மேல்மாகாணத்தில் தமிழ் மொழி மூலமான பாடசாலைகளில் 450க்கும் அதிகமான ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுகின்றன.
கடந்த மாதம் பரீட்சைக்கு தோற்றிய பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதன் மூலம் இவ்வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மேல் மாகாண கல்வி அதிகாரிகளும் அதிபர்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.
இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, மேல் மாகாணத்தில் 11 கல்வி வலயங்கள் காணப்படுகின்றன.
இவற்றில் நூற்றுக்கணக்கான தமிழ் மொழி மூலமான பாடசாலைகளில் கடந்த பல வருடங்களாக ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக களுத்துறை மாவட்டத்தில் இருக்கும் களுத்துறை, ஹொரண மற்றும் மத்துகம வலயங்களில் சுற்றறிக்கையின் பிரகாரம் 250 ஆசிரியர் வெற்றிடங்கள் இருப்பதாகவும் அதில் களுத்துறை வலயத்திலே அதிக வெற்றிடங்கள் நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் இம்மாவட்டத்தில் தற்போது ஆசிரியர்களாக கடமை புரியும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 80 ஆசிரியர்கள் 5 வருடங்களை பூர்த்திசெய்து இடமாற்றத்துக்காக விண்ணப்பித்துள்ளனர்.
அதேபோன்று கம்பஹா மாவட்டத்தில் களனி கல்வி வலயத்தில் 32 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதுடன் இடமாற்றம் பெற்றுச்செல்ல விண்ணப்பித்தவர்களுடன் சேர்த்து சுமார் 50 வெற்றிடங்கள் வரை நிலவுகின்றன.
இவ்வாறு கொழும்பு மாவட்டத்தில் மொத்தமாக 450க்கும் அதிக ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுகின்றன.
அத்துடன் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள் பூர்த்திசெய்யப்படாமல் இருப்பதால் 5 வருட சேவையை பூர்த்திசெய்த ஆசிரியர்கள் தங்கள் சொந்த பிரதேசங்களுக்கு இடமாற்றம் பெற்றுச்செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக, இடமாற்றத்துக்கு விண்ணப்பித்திருக்கும் ஆசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அதனால் மேல் மாகாணத்தில் தமிழ் மொழி மூலமான பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை நியமிப்பதற்காக கடந்த மாதம் 30 ஆம் திகதி நடத்திய போட்டிப் பரீட்சையில் தோற்றிய பட்டதாரிகளைக்கொண்டு இவ்வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அத்துடன் மேல் மாகாணத்தில் ஆங்கில மொழி மூலமான பாடசாலைகளிலும் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை பரீட்சைக்கு ஆங்கில மொழி மூலம் தோற்றிய பட்டதாரிகளை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே இதுதொடர்பாக மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் அவதானம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பட்டதாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
இதேவேளை, மேல் மாகாணத்தில் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை நியமிப்பதற்காக கடந்த 30ஆம் திகதி போட்டிப் பரீட்சை இடம்பெற்றது.
இப்பரீட்சையில் தமிழ் மொழி மூல வினாத்தாளில் பல பிழைககள் இருந்துள்ளன. அதனால் பாதிக்கப்பட்ட பரீட்சார்த்திகள் கடந்த வாரம் மேல்மாகாண ஆளுர் ஏ.ஜே.எம். முஸம்மிலை சந்தித்து இது தொடர்பாக முறைப்பாடு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
(எம்.ஆர்.எம்.வஸீம்)
vidivelli