அம்பாறை, இறக்காமம் பிரதேச சபைக்குட்பட்ட மாயக்கல்லி மலையடியில் அமைக்கப்பட்டு வரும் பௌத்த மடாலயத்தின் நிர்மாணப் பணிகளை உடன் நிறுத்துமாறு கோரும் மகஜர் ஒன்றை இறக்காமம் பிரதேச சபையிடம் கையளிக்கவுள்ளதாக ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் இறக்காமம் பிரதேச அமைப்பாளர் கே.எல்.சமீம் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சர்ச்சையில் கிடந்து வந்த இறக்காமம் மாயக்கல்லி மலையடிவார பௌத்த மடாலய நிர்மாணம் மீண்டும் தொடங்கப்பட்டிருப்பது அங்குள்ள மக்கள் மத்தியில் அச்ச நிலைமையைத் தோற்றுவித்துள்ளது.
இக்கட்டட நிர்மாணத்திற்காக அனுமதி வழங்கியது யார் என்பதனை இறக்காமம் பிரதேச சபை மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும் என்பதுடன், இதன் நிர்மாணப்பணியை உடன் தடை செய்வதற்கான நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டும்.
பௌத்தர்கள் இல்லாத மாணிக்கமடு பிரதேசம் நூறு வீதம் தமிழ் மக்களின் குடியிருப்புகளைக் கொண்டதுடன், மலையைச் சுற்றி வர முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணிகளும் அமையப்பெற்றதே மாயக்கல்லி மலையாகும்.
கடந்த இருவருடங்களுக்கு முன்பு அங்கு திடீரென வைக்கப்பட்ட புத்தர் சிலையொன்றின் காரணமாக ஏற்பட்ட சர்ச்சைக்குப் பின்னர் தமண பொலிஸாரினால் அம்பாறை நீதிமன்றத்தில் பெறப்பட்ட உத்தரவின் பேரில் இப்பிரதேசத்திற்குள் எவரும் செல்லக் கூடாது என தடையுத்தரவு விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதன் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதனால் அங்கு வாழ்ந்து வரும் சிறுபான்மை மக்கள் மத்தியில் அச்சமும், பீதியுமான நிலை தோன்றியுள்ளது.
சிறுபான்மை மக்களின் உரிமைக் குரலாகவும், பாதுகாப்பாகவும் அமைவோம் என்று சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் இவ்வாறான இனவாதப் பயங்கரவாதத்தை கண்டுகொள்ளாமல் இருந்து வருவதனை நாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ரீ.கே.றஹ்மத்துல்லா
vidivelli