‘இஸ்லாமோபோபியா’ என்பது இஸ்லாம் குறித்த அச்சம் என்று அர்த்தம் கொள்ளப்படுகிறது. இஸ்லாம் குறித்தும் முஸ்லிம்கள் குறித்தும் பிற சமயத்தவர்கள் மத்தியில் அச்சத்தைத் தோற்றுவித்து, அதன் மூலமாக முஸ்லிம்கள் மீது தாக்குதல்களைத் தொடுப்பதும் இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுப்பதுமே இந்த ‘இஸ்லாமோபோபியா’ மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.
செப்டம்பர் 11 தாக்குதலைத் தொடர்ந்தே இந்தச் சொல்லாடல் உலகளாவிய ரீதியில் பயன்பாட்டுக்கு வந்த போதிலும் இலங்கைக்கு இது புதியதாகும். இலங்கையில் இடம்பெற்ற 2019 ஏப்ரல் 21 தாக்குதல்களைத் தொடர்ந்தே இலங்கையிலும் ‘இஸ்லாமோபோபியா’ பற்றிய கதையாடல் கூடுதல் கவனயீர்ப்பைப் பெற்றுள்ளது.
உலகளாவிய ரீதியில் நோக்கும்போது இதன் மூலம் எதிர்பார்க்கப்பட்ட அடைவுகளை இதன் பின்னணியில் உள்ளோர் அதாவது அரசியல் சக்திகள் கண்டிருக்கின்றனர். சர்வதேச ஆய்வு மையமான ‘பியூ’ ஆய்வு நிலையம் கடந்த திங்கட் கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் இதன் விளைவுகளை சுட்டிக்காட்டுகின்றது.
சமயங்களோடு தொடர்புபட்ட வன்செயல்கள் மற்றும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதன் அடிப்படையில் உலகளாவிய ரீதியில் சமயங்கள் மீதான கட்டுப்பாடுகளும் அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இஸ்லாமோபோபியாவின் நேரடி வெளிப்பாடேயாகும்.
2007 ஆம் ஆண்டு தொடக்கம் 2017 ஆம் ஆண்டு வரை சமயங்களுக்கான கட்டுப்பாடுகள் அதிகரித்துச் சென்றுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு 140 நாடுகளில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. 2017 ஆம் ஆண்டளவில் சமய ரீதியான தாக்குதல்கள் நடத்தப்பட்ட நாடுகளின் எண்ணிக்கை 21 இலிருந்து 33 வரை அதிகரித்திருந்தது. இந்தப் பட்டியலில் தற்போது இலங்கையும் இணைந்து கொண்டுள்ளது.
முஸ்லிம் பெண்களால் அணியப்படும் புர்கா மற்றும் முகத்திரை உள்ளிட்ட சமய ஆடைகளுக்கான தடைகளை 2007 வரை வெறுமனே 5 நாடுகளே ஐரோப்பாவில் விதித்திருந்தன. ஆனால் இவ்வெண்ணிக்கை 2017 இல் 20 ஆக அதிகரித்தது. இத் தடைப் பட்டியலில் இலங்கையும் எதிர்காலங்களில் உள்ளடக்கப்படலாம்.
இஸ்லாமோபோபியா அதிகரிக்க அதிகரிக்க முஸ்லிம்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள், அடக்குமுறைகள், தாக்குதல்கள் அதிகரிக்கும் என்பதே இந்த அறிக்கையின் சாரம்சமாகும். இலங்கையில் இதன் விளைவை நாம் தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
இலங்கையில் இந்தப் போக்கு முடிவுக்கு வரும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை. மாறாக தினம் தினம் புதிய புதிய விடயப் பரப்புகளில் முஸ்லிம்கள் பற்றிய வெறுப்புப் பிரசாரங்கள் தொடரவே செய்கின்றன. ஹலால், மத்ரஸா, அரபுமயமாக்கல், முகத்திரை, தனியார் சட்டம், இள வயதுத் திருமணம், இஸ்லாம் பாடப் புத்தகம், வஹாபிஸம், ஷரீஆ சட்டம், காதி நீதிமன்றம்….. என தினமும் புதுப்புது தலைப்புகள் ஊடகங்களில் கதையாடப்படுகின்றன. முஸ்லிம்களை நோக்கி குற்றச்சாட்டுக்கள் அள்ளி வீசப்படுகின்றன.
இவை அனைத்துக்கும் பதிலளிக்கும் கடப்பாட்டை இலங்கை முஸ்லிம் சமூகம் கொண்டுள்ள போதிலும், அதற்கான தக்க பதில்கள் எம்மிடம் இருக்கின்ற போதிலும் அதனைச் செய்வதற்குத் தயாரில்லை என்பதே துரதிஷ்டவசமானதாகும். சிங்கள மொழியில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு தமிழ் மொழியில் பதில் எழுதுகின்ற நிலையிலேயே நாம் இன்னும் இருந்து கொண்டிருக்கிறோம். 2012 ஆம் ஆண்டு முதல் இவ்வாறான குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் வேலைத்திட்டங்கள் ஆங்காங்கே தொடங்கப்பட்ட போதிலும் அவை எவையுமே காத்திரமானதாக அமையவில்லை. ஏப்ரல் 21 அனர்த்தத்தின் பின்னராவது இப் பணிகள் வீரியமாக முன்னெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அதுவும் நடப்பதாக தெரியவில்லை.
இனியும் காலம் கடந்துவிடவில்லை. இஸ்லாமோபோபியா அச்சுறுத்தல் தொடர்ந்தும் இருக்கவே போகிறது. அதன் மூலம் முஸ்லிம்கள் இலக்குவைக்கப்படுவதும் தொடரவே செய்யும். நமக்கு முன்னுள்ள சவால் அதனை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம்? அதனை செய்யப் போவது யார்? என்பதே.
vidivelli