நான் கொலை செய்ய சூழ்ச்சி செய்தேன் என்றால் என்னை சிறையில் அடையுங்கள்
பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா சவால்
- பாராளுமன்ற செய்தியாளர்கள்
தான் தேர்தலில் தோற்றிருந்தால் தன்னை ஆறடி நிலத்தின் கீழ் புதைத்திருப்பார் என மஹிந்த ராஜபக்ஷ மீது குற்றம் சுமத்திய ஜனாதிபதி, இன்று அவரையே பிரதமராக்கிவிட்டு ஆட்சிக்கு கொண்டுவந்த எம்மை கொலைகாரர்கள், சூழ்ச்சிக்காரர்கள் என குற்றம் சுமத்துகின்றார். நான் கொலை செய்ய சூழ்ச்சி செய்தேன் என்றால் ஆதாரத்தை நிரூபித்து என்னை சிறையில் அடையுங்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஆசு மாரசிங்க கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையின்போது கருத்து தெரிவிக்கையில் அவர் இந்தக் கருத்தினை கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், நான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்யத் திட்டம் போட்டதாக ஜனாதிபதி கூறியதாக ஆங்கில செய்தித்தாள் ஒன்றில் அவதானித்தேன். நாமல் குமார என்ற நபர் புலனாய்வு அதிகாரியாக ஜனாதிபதிக்கு தகவல் கொடுப்பவர். அதேபோல் சில நாட்களுக்கு முன்னர் சர்வதேச ஊடகங்களை சந்தித்த ஜனாதிபதி, அந்த சந்திப்பின்போது ரணில் விக்கிரமசிங்கவையோ சரத் பொன்சேகாவையோ பிரதமராக நியமிக்க மாட்டேன் என கூறினார். காரணம் கேட்டமைக்கு நான் அவரை கொலைசெய்ய திட்டம் தீட்டியதாக தகவல் கிடைத்ததாகக் கூறினார்.
உண்மையில் நான் பிரதமராக வேண்டும் என்ற எந்த நோக்கத்திலும் இருக்கவில்லை. கனவில்கூட நான் அவ்வாறு எண்ணிப்பார்த்ததில்லை. அதேபோல் நான் ஜனாதிபதியை கொல்ல முயற்சி செய்ததாக அவர் காரணம் கூறுகின்றார். நான் அவ்வாறு கொலை முயற்சியில் ஈடுபட்டேன் என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது. இந்தக் கருத்து மிகவும் மோசமானது. ஆகவே ஜனாதிபதியின் இந்தக் கருத்து குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக பொலிஸ்மா அதிபரிடம் இந்தக் காரணிகள் குறித்து வினவ வேண்டும். அவரை அடுத்த 48 மணி நேரத்துக்குள் பாராளுமன்றத்துக்கு வரவழைத்து உண்மைகளை வினவ வேண்டும். அவ்வாறு நான் கொலை சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளேன் என்றால் என்னை கைது செய்து சிறையில் அடையுங்கள். குற்றவாளி என்றால் நான் பாராளுமன்றத்தில் இருப்பதற்குத் தகுதியில்லை. ஜனாதிபதியின் இந்த கருத்து மிகவும் பாரதூரமானது. அதேபோல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆரம்பத்தில் கூறிய கருத்துக்களை அவதானிக்க வேண்டும். தான் ஜனாதிபதி தேர்தலில் தோற்றிருந்தால் என்னை ஆறடி நிலத்தின் கீழ் மஹிந்த ராஜபக் ஷ புதைத்திருப்பார் என அவர் பல சந்தர்ப்பங்களில் கூறினார். அவ்வறு தன்னை நிலத்தில் புதைத்திருப்பார் என கூறியவரை பிரதமராக்கிவிட்டார். தன்னை கொலை செய்ய திட்டம் தீட்டியதாகக் கூறுகின்றார். மேலும் நாமல் குமார எவ்வாறு புலனாய்வு அதிகாரியானார்? அவர் ஜனாதிபதிக்கு புலனாய்வு அதிகாரியாக உள்ளார். அதே நிலையில் தாமரை மொட்டில் தேர்தலில் களமிறங்கவும் போகின்றார். ஆகவே இவர்களின் கூட்டணி மீது எமக்கு சந்தேகமுள்ளது. கொலையாளி என என்னை கூறியது தவறு. ஆகவே உடனடியாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
-Vidivelli