறு­வ­னத்­தினால் சிலோன் மெட்டல் ப்ரொசஸிங் கோப்­ரேஷன் நிறு­வ­னத்­திற்கு உரித்­தான பாவிக்­கப்­பட்ட இந்த மெத்­தை­களை மீண்டும் பதப்­ப­டுத்தி மீள் ஏற்­று­மதி செய்­வ­தற்­காக ஹேலீஸ் ப்ரீ ஸோன் நிறு­வனம் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தது.
அதற்­க­மைய சரக்கு வரை­ய­றுக்­கப்­பட்ட ஈ.டி.எல். கலம்போ தனியார் நிறு­வ­னத்­தினால் ஹேலீஸ் ப்ரீ ஸோனுக்கு அனுப்­பப்­பட்­டது. இதன் உரி­மை­யா­ளர்கள் வரை­ய­றுக்­கப்­பட்ட ஹேலீஸ் நிறு­வ­னத்­தாரே என சுங்கத் திணைக்­க­ளத்­தினர் கூறி­னாலும் குறித்த சரக்­குக்கும் எங்­க­ளுக்கும் எந்­த­வித சம்­பந்­தமும் இல்லை என வணிகப் பட்­டி­யலில் தெளி­வாகக் காட்­டப்­பட்­டுள்­ளது.

சர்ச்­சைக்­கு­ரிய கொள்­க­லன்­களில் எவ்­வித அபா­ய­க­ர­மான பொருட்­களும் இல்லை என ஆவ­ணங்­களின் மூல­மாக உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டதன் பின்­னரே குறித்த 130 கொள்­க­லன்கள் பொறுப்­பேற்­கப்­பட்­டன.

130 கொள்­க­லன்­களில் 29 கொள்­க­லன்கள் தற்­போது ஹேலீஸ் ப்ரீ ஸோன் நிறு­வ­னத்­தினால் செயன்­மு­றைக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு மீள் ஏற்­று­மதி செய்­யப்­பட்­டுள்­ளன. குறித்த மெத்­தை­களை வேறு­ப­டுத்தி அவற்றின் உறை, பஞ்­சுகள் மற்றும் கம்­பி­களை அகற்றி அவற்றை வெவ்­வே­றாக பொதி­யிட்டு சிலோன் மெட்டல் நிறு­வ­னத்தின் தேவையின் பிர­காரம் மீள் ஏற்­று­மதி செயற்­பா­டு­க­ளையே நாம் மேற்­கொண்­டுள்ளோம். இந்­நி­லையில் தற்­போ­தைய நிலையில் எஞ்­சி­யுள்ள மெத்­தை­களை விரை­வாக செயன்­மு­றைக்கு உட்­ப­டுத்தி ஏற்­று­மதி செய்­வ­தற்கு தீர்­மா­னித்­துள்ளோம். கொழும்பு துறை­மு­கத்தில் உள்ள 111 கொள்­க­லன்­க­ளுக்கும் எமது நிறு­வ­னத்­துக்கும் எந்­த­வித தொடர்பும் இல்லை என்றார்.

பாரா­ளு­மன்றில் கேள்வி

கடந்த செவ்­வாய்­கி­ழமை இடம்­பெற்ற பாரா­ளு­மன்ற அமர்வில் குறித்த குப்பை விவ­காரம் குறித்த பிரச்­சினை விவா­திக்­கப்­பட்­டது.

கழிவுப் பொருட்கள் அடங்­கிய கொள்­க­லன்கள் எந்த நிறு­வ­னத்தின் மூலம் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளன என்ற தக­வலை உட­ன­டி­யாக வெளிப்­ப­டுத்த வேண்டும் என எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்கள் வலி­யு­றுத்­தினர்.

பாரா­ளு­மன்­றத்தில் விசேட கேள்வி எழுப்­பிய ஜே.வி.பி.யின் தலைவர் அனு­ர­கு­மார திசா­நா­யக்க, கழி­வுப்­பொ­ருட்கள் அடங்­கிய 200 க்கும் அதி­க­மான கொள்­க­லன்கள் இலங்­கைக்கு கொண்டு வரப்­பட்­டுள்­ளன. இவற்றுள் 102 கொள்­க­லன்கள் சுங்கத் திணைக்­க­ளத்­தினால் துறை­மு­கத்தில் வைத்தே கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளன. 2 ஆண்­டு­களை விட அதி­க­மான காலப்­ப­கு­தியில் இவை கண்­ட­றி­யப்­ப­டாமல் இருந்­துள்­ளன. இவை தொடர்­பான அவ­தானம் இல்­லாமல் இருந்­துள்­ளது. இதில் இது­வரை காலமும் கொண்­டு­வ­ரப்­பட்ட கழி­வுகள் எவ்­வ­ளவு? இதில் எவ்­வ­ளவு தொகை­யான கழி­வுகள் மீள் ஏற்­று­மதி செய்­யப்­பட்­டுள்­ளன என்­பதை வெளிப்­ப­டுத்த வேண்டும்.

கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள கழி­வு­களில் ஒரு தொகை குப்­பைகள் மிகவும் சூட்­சு­ம­மாக நாட்டின் பல்­வேறு பகு­தி­க­ளுக்கு பரப்பி விடப்­பட்­டுள்­ளன. இதனால் சூழ­லுக்கு பாரிய அச்­சு­றுத்தல் நிலை­மைகள் உரு­வாகும். 2013 ஆம் ஆண்டு வர்த்­த­மானி அறி­வித்­தலில் வழங்­கப்­பட்ட சுதந்­தி­ரத்­துக்கு அமை­யவே இந்த கழிவு வியா­பாரம் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. இதில் பிர­தான சில நிறு­வ­னங்கள் தொடர்பில் இருப்­ப­தா­கவும் தெரிய வரு­கி­றது. ஆனால் இது குறித்து இந்த அர­சாங்கம் எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­க­வில்லை. ஆகவே எந்த நிறு­வனம் இந்தக் குப்­பை­களை கொண்டு வந்­துள்­ளது என்­பதை வெளிப்­ப­டுத்த வேண்டும் என்றார்.

இதன் பின்னர் ஒழுங்குப் பிரச்­சினை எழுப்­பிய எதிர்க்­கட்சி உறுப்­பினர் விமல் வீர­வன்ச, கடந்த 2013 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சியில் வெளி­யிட்ட வர்த்­த­மானி அறி­வித்தல் ஒன்­றினை வைத்­துக்­கொண்டு 2017 ஆம் ஆண்டு கொண்டு வரப்­பட்ட குப்­பை­களை எம்­மீது கொட்ட முயற்­சிக்­கின்­றனர். 2013 இல் இவ்­வாறு சுங்கச் சட்­டத்தில் மாற்றம் செய்­யப்­பட்­ட­தாக கூறு­கின்­றனர். ஆனால் 2013 இல் இருந்து குப்­பை­களை கொண்டு வர­வில்லை. 2017 ஆம் ஆண்டில் தான் குப்­பைகள் கொண்டு வரப்­பட்­டுள்­ளன. ஆகவே இந்தக் குப்­பை­களை கொண்டு வரும் நிறு­வனம் யார் என்­பதை வெளி­யிட வேண்டும். அப்­போது இவர்கள் எந்த அர­சாங்­கத்தை சேர்ந்­த­வர்கள் என்­பது தெரி­ய­வரும் என்றார்.

எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்கள் கேள்­வி­களை எழுப்­பியும் அதற்­கான பதி­லைக்­கூற அரச தரப்­பினர் சபையில் இருக்­க­வில்லை. எவ்­வா­றி­ருப்­பினும் எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்கள் எழுப்­பிய கேள்­வி­க­ளுக்கு இந்த வார இறு­திக்குள் பதில் வழங்க உரிய அமைச்­சர்­களை வலி­யு­றுத்­து­வ­தாக சபா­நா­யகர் தெரி­வித்தார்.
அண்­மைக்­கா­ல­மாக எமது நாடு ஏதா­வது ஒரு பிரச்­சி­னையை சந்­தித்து வரு­வது வழக்­க­மான ஒன்­றாக மாறி­விட்­டது. அந்த வகையில் பிரித்­தா­னி­யா­வி­லி­ருந்து சட்ட விரோ­த­மாக குப்­பைகள் அடங்­கிய கொள்­க­லன்கள் இலங்­கைக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள இந்த விவ­காரம் பலத்த சர்ச்­சையைத் தோற்­று­வித்­துள்­ளது.

இந்தக் குப்­பைகள் மூலம் சூழ­லுக்கு பாதிப்பு ஏற்­பட்­டுள்­ள­துடன் குறித்த குப்­பை­க­ளினுள் இரத்தம், மனித அவ­ய­வங்கள் உள்­ளிட்ட கழி­வு­களும் காணப்­ப­டு­வதால் இதன் மூலம் பாரிய சுகா­தார அச்­சு­றுத்தல் ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் இவற்­றி­லி­ருந்து வெளி­யாகும் கழிவு நீர் முத்­து­ரா­ஜ­வெல பாது­காக்­கப்­பட்ட வனத்தை சென்­ற­டை­வ­தா­கவும் சூழ­லியல் வல்­லு­னர்கள் சுட்டிக் காட்­டி­யுள்­ளனர்.

இதற்­கி­டையில் இலங்­கைக்கு குப்­பை­களைக் கொண்டு வந்த நிறு­வ­னத்­திற்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு கோரி சூழலை பாது­காக்கும் கேந்­திர நிலை­யத்­தினால் மேன்­மு­றை­யீட்டு நீதி மன்­றத்தில் மனு­வொன்றும் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது. இந்தக் குப்­பை­களை நாட்­டுக்கு கொண்டு வந்த தரப்­பினர் அடை­யாளம் காணப்­பட்டு அவர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும் என அந்த மனுவின் ஊடாக வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.
1980 ஆம் ஆண்டு 47 ஆம் இலக்க தேசிய சுற்­றாடல் சட்­டத்தின் பிர­காரம் ஏதேனும் பொருட்­களை நாட்­டுக்குள் கொண்டு வர வேண்டும் என்றால் மத்­திய சுற்­றாடல் அதி­கார சபையின் அனு­ம­தியை பெற வேண்டும். ஆனால் குறித்த அனு­மதி பெறப்­ப­ட­வில்லை என்று தற்­போது ஊர்­ஜிதம் ஆகி­யுள்ள நிலையில் சுங்­கத்­தி­ணைக்­க­ளத்­திடம் இது தொடர்­பான விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட வேண்­டி­யது கட்­டா­ய­மாகும்.

இந்தக் குப்பை விவகாரத்தின் பின்னணியில் பல மறைகரங்கள் இருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வர ஆரம்பித்துள்ளன. பல்தேசிய கம்பனிகளின் நலன்களுக்காக இவ்வாறு ஆபத்தான வெளிநாட்டுக் குப்பைகள் இலங்கைக்குள் தருவிக்கப்படுகின்றனவா எனும் கேள்வியும் அச்சமும் தற்போது எழுந்துள்ளது. புத்தளம் அருவாக்காலு குப்பை கொட்டும் திட்டம் நிர்மாணிக்கப்பட்டதற்கும் இதற்கும் சம்பந்தம் இருக்கலாம் என்ற சந்தேகமும் எழ ஆரம்பித்துள்ளது.

இலங்கையில் சேரும் குப்பைகளையே முறையாக நிர்வகிக்கத் திராணியற்ற அரசாங்கம் வெளிநாட்டுக் குப்பைகளை கொண்டு வர அனுமதி வழங்கியிருக்குமாயின் அது மிகவும் துரதிர்ஷ்டவசமானதாகும். அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பில் விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதுடன் குப்பைகளைக் கொண்டுவர சட்டரீதியாக வழங்கப்பட்டுள்ள அனுமதியும் உடன் இரத்து செய்யப்பட வேண்டும்.

பிந்திக் கிடைக்கும் தகவல்களின்படி, குறித்த குப்பைக் கொள்கலன்களை மீளவும் பிரித்தானியாவுக்கே அனுப்பி வைப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறிய முடிகிறது. அதேபோன்று பிரித்தானியாவின் பெயருங்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் குறித்தும் அந்நாட்டிலும் பிரத்தியேக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எது எப்படியிருப்பினும் இலங்கையை சர்வதேச நாடுகளின் குப்பைத் தொட்டியாக மாற்ற அனுமதிக்க முடியாது. இதற்கு எதிராக இன மத பேதமின்றி சகலரும் இணைந்து களத்தில் இறங்கிப் போராட வேண்டும். இன்றேல் அடுத்த சந்ததியினர் குப்பைக்காடுகளின் நடுவிலேயே நோயுடனும் நொம்பலத்துடனும் வாழ்க்கையைக் கொண்டு செல்ல நேரிடும்.

எம்.ஏ.எம்.அஹ்ஸன்

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.