நாட்டில் இயங்கிவரும் அரபு மத்ரஸாக்களை கண்காணித்தல் மற்றும் ஒழுங்குபடுத்தல் தொடர்பான சட்டவரைபொன்று அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டு அதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தாமதப்படுத்தப்பட்டுள்ளது. உலமா சபையின் தனிப்பட்ட தேவைகளுக்காக அரபு மத்ரஸாக்களை கண்காணிக்க தனியான சட்டமொன்றினை உருவாக்க இடமளிக்க முடியாது என பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார். பொதுபலசேனாவின் தலைமைக்காரியாலயத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது, “அடிப்படைவாதம் போதிக்கப்படும் அரபு மத்ரஸாக்கள் தொடர்பான சட்டமூலமொன்று அவசரமாக இயற்றிக்கொள்ளும் நடவடிக்கை கைவிடப்பட வேண்டும் என நாம் அரசைக் கோருகிறோம். இதுவோர் சமயக்குழுவின் தேவைக்காகவே முன்னெடுக்கப்படவுள்ளது.
இஸ்லாமிய அடிப்படைவாதம் தொடர்பிலான நடவடிக்கைகளில் அரசாங்கம் திரைமறைவில் செயற்படக்கூடாது. மாறாக நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் வெளிப்படையாகச் செயற்பட வேண்டும்.
அரபு மத்ரஸா தொடர்பான சட்டம் பற்றி அனைத்து மதத்தலைவர்களும் அறிந்து கொள்வது அவசியமாகும். எந்தவோர் மதத்தலைவர்களுடனும் கலந்தாலோசியாது, பேச்சுவார்த்தை நடத்தாது உலமா சபை அரசியல்வாதிகளையும் ஏமாற்றி இதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதை நாம் எதிர்க்கிறோம். இந்த சட்டமூலம் நாட்டுக்கு ஆபத்தானதாகும்.
எமது நாட்டில் சர்வதேச இஸ்லாமிய மாநாடொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 30 ஆம் திகதி உலக முஸ்லிம் தலைவர்கள் இங்கு ஒன்றுகூடி சமய மற்றும் இனநல்லிணக்கம் தொடர்பில் கலந்துரையாடி தீர்மானம் மேற்கொள்ளவுள்ளனர். தீர்மானம் எடுப்பதற்கு சவூதியிலிருந்து இங்கு வரவேண்டுமா? நாம் இதற்கு வெட்கப்படவேண்டும். இந்த மாநாட்டினைத் தடுத்து நிறுத்தும்படி நாம் அரசாங்கத்தை வேண்டுகிறோம்.
தேர்தல்கள் அண்மிக்கும் இந்தக்காலத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுடன் கொஞ்சிக்குலாவ வேண்டாம் என்று அரசாங்கத்தை நாம் வேண்டிக்கொள்கிறோம். தேசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் தேசிய தொலைக்காட்சிகளில் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும், இஸ்லாமிய மதத்தலைவர்களுக்கும் ஒதுக்கப்படும் நேரம் எங்களுக்கும் ஒதுக்கப்பட வேண்டும்.
முஸ்லிம் அடிப்படைவாதிகளின் கையில் சிக்கியுள்ள இஸ்லாமிய கல்வி மீண்டும் சம்பிரதாய முஸ்லிம்களுக்கு கையளிக்கப்படவேண்டும்.
ஞாயிற்றுக்கிழமை நடாத்தப்படும் அஹதிய்யா பாடசாலைக்குள் நுழைந்துள்ள அடிப்படைவாத ஆசிரியர்களின் கற்றல் நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்” என்றார்.
ஏ.ஆர்.ஏ.பரீல்
vidivelli