சுதந்திரத்திற்குப் பின் முஸ்லிம் அரசியல் தலைமைகள் சமூகத்தின் நலன் கருதி பல்வேறு கண்ணோக்கில் செயற்பட்டார்கள். அவர்கள் எப்போதும் தேசிய நீரோட்டத்துடன் சமாந்தரமாகச் சென்றார்கள். குறிப்பாக சேர் ராசிக் பரீட், பதியுதீன் மஹ்மூத், எம்.எச். முஹம்மத், எம்.ஏ. பாக்கீர் மாக்கார், ஏ.சீ. எஸ். ஹமீட் போன்றோர் பெரும்பான்மை மக்களின் மனதைவென்று அவர்களது விருப்பத்துடன் முஸ்லிம்களுக்குரிய உரிமைகளையும் சலுகைகளையும் பெற்றனர். குறிப்பாக முஸ்லிம் தனியார் சட்டம், காதி நீதிமன்றங்கள், இலங்கை வானொலி முஸ்லிம் சேவை, முஸ்லிம் பாடசாலைகளின் தோற்றம், நோன்பு விடுமுறை, முஸ்லிம் களுக்கென சமய, கலாசார அமைச்சு ஒன்று அமைக்கப்படல் என பல்வேறு நடவடிக்கைகளை இங்கு சுட்டிக்காட்ட முடியும்.
சென்ற மூன்று தசாப்தங்களுக்கு முன் நடைபெற்ற வடக்கு– கிழக்கு தமிழ் மக்களின் உரிமைப்போராட்டம் அப்பிரதேசங்களில் வாழ்ந்த முஸ்லிம் மக்களை பல்வேறு நெருக்குதல்களுக்குள்ளாக்கியதால் தம்மைப் பலப்படுத்திக் கொள்வதற்காக எம்.எச்.எம். அஷ்ரப் முஸ்லிம்களுக்கென தனியான ஒரு அரசியல் கட்சியை ஆரம்பித்தார். அவர் பேரம் பேசும் அரசியல் கோட்பாட்டில் நின்று முஸ்லிம்களுக்கு பல்வேறு சலுகைகளைப் பெற்றுக்கொடுத்தார். குறிப்பாக தென் கிழக்குப் பல்கலைக்கழகம், ஒலுவில் துறைமுகம் மற்றும் சில அபிவிருத்தித் திட்டங்களைக் குறிப்பிட முடியும்.
அஷ்ரபின் மறைவுக்குப் பின் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட பிளவு, பல்வேறு முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தோற்றம், யாப்பு சீர்திருத்தங்கள், எல்லை நிர்ணயத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், பேரினவாத கோசங்கள், உலகிலும் இலங்கையிலும் முஸ்லிம் சமூகத்தைப் பற்றி ஏற்பட்டுள்ள தப்பபிப்பிராயங்கள், கசப்புணர்வுகள் காரணமாக தனித்து இயங்கும் அரசியல் கோட்பாட்டின் சாத்தியப்பாடு பற்றி பல்வேறு சந்தேகங்கள் பிறந்துள்ளன. ஆகவே முஸ்லிம் அரசியல் தலைமைகள் தேசிய கண்ணோக்கில் செயற்படும் அவசியம் இப்போது ஏற்பட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற குண்டு வெடிப்புகள் முழு முஸ்லிம் சமூகத்தின் மீதும் சந்தேகங்களை ஏற்படுத்தியது. இது முஸ்லிம்களுக்கு எதிராகச் செயற்படும் சில பேரினவாத சக்திகளுக்கு நல்லதொரு சந்தர்ப்பமாக மாறியது. ஆகவே முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரங்களை முடுக்கிவிட்டார்கள். ஒரு முஸ்லிம் அமைச்சரையும் இரு ஆளுநர்களையும் இந்நிகழ்வோடு தொடர்புபடுத்த முயன்றனர். முஸ்லிம் சமூகம் இதுவரை அனுபவித்துவரும் உரிமைகளையும் சலுகைகளையும் இரத்துச்செய்ய வேண்டும் என்ற கோசங்கள் முன்வைக்கப்பட்டன. அமைச்சர் ரிசாட் பதியுதீனும் இரு ஆளுநர்களும் பதவி விலகவேண்டும் என்று முன்வைக்கப்பட்ட நிபந்தனைகள், கண்டியில் பெரும்பான்மை மக்கள் மத்தியில் ஓர் உணர்ச்சிப் பேரலையைத் தோற்றுவித்தது. இது இலங்கை வாழ் முழு முஸ்லிம் சமூகத்தையும் பலிகொண்டு விடுமோ என்ற ஒரு பதற்ற நிலை ஏற்பட்டபோது நமது முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஒன்றுபட்டு எடுத்த தீர்மானங்கள் பொங்கி எழுந்த உணர்வுகள் தணிவதற்கு வழியமைத்தது. இந்தத் தீர்மானம் இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்பமாக அமைந்தது.
தற்போது முஸ்லிம் தனியார் சட்டத்தையும் விமர்சிக்கத் துவங்கியுள்ளனர். முஸ்லிம்களுக்கு தனியான சட்டங்கள் அவசியம் இல்லை எனவும் வாதிடுகின்றனர். பெரும்பான்மை மக்களுக்கு முஸ்லிம் தனியார் சட்டங்கள் பற்றிய தெளிவு குறைவு, அண்மைக்காலத்தில் முஸ்லிம்களது கலாசாரம் நடத்தைகள் குறித்து ஏற்பட்டுள்ள சந்தேகங்களும் இதற்கு முக்கிய காரணங்களாகும். முஸ்லிம் தனியார் சட்டத்தில் இலங்கை முஸ்லிம்களின் தேவைகளை அனுசரித்து சில திருத்தங்களைச் செய்வதற்கு உயர் நீதிமன்ற நீதியரசரின் தலைமையில் எட்டு வருடங்களுக்கு முன்பே ஒரு குழு நியமிக்கப்பட்டது. இக்குழு ஆரம்பத்தில் ஒற்றுமையாகச் செயற்பட்டது. பின் சிபாரிசுகளைச் சமர்ப்பிக்கும் இறுதிக்கட்டத்தில் அபிப்பிராய பேதங்களால் பிளவுபட்டு இரு வெவ்வேறான அறிக்கைகளை நீதியமைச்சுக்குச் சமர்ப்பித்தார்கள். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிடிவாதப் போக்கே இச் சட்டச் சீர்திருத்தங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான காலதாமதம் ஏற்பட்டதற்கு முக்கிய காரணம் என்ற விமர்சனங்களும் முன்வைக்கப் படுகின்றன. எது எவ்வாறிருப்பினும் ஷரீஆ வரம்புகளுக்குள் இலங்கை முஸ்லிம்களின் சமூகத் தேவைகளைக் கருத்தில்கொண்டு பெரும்பான்மை மக்களின் அபிப்பிராயங்களையும் உள்வாங்கி, முஸ்லிம் தனியார் சட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பது என மூத்த முஸ்லிம் அரசியல்வாதி ஏ.எச்.எம். பௌஸியின் தலைமையில் சகல முஸ்லிம் பாராளுமன்ற அங்கத்தவர்களும் ஏகமனதாகத் தீர்மானித்துள்ளதை மிக முக்கியமான ஆக்கபூர்வமான இரண்டாம் கட்ட நகர்வாகக் கருதமுடியும். அரசியல் தலைமைகள் அரசியல் நோக்குடன் பிரிந்து செயல்படும் போது அவர்களுக்கு சமூகத்தின் நலன்கருதி ஆக்கபூர்வமான முடிவுகள் தைரியத்துடன் எடுக்க முடியாதிருந்தது. மாற்றத்தை விரும்பாத சக்திகள் எதிர்ப்பிரசாரங்களை தனிப்பட்ட தலைமைகள் மீது மேற்கொள்ளலாம் என்ற அச்சம் எல்லா முஸ்லிம் அரசியல் தலைமைகளிடமும் காணப்பட்டது. தற்போது முஸ்லிம் தலைமைகள் கூட்டு முடிவுகளின் பெறுமதியை உணர்ந்துள்ளனர். இது தொடருமாயின் சமூகத்துக்கு நல்லதொரு எதிர்காலம் பிறக்கும்.
ஆனால் இந்தக் கூட்டு முஸ்லிம் அரசியல் தலைமைகளை ஒரு தனிக்கட்சியமைக்கும் எல்லைக்கு எடுத்துச்சென்றுவிடக் கூடாது. தனியான முஸ்லிம் கட்சி உருவாவது வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய பகுதிகளில் வாழும் முஸ்லிம்களை பெரும்பான்மை மக்களிடமிருந்து தனிமைப்படுத்தி விடும். ஆகவே முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பல கட்சிகளில் இருந்துகொண்டு முஸ்லிம் சமூகப் பிரச்சினைகளை எதிர்நோக்கும்போது அழுத்தம் கொடுக்கும் குழுவாக (Pressure Group) செயற்படுவதே மேலானது. ஆனால் வடக்கு – கிழக்கில் செயற்படும் எல்லா முஸ்லிம் கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு கட்சியை உருவாக்கி வடக்கு –கிழக்கு தமிழ் தலைமைகளுடன் புரிந்துணர்வுடன் செயற்படுவது நல்ல விளைவுகளை ஏற்படுத்தலாம். வடக்கு – கிழக்குக்கு வெளியே வாழும் சிறுபான்மை முஸ்லிம்களும் தமிழர்களும் தமது உரிமைகளைப் பெறுவதற்கு அது வழியமைத்துக் கொடுக்கலாம்.
பேராசிரியர் ஏ.ஜீ. ஹுசைன் இஸ்மாயில்
vidivelli