2014 இல் இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்கள் தொடர்பில் அறிய முடிந்தது
ஸஹ்ரான் 2015 லேயே பயங்கரவாதியாக உருவானார் என்கிறார் என்.கே.இலங்ககோன்
2014 ஆம் ஆண்டுகளில் இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்கள் குறித்து அறியமுடிந்தது. 2014 ஆம் ஆண்டு மற்றும் 2015 ஆரம்ப கட்டங்களில் வந்த புலனாய்வுத் தகவல்களில் இலங்கைக்குள் அடிப்படைவாத குழுக்கள் குறித்து தகவல்கள் கிடைக்கவில்லை. அப்போதெல்லாம் ஐ.எஸ். பயங்கரவாதம் மற்றும் அந்த அமைப்பில் இணைந்துகொள்ள இலங்கையிலிருந்து சிரியாவுக்கு சென்ற நபர்கள் குறித்தே அதிகமாக புலனாய்வுத் தகவல்கள் கிடைத்தன என முன்னாள் பொலிஸ்மா அதிபரும் ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராய ஜனாதிபதி நியமித்த ஆணைக்குழுவின் தலைவருமான என்.கே.இலங்ககோன் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணைகளை நடத்தி பாராளுமன்றத்திற்கு அறிக்கை வழங்க நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் நேற்று சாட்சியமளிக்க வரவழைக்கப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபரும் ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராய ஜனாதிபதி நியமித்த ஆணைக்குழுவின் தலைவருமான என்.கே.இலங்ககோன் வாக்குமூலம் வழங்குகையில்,
இவ்வாறான தாக்குதல் நடத்தப்போவதாக புலனாய்வு தகவல் கிடைத்த முதல் தடவை இதுவாகவே இருந்திருக்கும். எனக்கு தெரிய வேறு ஒரு சந்தர்ப்பத்தில இவ்வாறான புலனாய்வுத் தகவல் வந்ததில்லை. ஆகவே இதனை அதிகாரிகள் கருத்தில் கொண்டிருக்க வேண்டும். அத்துடன் இது உடனடித் தாக்குதல் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆகவே அதற்கான கவனத்தை செலுத்தியிருக்க வேண்டும். இவ்வாறான காரணிகளை பார்க்கையில் இந்த தகவல் குறித்து அதிக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதேபோல் எங்கு தாக்குதல் நடத்தப்படும் என உறுதியாக் கூறப்படாத நிலையில் சகல அதிகாரிகளும் கவனமாக செயற்பட்டிருக்க வேண்டும்,
முஸ்லிம் அடிப்படைவாத செயற்பாடுகள் குறித்து…
நான் 2016 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றேன். 2014 ஆம் ஆண்டுகளில் இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்கள் குறித்து அறிய முடிந்தது. 2014 ஆண்டு மற்றும் 2015 ஆரம்ப கட்டங்களில் வந்த புலனாய்வுத் தகவல்களில் இலங்கைக்குள் அடிப்படைவாத குழுக்கள் குறித்து தகவல்கள் கிடைக்கவில்லை. அப்போதெல்லாம் ஐ.எஸ். பயங்கரவாதம் மற்றும் அந்த அமைப்பில் இணைந்துகொள்ள இலங்கையிலிருந்து சிரியாவுக்கு சென்ற நபர்கள் குறித்தே அதிகமாக புலனாய்வு தகவல்கள் கிடைத்தன. ஆகவே ஐ.எஸ். அமைப்பிற்கு இணைய இங்கிருந்து செல்லும் நபர்கள் அவர்களின் குடும்பங்கள் குறித்து ஆராய்ந்து அவர்களை கண்காணிக்கவே நாம் கவனம் செலுத்தினோம்.
அதற்கப்பால் இஸ்லாமிய அடிப்படைவாத செயற்பாடுகள் அல்லது குழுக்கள் குறித்து எதுவும் அறிய முடியவில்லை. உருவாகவும் இல்லை என்றே நினைகின்றேன். எவ்வாறு இருப்பினும் இந்தப் பிரச்சினை 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐ.எஸ். அமைப்பில் இணைந்த இலங்கையர் ஒருவர் இறந்ததாக தகவல் கிடைத்தது. இந்த தகவலுடன் அடிப்படைவாத செயற்பாடுகள் பலமடைகின்றன, பாரதூரமாக உருவாகின்றன என்பதை நாம் உணர்ந்தோம். அந்த ஆண்டில் மேலும் 5 பேர் அவர்களின் குடும்பத்துடன் சிரியா சென்று ஐ.எஸ். அமைப்பில் இணைய சென்றுள்ளனர் என்பதை அறிய முடிந்தது. இந்த தகவல்கள் தொடர்ச்சியாக பாதுகாப்பு சபைக் கூட்டங்களில் பேசப்பட்டன. என்ன செய்வது எனவும் ஆராயப்பட்டது. நிலைமைகள் மோசமடைந்து வந்த நேரத்தில் நான் பொலிஸ்மா அதிபராக பல வேலைத்திட்டங்களை கையாண்டேன்.
குறிப்பாக அரச புலனாய்வு அதிகாரிகளை அழைத்து இந்த விடயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டுமெனக் கூறினேன். இது சர்வதேச வலையமைப்பாக செயற்பட்டு வருகின்றது. ஆகவே ஏனைய நாடுகளின் புலனாய்வுத்துறையுடன் நெருக்கமான தொடர்பை கொண்டு இதனை கண்காணிக்க வேண்டும் எனவும் கூறினேன். அதேபோல் பொலிஸ் அதிகாரிகளுக்கும் விசேட பிரிவுக்கு வலியுறுத்தியிருந்தேன். அதற்கும் மேலாக குற்றப்புலனாய்வு பிரிவு, பயங்கரவாத தடுப்பு பிரிவு, அரச புலனாய்வு துறையை இணைத்து விசேட குழுவொன்றை நியமித்தேன். இஸ்லாமிய அடிப்படைவாத செயற்பாடுகள் குறித்து ஆராய குழுவொன்று நியமிக்கப்பட்டது. தலைமை பொறுப்பை பிரதி பொலிஸ்மா அதிபர் ஒருவருக்கு வ-ழங்கினேன். இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை கூடி இது குறித்து ஆராய்ந்தோம். மேலும் ஒவ்வொரு மாதமும் தனிப்பட்ட முறையில் இந்தக் குழுவை சந்தித்து மேலதிக நடவடிக்களை முன்னெடுத்தேன்.
இதேவேளை, 34பேர் ஐ.எஸ்.இல் இணையவில்லை, 5 பேர்தான் இணைந்தனர். ஆனால் அவர்கள் குடும்பத்துடன் சென்றிருந்தனர். அதன் மூலமாக 34 பேர் என்ற எண்ணிக்கை கூறப்பட்டது. இதில் ஒருவர் கலேவல பிரதசத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.
மேலும், எனது பதவிக்காலத்தில் இஸ்லாமிய பயங்கரவாதம் குறித்து செயற்பட வாய்ப்புகள் இருக்கவில்லை. சஹ்ரான் என்ற நபர் 2015ஆம் ஆண்டுகளில் உருவாகினார். முகப்புத்தகம் மூலமாக. இவர் மட்டுமல்ல, மேலும் சிலர் இணையங்கள் மூலமாக இவ்வாறான இறுக்கமாக, மோசமான கருத்துக்களை பரிமாற்றிக்கொள்வதற்கு அப்பால் ஒரு குழுவாக உருவாவதாக தகவல் இருக்கவில்லை. ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் இருந்த காரணத்தினால் அவர்களை கண்காணித்து தகவல்களை பெற்றுக்கொள்ளவே நாம் முயன்றோம் என்றும் அவர் தெரிவித்தார்.
(ஆர்.யசி )
vidivelli