முஸ்லிம் தரப்பும், தமிழ் தரப்பும் முரண்பட்டுக் கொண்டுள்ள கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினைகளுக்கு ஒருவார காலத்தினுள் நிரந்தர தீர்வு வழங்கப்படும் என உள்ளக, உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன தன்னைச் சந்தித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் உறுதியளித்தார்.
இந்தச் சந்திப்பு நேற்று முன்தினம் இரவு அமைச்சர் வஜிர அபேவர்தனவின் இல்லத்தில் இடம்பெற்றது. சந்திப்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன், எச்.எம்.எம்.ஹரீஸ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
நேற்று முன்தினம் மாலை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து முஸ்லிம்களின் சமகால பிரச்சினைகள், கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம், அநாவசிய கைதுகள், வன்செயல்களினால் பாதிக்கப்பட்ட சொத்துகளுக்கான நஷ்ட ஈடுகள் தொடர்பில் உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும் எனவும் அதுவரை அமைச்சுப் பொறுப்புகளை கையேற்கப் போவதில்லை எனவும் தெரிவித்தனர்.
கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினைக்கு ஒரு வார காலத்தில் தீர்வு வழங்கப்பட வேண்டுமெனவும் உடனே அமைச்சர் வஜிர அபேவர்தனவை சந்தித்து கலந்துரையாடுமாறு பிரதமர் வேண்டிக் கொண்டார். அமைச்சர் அபேவர்தனவுக்கும் உரிய பணிப்புரை விடுத்தார். இதற்கு அமைவாகவே முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவை சந்தித்து கலந்துரையாடினார்கள்.
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் தங்களது யோசனைகளை முன்வைத்தனர்.
அமைச்சர் வஜிர அபேவர்தன தமிழ் தரப்பினருடனும் கலந்துரையாடி அவர்களது யோசனைகளையும் பெற்றுக் கொண்டு ஒருவார காலத்தில் நிரந்தர தீர்வொன்றினை வழங்குவதாகத் தெரிவித்தார். இவ்விவகாரத்தில் அதிகாரிகளுக்கு தங்கள் பணிகளை துரிதப்படுத்தும்படி பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
ஏ.ஆர்.ஏ. பரீல்
vidivelli