ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கையை அரசாங்க வர்த்தமானியில் வெளியிட்டால் அல்லது பழைய தேர்தல் முறைமையை அமுல்படுத்துமாறு உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால் ஒக்டோபர் 15 ஆம் திகதிக்கு முன்பு மாகாண சபைத் தேர்தலை நடாத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
எல்லை நிர்ணய அறிக்கை அரசாங்க வர்த்தமானியில் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டால் மாகாண சபைத் தேர்தலை புதிய முறையின் கீழ் (வட்டார முறை) நடாத்த முடியும் அல்லது பழைய தேர்தல் முறையை அமுல்படுத்துமாறு உயர்நீதிமன்றம் தீர்ப்பொன்று வழங்கினால் பழைய தேர்தல் முறைமை (விருப்பு வாக்கு) தேர்தலை நடாத்த முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற தேசிய பத்திரிகைகளின் ஆசிரியர்களுடனான கலந்துரையாடலின் போது கருத்து தெரிவிக்கையிலே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், ‘மாகாணசபைத் தேர்தல் புதிய தேர்தல் முறைமையின் கீழ் நடாத்துவதென்றாலும், பழைய விருப்பு வாக்குமுறைமையின் கீழ் நடாத்துவதென்றாலும் எதிர்வரும் அக்டோபர் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்பு நடாத்தி முடிக்கலாம். அரசியலமைப்பு சட்டத்தின் பிரகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆலோசனைக்கமைவாக தேர்தலை நடாத்துவதற்கு உரிய சூழலை ஏற்படுத்தி வழங்குவது ஜனாதிபதியின் பொறுப்பாகும். உயர் நீதிமன்றின் தீர்மானத்தைப்பெற்று தேர்தலை நடாத்துவதற்கான சூழலை அமைத்துத் தருமாறு ஜனாதிபதியைக் கோரியிருக்கிறோம்.
மாகாணசபைத் தேர்தலை அக்டோபர் மாதத்தில் நடாத்துவது எந்தவகையிலும் எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்குப் பாதிப்பாக அமையாது. இரண்டு தேர்தல்கள் மாத்திரமல்ல. பல தேர்தல்களை குறுகிய இடைவெளியில் நடாத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு தேவையான வளங்கள் இருக்கின்றன. முன்னைய காலங்களிலும் ஒரு வருட காலத்தினுள் பல தேர்தல்கள் நடாத்தப்பட்டிருப்பதால் இது தொடர்பில் சந்தேகங்களை ஏற்படுத்திக் கொள்ளத் தேவையில்லை.
ஜனாதிபதித் தேர்தல் நிச்சயமாக நவம்பர் மாத இறுதியில் அல்லது டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி நடாத்தப்படலாம் என தேர்தல்கள் ஆணைக்குழு நம்புகிறது. அதனடிப்படையில் நவம்பர் மாதம் 16, 23, 30 அல்லது டிசம்பர் 7 ஆம் திகதி ஆகிய சனிக்கிழமை ஒன்றில் ஜனாதிபதித் தேர்தலை நடாத்த முடியும்.
எந்தவொரு தேர்தலையும் உரிய காலத்தில் நடத்தாது தாமதப்படுத்துவது ஜனநாயகத்துக்கு முரணானது என ஜனாதிபதி, பிரதமர், எதிர்கட்சித் தலைவர் மற்றும் கட்சித் தலைவர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு பல தடவைகள் சுட்டிக் காட்டியுள்ளது’ என்றார்.
எல்லை நிர்ணய அறிக்கை பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப் படாது நிராகரிக்கப்பட்டமை மற்றும் அதன் பின்னரான நடவடிக்கை கள் காரணமாக மாகாண சபைத் தேர்தல் தொடர்ந்தும் தாமதப்படுத் தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
vidivelli