கிழக்கில் எமக்கும் தமிழ் தரப்பினருக்கும் எழுந்துள்ள பிரச்சினைகளில் எமக்கு ஒரு நியாயமான தீர்வு கிடைக்கவேண்டும். அத்துடன் அண்மைக் காலமாக முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் எமக்கு உரிய தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் வரையில் எந்தவொரு முஸ்லிம் உறுப்பினரும் அமைச்சுப் பதவிகளை எடுக்கப்போவதில்லையென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
முஸ்லிம் உறுப்பினர்களின் நிலைப்பாடு குறித்து அறிவிக்க இன்று பிரதமருடன் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாகவும் கூறினார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடம் நேற்று பிற்பகல் கட்சி தலைமையகமான தாருஸ்ஸலாமில் கூடியது. கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கட்சியின் அங்கத்தவர்கள் கூடி நேற்று பல தீர்மானங்களை எடுத்திருந்தனர். இதுகுறித்து தலைவர் ஹக்கீம் தெரிவிக்கையில், இன்று நாட்டில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக உருவாகியுள்ள பல பிரச்சினைகள் மற்றும் கிழக்கில் எமக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள சில முரண்பாடுகள் காரணமாகப் பேசினோம். இதுகுறித்து ஒரு பொது இணக்கப்பாடு எட்டப்பட வேண்டும். இப்போது எழுந்துள்ள பிரச்சினைகள் நிவர்த்திசெய்யப்பட வேண்டும். இதுகுறித்து அரசாங்கத்தை நாம் தெளிவுபடுத்தியுள்ளோம். அதில் அரசாங்கம் எவ்வாறு எமக்குப் பதில் கூறுகின்றதோ அதற்கமையவே நாம் அடுத்தகட்ட தீர்மானங்களை முன்னெடுக்க முடியும். அதுவரை நாம் தீர்மானமிக்க எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்க மாட்டோம். குறிப்பாக அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்ள இன்னமும் நாம் எந்த தீர்மானமும் எடுக்கவில்லை. இதுகுறித்து தீர்மானிக்க காலம் தேவை. பிரதமர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற நிலையில் நாளை (இன்று) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தைகளில் எமது நிலைப்பாட்டை நாம் கூற வேண்டும்.
எவ்வாறு இருப்பினும் அரசாங்கம் எமது கோரிக்கைகளுக்கு எவ்வாறு பதில் தெரிவிக்கின்றதோ அதற்கமையவே நாம் அடுத்தகட்ட தீர்மானம் எடுக்க முடியும். அதுவரையில் நாம் அமைச்சுப் பதவிகளை ஏற்கமுடியாது. அதேபோல் இப்போது ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டணி குறித்து பேசினாலும் எமக்கு அரசாங்கம் தரும் தீர்வுகளுக்கு அமையவும் அரசாங்கம் எமது பிரச்சினைகளில் கொடுக்கும் வாக்குறுதிகளுக்கு அமையவும் எம்மால் தீர்மானம் எடுக்க முடியும். கூட்டணியாக செயற்படுவது குறித்து இன்னமும் தீர்மானம் எடுக்கவில்லை. அதற்கு முன்னர் எமக்கான பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் வேண்டும். குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை கொடுக்கின்றமை எமக்கு இருக்கும் ஒரு பிரச்சினையாகும் . அதேபோல் மேலும் சில பிரதேசங்களிலும் இந்த பிரச்சினை உள்ளது.
அமைச்சுப் பதவிகளை நாங்களாகத் துறந்தோம். மீண்டும் அமைச்சுக்களை பெற்றுக்கொள்ள நாம் அமைச்சுக்களை கைவிடவில்லை. இன்னமும் சிறிது காலமே உள்ளதால் நாம் அமைச்சுப் பதவிகளை எடுக்க வேண்டுமா என்பதை குறித்து ஆராய வேண்டும். அதேபோல் நாம் எந்தவித அரசியல் தீர்மானமும் எடுக்கவுமில்லை. பிரதமருக்காகவும் அரசாங்கத்திற்காகவும் நாம் பல தியாகங்களை செய்துள்ளோம். ஆகவே, நாம் செய்த தியாகங்களை கருத்திற்கொண்டு பிரதமர் எமக்குத் தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டும். ஏனையவர்களுடன் எம்மையும் ஒப்பிட்டு எமது பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்க வேண்டும். இல்லையேல் நாம் இந்த அரசாங்கத்தில் இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.
இன்று எமது மக்களுக்கு புதிய பிரச்சினைகள் பல எழ ஆரம்பித்துள்ளன. நீண்டகாலமாக வராத பிரச்சினைகள் பல இன்று புதிதாக உருவெடுக்கின்றன. எமது தரப்புக்கு பாதிப்பான விடயங்கள் முன்னெடுக்கப்படும் என்றால் நாம் அரசாங்கத்தின் பிரதிநிதிகளாக தொடர்ந்தும் இருப்பதால் பிரச்சினைகள் உருவாகும். மக்களுக்கு இதனை நாம் தெளிவுபடுத்த வேண்டும். அதிகாரங்களை தக்கவைத்துக்கொள்ளும் அவாவில் எமது மக்களை நாம் கஷ்டப்படுத்த முடியாது. ஆகவே அமைச்சுப் பதவிகளை கைவிட்டதையடுத்து இன்று எழுந்துள்ள விடயத்தில் சகல முஸ்லிம் உறுப்பினர்களும் ஒரே நிலைப்பாட்டில் இருக்கின்றோம். தனித்தனியாக எந்தவொரு முஸ்லிம் உறுப்பினர்களும் அமைச்சுக்களை பெற்றுக்கொள்ள மாட்டார்கள். நாம் அமைச்சு பதவிகளை கைவிட்ட பின்னர் பல பிரச்சினைகள் உருவாகியுள்ளன. இதில் அரசாங்கம் தீர்மானமொன்றை வழங்க வேண்டும். எமது விடயங்களில் குறிப்பாக காதி நீதிமன்றம், திருமணம் விடயங்களில் நாம் கலந்துரையாடி நிலைப்பாடு ஒன்றினை முன்னெடுக்க முடியும். அதற்கு அப்பால் இந்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கோ அல்லது சொத்துக்களுக்கோ எந்தவொரு இழப்பீடும் வழங்கவில்லை. இதுவெல்லாம் பாரிய பிரச்சினை.
அதேபோல் குண்டுவெடிப்புத் தாக்குதலில் பலர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். முதலில் தேசிய பாதுகாப்பு முக்கியமானது. நாட்டின் தேசிய பாதுகாப்பு விடயங்களில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். அதேபோல் இந்த சம்பவத்துடன் தொடர்பில் இல்லாத நபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அப்பாவிகளை விடுவித்து அதேபோல் தேசிய பாதுகாப்பில் அக்கறையுடன் செயற்பட வேண்டும். நாட்டின் சட்டம், நீதியின் மீதான அவநம்பிக்கையை அடுத்து நாடு பாரிய இழப்புகளை சந்திக்க நேர்ந்துள்ளது. வெளிநாட்டு முதலீடுகள் அனைத்தும் குறைவடைந்துவிட்டன. அரசியல் நோக்கங்களுக்காக மறைமுகமாக பல சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சட்டம் நீதியை நாசமாக்க ஒரு சிலர் முயற்சித்து வருகின்றனர். அவர்கள் யார் என்பது தெரிகின்றது. அவர்களுக்கு எதிராக சட்டத்தை கையில் எடுக்க முடியாத நிலைமை உள்ளது. இன்று தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டிருந்தாலும் கூட அவ்வாறு இல்லை என கூறிக்கொண்டு நாட்டினை நாசமாக்க ஒரு சிலர் முயற்சித்து வருகின்றனர். தேர்தலை இலக்குவைத்து சில நாசகார செயல்களை செய்ய முயற்சிக்கின்றனர். இதற்கு அரசாங்கம் இடமளிக்கக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஏ.ஆர்.ஏ.பரீல், ஆர்.யசி
vidivelli